காஃப்காவும், மயிலாப்பூரும்:
தற்செயலாக பிரான்ஸ் காஃப்காவின் உருமாற்றம் படிக்கக் கிடைத்தது. இளைஞன் ஒருவன் கரப்பான் பூச்சியாக மாறி விடுகிறான். அதன் உப விளைவுகள்தான் உருமாற்றம் கதை. இந்த நெடுங்கதையை குறுநாவல் என்றும் சொல்லலாம். தமிழில் ஆர்.சிவக்குமார் மொழிபெயர்ப்பில் தொண்ணூறுகளின் இறுதியில் தமிழினி வெளியீடாக வந்தது. இப்போது பதிப்பில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. எவ்வளவோ பூச்சியினங்கள், மிருக இனங்கள் இந்தப் புவியில் இருக்க, காஃப்கா ஏன் கரப்பான் பூச்சியைத் தேர்ந்தெடுத்தார் என்று யோசிக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த ஆச்சரியம் காஃப்கா என்னும் ஆளுமையின் சுவடுகளைத் துழாவ வைக்கிறது.
அப்பாவுடன் முரண்படுதல் என்கிற விஷயத்தைக் கடந்து வராத ஆண் மகன்கள் இந்திய அல்லது தமிழக நிலப்பரப்பில் இருப்பார்களா என்ற கேள்வியும் என் முன் எழுகிறது. பதில் அநேகமாக இல்லை என்பதுதான். நாம் ஏதோ ஒரு விதத்தில் வளர வளர நம் அப்பா அல்லது அம்மா அல்லது வளர்க்கும் பெரியவர்களிடம் முரண்பட்டே தீரவேண்டியிருக்கிறது இல்லையா? மேலும் இந்தியக் குடும்ப அமைப்பு உருவாக்கும் மன அழுத்தம், குடும்பங்களின் அதிகாரப் படிநிலை, குழந்தைகளை சக மனிதராய்ப் பார்க்காத தன்மை என்று இதற்கான சமூக அலகுகளின் காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்தான். நூறு ஆண்டுகளுக்கு முன் நாம் முன்னேறிய சமூகம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய சமூகத்திலும் இதுதான் நிலைமை என்றால் நம் இறுகிப்போன இந்திய/தமிழ்ச் சமூகத்தைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அபத்தம். பேரபத்தம்.
இந்தக் கதையோடு சேர்த்து வாசிக்க வேண்டிய கதை மா.அரங்கநாதனின் மைலாப்பூர் கதை. பேரிடர் காலத்தின்போது இந்தக் கதையை திரும்பவும் வாசித்தேன். ஒரு பெரும் அணு விபத்துக்குப் பிறகு தப்பிப் பிழைக்கும் ஆணும் பெண்ணும் உடன் ஒரு கரப்பான் பூச்சியும்தான் கதை மாந்தர்கள். 33 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கதை. கதையில் ஏன் கரப்பான் பூச்சி வருகிறது என்ற தேடலில் எனக்குக் கிடத்த விடை கரப்பான் பூச்சிக்கு அணுக்கதிர்வீச்சைத் தாங்கும் வல்லமை உண்டு என்கிற அறிவியல் உண்மைதான். காஃப்கா ஏன் கரப்பான் பூச்சியைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கும், மா அரங்கநாதன் கரப்பான் பூச்சியைத் தேர்ந்தெடுத்தற்கும் உத்தேச காரணங்களை நாம் இப்போது ஊகித்தறிய முடியும். எனில் அணு விபத்தில் எப்படி முத்துக்கருப்பனும் அவனோடு உரையாடும் காயத்ரியும் பிழைத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் இருவரும் ‘ஆதாம் ஏவாள்’ என்று ஒரு புரிதலை உருவாக்கிக் கொண்டேன் நான். உலகம் அழிந்து மீண்டும் மறுசுழற்சியாக தன் உற்பத்தியைத் தொடங்குகிறது என்றே நான் அர்த்தம் கொள்கிறேன். தமிழில் எழுதப்பட்ட அற்புதமான சிறுகதைகளில் ஒன்று ’மயிலாப்பூர்’.
