இணைய இதழ் 111சிறுகதைகள்

விருத்தசேதனம் – பாலு

சிறுகதை | வாசகசாலை

இலையுதிர் காலம் தொடங்கிவிட்டிருந்த முதல் நாள் இரவே பனி காதுக்குள் நுழைந்து சில்லிட்டது. குளிர் வழக்கத்தைவிட மிகச் சீக்கிரமாக வந்துவிட்டிருந்ததை அபசகுனமாகவே உணர்ந்தேன். என் தேகம் மனதின் சொல்லுக்கடங்காமல் தலைவிரித்தாடியது. முந்தைய குளிர்காலம் என்னை இப்படி வாட்டவில்லை. ஒருவருக்கு வயது கூடும்போது அவரின் தனிமைக்கு இருமடங்காய் வயதாகிறது.

ஆளரவமில்லாத சாலைகளைத் தனிமையில் கடந்து நள்ளிரவில் வீடு சேர்ந்தேன். படுக்கையறையின் மிகப்பெரிய கண்ணாடியில் முகம் கண்டபோது குற்றத்தின் சேறும், நீராலும் கழுவ முடியாத ரத்தக்கறையும் படிந்திருந்தன. வேட்டைக்குப் பின்பான நீண்ட உறக்கத்திற்குத் தயாராவதற்காக ஆடைகளைக் களைந்தேன். நெஞ்சிலும் கழுத்திலும் பெண்ணின் நகக்கீறல் பதிந்ததால் வீசத் தொடங்கியது குருதி வாசனை.

கைகள் நடுங்கியபடி உள்ளாடையைக் கழற்றி உறுப்பை உற்றுப் பார்த்தேன். இளஞ்சிவப்பு தலைப்பகுதி புற்றிலிருந்து தலைநீட்டிய பாம்பு போல் வெளியேறியிருந்தது. கலவியின் ஈரப்பதம் மெல்ல மெல்லக் காற்றில் காய்ந்து வறண்டது. முதன்முறையாக உறுப்பை முழுமையாய்க் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன். குறியின் சுருங்கிய நுனித்தோல் ஏறத்தாழ முன்னிழுக்க முடியாத வகையில் பின்தங்கியிருந்தது. எவ்வளவு முயன்றும் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பாமல் சிக்கியிருப்பது வருந்துவதற்கில்லைதான். எனினும் ஆடையோ துணியோ அதன்மீது படும்போதெல்லாம் உடலின் நரம்புகளை யாரோ கையால் பிடித்திழுப்பது போல் சுருக்கென வலித்தது. குறியின் சிவந்த தலைப்பகுதியில் கைப்படும்போதெல்லாம் மின்சாரம் தாக்கப்பட்டவனாய் துடிதுடித்துப் போனேன். அச்சமயத்தில் அவளை பலாத்காரம் செய்ததற்காக மனதார வருந்தினேன்.

*

உண்மையில் அவளை ஏன் பலாத்காரம் செய்தேனெனத் தெரியவில்லை. குற்றங்கள் செய்வதற்குத் தர்க்கம் அவசியமா என்ன? அவளின் இரு கைகளையும் அழுத்திப் பிடித்து கழிநுகர்ந்தபோது பயமோ குற்றவுணர்ச்சியோ துளியுமில்லை. சட்டம் பற்றிய அச்சமில்லை. இந்தக் குற்றத்திற்கான தண்டனை மிகத் தீவிரமானதாக இருக்கலாம். ஆனால், மனிதன் தண்டனைகளுக்கு பயந்து குற்றம் செய்யாமல் இருப்பதில்லை; குற்றமிழைப்பதே அந்தரங்க சுகபோகங்களைத் திருப்திப்படுத்திக் கொள்வதன் பொருட்டுதான். சுகபோகங்கள் அபாயங்களைக் கடக்காமல் கிடைப்பதில்லை.

அன்றிரவு புணர்ச்சியின் களைப்பால் புறத் தாக்கங்களின்றி தூங்க முடிந்தது. காலை எழுந்து முதல் வேளையாகச் சிறுநீரக மருத்துவமனைக்கு ஓடினேன். உள்ளாடை அணியாமலிருந்ததால் அசௌகரியத்தில் ஒரு கையால் வேட்டியைப் பிடித்துக்கொண்டே நடந்தேன். ஒருநாள் முழுக்க குறி சார்ந்த பிரக்ஞையுடனே இருந்த எரிச்சலால் கட்டற்ற இச்சையை எண்ணிக் கசந்து கொண்டேன். பெண்ணின் வலியிலும் பிடிவாதத்திலும் சுகங்காணும் என் விந்தையான மோகம் என்னை இங்குக் கொண்டு வருமென எண்ணியதில்லை. குற்றவுணர்வைவிடக் குறியின் கூச்சலே மிகுந்திருந்தது.

