
தனக்கு முன்னால் நீட்டப்பட்ட பையை எட்டிப்பார்த்த வேலப்பர், அதில் சில நகைகளும் கசங்கிய பணத்தாள்களும் இருப்பதைக் கண்டு மெதுவாய் நிமிர்ந்துப் பார்த்தார்.
எதிரே நின்றிருந்த ராசம்மாவின் முகம், அழுது அழுது வீங்கியிருந்தது. இவர் பார்த்ததும் மீண்டும் அவளுக்கு கழிவிரக்கம் அதிகமாகி பொத்துக்கொண்டு அழுகை வர, தனது புடவைத் தலைப்பால் அடக்கிக் கொண்டாள்.
“எதுக்கும்மா இது?”
“எனக்கு அந்த ஊருக்குப் போகணும்ணே.. எப்படியாவது போகணும்.. ஏரோபிளேன் புடிச்சாவது சீக்கிரம் போகணும்ணே.. தயவுசெஞ்சு..” பேசமுடியாமல் குரல் தடுமாற – வேலப்பர் கவலையுடன் அவளைப் பார்த்தார்.
“நீ ஏன் இப்படி கெடந்து அவசரப்படறேன்னு புரியல எனக்கு.. ஒரு கடுதாசிய வச்சுக்கிட்டு எதையாவது செய்யாத ராசம்மா.. போன பொண்ணு தானாவே திரும்ப வரும்.. ஒன்ன விட்டா அதுக்கும் வேற யாரு இருக்கா.. புருஷன் இல்லாம நீ எப்படில்லாம் போராடி வளர்த்து அதை ஆளாக்கிருப்பேன்னு அதுக்கும் நல்லா தெரியும்மா, புத்திசாலி பொண்ணுதான்.. என்ன கெட்ட நேரமோ தெரில, யார் கண்ணு பட்டுச்சோ இப்படியாவும்னு நெனக்கல போ..” என ஆதங்கம் காட்டியவர், அவளை மேலும் அமைதியாக்கும் முயற்சியுடன், “என்னதான் ஊரு முழுக்க உறவு சனம்லாம் இருந்தாலும் அவங்க எல்லாருமே இத கேள்விப்பட்டு கேலியும் கிண்டலுந்தான் பண்ணுவாங்கன்னு உம்பொண்ணுக்கே தெரியும் ராசம்மா. அவங்க எல்லாரும் ஒன்னப் பாத்து சிரிக்குற மாதிரி உன்னை இந்த வயசான காலத்துல தனியா தவிக்க விட்டுட்டுப் போயிடாது.. படிச்ச பொண்ணு, எதை மனசுல வச்சுக்கிட்டு இப்படி அவசரப்பட்டுச்சோ தெரியல, அதுவா திரும்பி சீக்கிரமே வந்துரும் பாரேன்..”
“இல்லண்ணே, எல்லாம் காரணமாத்தான் சொல்றேன்” அவரது பேச்சை இடைமறித்து தலையை மறுப்பாய் ஆட்டி கெஞ்சுதலும் பிடிவாதமுமாய் கூறினாள், “நான் போயாகணும்ணே”
அவளை சிறிது ஊன்றிப் பார்த்தவர் சரியென்பதை போல் தலையசைத்து, “செரி, உனக்கு தெரியாததையா நான் சொல்லிரப் போறேன், மொதல்ல கொஞ்சம் ஒக்கார் இப்படி.. இதைல்லாம் பத்திரமா உள்ள வை..” என்று பையை அவளிடம் கொடுத்துவிட்டு செல்போனை எடுத்து யாருக்கோ டயல் செய்து, “பாய், நாந்தான்.. இங்க எனக்கு தெரிஞ்சவங்களுக்கு ஒரு உதவி செய்யணும்.. அவங்க அர்ஜண்ட்டா ராஜஸ்தான் போகணும்.. அங்க போறதுக்கு என்ன ப்ளைட்டு, எப்படி போறதுன்னு உங்ககிட்ட..” பேசியபடி நகர்ந்தார்.
