1
அந்த மரணம் நிகழாமல் போயிருந்தால்
அந்த ஒருநாள் தாளை என் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து கிழித்திருந்தால்
அவர்களை நான் சந்திக்காமலே போயிருந்தால்
என்னுடைய பிடிவாதத்தை ஒருநாளைக்கு நான் தளர்த்தியிருந்தால்
அப்போது சிறிது கவனத்துடன் செயல்பட்டிருந்தால்…
இப்படியான அந்த ஒருநாள் எல்லோருக்கும் இருக்கவே செய்கிறது
ஒருவேளை எனக்கும் அப்படி ஒன்று
நிகழாமலிருந்திருந்தால்
இந்தக் கவிதையை நீங்கள்
வாசித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
****
2
ஒரு சொல்லின் கல்லை
என் மனகுளத்தில் எறிந்தாய்
நீரூறிய கல்
நாள்தோறும் பெருகி வளர்ந்தது
ஒருநாள்
குளம் வற்றி
மண் மலையாய் நின்றது
பின்பொருநாள்
கடும்பாறையாய் இறுகி
காட்சியளித்தது
இறுதியில்
குளத்தின் வடுக்களற்று
ஆவணமற்ற வரலாறானது.
****
3
உனக்கு மட்டுமேயான சொல்லொன்றை
ஒளித்து வைத்துள்ளேன்
அது மனதின் உள்ளின்று
நித்தம் வளர்ந்தது
பெருகிய அச்சொல்
கச்சிதமாய்ப் பொருந்த
இடம் தேடித் தோற்று
தன்னளவை சுருக்கி சிறிதாக்கியது
இப்போது
கனம் கூடிய
அச்சொல்
தேடியலைக்கிறது உன்னை.