வரவேற்பறையில் என் பெயர் சொல்லி அழைத்து மருத்துவரைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டனர். உள்ளே என் வயதொத்த ஓர் இளைஞர் தலைமை மருத்துவராய் இருந்தார். அவருடன் மூன்று மாணவர்களும் இரு மாணவிகளும் துணைக்கு இருந்தனர். வேட்டியை ஜாக்கிரதையாகப் பிடித்து நடந்து வந்ததை மாணவிகள் விசித்திரமாகப் பார்த்தனர். மருத்துவர் என்னை அமரச் செய்து என் பெயர், வயது ஆகிய விவரங்களைக் கேட்டு எழுதிக்கொண்டார்.

“சொல்லுங்க. என்ன காரணத்துக்காக யூராலஜிஸ்டை பார்க்கணும்னு நினைச்சீங்க” எனத் தன்மையாக ஆரம்பித்தார்.

“ஆணுறுப்பு தோல் நேத்து நைட்டு பின்னாடி மாட்டிக்கிச்சு. எவ்ளோ ட்ரை பண்ணாலும் மறுபடியும் பழைய மாதிரி முன்னாடி கொண்டு வர முடியல” என்றேன் தயங்கிக்கொண்டே.

”அந்த பெட்ல போய் படுங்க” எனத் திரைச்சீலைக்குப் பின்னால் இருந்த மருத்துவப் படுக்கையைச் சுட்டிக்காட்டிச் சொன்னார். “கொஞ்சம் வெளியே இருங்கம்மா” என மாணவிகளிடம் சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் கையுறையை அணிந்தார். மாணவர்களிடம் அவர் சில மருந்துகளைச் சொல்ல, மூவரும் அவற்றை ஏற்பாடு செய்துகொண்டு வந்தனர். படுக்கைக்கு வந்து, “வேட்டிய லூஸ் பண்ணிக்கோங்க” எனச் சொல்லி என்னுடைய குறியை ஆராய்ந்து பார்த்தார்.

“எப்போ நடந்ததா சொன்னீங்க?” எனக் கூரிய கண்களுடன் கேட்டார்.

“நேத்து நைட்டு டாக்டர்”

“ஏன் இவ்வளவு நேரம் இப்படியே வச்சிருக்கீங்க? அப்போவே வர வேண்டியதுதானே?”

“ராத்திரி ஒரு மணி மேலதான் வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன். அந்த நேரத்துல ஹாஸ்பிடல்ஸ்லாம் மூடியிருந்தது” என்றேன்.

“ஜி.ஹெச் போய் எமர்ஜென்சிலேயாவது அட்மிட் ஆகியிருக்கலாமே? இனிமே இப்டி ஏதாவது நடந்தா நேரங்காலம் பார்க்காம ஹாஸ்பிடல் போய் பாருங்க” என எச்சரித்தார். மாணவன் ஒருவன் தந்த மருந்தைப் பஞ்சில் ஊற்றி குறியின் முனைத்தோல் பக்கத்தில் தடவினார். பின் தோலை நீவிவிட்டு தலைப்பகுதியை லேசாய் உள்நோக்க அழுத்திப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தார்.

“முடிஞ்சுது. வேட்டியைக் கட்டிக்கிட்டு போய் உக்காருங்க” – விரைவாகக் கையுறைகளைக் கழட்டி குப்பையில் போட்டு கைகளைக் கிருமிநாசினி திரவம் தேய்த்துக் கழுவினார். பிறகு மீண்டும் தன் இருக்கைக்கு வந்தமர்ந்து கேள்விகளைத் தொடர்ந்தார்.

“நேத்து யாரோடவாவது செக்ஸ் வெச்சீங்களா? இல்ல ரொம்ப விகரஸ்ஸா மாஸ்டர்பேட் பண்ணீங்களா?” என்ற அவரின் கேள்வி, நான் செய்த பலாத்காரத்தை நினைவுபடுத்தி தொந்தரவு செய்தது. அவரிடம் கலவியைக் காரணமாய்ச் சொன்னேன்.

“மனைவியா இல்ல கேர்ள்ஃப்ரெண்டா?” எனக் கேட்டார்.

“தெரிஞ்சவங்க”

“முதல் தடவையா?”

“ஆமாம் டாக்டர்”

“ஒகே. இந்த கண்டிஷனுக்குப் பேரு பாரா-ஃபைமோஸிஸ்னு சொல்லுவாங்க. அதாவது முன்தோல் குறுக்கம். உங்களுக்குச் சின்ன வயசுல இருந்தே இப்படித்தானே இருக்கு, இல்லையா?. அதான் முதல்முறை செக்ஸ் வெச்சதும் ஃப்ளெக்ஸிபலா இல்லாம இப்படி நடந்திருக்கு. நீங்க மாஸ்டர்பேட் பண்ண மாட்டீங்களோ?”

