
தனிமை நினைவுகள்
வீசியெறிய முடியாத தூரத்து நினைவலைகளை
கவன ஈர்ப்புக்கு கொண்டு வருவதற்கு
பெயர்தான் தனிமை.
நடப்பதறியா குருடன் வாழ்வைக் கடப்பது
மாதிரியானதொரு பிரயத்தனத்தை ஏற்படுத்தியதற்காக
காதல் அபத்தமெனினும்,
தனிமையின் ஆறுதலுக்கான
நினைவின் அச்சாரமாய் இருக்கிறபடியால்
காதல் அனர்த்தனமானதில்லை.
*
நிமிடங்களுக்கு நிமிடம் நினைப்பதெல்லாம் பொய்
அவ்வப்போது உன் ஞாபகங்கள் வரும்
அப்படியே உறைந்து கிடப்பவன்தான்.
யாராவது வந்தென்னை மடைமாற்றினாலோ அல்லது
ஒரு நூறு கண்ணீர்த் துளிகள் கசிந்து விட்டாலோ,
இயல்பில் உலா வருவது போல என்னைப் பழகிக் கொள்வேன்
செவிக்கு எட்டாத உன் வார்த்தை மொழியாடல்களை
நினைவுக்குள் புகுத்தும் மூளைக்கு
மறதியை இட்டு அழிக்கும் சாமர்த்தியம்
இன்றளவும் எவருக்கும் வாய்க்கவில்லை.
*