மா.அரங்கநாதனின் கதைகள் குறித்து விரிவானதொரு விமர்சன அரங்கு ஒழுங்கு செய்யப்பட வேண்டும். தமிழ் புனைகதைப் பரப்பில் மா.அரங்கநாதனின் கதைகளின் இடம் தனித்துவமானது, தன்னிகரில்லாதது. வைதீக எதிர்ப்பின் அடையாளமாக தென்னாட்டில் உருவாகிவந்த சைவப் பண்பாட்டின் சாரம் மிகுந்தது. அவரது ‘சித்தி’, ‘மைலாப்பூர்’, வீ’டு பேறு’, ‘கச்சிப்பேடு’, ‘காடன்மலை’ ஆகிய கதைகள் தமிழின் மிக முக்கியமான புனைகதை ஆக்கங்கள்.
°°°
விழிப்பு ஜாக்கிரதை…
என் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் 40 கிலோமீட்டர் தூரம். கொரோனா காலங்களில் தினமும் 80 கிலோமீட்டர் என் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்தேன். சமயங்களில் முதுகுத்தண்டு வலியில் பெருங்க்கூச்சல் போடும். அப்போது அலுவலகத்துக்கு அருகே தங்கி விடவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கிராமத்து ஆட்களுக்கு தினமும் ஒரு பழக்கம் போல அரிசிச் சோறு சாப்பிட்டுவிட வேண்டும். ஒருவேளை சோறு சாப்பிடவில்லை என்றால் கூட அன்றைய நாள் முழுமை பெறாது. அப்படித்தான் ஒருநாள் என் வீட்டுக்குப் போகவில்லை என்றாலும் எனக்கு எதையோ இழந்தது போலாகிவிடும். எனவே அலுவலகத்துக்கு அருகிலேயே தங்க வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். ஆனால் பயணமும் அது தரும் முதுகுவலி மட்டுமல்ல, மனிதர்களை சந்திப்பதையும் தவிர்க்க வேண்டும் என்ற சூழல் வந்தபோது நான் ஒரு முடிவுக்கு வந்து அலுவகத்துக்கு அருகிலேயே வீடு ஒன்றில் தங்க ஆரம்பித்தேன்.
அது இரண்டு அறைகள் கொண்ட விசாலமான அபார்ட்மெண்ட் வீடு. அந்த வீட்டில் நான் மட்டுமே தங்கியிருந்தேன். வேலை முடிந்து வீட்டுக்கு எட்டு மணிக்கு வந்தால் ஒரு குளியல் போட்டுவிட்டு பால்கனிக்கு வந்தால் இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கடற்கரை காற்று வந்து என்னை என் சம்மதம் கேளாமல் தழுவும், சல்லாபிக்கும். கூடவே சாத்தானின் பொன் மஞ்சள் நிற திரவமும் கூட்டு சேர்ந்தால் அப்போதைய நான் ஹிட்லரை விடவும் பெரிய சர்வாதிகாரி.
நாட்கள் நன்றாகப் போய்க்கொண்டிருந்தன. என் முதுகுவலி குறைந்துவிட்டிருந்தது. அலுவகம் விட்டு வீடு ஐந்து நிமிடத்தில் வந்துவிட முடியும் என்பதால் பயணக் களைப்பு தரும் உடற்சோம்பல் இல்லவே இல்லை. நிறைய படிக்கவும் எழுதவும் முடிந்தது. ஆனால் விஷயம் அதுவல்ல. சொல்ல வந்தது வேறு விஷயம்.