“பண்ணுவேனே டாக்டர்”

“கேன் யூ எக்ஸ்ப்ளெயின்?”

”புரியல டாக்டர்”

“நீங்க எந்த ஸ்டைல்ல மாஸ்டர்பேட் பண்ணுவீங்க?”

“குப்புறப்படுத்துத் தலையணை வெச்சு…”

“அப்படியெல்லாம் பண்ணீங்கன்னா எரெக்‌ஷன் பிரச்சனை வரும் சார். இனி அப்படிப் பண்ணாதீங்க”

“சரிங்க டாக்டர். இனிமே இப்படி நடக்கக்கூடாதுன்னா என்ன செய்யணும்?”

“கல்யாணம் ஆகிடுச்சா?”

“இல்ல”

“எப்போ பண்றதா ஐடியா?”

“பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க”

“அப்பனா சீக்கிரம் நீங்க சர்கம்சிஷன் சர்ஜரி பண்ணிக்கிறது நல்லது. அது பண்ணாம உங்களால செக்ஸ் வெக்க முடியாது. அப்படி வெச்சாலும் மறுபடி இதுமாதிரி நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கு”

“சர்கம்சிஷன்??”

“சுன்னத்”

“ஓ”

“இங்கே ரெண்டு விதமான சர்கம்சிஷன் சர்ஜரி பண்றோம். ஒன்னு, சாதாரணமா சிசர்ஸ் யூஸ் பண்ணி பண்றோம். ரெண்டாவது ஸ்டேப்ளர் சர்கம்சிஷன். ஸ்டேப்ளர்ல பண்ணா பெயின் கம்மியா இருக்கும், ரெக்கவரி சீக்கிரமா நடக்கும்”

“எவ்ளோ செலவாகும் டாக்டர்?”

“ஸ்டேப்ளர் சர்கம்சிஷனுக்கு ஒன்றரை லட்சம் செலவாகும். ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தா எழுபதாயிரத்துல முடிஞ்சுரும். நார்மலா சிசர்ஸ்ல பண்ணிக்கிட்டீங்கன்னா பத்தாயிரம்தான்” என்றார்.

“சரிங்க டாக்டர். யோசிச்சு டிசைட் பண்ணிட்டு வரேன்” எனச் சொல்லி அங்கிருந்து புறப்பட்டேன்.

*

கத்திரி விருத்தசேதன அறுவைச் சிகிச்சைக்காக அனுமதியாகும் நாளுக்கு முன் தீரத் தீர, இச்சையை மிச்சம் வைக்காமல் சுய இன்பத்தில் ஈடுபட்டேன். குறியில் கத்திரி பட வேண்டுமா என்கிற அச்சமும் தயக்கமும் ஒருபக்கம் என்னை வாட்டின. இழுத்துப் பிடித்து நீவிப் பார்த்தேன். எந்த முன்னேற்றமும் தெரியாததால் மனதைத் திடப்படுத்திக்கொண்டு ஒரு கை பார்த்துவிடலாமெனத் தீர்மானித்தேன். மருத்துவக் காரணத்தைச் சொல்லி அடுத்த ஒரு மாதத்துக்கு அலுவலகத்திலிருந்தும் விடுப்பை வாங்கினேன்.

மருத்துவமனையில் அனுமதியான முதல் நாள் முழுவதும் வார்டில் ஓய்வெடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். அவ்வப்போது ரத்த அழுத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை என ஒவ்வொன்றுக்காகவும் அழைத்தார்கள்.

அன்று மாலை செவிலியர் பெண்மணி வந்து என்னை ஒரு நாவிதரிடம் அறிமுகப்படுத்தினார். தலைமுடியைத் தவிர உடலின் எல்லா ரோமங்களையும் மழித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். நாவிதர் என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளைக் களையும்படி தயக்கத்துடன் சொன்னார். முதன்முறையாக ஓர் ஆணிடம் நிர்வாணமாய் நின்ற கூச்சத்தில் குறுகினேன். அவரின் கண் பார்வையை எதிர்கொள்ளச் சங்கடப்பட்டுத் தலைகுனிந்தேன். முதலில் என் தாடி மீசையை மழித்துவிட்டு உடல் ரோமங்களை சிரைத்தார். பிறகு படுக்கையில் சாய்ந்துகொள்ளும்படி கேட்டார்.