ராசம்மா பொங்கி வந்த அழுகையை சிரமமாய் அடக்கி, வேலப்பரின் அந்த உரமருந்துக் கடையின் சுவரோரமாய் கிடந்த பெஞ்சில் அமர்ந்தாள். ஜன்னலுக்கு வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மழையின் இரைச்சலில் வேலப்பர் பேசியது அவள் காதில் விழவில்லை.
வேதாவின் குரல் இவளுக்குள் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இன்று காலையில் எழுந்ததுமே அவளது போன் அழைப்புதான்.
“அண்ணி, நாந்தான் வேதா பேசறேன்..எவ்ளோ நேரமா உனக்கு ட்ரை பண்றேன் தெரியுமா..?” சென்னையில் இருக்கும் இவளது தம்பி மனைவி வேதா, விசேஷம் அல்லது விவகாரம் என ஏதேனும் ஒன்று இருந்தால்தான் அழைப்பாள்.
“சொல்லு வேதா.. எப்படியிருக்க?”
“என்னை வுடு.. உம்பொண்ணு விஜி பண்ண காரியத்த இப்பத்தான் கேள்விப்பட்டேன், உசிரே போயிருச்சு..நம்ம வீட்டுக்கு வந்த சோதனையா இது? நீயும் ஒருவார்த்தைகூட சொல்லவேயில்ல?”
“என்ன சொல்றே? விஜிக்கு என்ன?” பதறினாள்.
“அப்ப அந்த மூதேவி என்ன பண்ணான்னு உங்கிட்டயும் சொல்லலியா இன்னும்? நெனச்சேன்..பெத்த அம்மாவுக்கே தெரியாம என்ன காரியம் பண்ணிருக்கா பாத்தியா..அவள..”
“வேதா! அவளைத் திட்டாத, விஷயத்த மட்டும் சொல்லு..எனக்குப் புரியல” உள்ளுக்குள் நடுக்கம் ஏற குரல் தடுமாறியது.
“ஆமா, உம்பொண்ண எதாவது சொன்னா மட்டும் பொத்துக்கிட்டு வந்துரும் உனக்கு… நேத்து காலைல அவ கல்யாணம் பண்ணிக்கிட்டாளாமே..”
ராசம்மா திகைத்து நிமிர, “உங்க ஊருக்கு ஒரு இஞ்சினியர் வந்தானாமே… பேரு கூட ஏதோ..சர்மாவோ என்னவோ..நம்ம ஊர் பேரா இருந்தா ஞாபகமிருக்கும்”
ராசம்மா திணற, அவள் பேசிக்கொண்டே சென்றாள், “நானும் நேர்ல பாக்கல, எம்பையனுக்கு வேண்டியவங்க யாரோ ட்ராவல்ஸ் வச்சிருக்காங்க.. அவங்கதான் சொல்லிருக்காங்க.. இங்க சென்னைலதான், லோக்கல்ல இருக்குற ப்ரெண்ட்ஸ் வீட்ல தங்கிருக்காங்க போலிருக்கு.. இன்னிக்கு அவ புருஷனோட அவனோட ஊருக்கே எங்கியோ வடக்குப்பக்கமா போறதுக்கு ரயிலுக்கு புக் பண்ணிட்டிருந்தாளாம்.. எங்கே போறா என்ன விபரம்னு அப்பறமா விசாரிச்சு வைக்குறேன்.. டீடெய்லா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு திங்ககிழமைன்னிக்கு அங்க ஊருக்கு வர்றப்ப எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் சொல்றேன்.. தெரிஞ்சுக்குங்க.. ஹலோ..ஹலோ..இந்த போன் வேற..” என்றவாறு அவள் போனை கட் செய்ய –
இடிந்துபோய் அமர்ந்திருந்த ராசம்மா, மகள் விஜிக்கு அவசரமாய் போன் பண்ண, விஜி போனை எடுத்து, “என்னை மன்னிச்சுரும்மா” என பெரிதாய் அழுதுவிட்டுப் பேச முடியாமல் திணறி போனை வைத்துவிட்டாள். மறுபடி அவளது போன் கிடைக்கவேயில்லை.
