


வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து மோதிய போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 291 ரன்கள் குவித்தது.பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் தனி ஒருவனாய் ஆட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சென்றார் பிராத்வெயிட். நூறு ரன்கள் அடித்த பிராத்வெயிட் வெற்றிக்கு 7 பந்துகளில ஐந்து ரன் தேவை, கைவசம் ஒரே விக்கெட் என்றிருந்த போது அவுட்டானார்.நியூசிலாந்து ஐந்து ரன்களில் வெற்றி பெற்றது.போராடி தோற்றுப் போன ப்ராத்வெயிட் அங்கேயே முழங்காலிட்டு அமர அருகில் வந்த வில்லியம்சன் அவருக்கு ஆறுதல் கூறினார்.கிரிக்கெட்டை எதிரி நாட்டோடு ஆடினால் ஒரு போரைப் போல பார்க்கின்ற வீரர்கள் மத்தியில் இவர்களைப் போன்ற வீரர்கள் மற்றும் இதுபோன்ற தருணங்களால்தான் கிரிக்கெட் அழகாகிறது.
இந்தியா வெஸ்ட்இண்டீஸ் போட்டியின் போது ஷமியை போல்டாக்கி விட்டு கார்ட்டெல் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் ஷமிக்கு சல்யூட் அடித்து அனுப்பினார்.இதன் பிறகு களமிறங்கிய வெஸ்ட்இண்டிஸ் அணி தோல்வியடைந்தது.சாகல் பந்தில் கார்டெல் ஆட்டமிழக்க ஷமி கார்டெல் வழியனுப்பியது போலவே ஒரு ஷல்யூட் அடித்து சிரித்தார்.உண்மையில் அது ஒரு ஸ்வீட் ரிவன்ச்.அவர் ஆக்ரோசமாகவோ சீண்டவோ இல்லை.கார்டெல்லும் அதேபோலத் தான்.
பொதுவாக கிரிக்கெட்டைப் பார்க்க இளம் ரசிகைகளே அதிகம் வருவார்கள்.அவர்களையே கேமராமேன்களும் அதிகமாக காண்பிப்பார்கள்.ஆனால் இந்தியா பங்களாதேஷ் போட்டியின் போது 87 வயது பாட்டி விசில் ஊதிக்கொண்டு இந்திய அணியை உற்சாகப்படுத்தினார்.அதை அன்று அத்தனை கேமராக்களும் பதிவு செய்தன.போட்டி முடிந்த பிறகு கோலியும் ரோகித்தும் மைதானத்திலேயே அவரிடம் சென்று பேசி உற்சாகப்படுத்தியதற்கு நன்றி கூறினர்.
இந்தியா நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில் ஜடேஜா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துவிட்டு அவருடைய ஸ்பெஷல் ஸ்டைலான வாள்சுற்றலை சுற்றினார்.பிறகு மைதானத்தை நோக்கி கையை உயர்த்தி இந்த ஆட்டம் போதுமா எனக் கேட்பது போல சைகை செய்தார்.சஞ்சய் மஞ்சரேக்கர் அவரை அணியில் எடுத்ததற்கு விமர்சனம் செய்திருந்தார்.அவருக்கான பதிலை தன்னுடைய ஆட்டத்தின் மூலம் கொடுத்தார் ஐடேஜா.அதன் பிறகு சஞ்சய் மஞ்சரேக்கரும் ஜடேஜா சிறப்பாக ஆடியதாக ட்வீட் செய்தார்.அரைசதம் அடித்த பிறகு ரோகித் கில்லியில் த்ரிசா விஜயை உற்சாகப்படுத்துவது போலவே ட்ரஸ்சிங் ரூமிலிருந்து ஜடேஜாவைப் பார்த்து செய்தது அழகான மொமண்ட்.
இந்த மொமண்ட்டை இன்னும பல ரசிகர்கள் மறக்கவில்லை.தோனி ஓடி வரும் பொழுது நேரடியாக பந்தை ஸ்டெப்ஸில் எறிந்து ரன்அவுட்டாக்கினார் கப்தில்.அந்த ரன்அவுட் நியூசிலாந்தை வெற்றி பெறச் செய்தது.கிரீசுக்கும் பேட்டுக்குமான அந்த இடைவெளி தான் இந்தியாவின் வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளியாக இருந்தது.அதைத் தொடர்ந்து தோனி,ரோகித்,கோலி சோகமே உருவாக கண்கலங்கிவிட்டனர்.