“கவலப்படாதீங்க தம்பி. நமக்கு இதானுங்க தொழிலு. இருபது வருஷத்துல ஆயிரக்கணக்குல அடிமுடிய செரச்சிருக்குறேனுங்க. ஒருமுறைகூட கை தவறினதில்ல. நம்பி படுங்க” எனத் தன்மையாகச் சொன்னார். அவர் பேசிய ஒவ்வொரு சொற்களும் என் தயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வதாகவே இருந்தது. லேசாய் என் முன்தோலை இழுத்து அந்தரங்க உறுப்பைச் சுற்றியுள்ள ரோமங்களைச் சுத்தமாகவும் கச்சிதமாகவும் மழித்தார். அவரின் வேலைப்பாடு முடிந்ததும் நிர்வாணம் களையாமல் கண்ணாடி முன் நின்று பார்த்தேன். எனது ஆண்குறிக்கு மொட்டையடித்தது போல் இருந்தது.

“நான் இந்தத் தொழில்லதான் இருக்கேன்னு வீட்டுக்கெல்லாம் தெரியாதுங்க தம்பி. ஏதோ சலூன் கடைல முடி திருத்துறேன்னு நினைச்சுட்டு இருக்காக… ஊர்ல இந்தத் தொழில செஞ்சப்போ வீட்டுக்கெல்லாம் தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆகிட்டுங்க. ‘குஞ்ச புடிச்சு சவரம் பண்றியே, நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?’ன்னு என் பொண்டாட்டியே நாக்கைப் புடுங்குற மாதிரி கேட்டுட்டா. அன்னியோட இதை கைவிட்டுடுறேன்னு வீட்ல சத்தியம் செஞ்சேனுங்க. சென்னை புறப்பட்டு வந்து இங்கே யாருக்கும் தெரியாம செஞ்சிட்டு இருக்கேன். குடும்பத்து ஆளுககிட்ட சத்தியம் செஞ்சிட்டும் ஏன் இந்த எழவ இன்னும் செஞ்சிகிட்டு இருக்கேன்னுதானே யோசிக்கிதீக? முடி வெட்ட, தாடி மழிக்கத் தெருவுக்குப் பத்து பேர் இருக்காங்க. ஆனா, இந்த வேலையைச் செய்ய ஆள் ரொம்பக் கம்மிங்க தம்பி. ஏதோ நம்மலால முடிஞ்சது…” எனத் தரையில் பரவிக்கிடந்த முடியைப் பெருக்கிக்கொண்டே வருத்தத்துடன் சொன்னார். அவருக்குக் கூடுதலாகப் பணம் தந்துவிட்டு அங்கிருந்து சென்றேன்.

குளியலின்போது சவர்க்காரம் வழுக்கும் அளவுக்கு உடல் பெண்தன்மை அடைந்திருந்தது. தாடி மீசையின்றி என்னைப் பார்த்ததும் வார்டில் சுற்றியிருந்தோர் பலரும் விசித்திரமாகப் புன்னகைத்தனர். அன்றிரவு அறுவைச் சிகிச்சையின் தலைமை மருத்துவர் என்னிடம் சில மருத்துவ விவரங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டார். இரவு பத்து மணிக்கு மேல் வயிற்றுக்கு உணவோ தண்ணீரோ கொடுக்கக்கூடாது எனக் கண்டிப்புடன் சொன்னார். ஆகவே, இரவு எட்டு மணிக்கெல்லாம் உணவை முடித்துவிட்டு, பத்து மணி ஆவதற்கு முன் ஒரு பாட்டில் முழுக்க தண்ணீர் குடித்தேன்.

தூக்கம் கொள்ளாமல் யூடியூப் காணொளிகளை மேய்ந்தேன். விடிவதற்குள் ஐந்து முறையேனும் சிறுநீர் கழித்திருப்பேன். அதிகாலை ஏழு மணிக்குச் செவிலியர் எழுப்பி, பச்சை நிறத்தாலான நோயாளி உடையை வழங்கினார். ஒருகணம் என்னைப் பைத்தியம் என உணர்ந்தேன். எல்லாம் தயாரானதும் சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

என்னைச் சுற்றி சுமார் பதினைந்து பேர் இருந்திருப்பார்கள். மூன்று தலைமை மருத்துவர்களைத் தவிர்த்து மீதமிருந்த அனைவருமே என் வயது இளைஞர்கள். ஆண்களுக்குச் சம அளவில் இளம் பெண்கள். நோயாளி உடை மிகத் தளர்வாய் இருந்ததால் குளிரில் நடுங்கினேன்.