வீட்டில் விஜியின் அறையை அலசிப் பார்க்க – கடந்தவாரம் விஜிக்கு கூரியரில் வந்திருந்த ஒரு கடிதம் கிடைத்தது. ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை வேலப்பரிடம் கேட்டுத்தான் அறிந்துக்கொண்டாள். அது ராஜஸ்தானிலிருந்து வந்திருக்க அதில், ‘இத்துடன் நீ கேட்ட எனது டாகுமெண்ட்ஸை இணைத்திருக்கிறேன், நீ சென்னைக்கு சென்று நாம் ஏற்கனவே போனில் பேசியபடி நமது பதிவுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய். உனது அம்மா என்னை ஏற்க மாட்டார் என நீ அஞ்சுவதால், திருமணம் முடிந்த பிறகு நாம் ராஜஸ்தானில் இருக்கும் எனது ஊருக்குச் சென்றுவிடலாம். எனது குடும்பத்தாரை நான் சமாளித்துக் கொள்கிறேன். சென்னையில் சந்திக்கிறேன்’ என எழுதப்பட்டிருந்தது. தபாலில் இருந்த ராஜஸ்தான் முகவரியை பத்திரப்படுத்திக் கொண்டவள் இப்போது அங்கு செல்லவேண்டும் என்ற முடிவிலும் இருக்கிறாள்.
போனில் பேசி முடித்தவராய் வேலப்பர் இவளிடம் வந்தார். “உடனே நீ அங்க போகணுங்கறது கொஞ்சம் கஷ்டம்தான் போலிருக்கு ராசம்மா.. நாளைக்கு சாயந்தரம்தான் ப்ளைட் இருக்காம்.. ட்ரெய்ன் இன்னிக்கு கிடைக்குமாம், ஆனா உன் அவசரத்துக்கு அது போகாது.. நீ என்னத்துக்காக இவ்ளோ அவசரமா போயே தீரணும்னு சொல்றேன்னு புரியல.. என்ன பண்றதுன்னே புரியல..ட்ரை பண்றேன்னு சொல்லிருக்காரு, பாப்போம்”
“நான் வேணா நேர்ல அவரப் போயி பாக்கட்டுமா?” என பரிதவிப்புடன் ராசம்மா கேட்க – இவர் ஆயாசமாய் ஏறிட்டார்.
“அவரு பொள்ளாச்சில ட்ராவல் ஏஜன்சி வச்சிருக்காரு ராசம்மா.. இங்க இந்த எஸ்டேட்லேர்ந்து நீ வால்பாறை டவுனுக்கு எதாவது வண்டி புடிச்சு போயிடலாம்.. ஆனா, வால்பாறைலேர்ந்து பொள்ளாச்சிக்கு போகணும்ல..தனியா எப்படி போவே..?”
“பரவால்லண்ணே, நான் போயிக்கறேன்.. நான் வர்றதா மட்டும் அவருக்கு ஒரு வார்த்த போன் பண்ணி சொல்லிருங்க.. நேர்ல போனா எதாவது நடக்கும்..”
