...
கட்டுரைகள்

இந்து சமுத்திர அரசியலில் இருந்து வெளிவரத் தத்தளிக்கும் ஈழ அரசியல்

வாசு முருகவேல்

ஒரு நாடும், அதன் மக்களும், அந்த நாட்டின் இராணுவமும் இனப்படுகொலை திட்டதின் ஊடாக அழிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிறது. ஈழத்தை இந்தக் கண்ணோட்டத்தில் அணுக முடிகின்றவர்கள் மட்டுமே இந்தக் கட்டுரையை விளங்கிக் கொள்ள முடியும். உலகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசு இருந்தது. அதன் செயற்பாடுகள் உலகின் முன் உதாரணமாக இருந்தன. தமிழ்ச் சமூகத்தில் பல்லாண்டு காலமாக புரையோடி இருந்த பிற்போக்கு வாதங்கள் களையப்பட்ட ஒரு நிலமாக அது இருந்தது. பெண்களின் சுதந்திரம் என்பது கற்பனைக்கு அப்பால் மேம்பட்டு இருந்தது. சாதிய இழிவுகள் களையப்பட்டு ஒரு மாபெரும் சமூக எழுச்சி தமிழ் சமூகத்தின் உள்ளேயே எற்பட்டு இருந்தது. பொருளாதாரக் கட்டமைப்பு, பொருட்களின் உற்பத்தி அனைத்தும் உள் நாட்டிலேயே சாத்தியமாகிக் கொண்டு வந்தது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஜனநாயக சமூகமாக இருக்கும் தமிழகத்தில் கூட இப்படியான மாற்றங்கள் நிகழ இன்னும் பல பத்து ஆண்டுகள் ஆகலாம். அந்த நாட்டின் பெயர் தமிழீழம். அந்த நாட்டின் குடிமக்களின் பெயர் தமிழர்கள். அந்த நாட்டின் இராணுவத்தின் பெயர் விடுதலைப்புலிகள்.

பத்தாண்டுகள் முன்  நிகழ்ந்த இனப்படுகொலை என்பது மிகவும் திட்டமிடப்பட்டதாக இருந்தமையால் அது இந்த நிமிடம் வரை இலங்கை அரசாலும் அதன் துணையாக இருக்கும் வல்லரசுகளாலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. இனப்படுகொலை நீடிக்கிறது என்றே இதைக் கூற வேண்டும். இனப்படுகொலை என்பது உலக நாடுகளில் இருந்த ஈழ ஆதரவு தளங்களை முடக்கியது. விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற சொற்களில் போர்த்தியமை என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. இனப்படுகொலைக்கு சாட்சிகள் இருந்து விடக் கூடாது என்பற்காகவே ஐநாவை வெளியேற்றினர். சர்வதேச பத்திரிகையாளர்கள் அனைவரையும் வெளியேற்றினார்கள். இன்று நீங்கள் பார்த்து பதறும் மிகச்சில ஒளிப்படங்கள், ஒளிப்பதிவுகள் உயிரைப் பற்றிய எந்த அக்கறையும் இன்றி இந்தக் கொடுமைகளை பதிவு செய்து உலகத்தின் முன் காட்ட விரும்பிய சிலரின் முயற்சியே. இவையும் இல்லை என்றால் நம்மிடம் எந்த சாட்சியமும் இருந்திருக்காது.

இன்னும் தெளிவாக இதைக் கூற வேண்டுமானால் இந்தக் கொடுமைகள் அனைத்தும் அனைத்து நாடுகளின் ஒருங்கிணைப்பாக இருக்கும் ஐநாவுக்கும் தெரிந்தே நடந்தன. ஐநாவின் அறிக்கையைக் கூட வெளிப்படையாக வெளியிட முடியாமல், அந்த அறிக்கையின் பல்வேறு பகுதிகள் கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டன. ஐநாவின் நிலையே இது என்றால் இந்த மாபெரும் இனப்படுகொலையின் பரிமாணம் எப்படியாக இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இவற்றை விளங்கிக்கொள்ளாத பலர் தமிழர்கள் தங்களை சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்று மட்டுமே சொல்லி சுலபமாக தப்பித்து விடுகிறார்கள். ஒரு இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் தங்களை சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்று கூறுவதை எப்படி விளங்கிக் கொள்வது என்று தெரியவில்லை!.

