மொழிபெயர்ப்புக் கவிதைகள் – மலர்விழி
மொழிபெயர்ப்பு கவிதைகள் | வாசகசாலை
அவன் அழைக்கப்பட்டான்
அவன் அழைக்கப்பட்டான்
மொகமத் ஸீயப் என்று
அமீர்களின்
தேசாந்திரிகளின்
தற்கொலைக்கு முயல்பவர்களின்
வழித்தோன்றலாய்
ஏனென்றால் அவனுக்கு
ஒரு நாடு இருந்ததில்லை
அவன் பிரான்சை நேசித்தான்
ஆதலால் அவனது பெயரை மாற்றினான்
அவன் வீரன்
ஆனால் பிரஞ்சுக்காரன் அல்ல
மேலும் அவனுக்குத் தெரியவில்லை
எப்படி வாழ்வதன்று
நீங்கள் காபி பருகியபடி
கேட்ட குரானின் கோஷத்தை
அவனுடைய அந்தக் கூடாரத்திலிருந்து வெகு தொலைவில்
மேலும் அகதிமையின் பாடலை அவனுக்கு உச்சரிக்கத் தெரியவில்லை
நான் அவனது வழித்துணையானேன்
விடுதி உரிமையாளினியுடன்
பாரிஸில் நாங்கள் வாழ்ந்த
எண் 5 ரூ டி காரமஸிலிருந்து
குறுகிய வீதியின் இறக்கத்தில்.
அவன் ஓய்வெடுக்கிறான்
ஐவிரி கல்லறையில்
அங்கு ஒரு
புறநகர் எப்போதும் உறைந்திருப்பதாய்த் தோன்றும்
ஏதோ ஒருநாளில்
கண்காட்சி கலைக்கப்பட்டிருப்பதாகவும்
ஒருவேளை
நான் மட்டுமே இன்னும் அறிந்திருக்கலாம்
அவன் வாழ்ந்தான் என்பதையும்.
****
கவிஞர் கியூசெப் உங்காரெட்டி:
கியூசெப் உங்காரெட்டி எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் வளர்ந்தார். 1912 இல், அவர் பிரான்சின் பாரிஸுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் சோர்போனில் படித்தார். அவரது கவிதைத் தொகுப்புகளில் மோர்டே டெல்லே ஸ்டாஜியோனி (‘பருவங்களின் மரணம்’ – 1967), லா டெர்ரா ப்ரோமெசா (‘வாக்களிக்கப்பட்ட நிலம்’ – 1950), இல் டோலோர் (‘துக்கம்’ – 1947) மற்றும் சென்டிமென்டோ டெல் டெம்போ (‘தி ஃபீலிங் ஆஃப்’) ஆகியவை அடங்கும். ஆலன் மண்டேல்பாமின் ஆங்கில மொழிபெயர்ப்பான கியூசெப் உங்காரெட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் 1975 இல் வெளியிடப்பட்டன.
**********
எலும்புக்கூடுகள்
சமீபமாக
எலும்புக்கூடுகள் கண்டறியப்படட்ட விதம் என்னை அதிர வைத்தது:
கண்களைச் சுற்றித் துணியால் கட்டப்பட்ட மண்டை ஓடுகள்
கயிற்றால் கட்டப்பட்ட மணிக்கட்டுகள்
ஒரு மாயம் அந்தத் துணி (என்ன நிறம் அது, என்ன வகைத் துணி?) தொட்டிருக்கிறது, சாட்சியாக இருந்திருக்கிறது,
இரண்டாயிரம் ஆண்களின் வாதைக்கு
நிர்வாணமாய் நின்ற
அவர்களின் கண்கள் கட்டப்பட்டு,
சுடப்படுவதற்கு முன்பு வன்புணர்வு செய்யப்பட்டதற்கு.
அவர்களுள்
என் கொள்ளுத் தாத்தா
மற்றும் என் அம்மாவின் இளைய சகோதரனின் மிச்சங்கள்
எஞ்சியுள்ளதாய் நாங்கள் சந்தேகிக்கிறோம்.
காணாமல் போனவர்களிடம் என்ன இருக்கிறது,
அந்த பிழைத்திருத்தல்,
இந்த ஊமை நாடகம், நம்மை அவமதிக்கிறது
ஆகவே? நான் ஹாஜிகளைக் கொன்றபோது
எனக்கு எதுவும் தோன்றவில்லை.
எனது மாணவி ஒரு முன்னாள் கடற்படைவீராங்கனை, எழுதினாள்.
உண்மையில், அந்தக் காட்டுமிராண்டிகள்
எளிதில் வீழ்ந்தனர் மசார்-இ-ஷரீப்பின் கட்டிடங்களைப் போல.
நான் என்ன சொல்லியிருப்பேன்? அவளைப் புகழ்ந்தேன்
உடனடியாக கருப்பொருளுக்கு,
பொருத்தமான உவமைக்காக.
நீ புரிந்து கொள், யுத்தம் செய்வது இலக்கற்றது.
நான் தூண்டப்பட்டே வந்திருக்கிறேன்,
மறைந்து போவதற்காக, என் வாழ்நாள் எல்லாம்.
நான் என் மாணவியைப் பற்றிக் கனவு கண்டேன்
அன்றிரவு,
அவளது குரல் நினைவுகளின் மிருதுவான சாரங்களில்
வலிந்து புகுந்து, சீழ்க்கையடித்தது
லீச்சி, லீச்சி, லீச்சி.
என் அன்பே, எனக்கு வியப்பாக இருக்கிறது
ஏன் ஆங்கிலத்தில் உயிரோடிருந்தாலும் இறந்தாலும் இரண்டுக்குமே
உடல் என்று பெயர்?
ஆனால் நான் அறிவேன்
துக்கத்தின் நலிவிற்கும்
ஒரு இதயம் உண்டு,
அங்கனமே அன்பும்,
மேலும் கற்றுக்கொள்,
அங்கனமே வெறுக்கவும் கற்றுக்கொள்
அவரும் ஒளியுள்ளே ஊடுருவிவிட்டதாக நம்ப விரும்புகிறேன்.
அவருக்கு வயது இருபத்தொன்று
அவர்கள் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, அதாவது
என் மாமாவை.
திரும்பி வந்துவிட வேண்டாம், என் அம்மா
உறக்கத்தில் கத்துகிறாள்.
வேண்டாம்
திரும்பி வந்துவிட வேண்டாம்.
அவர் கண்கள் பச்சையாக இருந்தன.
***
ஆரியா அபர்:
ஆரியா அபர் ஜெர்மனியில் வளர்ந்தார். அங்கு அவர் ஆப்கானிய அகதிகளுக்குப் பிறந்தார். அவர் வரவிருக்கும் நாவலான குட் கேர்ள் மற்றும் ஹார்ட் டேமேஜ் என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இது வைட்டிங் விருதையும் கவிதைக்கான ப்ரேரி ஸ்கூனர் புத்தகப் பரிசையும் வென்றது.
******