வேலப்பர் அரைகுறை மனதுடன் சம்மதிக்க – ட்ராவல் ஏஜன்ஸியின் விபரத்தை அவரிடம் வாங்கிக்கொண்ட ராசம்மா, அவரது கடையில் வேலை பார்த்த ஒருவனது உதவியுடன் அவனது பைக்கில் வால்பாறைக்கு கிளம்பினாள். வழியில் ஒரு பள்ளத்தில் பைக் வேகமாய் ஏறியிறங்க, ராசம்மாவுக்கு இடுப்பு வலி உயிர் போய்விட்டது. வலியை காட்டிக்கொள்ளாமல் அடுத்த ஒரு மணிநேரத்தில் டவுனுக்கு வந்து சேர்ந்தாள். அவளது நல்லநேரம் பேருந்து ஒன்று பொள்ளாச்சிக்கு கிளம்பிக் கொண்டிருக்க, நகர்ந்துவிட்ட பேருந்தில் ஓடிச்சென்று ஏறினாள்.
“பாத்தும்மா.. என்னா, காலேஜ் பொண்ணுன்னு நெனப்பா.. ஓடற பஸ்ல வந்து ஏறுற? எதாவது ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆயிப்போச்சுன்னா யாரு பதில் சொல்றது?” பேருந்து நடத்துனர், பொள்ளாச்சி வரும்வரை திட்டிக்கொண்டே வந்தார். இவளுக்கு எதுவும் காதில் விழவில்லை. போகும் இடத்துக்கு சீக்கிரம் சேரவேண்டுமே எனும் பதைபதைப்புதான் உள்ளுக்குள் இருந்தது. இடுப்புவலி வேறு ஒருபக்கம். அவ்வப்போது தேய்த்து விட்டுக்கொண்டாள். பஸ்ஸ்டாண்டில் இறங்கிய கையுடன் ஒரு ஆட்டோவைப் பிடித்தவள், வேலப்பர் கூறியிருந்த ட்ராவல் ஏஜன்சியை விசாரித்தாள்.
அது ஒரு ட்ராவல் ஏஜன்சியாக மட்டுமின்றி லாரி புக்கிங் அலுவலகமாகவும் இருந்த காரணத்தால் எல்லாருக்கும் அந்த அலுவலகத்தை தெரிந்திருக்க, எளிதாக இடத்தைக் கண்டறிந்தாள். அதன் உரிமையாளர் இவளை ஆச்சரியமாய் பார்த்தார், “எதுக்கும்மா இவ்ளோ அவசரம்?”
“எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கய்யா” கெஞ்சினாள். அவரும் எங்கெங்கோ முயற்சி செய்து தோற்று இவளிடம் பரிதாபம் காட்டினார், “இன்னிக்கு முடியாதும்மா.. நாளைக்கு போங்களேன்.. வேணும்னா நம்ம வீட்லயே தங்கிக்குங்க..”
ராசம்மா கண்கலங்க, உடன் இருந்த ஒரு லாரி டிரைவர் ஆதங்கம் காட்டினான், “எனக்கு இன்னிக்கு ஜெய்ப்பூர் ட்ரிப்புதான்.. ஆம்பளையா இருந்துருந்தா நான் லாரில அழைச்சுட்டு போயிருவேன்.. இந்தம்மாவ எப்படி?”
ராசம்மாவுக்கு புது வெளிச்சம் பிறந்தது, “நான் வர்றேன்யா.. என்னால லாரில வரமுடியும்” என உறுதியாக கூற – டிரைவர் தடுமாறினான். ஏஜன்ஸி உரிமையாளர் தயங்கினார், “கஷ்டம்மா.. சும்மா இல்ல.. கிட்டத்தட்ட நாப்பது மணிநேரத்துக்கு மேல ஆவும்.. இங்க இருக்குற மங்களூருக்கு போயிட்டு வந்ததுக்கே நான் நாலுநாள் படுத்துட்டேன்.. என்னை விட வயசானவங்க நீங்க, வேணாம்மா..”