“சிஸ்டர். ஏசி ஆஃப் பண்ணுங்க பேஷன்ட்டுக்கு ஷிவர் ஆகுது பாருங்க” என்று சொன்ன இளம் பெண்ணைத் திரும்பிப் பார்த்தேன். நான் பலாத்காரம் செய்த பெண்ணின் சாயலில் அவள் இருந்ததால் என் அகங்காரம் சீண்டப்பட்டது. ஒரு கம்பிளிப் போர்வையை எடுத்துப் போர்த்திவிட்டாள். தலைமை மருத்துவர்கள் மருந்து மற்றும் உபகரணங்களின் பட்டியலைச் சொல்லிக்கொண்டிருக்க, மாணவ-மாணவிகள் விரைந்து ஒவ்வொன்றாகக் கொண்டு வந்தனர். என்னைத் தவிரப் பிற அனைவருமே பரபரப்புடனே இருந்தனர்.

பிறகு கம்பிளியை விலக்கிவிட்டு நிமிர்ந்து அமரச் சொன்னார்கள். கையில் தலையணையைக் கொடுத்து அணைத்துக் கொள்ளும்படி கேட்டனர். முடிந்தமட்டில் முதுகை வளைக்கும் சவாலைத் தந்தார்கள். அப்போது யாரோ என் முதுகெலும்பின் மையப்பகுதியைத் தேடிக் கொண்டிருந்தார். சரியான இடத்தைப் பிடித்ததும் கூர்மையில்லாத ஊசியெடுத்து முதுகெலும்பின் நடுப்பகுதியில் குறித்த பின் குறிப்பானால் வட்டமிட்டார். அந்நேரத்தில் செவிலியர்கள் ஒன்றுகூடி என் கை, கால்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டனர்.

“ஒன்னும் பயப்பட வேணாம். அனஸ்தீஷியா போடப்போறோம். அசஞ்சா பிரச்சனை. அதான் இப்படிப் பிடிச்சிருக்கோம். கொஞ்சம் வலிக்கும், பொறுத்துக்கோங்க” என்றார் ஒரு பெண் மருத்துவர். ஒன்றிரண்டு முறை அனஸ்தீஷியா எடுத்துக்கொண்டதற்காக ஆயுளுக்கும் முதுகுவலியால் அவதிப்படும் எத்தனையோ தாய்மார்கள் புலம்பிக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால், நான் அஞ்சியது போலன்றி அனஸ்தீஷியா தாங்கக்கூடிய வலியாகவே இருந்தது. சரியாக மூன்று நிமிடங்களுக்குப் பிறகு ஒரு மாணவி, தேக்கரண்டி ஒன்றை எடுத்து என் பிறப்புறுப்பைத் தட்டி ‘உணர்ச்சி ஏதும் இருக்கிறதா?’ என ஆங்கிலத்தில் கேட்டார். நான் ‘ஆம்’ எனத் தலையசைத்ததால் ‘இன்னும் இரண்டு நிமிடங்களுக்குப் பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றாள். எனது தேகத்தின் கீழ்ப்பகுதி மெல்ல மெல்ல மரத்துப் போவதை உணர்ந்தேன்.

அனஸ்தீஷியா போட்ட ஐந்து நிமிடங்களில் அறுவை சிகிச்சை ஆரம்பமானது. எனது பாதி உடல் திரைச்சீலைக்கு அப்பால் இருந்ததால் சிகிச்சை முறையைப் பார்க்க முடியவில்லை. நான் அஞ்சி நடுங்கிவிடக் கூடாது என்பதற்காக அந்த நடைமுறையை என்னிடம் விளக்கக்கூட இல்லை அவர்கள். என் பிறப்புறுப்பின் மீது ஏதோ குளிர்ந்த தகடு வைக்கப்பட்டது போன்ற உணர்ச்சி மட்டும் இருந்தது. மற்றபடி, கத்திரி பட்டதற்கான எந்த அறிகுறியுமில்லை.

இருபது நிமிடங்களுக்குப் பிறகு சிகிச்சை முடிந்துவிட்டதாக அழகிய மாணவி ஒருவர், என் தோளைப் பிடித்து தைரியம் தரும் விதமாய்ச் சொன்னார். சிகிச்சை நடந்த முழு நேரமும் நான் கூர்ந்த விழிப்புடனே இருந்தேன். மயக்க மருந்தே இல்லாமல் வலியின்றி அந்தரங்க உறுப்பின் தோல் பகுதியை நீக்க முடிந்த நவீன மருத்துவத்தின் வளர்ச்சியைக் கண்டு வியக்கவே தோன்றியது. அனஸ்தீஷியா மருந்தை உருவாக்கிய ஆசாமிக்குக் காலம் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஐசியுவில் நான்கு மணி நேரம் ஓய்வில் வைக்கப்பட்ட பிறகு மீண்டும் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டேன். போர்வையைத் தூக்கி ஆணுறுப்பைப் பார்த்தேன். கட்டு போட்டு சிறுநீர் குழாய் மாட்டப்பட்டிருந்தது. மெல்ல மெல்ல அனஸ்தீஷியா உடலிலிருந்து காலாவதியாவதை உணர்ந்தேன். காலையிலிருந்து காணாமல் போன உணர்ச்சிகள் மெல்ல வரத் தொடங்கின. கட்டு போட்டிருந்ததால் தலைப்பகுதியின் உணர்திறன் ஒரு பிரச்சினையாக இல்லை. ஆனால், சிறுநீர் குழாய் ஓர் உறுத்தலைத் தந்தது.

