
MBS என அழைக்கப்பட்ட எம்.பி.சீனிவாசன் இசை அமைப்பாளர். கே.ஜே.ஜேசுதாசை அறிமுகப்படுத்தியர். ‘இப்டா’, ‘இஸ்கஸ்’ போன்ற கலை, இலக்கிய அமைப்புகளில் செயல்பட்டவர். மக்களை குழுவாகப் பாட வைத்தவர். ‘இனிய மார்க்சியவாதி’ என எழுத்தாளர் சுஜாதா இவரைப் பற்றிக் கூறுகிறார். இசைக் கலைஞர்களுக்கு சங்கம் அமைத்தவர். சங்கம் வந்தபின்புதான், திரைக் கலைஞர்களுக்கு படப்பிடிப்பு முடிந்த அன்றே சம்பளம் கிடைத்திருக்கிறது. இவரைப் பற்றி மு.இக்பால் அகமது எழுதியுள்ள நூல்தான் மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்.
எனக்கு முந்தைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் MBS என்ற பெயரை சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன். எனவே, நூல் அட்டையை பார்த்தவுடன் வாங்கிவிட்டேன்; எளிதாகப் படித்தும் விட்டேன். கடந்த காலங்களில் நான் கேள்விப்பட்ட சம்பவங்களை, துணுக்குகளை இந்த நூல் பேசியதால் ஆர்வமாகவும் இருந்தது.
கப்பற்படை கலகத்தை (1946) ஆதரித்து, வெள்ளையர்களுக்கு எதிராக பிரசிடென்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த எம்.பி.சீனிவாசன், சென்னை நகர வீதியில் ஊர்வலமாகச் சென்றதில், அவரது பொது வாழ்க்கை தொடங்குகிறது. அதன்பிறகு விடுதலை அடைந்த இந்தியாவில் புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.கோபாலனுக்கு அலுவலகச் செயலாளராக உதவி செய்திருக்கிறார். பிறகு இசை அமைப்பாளராக இருந்திருக்கிறார். மாணவர் சங்க தலைவர், குடும்ப வாழ்க்கை, இசை அமைப்பாளர், தொழிற்சங்கவாதி, சேர்ந்திசை குழுக்கள் என அவரது பல பரிமாணங்களும் இந்த நூலில் உள்ளன. இந்த நூலை எழுதியுள்ள மு.இக்பால் அகமது தமுகஎசவில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்; தொழிற்சங்கவாதி. தனது தொடர்புகள் மூலம், சம்மந்தப்பட்ட செய்திகளை உறவினர்கள், உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள் என பலரிடமும் தேடித்தேடி இந்த நூலைத் தொகுத்துள்ளார். இந்த நூல் கிட்டத்தட்ட ஒரு சிறப்பு மலர் (Souvenir) போல உள்ளது.
‘எக்ஸ்ட்ரா’ எனப்படும் இளநிலைக் கலைஞர்களை கண்ணியத்தோடு நடத்த வைத்தப் பெருமை எம்பிஎஸ்ஸையும் நிமாய்கோஷையுமே சாரும். நிமாய் கோஷ் ஒளிப்பதிவாளர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இவர்களோடு சோவியத் யூனியனுக்கு சுற்றுப்பயணம் செய்தவர். அந்த நட்பின் தொடர்ச்சியாக, நிமாய் கோஷ் வங்காளத்தில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார். நிமாய் கோஷூம், எம்பிம்-ஷுஉம் இணைந்து திரைக்கலைஞர்களுக்காக சங்கம் அமைத்திருக்கின்றனர். தற்போது பெஃப்சி (FEPSI) இருப்பதற்கு ஆதிமூலம் இவர்கள்தான். படப்பிடிப்பு முடிந்த அன்றே திரைக்கலைஞர்களுக்கு ஊதியம் – ‘ஸ்பாட் பேமெண்ட்’ முறை சங்கம் வந்தபிறகுதான் வந்துள்ளது. இதனால் பட முதலாளிகள் இவரை திரைத்துறைக்குள் அனுமதிக்கவில்லை. தமிழில், எட்டுப்படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைத்துள்ளார். தமிழகம் புறக்கணித்த அவரை கேரளம் ஏற்றுக்கொண்டது. இந்த நூலை திரைத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் விரும்பிப் படிப்பார்கள். நூலில் எண்ணற்ற தகவல்கள் உள்ளன.
கே.ஜே.ஜேசுதாஸ் என்ற இருபது வயது இளைஞனை பாடகராக அறிமுகப்படுத்தியவர் எம்.பி.எஸ். மலையாளத்தில் 61 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். அக்ரஹாரத்தில் கழுதை (1977) என்பது புகழ்பெற்ற படம். ஜான் ஆப்ரஹாம் இயக்கிய இந்தப்படத்தில், கழுதையை வளர்க்கும் நாராயணசாமியாக நடித்துள்ளார். உழைக்கும் மக்கள் வளர்க்கும் கழுதையை, ஒரு பார்ப்பான் வளர்க்கலாமா? இதனாலேயே இந்தப்படத்தை தொலைக்காட்சியில் திரையிடுவதாக மூன்றுமுறை அறிவித்தும் (விருது பெற்ற படமாக இருந்தாலும்) திரையிடப்படவில்லை என்கிறது இந்த நூல்.