சில வாரங்களுக்குப் பிறகு நள்ளிரவில் இரண்டு மணி அளவில் முழிப்பு தட்டியது. முதல் நாள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாளும் அதே நேரம் முழிப்பு வந்தது. சரியாக இரண்டு மணி. திரும்ப தூங்குவது கிட்டத்தட்ட ஐந்து மணி அளவில். அதுவும் இரவில் உறக்கம் தடைப்பட்டு உடல் சோர்ந்து, மூளை சிந்தனையின் சுழற் வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்து வேறுவழியில்லாமல் தூங்கிப் போவது. முந்தைய இரவின் தூக்கம் முடிவுக்கு வந்து விழிப்பு தட்டும்போது கண்கள் எரிச்சலுடன் அன்றைய நாளின் காலை ஆரம்பிக்கும். எந்த வேலையையும் திட்டமிட முடியாது. திட்டமிட்டாலும் சரியாகச் செய்து முடிக்க முடியாது. இப்படி இருக்க மூன்றாவது நாளும் அதே இரண்டு மணி அளவில் எனக்கு உறக்கம் தப்பியது. இந்த முறை எனக்குள் இருக்கும் உள்ளுணர்வு விழித்துக்கொண்டது. மிகத் தாமதமான விழிப்பு எனினும் ஆழமான உள்ளுணர்வு. சரி, நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம், பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம் என்று வேலைக்குப் போய்விட்டேன். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சரியான உறக்கமின்மை, உடற்சோர்வு, செரிமானக் கோளாறு, மன எரிச்சல் என எல்லாமும் கூட்டு சேர்ந்து வேலை சார்ந்த செயல்திறனைக் குறைந்துவிட்டன. அதை உணர்ந்திருந்த நான் இன்னும் கொஞ்சம் கூடுதல் எரிச்சல் உணர்வுடன் இருந்தேன். வேலை முடித்தது வீட்டுக்கு வந்தேன். இன்று முழு இரவும் நன்றாக முழுமையாகத் தூங்கி விடவேண்டும் என்று முடிவு செய்து ஏழுமணிக்கு மேல் மடிக்கணினியை உயர்ப்பிக்கவில்லை. வாசிக்கவும் இல்லை. குளித்து முடித்து இரவு உணவை லேசாக எடுத்துக்கொண்டு இரவின் கரு நீலத்தின் ஆழத்துள் நழுவிக் கொண்டிருந்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. ஷோபாவில் அப்படி ஒரு முரட்டு தூக்கம். திடீரென எனது அறைக்குள் விளக்கு எரிந்தது போன்ற உணர்வு எழ விழிப்பு வந்துவிட்டது. எழுந்து பார்த்தால் கும்மிருட்டு. நேரம் சரியாக இரண்டு மணி. கண்கள் ஊடுருவ முடியாத ஆழ்ந்த கருநீலம். கண் எரிச்சலும் மன எரிச்சலும். தூரத்து தேவாலய கடிகாரம் ஒலித்தது. அனால் அந்த எளிமையான விவிலிய வாசகம் காதுகளில் ஒலித்ததே தவிர மனசுக்குள் சென்று அமரவில்லை. இந்த முறை இந்த தொடர்ந்த விழிப்பு நிலை சாதாரண ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. என்னை தவிர இன்னொருவரும் எனது அறைக்குள் வசிப்பதான உணர்வு நிலைக்கு நான் ஆட்பட்டேன். மனம் அதை நம்பத் தொடங்கியிருந்தது. அந்த வீட்டை எனக்கு வாடகைக்கு அமர்த்தித் தந்த நண்பரை தேடிப்போய் இந்த விஷயத்தை சொன்னேன். ஆரம்பத்தில் நான் சொன்ன எதையும் நம்பாத நண்பர் பின்னர் அதை உண்மையா பொய்யா என்ற உறுதி செய்துகொள்ள அன்று இரவு என் வீட்டுக்கு வந்தார். இரவு உணவு, பின்னர் உறக்கம்.