“இல்ல, எனக்கு எதுவும் ஆகாது.. அப்படியே எதாவது ஆனாலும் உங்க யாருக்கும் பாதகம் வராது..” சத்தியம் செய்தாள். டிரைவர் மறுத்தான், “ஏற்கனவே நாங்க ரெண்டு டிரைவர் இருக்கோம், ஒரு க்ளீனர் இருக்கான்.. இது ரொம்ப அர்ஜண்ட் ஆர்டர் வேற.. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.. நாங்க வண்டில இருக்குற லோடை அங்க ஞாயித்துக்கிழமை மதியத்துக்குள்ள கொண்டு போயி சேர்க்கணும்.. இடைல ரெஸ்ட்லாம் எடுக்கமுடியாது..”
டிரைவர் முன்பாக தனது பர்ஸிலிருந்த சேமிப்பு பணத்தை எல்லாம் கொட்டினாள், “எவ்ளோ வேணாலும் எடுத்துக்குங்க” என கலங்கி கையெடுத்துக் கும்பிட்டாள்.
எதுவும் பேசமுடியாத திகைப்பில் டிரைவர் சம்மதிக்க – ராசம்மா லாரியில் ஏறிக்கொள்ள – லாரி ராஜஸ்தான் நோக்கி புறப்பட்டது. வெகுநேரம் அமைதியாய் வந்த டிரைவர் ஒருநிலையில் அவளிடம் கேட்டான், “காலைலேர்ந்து நிறைய ஓடிட்டே இருக்கீங்களே.. சாப்டீங்களாம்மா?”
ராசம்மா இல்லை எனவும் – நெடுஞ்சாலையில் இருந்த உணவகம் ஒன்றில் நிறுத்தி இரவு உணவை வாங்கித் தந்தான். கூடவே இன்னொரு டிரைவரும் க்ளீனரும் இருந்தார்கள்.
அவனது உதவியில் கண்கள் கலங்கிய ராசம்மா அவனிடம் கேட்டாள், “நான் உங்களுக்கு எவ்ளோ தரணும்னு சொல்லவேயில்லியே தம்பி”
“நீங்க எதுக்காகப் போறீங்க, என்ன விவரங்கிறது எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.. ஆனா, ஏதோ அவசரம்னு புரியுது. அந்த காரியம் நல்லபடியா நடக்கட்டும்.. எனக்கொண்ணும் வேணாம்.. வாங்க”
லாரியில் டிரைவர் கேபினில் இருந்த படுக்கையை தயார் செய்து அவளை உறங்கச் சொன்னான். இரவுப் பயணம் மீண்டும் தொடர்ந்தது. பல்வேறு நினைவுகளும் உணர்வுகளும் அலைக்கழிக்க, அவளையும் மீறி உறங்கினாள்.
மீண்டும் விழிப்பு வந்தபோது பொழுது விடிந்திருந்தது. லாரி ஒரு நெடுஞ்சாலை தேநீர்க்கடையில் நின்றிருந்தது. இவள் விழிப்பதற்காக காத்திருந்த டிரைவர், இவளிடம் வர – “ராஜஸ்தான் வந்துருச்சா..?” என்றாள் பரிதவிப்புடன்.
“அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா.. இப்பத்தான் நாம சித்ரதுர்கவுக்கும் ஹூப்ளிக்கும் இடைல வந்துருக்கோம்.. இன்னும் போகணும்.. டீ சாப்பிடுவீங்கதான? சாப்பிட்டுட்டு இங்கியே பாத்ரூம் இருக்கு, போயிட்டு வந்துருங்க..”
தேநீர் அருந்தும்போது ராசம்மாவுக்கு விஜியின் ஞாபகம் வந்து கண்கள் பனித்தது. காலை உணவையும் அங்கேயே முடித்துவிட்டு மீண்டும் கிளம்பினர்.
லாரியில் அவ்வப்போது டிரைவர்கள் மாறிக்கொண்டனர். பாடல்கள் மாறின. பல்வேறு பேச்சுகள். அனைவருக்குள்ளும் ஓர் அன்னியோன்யம் வந்திருந்தது. இவளது பிரச்சனையும் அவர்களுக்குப் புரிந்தது.