இந்தப் பத்தாண்டுகளில் இனப்படுகொலை தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் நடைபெறவில்லை. விசாரணை என்பதே நடைபெறவில்லை என்பதால் அங்கு நீதிக்கு எந்த இடமும் இல்லை. இனப்படுகொலைக்கு முன் இலங்கை அரசினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் முதல் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்தவர்கள் வரை யாருக்கும் எந்த நீதியும் இதுவரை கிடைக்கவில்லை. பலர் சிறைகளில், பலர் என்ன ஆனார்கள் என்று எந்த தகவலும் இது வரை கிடையாது. பாலியல் சித்திரவதை முகாம்கள், மக்களை தடுத்து வைத்திருந்த முகாம்களில் நடந்த கொடுமைகள் இன்னும் கொடுமையானவை. அவை அனைத்தும் இன்னும் வெளிவரவே இல்லை. மிக மேலோட்டமான அறிக்கைகளே வந்துள்ளன. ஒருநாள் உலகத்தின் முன் அவை வரத்தான் போகின்றன. ஆனால், அதுவும் சர்வதேச அரசியல் நிகழ்வுகளைப் பொருத்தே சாத்தியமாகும்.

மிகக் குறைந்த அளவில் கண்துடைப்புக்காக, கடுமையான உடல்/ உளவியல் சித்திரவதைகளின் பின் விடுதலையானோர் இன்னும் இராணுவ கண்காணிப்பில் வாழ்கிறார்கள். அவர்களில் சிலர் திடீர் திடீர் என்று மர்மமாக மரணத்தையும் தழுவிக்கொள்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து இராணுவம் பின் தொடர்வதால் அவர்களுக்கு இயல்பு வாழ்க்கை என்பது சாத்தியமாவதில்லை. அது மட்டுமல்ல. அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் கூட மிகுந்த வாழ்வியல் நெருக்கடியில் தள்ளப்படுகிறார்கள்.

தமிழர்களின் இயல்பு வாழ்க்கை என்பதே இராணுவ கண்காணிப்பில் தான் இருக்கிறது. எங்கும் இராணுவ முகாம். பள்ளி நிகழ்வு தொடங்கி, கோவில் திருவிழாவரை அவர்களின் நிழலில் இன்றி சாத்தியமில்லை. இது தமிழர்களின் இயல்பு வாழ்க்கையில், கலாச்சார பண்பாடுகளில் பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது. தமிழர்களின் நிலங்களில் சிங்கள மக்களை கட்டயமாக குடியேற்றுதல், தமிழர்களின் மதத்தலங்களை ஆக்கிரமித்து புத்த விகாரைகளை அமைத்தல், தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கும் வீதிகளுக்கு சிங்களப் பெயர்களை சூட்டுதல், இப்படியாக சிறிய விடயங்கள் தொடங்கி அரசின் பாரிய திட்டங்கள் வரை தமிழ் நில – கலாச்சார – மொழி அழிப்புகள் தொடர்கிறது. அறுபது ஆண்டுகள் தொடரும் தமிழ்ர்களின் சாத்வீக – ஆயுத வழியிலான போராட்டங்களுக்கு எந்த ஒரு அரசியல் தீர்வையும் முன்வைக்காத அரசு இன்னும் தன்னுடைய சிங்கள பேரினவாத நடவடிக்கையையே தொடர்கிறது. அது இனப்படுகொலைக்கு பின்னும் எந்த ஒரு சிறிய மாற்றத்தையும் தமிழர்களை அணுகும் முறையில் ஏற்படுத்தவில்லை. முப்பதாண்டு ஆயுத வழி விடுதலைப் போராட்டத்தினால் தடுத்து நிறுத்தப்பட்படிருந்த தன்னுடைய பேரினவாத அணுகு முறையை இந்த பத்தாண்டுகளில் சாதித்து இன்னும் மூர்க்கமாக நகர்கிறது. சிலர் கூறுவது போல அங்கு எந்த சுதந்திர வெளியும் இல்லை. அதை விளக்குவது கடினம். வாழ்ந்தே உணர முடியும்.