உறக்கத்தின் நடுவே நண்பனின் அலறல் சத்தம் கேட்டது. ஆனால் அந்த அலறல் சத்தத்தில் என் முனகல் சத்தம் கேட்கவில்லை. நான், ‘என்னை விடுடா’ என்று முனகிக்கொண்டிருந்தேன். நண்பன் மிகச்சரியாக என் மார்பு மேல் அமர்ந்து என் கழுத்தைநெரித்துக் கொண்டிருந்தான். இரவின் கரு நீல ஆழத்தில் அவன் கண்கள் ஒரு பூனையின் கண்கள் போல மினுங்கிக் கொண்டிருந்தன. அந்தக் கண்களில் நூற்றாண்டுகளின் தேங்கிய வன்மம். என் மூச்சு எனக்கு நெறிபடும் நிலைக்கு வந்தவுடன் என் பலம் கொண்ட மட்டும் நண்பனை உதறித் தள்ளினேன். கழுத்தை நீவிக்கொண்டே மின் விளக்கை ஒளிரவிட்டேன். நண்பன் மூலைக்குச் சென்று அமர்ந்து என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் பார்த்தேன். இரண்டு ஐந்து. ஆகவே அந்த வியப்பு வந்தது. இரண்டு மணி. அமானுஷ்யம் என்னை, எங்களைச் சூழ்ந்து கொண்டது. எப்படி கதவைத் திறந்து அங்கிருந்து வெளியேறினேன் என்பது சரியாக நினைவில் இல்லை. அதன் பிறகு இந்த நிமிடம் வரை அந்த வீட்டுக்கு இன்னும் நான் போகவில்லை. நண்பரின் கண் பார்த்துப் பேசுவதை கிட்டத்தட்ட குறைத்துவிட்டேன். ‘’முதுதுத்தண்டு வலியில் கூச்சலிடுவதை விடவும் பெரிதில்லை பயத்தில் முதுகுத்தண்டு சில்லிடுவது.”
தமிழில் நல்ல சிறுகதைகள் மிகப் பெரிய எண்ணிக்கையில் உள்ளன. தமிழில் எழுதப்பட்டது போலான தரமான கதைகள் வேறு மொழியில் உள்ளனவா என்பது ஆய்வுக்குரியது. விதம் விதமாக சிறுகதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. கொங்கு கதைகள், மெட்ராஸ் கதைகள், தஞ்சை வட்டாரக் கதைகள், கரிசல் கதைகள் என நல்ல தொகுப்புக்கள் தமிழில் உண்டு. அவ்விதமே ‘அமானுஷயக் கதை’களை யாராவது தொகுத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படித் தொகுத்தால் கணிசமான கதைகள் தேறும். அப்படியான ஒரு கதையை நான் சமீபத்தில் வாசித்தேன். அசோகமித்திரனின் ‘வெளிச்சம் ஜாக்கிரதை’ என்ற கதை. ஆனந்த விகடனில் 2015 ம் ஆண்டு இந்தக் கதை வெளியானபோதே வாசித்திருக்கிறேன். அதே போல அவர் ஆனந்த விகடனில் பல நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். அப்படியான இன்னொரு கதை ‘அடுத்த முறை.’ எனக்குப் பிடித்த கதைகள் இவை. ‘வெளிச்சம் ஜாக்கிரதை’ கதையைப் போல என் வாழ்க்கையிலும் சில அமானுஷ்ய சாம்பவங்கள் நடந்தேறின. அதைப் பற்றிய யோசனை வந்தபோது எனக்கு அசோகமித்திரனின் ‘வெளிச்சம் ஜாக்கிரதை’ கதைதான் எனக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வந்தது. ’வாசகசாலை’ அமைப்பு அசோகமித்திரனின் மூன்று கதைகளை ’தமிழ்ச் சிறுகதைக் கொண்டாட்டம்’ நிகழ்வுக்கு தேர்ந்தெடுத்து அறிவிப்பை வெளியிட்டபோது இது அமானுஷ்ய தற்செயல் நிகழ்வுப் பொருத்தமாகவே தோன்றியது. மனித நம்பிக்கைகளுக்கு அப்பால் எவ்வளவோ நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதைத்தான் அசோகமித்திரன் இந்தக் கதையில் பதிவுசெய்திருக்கிறார்.