என்னிலிருந்து நான்கு படுக்கைகள் தள்ளி ஒரு கிழவர், “அய்யோ, அம்மா என்னை விட்டுடுங்களேன். என்னைக் காப்பாத்துங்களேன்…” எனக் கதறினார்.

“என்னவாம் அங்கே” எனப் பக்கத்துப் படுக்கையிலிருந்து நோயாளியிடம் கேட்டேன்.

“டியூபை கழட்டுறாங்க. பாவம் பெருசு. நாலு நாளா இப்டித்தான் துடிச்சுட்டு கெடக்கு” என்றார் அந்தப் பெண்மணி.

உடனே புதிய பயம் கவ்விக்கொண்டது. அன்றிரவு முழுவதும் கிழவரின் அந்த அலறல் சத்தம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. மதிய உணவு கொடுக்க வந்த பணிப்பெண்ணிடம், “இந்த டியூபை எப்போ கழட்டுவாங்க?” எனக் கேட்டேன். மறுநாள் காலை ஆகுமெனச் சொன்னார். அதுவரை இந்த உறுத்தலைப் பொறுத்திருக்க வேண்டுமா என்கிற எரிச்சலுடன் சேர்ந்து கிழவரின் கதறல் சத்தம் அச்சத்தையும் கூட்டியது.

நான் பலாத்காரம் செய்த சாயலிலிருந்து பெண் மறுநாள் காலை, எனது ஆணுறுப்பு என்ன நிலையில் இருக்கிறதென ஆய்வு செய்தார். பிறகு ஒரு பெரிய ஊசியை எடுத்து அதில் மருந்தைச் செலுத்தினார். ஊசியில் நிறைக்கப்பட்ட திரவத்தை என் சிறுநீர் குழாயில் செலுத்தினார். வறண்ட பொட்டல் காட்டில் மழை பெய்தது போல் இருந்தது. திரவம் வழிந்தோடிக்கொண்டிருந்தபோது வலி தெரியாமல் குழாயை வெளியில் எடுத்தார். வலியைவிட வலி குறித்த அச்சமே கொடூரமானது.

மறுநாள் மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினேன். ‘குளிக்கும்போது சூடான அல்லது மிகக் குளிர்ச்சியான நீர் உறுப்பில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தையல் பிரியும் வரை கலவி, சுய இன்பம் என எதிலும் ஈடுபட வேண்டாம். சில நாட்களுக்குக் கவர்ச்சியான புகைப்படங்களைக்கூடக் காணத் தவிர்த்துவிடுங்கள். முடிந்தவரை காமம் சார்ந்த எண்ணங்களிலிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. ஒரு வாரத்துக்குப் பிறகு பணிக்குத் திரும்பலாம். மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்’ எனத் தலைமை மருத்துவர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

இரவு குளித்ததுமே கட்டை அவிழ்த்து என் புதிய லிங்கத்தைப் பார்த்தேன். இளஞ்சிவப்பு நிறத்தில் பளபளப்பாகவும், நீலப்படங்களில் பார்த்த லட்சிய உறுப்பைப் போல் அழகாகவும் இருந்தது. வழக்கத்தைவிட ஒன்றிரண்டு அங்குலம் உயரமாகவும் தடிமனாகவும் தெரிந்தது என் பிரமையாகக்கூட இருக்கலாம். கால் நூற்றாண்டுகளாகத் தோலிருந்த குறியால் மூத்திரம் பெய்து, இச்சித்து, புணர்ந்தவனுக்குப் புதிய குறியொன்றைக் கண்டதும் ஏற்படும் திகைப்புணர்வை எப்படிச் சொல்லி விளக்குவது?

