
தொலை தூரத்தில் இருந்து
யாரோ ஒருவர்
இன்று வரப்போவதாக
அலைபேசியில் அறிவிக்கிறார்
தொலைந்துபோன கவிதை ஒன்றை
அப்போதுதான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
தொலைவதற்காகக் காத்திருக்கும் நேரங்களில்
படிப்பதற்காகவே
என் மேஜை மீது
காத்துக் கிடக்கின்றன
சில புத்தகங்கள்
யாரையும் தொலைத்துவிடாமல்
காதல் சுற்றி அலைகிறது
கல்லூரி வாசலில்
வானமே எல்லையான
ஒரு வெளியில்
தொலையாத பறவைகளை
கூடுகளை நோக்கி
அழைத்துக்கொண்டு வருகிறது
மாலை
தொலைத்த கனவுகளைப்
பத்திரமாய் மீட்டுக் கொண்டுவிடுகின்றன
விடுமுறைக் காலங்கள்
யாரும் கேட்காமலே
திறந்துகொண்ட பகலைத்
தொலைத்து விடாமல்
பத்திரமாக மூடி வைக்கிறது
இரவு
இரவுக்குக் காவலிருந்த நாயைத்
தொலைத்துவிடாமல்
ஒவ்வொரு தெருவும்
தேடியலைகிறது
தேடலில் தொலைத்து
தன்னையே மீட்டுக்கொள்ள
பத்திரமாய் என் இருப்பை
உறுதி செய்துகொள்கிறேன்
ஒரு கவிதை செய்து
*
ஆறு, குளம், கிணறு என்று
ஆசை ஆசையாய்
எட்டிப் பார்க்கிறாய்
நீருக்குள் அப்படி
என்னதான் இருக்கிறது
என்றவளின் கண்களில்
மின்னும் ஆவலை
மனதுக்குள் சித்திரமாக
வடித்துக்கொண்டேன்
பிறிதொரு நாளில்
மழை நீரைப்
பார்த்துக்கொண்டிருந்தவளிடம்
கொட்டும் மழை
மழலை போல்
சிரிப்பதாகச் சொன்னேன்
அன்று
ஆறாய் ஓடி
இன்று
கடலில் கலக்கும் பருவமாய்
பூத்து நிற்பவளிடம்
அவளை அப்போதே
கடலாகப் பார்த்துவிட்டது போல் தோன்ற
நானும் அவளின் கரையில்
நின்றுகொண்டே
நீராலான அவளின் நினைவுகளைத்
தொட முயன்றேன்
அவளோ
மழலைச் சொல் மாறாத மழையைத்
தன் சின்னஞ் சிறு கைகளுக்குள்
பிடித்து விளையாட
எனக்குள் அணை
உடைந்தது போல் ஆயிற்று



