மராத்தி கவிதைகள் (தமிழில்: மதியழகன் சுப்பையா)
மொழிபெயர்ப்பு கவிதைகள் | வாசகசாலை
![](https://vasagasalai.com/wp-content/uploads/2022/05/mathiyazhagan-subbaiya-780x405.jpg)
அவைகளுக்கு அப்பால்
– குஸுமாக்ராஜ்
ஒரு நாகரீக நகரமொன்றில்,
நள்ளிரவில், நாற்சந்தியொன்றில்
நெடுநாள் நின்று கால் கடுத்த ஐந்து சிலைகள்
ஆசுவாசமாக உட்கார்ந்து, பேசத் துவங்கின
கூலிக்காரர்களுக்கு மட்டுமே
சொந்தமாகி விட்டது கவலையளிக்கிறது
என்றது ஜோதிபா பூலே
மராட்டியர்களுக்கு மட்டுமே பெருமையாகி விட்டது
சகிக்க முடியாதது என்றது சத்திரபதி சிவாஜி மகாராஜா
பௌத்தர்களுக்கு மட்டுமே அடையாளமாகிப் போனது
வருத்தமளிக்கிறது என்கிறது பீமாராவ் அம்பேத்கர்
சித்பாவன் பிராமணர்களுக்கு மட்டுமே
கொண்டாடும்படியானேனே என்று வெட்கப்படுகிறது
லோக்மான்ய திலகர்
அமைதி காத்த மகாத்மா காந்தியடிகள்
தொண்டையை செருமிக்கொண்டு சொன்னது,
ஆனாலும் நீங்கள் எல்லாரும் கொடுத்து வைத்தவர்களே,
உங்களுக்குப் பின்னால் சாதி மதமென
ஒரு கூட்டமோ குழுவோ கூட இருக்கின்றது
எனக்குப் பின்னாலோ, அரசாங்கத்தின் அதிகாரக் குப்பைகளால்
அழுகி நாறும் அபத்தங்களின் குவியல்களால்
உயரும் பெருந்தூண்களும், நெடுஞ்சுவர்களும்
ஓங்கி நிற்கின்றன, நின்று வளர்கின்றன.
***
ஆடைகளைக் களைவதற்கு முன்
– ரஜனி பாருலேகர்
ஆடைகளைக் களைவதற்கு முன்
ஒருவொருக்கொருவர் மனதின் வெளிகளை
திறந்து கொள்வோம்
மனதின் ஆழத்தில் ஒளிந்திருக்கிறதென்று
அறிந்து கொள்வோம் புரிந்து கொள்வோம்
விவாதமும் மோதலும் நடக்கட்டும்
கண்களுக்கு முன்னால் விரிந்துள்ள பாதையில்
எதுவரைக்கும் ஓட்டமிருக்கும் என்பது இருவருக்கும் விளங்கும்
ஓடலாம் ஓயலாம்
அவரவர் தகுதிகளுக்குத் தக்கபடி
அப்படியிப்படியென எதிர்வினைகள் பகிர்வோம்
கேட்ட – சொன்ன கதைகள் மற்றும் உப -கதைகள் பகிர்வோம்
எதிரும் புதிருமாக, நேருக்கு நேராக பேசிக் கொள்வோம்
எண்ணங்களின் இயல்பை முடிந்த அளவு புரிந்து
கொள்வோம்
புரிந்து முடிந்த பின்னர், எண்ணிக் கொள்வோம்
ஆடைகளைக் களையும் முன்னர் ஆயிரம் இருக்க
அதற்கு ஆயத்தமாவோம்!
***
வண்ணத்துப் பூச்சிகள்
– ஹெமந்த் திவ்டே
காம்ப்ளெக்ஸின்
பூங்காவிற்குள் உலாவிக் கொண்டிருக்கையில்
மிக இயல்பாக என் நண்பரிடம் –
’அட, அடர் மஞ்சள் வண்ணத்தில் மிகச் சிறிய அளவிலான
வண்ணத்துப் பூச்சிகள் இப்பொழுதெல்லாம் காணக்
கிடைப்பதில்லை’
என்றேன்.
அவன் இயல்பாக
மிக மிக இயல்பாக
’அந்த பிராண்ட் இப்பொழுது நின்று விட்டது’ என்றான்.
***
வெறுமையான மதியப் பொழுதில் நான்
– சரிகா உபாலே
இடமிருந்து வலமாக அல்லது
வலமிருந்து இடமாக
டுபுடுபு எனக் கடக்கிறது
ஒரு மோட்டார் சைக்கிள்
தொலைவிலிருந்து கேட்கும் அதன் ஒலியில்
கூடுதல் தெளிவில்லை என்றாலும்…
வீட்டின் பிரதானச் சுவற்றில் தொங்கும்
சுவர்க் கடிகாரத்தின் டிக் டிக்
மிகத் தெளிவாக, துல்லியமாகக் கேட்கிறது
பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வரும்
நாற்றத்தின் காரணமாக அல்லது
அமைதியாக மிக மெதுவாக
சாலையில் நடக்கும் ஒருவரைப் பார்த்து காரணமே இல்லாமல்
பக்கத்து வீட்டு பெட்டை நாய்
எப்பொழுதும் குரைத்துக் கொண்டே இருக்கிறது
வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு
அமைதிக்குள் மூழ்கும் எனக்கு
இறுதி வேலையாக துணி துவைக்கும் சத்தம் கேட்கிறது
வளையல்களில் கலகலப்புகள்
நுரைகளில் மூழ்கிய துணிகளை
கசக்கிப் பிழியும் ஈரச் சத்தம்
மிகத் தொலைவில் ஒழுங்கற்ற சாலையைக் கடக்கும் பழைய
சைக்கிளிலின் துருவேறிய செயினின் உராய்வுச் சத்தம்
பக்கத்து வீடுகளில் இல்லத்தரசிகளின் கிசுகிசுப்புகளும்
இரகசியப் பேச்சுகளும்
காலணியில் ஏதோவொரு வீட்டின் கேட் திறக்கும்
கடகட சத்தம்
அசோகமர இலைச் சருகுகளின்
சரசரப்புச் சத்தம்
குச்சி ஐஸ் விற்பவனின் மணியோசை
மற்றும் பழையப் பொருட்கள் வாங்குபனின்
வண்டிச் சத்தம்
அமைதி நிரம்பிய வீட்டிற்குள் உட்கார்ந்தபடி
இவையனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
இந்த வெறுமை நிரம்பிய மதியப் பொழுதில்
நேற்று இரவு
நேற்றைக்கு முந்தின இரவு
இரண்டு இரவுகளுக்கு முந்தைய இரவு
ஒரு மாதம் முந்தி கழிந்த ஓர் இரவு என
கண்ட கனவுகளுக்கு அர்த்தம் தேடிக் கொண்டிருக்கிறேன்
அல்லது எதிர்காலத்தை கவலைக்குள்ளாக்கி விடும்படியாக
மீண்டும் மீண்டும் வந்து நிகழ்காலத்தின் முகத்தில்
அறைந்துவிட்டுப் போகும் தனிமையென்னும் பேயைக் கண்டு
அஞ்சுகிறேன்.
******