எல்லாம் சரியாகிவிட்டதென மகிழ்ச்சியில் பூரித்துக் கிடந்தேன். ஆனால், பிரச்சினையே அதன்பிறகுதான் ஆரம்பமானது. கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் ஏற்பட்ட உளச்சோர்விலிருந்து மீண்டு எனது சொர்க்கப் படுக்கையில் நிர்வாணமாகப் படுத்துக் கண்ணுறங்கினேன். தூங்குவதற்கு முன் கைப்பேசியில் நேரம் பார்க்கும் பழக்கமுண்டு. நான் கண்ணயர்வதற்கு முன் நேரம் இரவு பன்னிரண்டு எனக் காட்டியது. மங்கிய ஒளியிலிருந்து இருளுக்குச் சென்று பிரக்ஞை இழந்து நிம்மதியான உறக்கத்தை நோக்கிச் சென்றேன். நூற்றாண்டுகளாய்த் தவம் கிடந்தவனைப் போல் உறக்கத்தில் ஆழ்ந்தேன். திடீரென ஒரு வலி சூன்யமாய் பீடித்தது. வலையில் துடிக்கும் மீன் போலத் துள்ளிக் குதித்து எழுந்தமர்ந்து ‘ஆஆஆஆஆஆ….’ எனக் கத்திக் கூச்சலிட்டு விழித்தேன். என்ன வலி அது என உணர்வதற்குள் வலியின் தீவிரம் கூடிக்கொண்டே போனது. கண்களைச் சிமிட்டி விழித்துப் பார்க்கும்போது அது என் ஆண்குறித் தையல் இறுக்கப்பட்டதால் உண்டான வலியெனப் புரிந்தது. என் குறி முழுமையாக விறைத்துக் கிடந்தது. வெறும் கால் மணி நேரம் மட்டுமே உறங்கியிருப்பதாகக் கைப்பேசி கடிகாரம் சொன்னது.

என்ன செய்தாவது குறியின் விறைப்புத்தன்மையைக் கட்டுப்படுத்த வேண்டும்! விறைக்க விறைக்க வலி அதிகரித்துக்கொண்டே போனது. யூடியூபில் ஆன்மிகப் பாடல்களை ஓடவிட்டதும் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பினேன். தையலின் இறுக்கம் தளர்ந்து வலி முழுமையாகவே குறைந்திருந்தது. அந்நேரத்தில், “எத்தன நாள் இப்டியே நாத்திகம் பேசிட்டு கெடக்குறேன்னு நானும் பார்க்கிறேன். ஒருநாள் இல்ல ஒருநாள் நீ அந்தக் கடவுளைத் தேடிப் போகாமையா இருந்துறப் போறே?” எனக் கோயிலுக்கு வர மறுத்தபோது அம்மா ஒருமுறை இதை என்னிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. தீவிர வலியில் உழலாதவரை தெய்வத்தின் மகிமை தெரியாது!

அந்நாட்களில் அதிகம் இறையை நாடினேன். விழித்திருக்கும்போது கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார். ஆனால், நாம் உறங்கும்போது அவர் பிறரையும் கவனிக்க வேண்டுமல்லவா? சரியாகத் தூங்கும்போது விறைப்புத்தன்மை ஏற்பட்டு வலி உண்டாகிறது. ஒருகட்டத்தில் வலி பொறுக்காமல் மருத்துவரிடம் சென்று முறையிட்டேன்.

“ஆணுறுப்புக்குக் கீழே இருக்கிற உங்க தோலைப் பிடிச்சு தலைப்பகுதி நுனியோட சேர்த்துத் தையல் போட்டிருக்கோம். அப்படி இருக்கிறச்சே இந்த வலியெல்லாம் நார்மல்தான். தையல் விழுற வரைக்கும் இப்படித்தான் வலிக்கும்” என்றார் தலைமை மருத்துவர்.

“மத்த நேரத்துல பிரச்சனை இல்ல டாக்டர். எரெக்‌ஷன் ஆகும்போதுதான் வலி உயிர் போகுது. நீங்க சொன்ன மாதிரி நான் எந்தவித செக்‌ஷுவல் விஷயங்கள்லயும் ஈடுபடல. ஆனாலும் இது ஏன் நடக்குதுன்னு புரியவே இல்ல”

“செக்‌ஷுவல் விஷயங்கள்ல ஈடுபட்டாதான் எரெக்‌ஷன் வரும்னு இல்ல. ஆண்களுக்கு சம்டைம்ஸ் உணர்ச்சிவசப்பட்டாலே வரலாம். நம்ம தூங்கும்போது உடல்ல ரத்த ஓட்டம் வேகமா இருக்கும். அந்த ப்ளட் உங்க ஆணுறுப்புக்கும் வேகமா போறதால எரெக்ட் ஆகுது. இந்த நேரத்துல நீங்க தூக்க மாத்திரை எடுக்கிறதும் நல்லது கிடையாது. வேற வழியே இல்ல, கொஞ்ச நாளுக்கு இந்த வலியைப் பொறுத்துக்கிட்டுத்தான் ஆகணும்” எனக் கைவிரித்துவிட்டார்.