“லாரில இதுதான் மொதோ தடவையாம்மா?”
“இல்ல..இதுக்கு முன்னால போயிருக்கேன்..” அவர்கள் விபரம் கேட்க, சற்றே மனசு இலேசாகினாள், “மொதோ தடவ லாரில போனதுன்னு பாத்தீங்கன்னா.. அப்போ எனக்கு இருவது வயசிருக்கும்.. ஒருநாள் பஸ் ஸ்டிரைக்கு, நான் வேலை முடிஞ்சு வர்றதுக்கு வண்டி ஏதும் இல்ல.. ஒரு லாரில உதவி கேட்டு ஏறினேன்..டிரைவர் ரொம்ப நல்ல மாதிரி.. தினமும் நாங்க சந்திச்சோம், பழகினோம், புடிச்சிருந்துது.. கல்யாணம் பண்ணிக்கிட்டோம்..எனக்காக உயிரையும் கொடுக்கறவர்.. குழந்தை பொறந்த அன்னிக்கு ஒரு விபத்துல இறந்துட்டார்..” கதையை மகிழ்ச்சியாய் விவரிக்க ஆரம்பித்து கண்ணீருடன் அவள் முடிக்க – லாரியில் இருந்தவர்களும் கலங்கினர்.
அன்றைய பகலும், தொடர்ச்சியாய் இரவும் முடிந்து அடுத்தநாள் காலையில் ராஜஸ்தான் எல்லைக்குள் லாரி நுழைந்தது.
“இப்ப நாங்க ஜெய்ப்பூருக்கு போகணும்.. ஆனா, நீங்க ஜெய்சால்மர் கிட்ட போயாகணும்..ம்ம்?” என டிரைவர் யோசிக்க –
“பரவால்ல தம்பி, நான் எங்க வேணாலும் இறங்கிப் போயிக்குறேன், நீங்க சிரமப்பட வேணாம்.. இவ்ளோதூரம் எனக்காக நீங்க செஞ்ச உதவியே பெருசு..”
“இருங்க.. ஒரு ஏற்பாடு பண்றேன்..”
வழியில் லாரிகளும் வேன்களும் நின்றிருந்த ஒரு சாலையோர உணவகத்தில் காலை உணவு சாப்பிடும்போது, எங்கோ சென்றிருந்த டிரைவர், ஒரு வயதான சீக்கிய பெரியவரை ராசம்மாவிடம் அழைத்து வந்தான்.
“நீங்க போகவேண்டிய இடத்துக்கு இவர் அழைச்சுட்டு போவார்..” என்று அவரிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு, பத்திரமாக அழைத்துப் போகும்படி ஹிந்தியில் கூறினான்.
“கவலைப்படாம போங்கம்மா.. போயிட்டு ஊருக்கு வாங்க.. அங்க பாப்போம்” டிரைவரும் மற்றவர்களும் விடைபெற்றுச் செல்ல – ராசம்மா கோழிகள் நிறைந்த கூண்டுகளை ஏற்றியிருந்த அந்த சீக்கிய பெரியவரின் வேனில் தனது பயணத்தை தொடர்ந்தாள்.
அந்தப் பெரியவர் வண்டியை நிதானமாக ஓட்டிக்கொண்டும் நிறைய பேசிக்கொண்டும் வந்தார். அவளுக்கு புரிகிறதா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஹிந்தியிலேயே பேசிக்கொண்டு வந்தார். சில இடங்களை காட்டி அதைப்பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தார். ராசம்மாவுக்கு நேரம் போகிறதே எனும் பதைபதைப்பு.
மதியத்துக்குப் பிறகான பொழுதில் ராசம்மா சொன்ன இடத்தில் மெயின் ரோட்டிலேயே இறக்கிவிட்டு, முகவரிக்குரிய வீடு இருந்த திசையைக் காட்டினார். சற்று மேட்டின் மேல் ஒரு காலனியின் முதல் வீடாக அது தெரிந்தது. இவள் தலையாட்டி கைகூப்ப, பதிலுக்கு கைகூப்பி விடைபெற்றுச் சென்றார்.