எம்.பி.சீனிவாஸ் இறுதிவரை அதிகாரத்தைக் கேள்வி கேட்டவராக, சாதாரண மக்கள் சார்பாக, உறுதியான நிலையெடுத்துப் பேசுகிறார். ஒப்பாரி, கும்மி என்பது மக்கள் சேர்ந்து பாடும் வடிவம். இதன் நீட்சியாகத்தான் சேர்ந்திசைப் பாடல் குழுக்களை அமைத்திருக்கிறார். அதன் தொடர்ச்சி இப்போதும் சென்னையில் உள்ளது. அதன் இயக்குநரான டி.ராமச்சந்திரன் தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார். பேரா. வசந்தி தேவி போன்றவர்கள் மூலமாக சென்னை கல்லூரிகளில் உள்ள மாணவர்களை ஒன்று சேர்த்து பாட வைத்திருக்கிறார். கர்நாடக, மேற்கத்திய, இந்துஸ்தானி, நாடோடி என அத்தனை இசைவடிவங்களையும் சேர்ந்திசைக்குள் கொண்டு வந்துள்ளார். இலட்சக்கணக்கானோரை இதில் ஈடுபடுத்தியுள்ளார். ‘கார்பரேஷன் பள்ளிகளின் நூற்றுக்கணக்கான குழந்தைகளை ஆல் இந்தியா ரேடியோவின் காம்பவுண்டிற்குள் ஒரே குரலில், ஒரே சுருதியில் பள்ளுப் பாட வைத்த சாதனையைப் பற்றி அவர் நிச்சயம் பெருமைப் படலாம்’ என அவரைப்பற்றி கணையாழியின் கடைசிப் பக்கங்களில் (1979) சுஜாதா குறிப்பிடுகிறார். பிசிறின்றி, நேர்த்திதாக அனைவரும் பாடியுள்ளனர். சுற்றுச்சூழல், சமத்துவம், உலக சமாதானம், சமூக மாற்றம் போன்ற கருப் பொருள்களிலும்; பாரதி, தாகூர், வள்ளத்தோல், பாரதிதாசன் போன்ற கவிஞர்களின் பாடல்களையும் பாட வைத்துள்ளார்.
எந்த துறையை எடுத்தாலும் அதில் உச்சம் தொட்டிருக்கிறார். கேரளாவில் சேர்ந்திசைக் குழுக்களை வைத்து சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். கேரள முதல்வரான அச்சுதன் மேனன் இது பற்றி பேசி இருக்கிறார். கேரளாவில், பல்கலைக்கழகங்கள் தோறும் இசைக் குழுக்கள் உருவாக காரணமாக இருந்திருக்கிறார். இசைப் பயிற்சி முகாம்கள் பலவற்றை நடத்தி இருக்கிறார். இத்தகைய ஆற்றல் மிகுந்தவர்களை, மக்கள் சார்ந்து இயங்குபவர்களை பதிவு செய்வதும், படிப்பதும் ஒரு விதத்தில் அஞ்சலிதான். அத்தகைய அஞ்சலியை இந்த நூல் நேர்த்தியாகச் செய்துள்ளது.
இவரது சிற்றப்பா கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த எம்.ஆர் வெங்கட்ராமன். அவர்தான் இடதுசாரி படமான ‘பாதை தெரியுது பார்'(1960)-ஐ தொடங்கி வைத்துள்ளார். இந்தப் படத்தின் விநியோக உரிமையை வைத்திருந்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இது வெற்றி அடையாமல் இருக்க என்னவெல்லாம் செய்துள்ளார்?
‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே’ பாடல், நாடு விடுதலை அடைந்த நாளில் மதுரையில், பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் பாடப்பட்ட பாடல். இதற்கு இசை அமைத்தவர் எம்பிஎஸ். இப்டா ( இந்திய மக்கள் நாடக மன்றம்), இஸ்கஸ் (இந்தோ சோவியத் கலாச்சார கழகம்) போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் – அதன் ஊடாக அப்போது இருந்த ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஈரோடு தமிழன்பன், ஜானகி, வாணி ஸ்ரீராம், வாலி போன்ற ஆளுமைகள், அவரோடு தங்களுக்கு இருந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். சில இடங்களில் கூறியது கூறல் வருகிறது. நூல்களின் பக்கங்களை (276 பக்கங்கள்) குறைத்திருக்கலாம்.
எம்பிஎஸ் இறந்து (1988) பல்லாண்டுகள் ஆனாலும், பொருத்தமான பலரைச் சந்தித்து நூலாசிரியர் விவரங்களைத் தொகுத்துள்ளார். எம்பிஎஸ் குழுவின் உறுப்பினரும், உறவினருமான ஜெயந்தி ரமேஷ் நிறைய தரவுகளை கொடுத்து வாழ்த்துரை எழுதியிருக்கிறார். ஒரு அமைப்பு செய்ய வேண்டிய வேலையை, தனிநபராக செய்து சாதித்து இருக்கிறார் மு. இக்பால் அகமது. மெச்சத் தகுந்த ஒரு பணி. ‘வரலாறு தெரிந்தால்தான் வரலாற்றைப் படைக்க முடியும்’ என்று சொல்லுவது உண்டு. அத்தகைய ஒரு நூலைத்தான் பரிசல் புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.