நான் செய்த எல்லாக் குற்றங்களுக்கும் விறைப்புத்தன்மையே காரணமாக இருந்திருக்கும் நிலையில், இப்போது அதே நிலை எனக்குத் தாங்க முடியாத வலியைத் தருவது கடவுளின் சித்து விளையாட்டோ? விருத்தசேதனம் செய்த அடுத்த இருபது நாட்களுக்கு தினசரி இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கினேன். அதுவும்கூடப் பத்துப் பத்து நிமிடங்களாகத் தொகுத்தே தூங்க முடிந்தது. கண்மூடி துயிலத் தொடங்கிய சில நிமிடங்களில் விறைப்புத்தன்மை எழுந்து வலி ஓங்க ஆரம்பிக்கும். எனக்குப் பிரசவ வலி பற்றித் தெரியாது; ஆனால், அதைவிட ஆயிரம் மடங்கு அதீத வலியை எதிர்கொண்டு வருகிறேன் என்பதைச் சத்தியம் செய்து சொல்ல முடியும்.

போதுமான தூக்கமில்லாததால் எதையுமே சரியாகச் சிந்திக்க முடியவில்லை. காமத்தை வெல்லும் எல்லாச் செயல்களிலும் ஈடுபட்டேன். ஒருமுறை அதிகாலை விறைப்புத்தன்மையைக் கட்டுப்படுத்த முடியாமல் இணையத்தில் தெலுங்குப் படம் ஒன்றைப் பார்த்தேன். அதிலும் குத்துப் பாடலில் கவர்ச்சி நடிகை ஒருத்தி தோன்றி தொந்தரவு செய்தாள். அழகைக்கூட முழுமையாய் ரசிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதை எண்ணிக் கதறி கண்ணீர் சிந்தினேன். என் அழுகைக்குக் காரணம் வலியல்ல; இயலாமை. வலியை வெல்ல முடியாமல் தோற்றுப் போகும் இயலாமையால் கசிந்த கண்ணீர் என் காலடியில் வழிந்துகொண்டே இருந்தது.

ஒருநாள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது நான் பலாத்காரம் செய்த பெண் கனவில் தோன்றினாள். அவளின் அருவமான தோற்றத்தை ஆழ்மனதிலிருந்து களைவதற்காகச் சட்டென விழித்துக்கொள்ள முயன்றேன். ஆனால் எனது தூக்க நிலையை விழிப்பதிலிருந்து யாரோ இழுத்துப் பிடித்திருப்பது போல் இறுக்கப்பட்டவனாய் உணர்ந்தேன். நானே நினைத்தாலும் களைய முடியாத கனவாய் அது இருந்தது.

செர்ரி பழங்களின் சின்னம் பொதிக்கப்பட்ட சிவப்பு வண்ண ஆடையைத் தொடை வரை மட்டுமே அணிந்திருந்தாள். அவளின் கால்கள் மெழுகால் உருக்கப்பட்டதைப் போலப் பளபளப்பாய் சிவந்திருந்தன. அடர்த்தியான கருங்கூந்தல் நேர்த்தியாகச் சிகையலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அவளுடைய முடி முடியுமிடத்தில் மார்பகத்தின் எடுப்பு வளைந்து சரிந்து முடிவற்று சென்றுகொண்டே இருந்தது. எங்கிருந்தோ பெய்த மழையால் அவளின் செர்ரி ஆடை தேகத்தோடு ஒட்டிக்கொண்டது. அப்போது கேக்கின் மேல் வைக்கப்படும் திராட்சையைப் போல அவளின் முலைக்காம்புகள் முளைத்துக்கொண்டு வெளித்தெரிந்தன. அவள் ஈரக்கூந்தலை இறுகப்பிடித்து கொண்டை போட்டபோது என் குறி அதுவரையில்லாத பூரண விறைப்புத்தன்மையை அடைந்திருந்தது.

இன்பம் நிறைந்த வலியால் எழுந்த எனது கதறல் சத்தத்தைக் கேட்டு கனவில் அவள் என் வாயைப் பொத்தினாலே அன்றி நிஜத்தில் எவருமே சட்டை செய்யவில்லை. கனவாய் இருந்தாலும் அவளுடைய தொடுதலைத் துல்லியமாக உணர முடிந்தது. முதலில் என் உதடுகளைத் தொட்டாள்; பிறகு கழுத்திலிருந்து நெஞ்சுக்கு சரிந்தாள். மெதுவாக என் அடி வயிற்றில் கைகளை நிறுத்திச் சீண்டிப் பார்த்தாள். எனக்குப் பதற்றத்தில் வியர்த்து மூச்சு வாங்கியது. பெரிதாய் வளர்ந்திருந்த என் புதிய குறியை இறுக்கமாய் அழுத்திப் பிடித்து வேகமாய் கர மைதுனம் செய்துவிட்டாள். கண்விழித்துப் பார்த்தபோது தையல் அறுந்து குறி பிளந்து ரத்தம் பீய்ச்சியடித்து குருதிக்கடலாய் மாறியிருந்தது இந்த பூமி.

-krshbala99@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button