பொன்விதி
இந்த இடத்தில் வந்து
அமர்ந்துற்ற பொன்விதியால்
ஆயிரமாயிரம் மனிதர்களின் தலையைத்
தொட்டுத் தொட்டு விம்முகிறது
அம்மரம்.
தலைகள் என்றும் தீருவதில்லை.
விழுதூஞ்சல் ஆடுகிற குழந்தைகளும்
இழுத்துச் செல்லப்படுகிறார்கள்
காலந்தோறும்.
நிற்கவே கூடாத வாகனங்களும்
அனிச்சையாக
ஓடிக்கொண்டே
நடக்கப் பழகிவிட்டவர்களும்
சிவப்பு மஞ்சள் பச்சைக்காகவே
நேர்ந்துவிடப்பட்ட ரயில்களும்
மொய்த்துக் கிடக்கும் நிலையத்தின்
முன்பு
மரமாக வாழ்வதென்பது
ஒவ்வொரு இலையாக தலை திருகிக்
கொன்று புதைப்பது
காலாவதியாவதற்காகவே
தூசிக்காற்றை முகர்ந்து
உயிர்த்தைலத்தை
பலியிடுவது.
***
மாரிலடிக்கும் ஒப்பாரி
கால்வலிக்க
நின்று கொண்டிருக்கிறார்கள்
துக்கத்துக்குச் செல்லும் தாய்மார்கள்
தொங்கு பட்டையை விட்டுவிட்டு
மாரிலடித்துக் கொண்டு
அழத் தூண்டுகிறது
ஒவ்வொரு நிலையத்திலும்
கசகசத்து ஏறுபவர்களால்
பேசவும் பேச முடியாமலும்
கத்தரிக்கப்பட்டுக் கொண்டே
இருக்கிறார்கள்
யார் முகமும் தெரியவில்லை
யாருக்கும்.
இறந்தவளின் ஊர் நிலையம்
நெருங்க நெருங்க
ஒவ்வொரு தொங்குபட்டையிலிருந்தும்
ஆவேசத்துடன்
பொங்குகிறது
அடக்க முடியாமல்
தொங்கு பட்டையை விட்டு
முதலிலொருத்தி மாரிலடிக்க
ஓங்கி எழுகிறது
ஒப்பாரி.
***
தாமதக்காரன்
அன்றாடம் ஓடிப்பிடித்து ஏறும் ரயிலை
தவறவிட்டதன் வாயிலாக
இன்று எல்லாவற்றையும்
தாமதப்படுத்த இயலுகிறது என்னால்
ஒருபோதும் நான் அமர்ந்திடாத
குளிர்ச்சியுறங்கும் கல் பெஞ்சில்
கைவிரல்களைப் பதிக்கிறேன்
அடையாளத்தை அறிந்து
ஏந்திக் கொள்ளத் தொடங்குகிறது
ஒவ்வொரு ரேகையிலும்
மழைக்குளிரின் பாய்ச்சல்
கல்லும் தேகமும்
உணர்வாடலில் கரைந்துருக
இன்னும் கொஞ்சம்
உட்கார்ந்திருந்தால் போதும்
தாமதக்காரனாகிவிட்ட பிறகு
சிலிர்த்துக் கொண்டே விழிக்கிறது
அமருகிற
இடமெல்லாம்.