தமிழர்களின் இந்த நெருக்கடியான சூழலில்  இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதம் ஒரு அதிர்ச்சியை இலங்கையில் உருவாக்கி இருக்கிறது. உன்மையில் இது ஒரு பாரிய அதிர்ச்சியை என் போன்ற பலருக்கு தரவில்லை. ஏன்னென்றால் ஜிகாத் குழுக்கள் ஈழ நிலப்பரப்பில் இருக்கக் கூடிய கிழக்கு மாகாணாத்தில் முன்னரே இருந்திருக்கிறன. அதன் பின் புலமாக இலங்கை அரசின் இராணுவம் இருந்தது. இந்தக் குழுக்களை அரசு தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்திய வரலாறுகள் இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் நடந்த தமிழர்கள் மேலான இன அழிப்பில் கணிசமான பங்கு இந்த ஜிகாதிகளுக்கு உண்டு. யாழ் இஸ்லாமிய வெளியேற்றம் போன்ற சில வருந்தத்தக்க நடவடிகைகளை விடுதலைப் புலிகள் மேற்கொள்ள வேண்டிய சூழலும் இவர்களால் ஏற்பட்டுள்ளது. இவர்களால் லாபம் அடைந்த இஸ்லாமிய அரசியல்வாதிகளும் ஒரு பகுதி இஸ்லாமிய மக்களும் இவர்களை ஆதரித்தே வந்திருக்கிறார்கள். ஆனால் இவை இவ்வளவு தூரம் தங்களுக்கு ஒரு சிக்கலாகும் என்று யாரும் கருதி இருக்க மட்டார்கள். சமீபத்தில் நடந்த தேவாலய தாக்குதல் நிகழ்வுகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் இலங்கை அரசின் புலனாய்வுத் துறைகளில் இருக்கும் இஸ்லாமிய அதிகாரிகளின் துணையுடன் நடந்திருக்கும் என்று உறுதியாக கூற முடியும். இவைகளை நீண்ட நாள் மறைத்து விட முடியாது. இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்றவற்றின் உறவு என்பது இவர்களின் வளர்ச்சியால் ஏற்பட்ட ஒரு தொடர்பு வலையமைப்பு உறவே ஆகும்.

இந்த தாக்குதலும் தமிழர்களை இலக்கு வைத்தே நடந்திருக்கிறது. தமிழர்கள் செல்லும் தேவாலயங்களே முக்கிய இலக்கு. பலியானவர்களும் 80% தமிழர்கள் என்பதை கவனிக்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தை அடிப்படைக் காரணமாக்கிக் கொண்டு தமிழர் நிலம் முழுவதும் மறுபடியும் இராணுவம் சோதனைகளை முன்னெடுக்கிறது. புதிய இராணுவ சோதனைச் சாவடிகளை அமைக்கிறது. தமிழர்களை சிறைகளில் அடைக்கவே உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கப்படுகிறது. இனப்படுகொலைக்கு உலகின் முன் நீதி கோரி நிற்கும் தமிழர் போராட்டங்கள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்று அனைத்தையும் இந்த இஸ்லாமிய அடிபடைவாத தீவிரவாத நிகழ்வின் மூலம் மடை மாற்றுகிறது இலங்கை அரசு. இந்த இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை ஒடுக்குதல் என்ற பெயரில் மறுபடியும் உலக நாடுகளின் உதவிகளை கோருதல் ஆயுத – இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தங்களை முன்னெடுத்தல் என்று நகர்கிறது இலங்கை அரசு. இது இலங்கையில் அமெரிக்க இரணுவத் தளம் என்ற அளவுக்கு வந்திருப்பத்தை விரிவான உலக அரசியல் கண்ணோட்டத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் உலக நாடுகள் அனைத்தும் ஒரே தரப்பாக நின்று ஈழ இனப்படுகொலையைச் செய்ய இலங்கை அரசை ஊக்குவித்து ஆயுதங்களை கொட்டி துணை நின்றன, எந்த அடிப்படையில் இந்த நாடுகளின் நலன் இலங்கை – ஈழ நிலப்பரப்பில் தங்கி இருக்கிறது போன்ற அனைத்து திரைமறைவு நாடகங்களும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் உலகளாவிய வல்லரசுகளின் போட்டியின் இடையே, ’மாபெரும் சமுத்திரத்தில் தொலைக்கப்பட்ட ஓர் ஊசியினை தேடியலைவதுப் போல அலைகிறேன் என் தாய் நாட்டை தேடி’ என்று கவிஞர் தீபச்செல்வனின் கவிதை வரிகளைப் போல தத்தளித்து பயணிக்கிறது ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டப் பயணம்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.