இணைய இதழ் 110சிறுகதைகள்

வேர்ப்பூக்கள் – ச.ஆனந்த குமார்

சிறுகதை | வாசகசாலை

“என்னடா சொல்ற.. உண்மையாகவா” என்றார் சண்முகம் அதிர்ச்சியுடன்..

“ஆமாங்க ஐயா.. நான் என்னோட ரெண்டு காதால கேட்டேன். கண்டிப்பா அடுத்த சனிக்கிழமை மேலக்கடை கோவிலுக்குள்ள நுழையறது உறுதினனு செல்வம் சொல்லிக்கிட்டு இருந்தான்”

“பெரியவர் அதுக்கு ஒத்துக்க மாட்டாரேடா. அவர மீறி அவுங்க ஒண்ணும் செஞ்சுட முடியாது”

“நீங்க சொல்றதும் உண்மைதாங்க ஐயா. ஆனா, செல்வம் தலை எடுக்க ஆரம்பிச்சதும் பெரியவர் இப்ப கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்க ஆரம்பிச்சிட்டார். பையன எதுத்து எல்லாத்துக்கும் மல்லு கட்டி முன்ன மாதிரி அவருனாலயும் இப்பல்லாம் நிக்க முடியறது இல்ல”

உண்மைதான் அவனை எதிர்த்து பேசி ஜெயிப்பது அவ்வளவு எளிதல்ல.. அதுவும் நன்றாக வளர்ந்து வருகிற வக்கீல். எல்லாவற்றிற்கும் சட்டம் பேசுவான்.

“ம்…என்ன பண்ணலாம்” என்று யோசித்த சண்முகம், “சரி, நம்ம வேலுமணி ஐயாவை பெரியவர்கிட்ட பேச சொல்லலாம். அது சரி வர்லன்னா அப்புறம் நம்ம யாரு, நம்ம பவர் என்னன்னு அவங்களுக்கு காட்ட வேண்டியதுதான். வேற வழி இல்ல.. இப்போதைக்கு நீ இத வேற யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.. நான் பாத்துக்கறேன்” என்றார் சண்முகம் தன் மீசையை தடவியபடியே.

“சரிங்க ஐயா.. அப்ப நான் கெளம்பறேன்” என்றான் ஆறுச்சாமி.

நேராகவே தன் காரை கிளப்பிக் கொண்டு வேலுமணி வீட்டிற்க்கு சென்றார் சண்முகம்.

“வா தம்பி ..எப்படி இருக்க.. அதிசயமா நேர்லயே வந்துருக்க.. என்ன விசேஷம்” என்றார் வேலுமணி.

அறுபது வயது அனுபவம் முகத்திலும் நரையிலும் தெரிந்தது. சண்முகம் அவரிடம் விஷயத்தை சொன்னவுடன் கொஞ்சம் யோசித்தவர்

“இன்னும் பத்து நாள் இருக்குல்ல.. நான் பெரியவர் கிட்ட பேசி பாக்குறேன். முப்பது வருஷங்களுக்கு முன்னாடி நடந்ததை அவ்வளவு சீக்கிரம் அவங்க மறந்திருக்க மாட்டாங்க.. நீ இப்ப கெளம்பு.. நம்ப ஆளுங்க வேற யாருகிட்டயும் இப்போதைக்கு எதுவும் சொல்லிக்க வேணாம். முக்கியமா ஆறுச்சாமி வாயை மூடி வை”.

“சரிங்க.. அப்ப நான் கெளம்புறேன்” என்று சண்முகம் கிளம்பியதும் வேலுமணி முப்பது வருடங்களுக்கு பின்னால் போனார்.

மேலக்கடை என்பது அந்த ஊரின் வடக்குப் பகுதியை குறிக்கும். ஊரின் பணமும் அதிகாரமும் உள்ளவர்கள் வசிக்கும் பகுதி. தெற்குப் பகுதி கீழக்கடை என்று அழைக்கபடும்.

ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னால் ஈஸ்வரமூர்த்தியும் ஐயாசாமியும் தொடக்கி வைத்தது இந்த பிரச்சனை. கீழக்கடையிலிருந்து கிளம்பி மேலக்கடையில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குள் நுழைந்தே ஆவதென ஊர்வலமாக வந்தார்கள்.

எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. வேலுமணியும், ராஜாராமும் வேறு வழி இல்லாமல் போலிசுக்குப் போக வேண்டியிருந்தது. ஊர்வலத்திற்கு அனுமதி வாங்கவில்லையென எச்சரித்தும் கேட்காமல் ஈஸ்வரமூர்த்தி முன்னால் நடக்க, அவரை தொடர்ந்து ஒரு நூறு பேர் முதன் முதலாக மேலக்கடைக்குள் நுழைந்தார்கள்

ஐயாசாமி தடுக்க முயற்சி செய்தார்.. முறையாக அனுமதி வாங்கி உள்ளே நுழையலாம் என்றார். ஆனால், ஈஸ்வரமூர்த்தி விடாப்பிடியாக, “இல்ல சாமி.. இன்னிக்கு இதுக்கு பயந்து பின்னாடி போனா.. நாளைக்கு வேற ஏதாவது காரணம் சொல்லி நம்மள தடுப்பாங்க..”

“நம் அடுத்த தலைமுறைக்காக நாம் தேவைப்பட்டால் உரமாவோம்.. தேவைப்பட்டால் வாழ்வதற்காய் வீழ்வோம்” என்று அவர் கர்ஜித்ததும், “வாழ்வதற்காய் வீழ்வோம்.. வாழ்வதற்காய் வீழ்வோம்” என்று கத்திக் கொண்டே கூட்டம் முன்னேற ஆரம்பித்தது.

ராஜாராமுக்கு ஆத்திரம் தலைக்கு மேல் ஏறி விட்டது. அவர் ஆட்களுடன் எதிர் பக்கம் தடுக்க உள்ளே நுழைய முதல் அடி பளிச்சென ராஜாராமுக்குத்தான் விழுந்தது. அடித்தது ஈஸ்வரமூர்த்தி

அடுத்த நொடி கூட்டத்தில் இருந்து ஒரு கல் நேராக பாதுகாப்பிற்கு வந்த ஒரு போலிசின் நெற்றியில் விழுந்தது. இதற்கு காத்திருந்தது போலவே இன்ஸ்பெக்டர் ராஜாராமைப் பார்க்க அவர் தலையை அசைத்து ஒப்புதல் கொடுத்து விட்டார்.

“சார்ஜ்” என்ற சத்தம் கேட்டதும் போலீஸ் லத்தியுடன் நுழைய அமைதியான மேலக்கடை அலற ஆரம்பித்தது.

தலையை உதறிக்கொண்டார் வேலுமணி. இப்போது நினைத்தாலும் அவர் உடல் நடுங்குகிறது. அந்த கலவரத்தில்தான் ஈஸ்வரமூர்த்தியின் உயிர் பிரிந்தது. அவர்கள் சார்பில் ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்து வளர்ந்து வந்து கொண்டு இருந்தவன் அவன் ஒருவனே..

தலைவன் இல்லையென்றதும் சிதறியோடிய கூட்டத்தை துரத்தி பிடித்து தடையை மீறி ஊர்வலம் வந்ததற்காக கைது செய்தது. அவர்களை விடுவிக்க அப்போது ஐயாசாமி வேலுமணியைத்தான் உதவி கேட்டார். மீண்டும் பெருமாள் கோவிலுக்குள் தடையை மீறி நுழைய மாட்டோம் என்ற ஒப்பந்தத்தில்தான் எல்லோரையும் விடுவிக்க போலிசிடம் பேசி உதவி செய்தார் வேலுமணி.

அன்றிலிருந்து கீழக்கடையின் தலைவரானார் இப்போது பெரியவர் என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ஐயாசாமி. ஈஸ்வரமூர்த்தியின் மகனான செல்வத்தை அவரே தன் மகன் போல நினைத்து வளர்க்க ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் தலைமையில் பல நல்ல விஷயங்களை அவர் செய்ய தொடங்கினார்.

முக்கியமாக அடுத்த தலைமுறையில் அனைவரையும் படிக்க வைத்தார். இந்த முப்பது வருடங்களில் அவர்கள் நிறைய வளர்ந்து விட்டார்கள். எல்லோரும் வக்கீல், போலீஸ் இன்னும் சிலர் டாக்டருக்கு கூட படிக்கிறார்கள். ஆனாலும் யாரும் பெரியவரை எதிர்த்துப் பேசுவதில்லை. இன்று வரை பெரியவரும் அவர் சொன்ன வார்த்தையை காப்பற்றி கொண்டிருக்கிறார்.