எஸ் பி பாலசுப்ரமணியம் – மரணமில்லாப் பெருவாழ்வு..
எஸ்.பி.பி இறந்துவிட்டார் என கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அந்த தனியார் மருத்துவமனை அறிவித்தபோது உடைந்து அழுத பாமர மனங்கள் ஏராளம். நான் அதில் ஒருவன். இசை உலகில் இளையராஜா அநாதை ஆகிவிட்டார் என்று அந்தக்கணம் எனக்குத் தோன்றியது. பின்னர் இது என்ன சிந்தனை என்று என் மீதே எனக்குக் கோபம் வந்தது. ஆனால் ஆழமாக யோசித்துப் பார்த்தால் இளையராஜாவின் அந்தரங்கத் தோழமை எஸ்.பி.பி என்றே தோன்றுகிறது. இயல்பில் தனிமை பேணும் இளையராஜாவுக்கு இது ஒரு பேரிழப்பு. இளையராஜாவின் தனிப்பட்ட வாழ்வின் வெறுமைக் கணங்கள் இனிமேல் அதிகமாகக் கூடும்.
இந்த இடத்தில் ஒரு சின்ன பிளாஷ் பேக் ப்ளீஸ்…
1990ஆம் ஆண்டு. நான் பள்ளியில் ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் பள்ளியில் காலை நேரப் பிரார்த்தனையின்போது தமிழ்த்தாய் வாழ்த்தும் திருக்குறளும் அன்றைய முக்கியமான செய்திகளும் மேடையில் வாசிக்கப்படும். என் தமிழாசிரியருக்கு என்ன காரணத்தினாலோ என்னை மிகவும் பிடித்துவிட்டது. பள்ளியில் காலை நேர மேடையில் வாசிக்க தினம் ஒரு திருக்குறள் மற்றும் செய்தித்தாள்களைப் படித்து செய்திகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தமிழாசிரியர் எனக்குக் கொடுத்திருந்தார். நான் பள்ளி இறுதியாண்டு படித்து முடிக்கும்வரை இதுதான் தினசரி நடைமுறை. வாசிப்பில் பெரும்பாலும் சினிமா செய்திகள் இடம்பெறாது.
தினமும் பள்ளிக்கு வந்ததும் அன்றைக்கு நான் தேர்ந்தெடுத்த திருக்குறள் மற்றும் தலைப்புச் செய்திகளை என் தமிழாசிரியர் ஒருமுறை படித்துப் பார்ப்பார். தேவை எனில் திருத்தங்கள் சொல்வார். வேண்டாத செய்திகளை நீக்குவார். அப்படித்தான் ஒருநாள் அப்போதைக்கு சென்ஷேஷனல் செய்தியான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மூச்சு விடாமல் பாடிய ‘மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ’ பாடலைப் பற்றிய செய்தி தினமணியில் வந்திருந்தது. நான் அந்த செய்தியை அன்றைக்கு வாசிக்க வேண்டிய செய்திகளோடு சேர்த்திருந்தேன். பள்ளிக்கு வந்ததும் செய்திகளை நோட்டம் விட்ட என் தமிழய்யா இந்த சினிமா செய்தி வந்ததும் என்னைக் கொஞ்சம் கோபமாகப் பார்த்தார். அவர் கோபப்படும் போதெல்லாம் நான் தலை கவிழ்ந்து கொள்வேன். அன்றைக்கும் தலை கவிழ்ந்து சிறிது நேரம் நின்றேன். கொஞ்ச நேரம் அமைதியாக என்னைப் பார்த்தவர், “சரி வாசி பரவாயில்லை” என்றார். அன்றைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மூச்சு விடாமல் பாடல் பாடியதை செய்தியாகத் தேர்வு செய்து வாசித்தது, அரை டவுசர் போட்டுக்கொண்டு ஏழாவது படித்த அடியேன்தான். அவருக்கு இந்த மாதிரி உணர்ச்சிப்பூர்வமாக ஒரு அஞ்சலிக் குறிப்பையும் நான் பின்னாளில் எழுதுவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை. எங்கள் பள்ளியில் முதலும் கடைசியுமாக வாசிக்கப்பட்ட சினிமா செய்தி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றித்தான் என்பதை நினைக்கையில் ஒருவித பெருமிதமும் மனக்கலக்கமும் ஒருங்கே உள்ளுக்குள் நிகழ்கின்றன.
