தொடர்கள்
Trending

’யாதும் டிசைன் யாவரும் டிசைனரே’;7 – மாரியப்பன் குமார்

தொடர் | வாசகசாலை

நிலையும் நிலை சார்ந்த இடமும் – டிசைன் திணை

நிலைப்பாடு அதாவது ஸ்டேட்டஸ் (Status). ஒரு சாதனம் அதைப் பயன்படுத்தும்போது எந்த நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது எனப் பயனாளருக்குக் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

(பொதுவான எடுத்துக்காட்டிற்காக சாதனம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளேன். இந்த தலைப்பு எல்லா தயாரிப்பிற்கும் பொருந்தும், மென்பொருட்கள் உட்பட)

பல்வேறு சாதனங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் பயன்படுத்துகிறோம்.  அந்தக் காரணத்திற்கான அவசியத்தை நிறைவேற்றுமாறு அவை நடந்து கொள்கின்றன.

உதாரணத்திற்கு அரிசியைச் சமைக்க குக்கரைப் பயன்படுத்துகிறோம். குக்கரில் அரிசி, தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து மூடி வைத்துவிட்டால் அரிசி வெந்து நமக்கு சோறு கிடைக்கும்.

ஆனால் இந்த முழு அரிசி வேக வைக்கும் முறையில் எப்போது என்னென்ன நடக்கிறது என்பதை குக்கர் நமக்குத் தொடர்ந்து காட்டிக்கொண்டே இருக்கும்.  முதலில் ஆவியை வெளியேற்றும், அது நமக்குத் தரப்படும் முதல் நிலைப்பாடு.  உடனே நாம் விசிலைப் போடுவோம்.  பின்னர் 1, 2, 3 என விசில் அடிப்பது நமக்கு அடுத்தடுத்து தரப்படும் நிலைப்பாடுகள்.  இந்த நிலைப்பாடுகள் தரப்படாவிட்டால்  குக்கரை நம்மால் பயன்படுத்தவே முடியாது.

ஒரு தயாரிப்பில் நிகழும் வெவ்வேறு நிலைகளைக் கண்டுகொண்டு அதற்கேற்ற நிலைப்பாடுகளைப் பயனாளர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் சரியான நேரத்தில்  கொண்டு போய் சேர்ப்பது டிசைனின் முக்கியக் கடமை.  இவற்றில் ஏற்படும் பிழைகள் நம்முடைய முதல் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது போல் அணு உலை மற்றும் தொழிற்சாலை அசம்பாவிதங்கள் போன்ற மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கக்கூடியவை.

சுவிட்ச் ​போர்டில் மின்சாரம் வருகிறதா இல்லையா என்று அதனுள் இருக்கும் சிவப்பு நிற விளக்கு  காட்டுவது எவ்வளவு முக்கியம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த விளக்கு கச்சிதமாக வேலை செய்ய வேண்டும். குக்கர் விசில் சிறிது தாமதமாக அடித்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால் சுவிட்ச் போர்டில் உள்ள விளக்கு தாமதமாக எரிவது தவிர்க்கப்பட முடியாதது.

மேலே கூறிய இரண்டு உதாரணங்களிலும் சாதனத்திற்கு வெளியே இருந்து பயன்படுத்துகிறோம்.  ஆனால் சில சாதனங்களில் அவற்றின் உள்ளேயோ அல்லது அவற்றோடு ஒன்றியோ பயன்படுத்த வேண்டியிருக்கும். இவற்றில்தான் நிலைப்பாடுகள் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியம். அதுவும் குழப்பில்லாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.

உதாரணத்திற்கு லிப்ட்.

நீங்கள் எந்தத் தளத்தில் உள்ளீர்கள், எத்தனையாவது தளத்தைக் கடந்து கொண்டிருக்கின்றீர்கள்,  மேலிருந்து கீழே வருகிறதா அல்லது கீழிருந்து மேலே செல்கிறதா,  ஆட்கள் ஏறிய பின்னர் மொத்தம் எவ்வளவு எடை ஏற்றப்பட்டுள்ளது, கதவு திறக்கிறதா அல்லது மூடுகிறதா என அனைத்தையும்  தொடர்ந்து நமக்குக் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

பயன்பாட்டை எளிதாக மாற்ற மட்டும் இந்த நிலைப்பாடுகள் இங்கே உபயோகப்பட வில்லை. முக்கியமாக பயன்படுத்துபவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும்தான். ஒரே ஒரு தவறு போதும் அந்த சாதனத்தையும் அதைச் சார்ந்த மற்ற பயன்பாடுகளையும் பயனாளர்கள் அடியோடு ஒதுக்கி வைக்கக் காரணமாகிவிடும். திரும்ப அதன் பக்கமே போக மாட்டார்கள்.