அந்த கலவரத்தில் ஈஸ்வரமூர்த்தி கொல்லப்பட்டது ராஜாராமின் மாஸ்டர்ப்ளான் என்று பிறகுதான் வேலுமணிக்கு தெரிய வந்தது. அடுத்த இரண்டு வருடத்தில் சரியாக அந்த கலவரம் நடந்த அதே நாளில் ராஜாராம் ஒரு விபத்தில் இறந்து போனார். அவரின் மகன்தான் சண்முகம்.

அடுத்த தலைமுறையின் போராட்டம் தொடங்கி விட்டதோ என்கிற பயம் வேலுமணிக்கு வந்தது. உடனே டிஎஸ்பிக்கு போன் செய்து விஷயத்தை அவர் காதில் போட்டு வைத்தார். எக்காரணம் கொண்டும் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என்றும் கேட்டு கொண்டார்.

அவரின் கட்சியான ஆளுங்கட்சி தலைமைக்கும் செய்தியை காதில் போட்டு வைத்தார். பிறகு பெரியவருக்கும் பேசினார்.

பெரியவர் சிரித்துக்கொண்டே அந்த ஒப்பந்தம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்று உறுதிப்படுத்தியதும்தான் வேலுமணிக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் எதற்கும் இருக்கட்டும் என்று மேலக்கடையின் முக்கியஸ்தர்களை அழைத்து ஒரு கூட்டம் கூட்டினார் வேலுமணி. அனேகமாக பெரியவரின் உத்தரவுக்கு செல்வம் கட்டுப்படுவான் என்றாலும் முன்னெச்சரிக்கையாக எதற்கும் இருக்கட்டும் என்று காவல்துறைக்கு தகவல் கொடுத்ததைச் சொன்னார்.

அது மட்டுமின்றி அவர்கள் ஆட்கள் எல்லோரையும் அன்று மட்டும் ஊரிலேயே இருக்கச்சொன்னார்.

அதே நேரம் கீழக்கடையிலும் பெரியவர் தலைமையில் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. செல்வம் பேசிக் கொண்டிருந்தான்.

“நம்ம இந்த விஷயத்தை சட்டப்படிதான் அணுகப்போறோம். நமக்கு வன்முறை தேவையில்லை. ஊர்வலத்துக்கு அனுமதி வாங்கியாச்சு. நம்ம இன்ஸ்பெக்டர் மாறன்  ஏற்கனவே ஐஜிகிட்ட பேசி பர்மிஷன் வாங்கிட்டான். மீடியால கவர் பண்ணவும் நம்ம ஆட்கள் இருக்காங்க”.

“நம்ம அமைதியா ஊர்வலம் போறோம். கடவுளை பாத்து கும்பிட்டுட்டு திரும்பி வரோம். நம்ம பேசக்கூடாது. நம்ம செயல்கள்தான் பேசணும். ஆனா, இதை நாடே கவனிக்கும். யாரும் எங்க போறதுக்கும் யாரோட அனுமதியும் தேவை இல்லன்னு பொட்டுல அடிச்சா மாதிரி எல்லோருக்கும் புரிய வைக்கும். என்ன எல்லோரும் தயாரா..?”

அவனுடைய கோர்வையான அமைதியான பேச்சு எல்லோரையும் கட்டிப் போட்டிருந்தது. மெதுவாக அதில் இருந்து வெளியே வந்தவர்கள்

“தயார் தயார்” என்று உச்சக்குரலில் கத்தினார்கள்.

‘நாட்கள் நகர நகர வேலுமணிக்கு பதட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. கேள்விப்படும் எந்த விஷயமும் அவர் நினைத்தது மாதிரி இல்லை. திடிரென பெரியவருக்கு உடல் நிலை சரியில்லை மூச்சுத் திணறல் என்று மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியும் அவர் கவலையை அதிகப்படுதியது.

புதன்கிழமை திரும்பவும் ஆறுச்சாமி ஊர்வலம் கண்டிப்பாக திட்டமிட்டபடி நடக்கும் என்ற தகவலை உறுதிப்படுத்தியதும் கோபமாக டிஎஸ்பியைத் தொடர்பு கொண்டார்..

“ஆமாங்க ஐயா.. ஒண்ணும் பண்ண முடியல.. அவங்க கலெக்டர் வரைக்கும் போய்ட்டாங்க.. என்ன பண்ணியும் தடுக்க முடியல.. மன்னிச்சுருங்க” என்றார்.