பாடல் கேட்கத் தொடங்கி இருபது வருடங்கள் ஆகிவிட்டன. இருபது நெடிய வருடங்கள். ரசனை எவ்வளவோ மாறியிருக்கிறது.எனினும் எண்ணிப் பார்க்கையில் எந்த ஒரு இரவும் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் குரல் இல்லாமல் முழுமை பெற்றதில்லை. வாழ்வின் அனாதைத்தனங்களைப் போக்கிய குரல்களில் அவரது குரல் முதலிடத்தில் இருப்பது. காதலியை விட மனைவியை விட மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்றால் அது அவரது குரல் மட்டுமே. இல்லற வாழ்வு கசந்தால் மனைவி விலகிப் போய்விடுவார். காதல் கசந்தால் காதலி போய்விடுவார் எனில் ஒரு பாடகனின் குரலை நம் ஆன்மாவுக்கு நெருக்கமானது என்று ஏன் சொல்லக் கூடாது? ஒருவருக்கு அந்தரங்கமான நெருக்கத்தை ஒரு பாடகரின் குரல் தந்துவிடுகிறது. அப்படியான ஒரு குரல்தான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தினுடையது. ஆன்மாவுக்கு நெருக்கமான ஓர் குரல்.
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பலதரப்பட்ட மொழிகள். ஆறு தேசிய விருதுகள். நாற்பதாயிரம் பாடல்கள். கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் எல்லா இசையமைப்பாளர்களுடனும் அவர் வேலை செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அவர் ஒரு தனிக்காட்டு ராஜா. இல்லையில்லை, இசையுலகில் தனித்த பேரரசன் அவர். யோசித்துப் பார்த்தால் மலைக்க வைக்கிறது எஸ் பி பி-யின் சாதனை. இந்தப் புள்ளி விவரங்கள் இருக்கட்டும். எத்தனை எத்தனை மனங்களில் அவர் குரல் ஓர் அந்தரங்க நெருக்கத்தை உருவாக்கியிருக்கிறது. எத்தனை எத்தனை மனங்களை அவர் குரல் தற்கொலையிலிருந்து காப்பாற்றியிருக்கக் கூடும்? தனிமையின் ஆழ்ந்த வேதனைகளை வெறுமையைத் தணிக்க அவர் குரல் ஒரு மாமருந்து. சுயசரிதத்தை எழுத சரியான தேர்வு அவர். அவர் கடந்து வந்த வாழ்வை எங்கேனும் எழுதியிருக்கிறாரா எனத் தெரியவில்லை. அப்படி எழுதியிருந்தால் சந்தோசம். அது தனி ஒருவரின் சுயசரிதையாக இல்லாமல் தென்னிந்திய இசை உலகின் சரித்திரமாக இருந்திருக்கக் கூடும். அப்படி அவர் எழுதியிருக்கவில்லையெனில் இசை உலகுக்கு அது மாபெரும் இழப்புதான்.
இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் அவருடைய நடிப்பு. தென்னிந்தியாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் எஸ் பி பி. ‘காதலன்’ படத்தில் அவர் செய்த அப்பா கதாபாத்திரம் அழகான, காலத்தால் அழியாத ஒன்று. அவரது நடிப்பு மட்டுமல்ல குரலும் குணசித்திரத் தன்மை வாய்ந்தது. அப்பாவுக்கும் மகனுக்குமாக சண்டையில் தொடங்கும் அந்தக் காட்சி முடியும்போது ஒருவித நெகிழ்ச்சியைத் தந்துவிடும். மகனுக்கு குடிக்க ஊற்றிக் கொடுத்து, மெல்ல ஒரு பாடலின் மூலம் தொடங்கி மகனின் அந்தரங்க நேசத்தை வெளிக்கொண்டு வரும் அந்தக் காட்சி எனக்கு மிகப் பிடித்தமானது. “யாரு அந்தப் பொண்ணு?” என்று கேட்க ஆரம்பித்து, காக்கர்லால் என்று தொடங்கி பிரபுதேவா மீதியை சொல்லாமல் விழுங்க, “காக்கர்லால் வீட்டுல வேலை செய்றாளா?”, “காக்கர்லால் வீட்டுல வேலை செய்யுறவங்க பொண்ணா?”, “காக்கர்லால் வீட்டு பின்னாடி இருக்காளா?” எனக் கேட்டு கடைசியில், “பின்ன காக்கர்லால் பொண்ணையா லவ் பண்ற?” என்று கேட்க, அதற்கு “ஆமாம்” என்று பிரபுதேவா சொல்ல ஒரே மூச்சில் மீதமிருக்கும் போத்தலை எடுத்துக் குடித்து முடிப்பார். எத்தனை ஆழமான கவித்துவமான காட்சி இது. என் பதின் வயதுகளில் ஒரு அப்பா காதலன் படத்தில் வரும் எஸ் பி பி-யைப் போல இருக்க வேண்டும் என்று நண்பர்களிடம் புலம்பித் திரிந்திருக்கிறேன். நிஜ வாழ்வில் அப்பா இல்லமால் வளர்ந்த பையன்களுக்கு இந்த ஏக்கத்தின் உண்மையான தாத்பர்யம் புரியும்.
மேலும் ‘குணா’ படத்தில் ஆஸ்துமா பாதித்த ஆந்திர போலீஸாக அதகளம் செய்திருப்பார் எஸ் பி பி. ‘திருடா திருடா’வில் சி.பி.ஐ அதிகாரியாக நகைச்சுவை கலந்த குணச்சித்திரம் காட்டியிருப்பார். ‘உல்லாசம்’ படத்தில் தன் மகன் அஜித், கேங்ஸ்டரான ரகுவரனைப் பின்பற்றி வாழ முயற்சிக்கும்போது உள்ளார்ந்த வேதனையை நடிப்பில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் அந்தக் காட்சி அபாரமானது.
தனிப்பட்ட தொலைக்காட்சி உரையாடல்களில் அவர் உடல்மொழியை மிகவும் ரசித்திருக்கிறேன். அவரது பணிவு கண்டு கூசியிருக்கிறேன். தனிப்பட்ட வாழ்வில் அகங்காரனான எனக்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பணிவு என்பது நம்ப முடியாத பேராச்சர்யம்தான். அவர் இதுவரை யாரையும் காயப்படுத்தியதாகவோ, புண்படும்படி பேசியதாகவோ எங்குமே படித்ததில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறுவர்/சிறுமிகள் அவர் பாடிய பாடலை கொஞ்சம் நேர்த்தியோடு பாடிவிட்டால் கொண்டாடித் தீர்த்து விடுவார். இசை வாழ்வில் மாபெரும் உச்சம் கண்ட எஸ்.பி.பி தொழில் பக்தி, திறமை, அர்ப்பணிப்பு உணர்வு, என எல்லாமும் ஒருங்கே பெற்ற அபூர்வக் கலவை. சுருங்கச் சொன்னால் மீண்டும் நிகழ வாய்ப்பில்லாத ஓர் சகாப்தம் – எஸ்.பி.பி. அவரது தேகம் மறைந்துவிட்டது. அவர் இசையாய் என்றும் பாமர மனங்களில் மலர்ந்துகொண்டேயிருப்பார். எள் முனை அளவும் அதில் சந்தேகமில்லை.
தொடரும்…