உதாரணத்திற்கு சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன் வெடித்த சமாச்சாரம். ஒரு போன் வெடித்ததால் மற்ற அனைவரும் அதைத் திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு போராடினர். இதனால் அந்த போன்களின் தயாரிப்பையே அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது.

“ண்ணா…சைடு ஸ்டாண்ட் எடுங்க” என்று ஒரு முறையாவது யாருக்காவது எச்சரித்திருப்பீர்கள்.  இப்போது வரும் இரு சக்கர மோட்டார் வாகனங்கள், சைடு ஸ்டாண்ட் எடுக்கப்பட்டால் மட்டுமே வண்டியை ஆன் செய்ய முடியும் என்ற தொழில்நுட்பத்துடன் வருகின்றன. இது போன்ற உடனடி பின்னூட்டங்கள் (feedback) மட்டும் இல்லாமல் அதோடு சேர்ந்து, எதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளும் அவசியம். லிப்ட் ஒருவேளை திடீரென்று நின்று விட்டால் எச்சரிக்கை ஒலி மூலம் உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்தப்படுவது உடனடி பின்னூட்டம். ஆனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளே எழுதப்பட்டிருக்க வேண்டும்.

எப்படி காவலாளியைத் தொடர்புகொள்வது, மீட்பு வரும் வரை நிலைமையை எப்படிச் சமாளிப்பது போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் முக்கியம்.

இது இரண்டு வகைப்படும். ஒன்று ஒரு சாதனத்தை முழுக்க முழுக்க எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற மொத்த வழிகாட்டிக் குறிப்பு (catalogue), இன்னொன்று அந்த சாதனத்தோடு தொடர்பு கொள்ளும் சமயத்தில் ஒவ்வொரு வழிமுறையாக கற்றுக் கொள்வது. எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனம் வாங்கும்போதும் அதனோடு அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டிப் புத்தகம் அல்லது சீட்டு கொடுக்கப்பட்டிருக்கும்.  அவற்றைப் பெரும்பாலும் யாரும் வாசிப்பதில்லை.  ஆனால் ஏதேனும் கோளாறு ஏற்படும்போது  அதைத் தேடிப் படிப்போம். எனவே நவீன காலத்தில் சாதனத்தின் உள்ளேயே  வழிகாட்டி குறிப்புகளைக் கொண்டு வந்துவிட்டனர்.  மேலே கூறப்பட்ட இரண்டு வகைகளும் தற்போது எல்லா சாதனங்களிலும் கலந்து வருகின்றன.

உதாரணத்திற்கு

நீங்கள் புதிதாக ஒரு மொபைல் ஆப் இன்ஸ்டால் செய்கிறீர்கள் என்றால் அதில் என்னென்ன எங்கே இருக்கின்றது என வழிகாட்டும். அவ்வாறு வழிகாட்டுவது நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு உங்கள் செயல்களைத் தடை செய்யாமலும், எரிச்சல் படுத்தாமலும் இருக்க வேண்டும்.

எனவே நீங்கள் மொபைல் ஆப் இன்ஸ்டால் செய்தவுடன் எல்லாவற்றையும்  ஒரே தடவையில் சுற்றிக் காண்பிக்காமல், அந்தந்த பக்கங்களுக்குச் சென்றவுடன் மட்டுமே அந்தக் குறிப்புகள் வெளிப்படும்.

இவ்வாறு கொடுக்கப்படும் வழிமுறைகள்  முதல் தடவையிலேயே பயனாளருக்கு மனதில் ஏறி விடாது.  எனவே அவர் அதைத் திரும்பத் தேடிப் பார்க்கும் வசதி இருக்கவேண்டும்.  என்ன இருந்தாலும் கூட ஒரு ஆள் இருந்து சொல்லிக் கொடுப்பது போல் இருக்காது என்றுதான் நமக்குத் தோன்றும்.  எனவே இந்த வழிமுறைகள் புரியாமல் போகும்போது அல்லது அதில் ஏதேனும் சந்தேகங்களும் வரும்போது  அவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள மனித தொடர்பும் அவசியம்.  எனவேதான்  மேலும் சந்தேகங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று வழிகாட்டிகளில்  சொல்லியிருப்பார்கள்.

இதுபோன்ற வழிமுறைகள் அவசியம் என்றாலும்,  சிறிய அளவிலான அல்லது பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்காத சாதனங்கள் வழிமுறைகளே இல்லாமல் பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டது சிறந்தது.  இதை எப்படிப் பயன்படுத்துவது என்று பயனாளர் ஒவ்வொருமுறையும் வழிமுறையைத் தேடிக்கொண்டிருக்கக் கூடாது.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button