பொறுமைக்கு பெயர் போன வேலுமணிக்கு முதன் முதலாக கோபம் வெளியே தெரிந்தது.

“சண்முகம் இது இப்ப மேலகடையோட மானபிரச்சனை. இனி நியாய தர்மமெல்லாம் பேச முடியாது. ஆட்களை இறக்கி கோவிலை சுத்தி நிக்க வை. நாம்மளா அவங்களான்னு பாத்துடுவோம்”

சண்முகத்துக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஐயா அனுமதி கொடுத்து விட்டார். ரொம்பவும் ஆடிக் கொண்டிருக்கிற செல்வத்தை தட்டி வைக்க இதுதான் சரியான சந்தர்ப்பம்

“சரிங்கய்யா.. நான் உடனே அதுக்கான ஏற்பாடுகளை பண்ண ஆரம்பிக்கிறேன்” என்று கிளம்பினான்.

சனிக்கிழமை கொஞ்சம் பயத்துடனேதான் தொடங்கியது. திட்டமிட்ட படி செல்வம் தலைமையில் அமைதியாக ஊர்வலம் தொடங்கியது. “யாருடைய அனுமதியும் தேவையில்லை கடவுளைக்காண” என்கிற பதாகையை ஏந்தியபடி ஊர்வலம் மேலக்கடையை நெருங்கியது. மெல்ல மெல்ல கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. அவன் சொல்லியிருந்த படி மீடியாக்களும் சேர்ந்து கொள்ள அது மெல்ல மெல்ல அன்றைய பேசு பொருளானது.

மேலக்கடைக்குள் ஊர்வலம் நுழைந்த உடனே சண்முகத்திற்கு தகவல் பறந்தது. உடனே உறங்கி கொண்டிருந்த அருவாள் கணக்கை சரி பார்த்து கொண்டனர்.

நுழைந்த ஊர்வலம் யாருமே எதிர் பார்க்காத வகையில் அங்கே இருந்த ஒரு சின்ன பிள்ளையார் கோவில் முன் நின்றது. அனைவரும் அமைதியாக கோவிலைச் சுற்றி முடித்து விட்டு வெளியே வர செல்வத்தை நோக்கி நீண்டன சில மைக்குகள்.

“இதுதான் உங்க ஊர்வலத்தோட நோக்கமா?” என்று சிரித்தபடி கேட்டார் ஒருவர்

மெதுவாக தொண்டையை செருமிக் கொண்ட செல்வம், “இயற்கை எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ அப்படித்தான் கடவுளும். கடவுள் ஒரு கோவிலுக்குள்ள மட்டும்தான் இருக்கார்னு யாராவது சொன்னா உங்களுக்கு சிரிப்பு வருமா வராதா.?. முப்பது வருஷத்துக்கு முன்னாடி இந்த காரணம் சொல்லித்தான் இதே நாள்ல இங்க ஒரு பெரிய கலவரம் வெடிச்சது.”

“கோவிலுக்குள்ள நுழைவதுக்கு யாரோட அனுமதியும் தேவை இல்லன்னு இந்த உலகத்துக்கு சொல்றதுதான் இந்த ஊர்வலத்தோட நோக்கம்”

“கடவுள் யாரையும் சண்டை போட்டுக்கிட்டு சாக சொல்லல.. சட்டப்படி இந்திய அரசியலமைப்பின் 15-ஆவது பிரிவு கோவில்கள் அல்லது மத இடங்களுக்கு போவதுங்கிறது உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். அத யாராலயும் தடுக்க முடியாது. ஆனாலும் எங்க ஐயா சொன்னதுக்கு கட்டுப்பட்டு இப்ப இந்த கோவிலுக்கு வந்தோம்”

“வேர்கள்ல இருந்தே பூக்கள் பூக்கற மாதிரி எங்களுக்கு படிப்பு இந்த தெளிவைக் கொடுத்திருக்கு. நிச்சயமா மேலக்கடை நண்பர்களுக்கும் இந்த உண்மை ஒரு நாள் புரியும். அது வரைக்கும் காத்திருப்போம்” என்று முடித்தான்.

வேலுமணியும் சண்முகமும் தலை குனிந்து கொண்டனர். கடவுள் அங்கே நின்று கொண்டு புன்னகைத்த மாதிரி தோன்றியது.

vidaniru@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button