அவள் இறக்கிவிடப்பட்ட இடத்தருகே சிறிய பேருந்து நிறுத்தம் இருக்க, அதன் சிமெண்ட் பெஞ்ச்சில் அமர்ந்து, தவிப்புடன் காத்திருக்கத் துவங்கினாள். இரவு துவங்கும் சமயத்தில், அவளது முகத்தில் வெளிச்சத்தை வாரியிறைத்த டாக்ஸி ஒன்று அவளைக் கடந்து சென்று தயங்கி நிற்க – இவளும் திரும்பிப் பார்க்க – டாக்ஸியின் கதவை வேகமாய் திறந்து இறங்கிய விஜி, திகைப்பும் அழுகையுமாய் இவளைப் பார்த்து ஓடிவர – ராசம்மா நிம்மதி பெருமூச்சுடன் எழுந்து நின்றாள்.
“அம்மா” என அழுதபடி ஓடிவந்த விஜி, ராசம்மாவை கட்டிக்கொண்டு கதறியழுதாள், “என்னை மன்னிச்சுரும்மா…”
சற்றே அதிர்ச்சியும், நம்ப முடியாத குழப்பமும் நிரம்பிய பாவனையில் அருகே வந்த விஜியின் கணவன், “வாங்க ஆண்ட்டி.. எப்படி நீங்க இங்க.” எனத் தடுமாறினான்.
தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்த விஜியை நிமிர்த்தி பார்த்த ராசம்மாவின் கண்களிலும் கண்ணீர். அதை சமாளித்துப் பேசினாள்,”எங்கிட்ட எதுக்கும்மா சொல்லல? நான் வேணாம்னு சொல்லுவேன்னு எப்படி நீயா முடிவு பண்ணே?” விஜி மேலும் அழ – விஜியின் கணவனும் கலங்கினான்.
“நீ வாழப்போற இந்த வீட்டுக்குள்ள நீ போறதுக்கு முன்னால நான் வந்துடணும்னுதான் ஓடிவந்தேன்.. என் வாழ்க்கைய நீ வாழ்ந்துடக்கூடாதுங்குற பயத்துலதான் ஓடிவந்தேன்.. எனக்கு அம்மா அப்பா இல்ல, யாருமில்ல.. தனியா முடிவெடுத்தேன், தனியா புருஷன் வீட்டுக்குப் போனேன்.. அவ்ளோ பெரிய கூட்டுக்குடும்பத்துல எப்பவும் நான் தனிமை உணர்வோடதான் வாழ்ந்தேன்.. நல்லது கெட்டதுக்கு கூட நம்மள வந்து பாக்க யாருமில்லன்னு கடேசி வரைக்கும் குற்றவுணர்ச்சியோட வாழ்ந்தேன்.. எம்பொண்ணுக்கு அப்படி ஒரு நிலைமை வேணாம்.. உன் அப்பா மாதிரி உம் புருஷனும் நல்லவனா இருக்கலாம், எப்பவும் நான் இருக்கேன்னு சொல்லி ஆறுதலா இருக்கலாம்.. யார் இருந்தாலும் இல்லைன்னாலும் அம்மா இருக்காங்குற ஆறுதல் மாதிரி வராது.. உனக்கு நான் இருப்பேன்..சாகுற வரைக்கும் உனக்கு எதையும் செய்யறதுக்கு என் வீட்ல நான் காத்திட்டு இருப்பேன்.. என் புகுந்த வீட்டுக்கு என் புருஷனோட நான் மட்டும் யாருமில்லாத, எதுவுமில்லாத ஒருத்தியா தனியா போன மாதிரி நீயும் இங்க போயிடக்கூடாது.. ஒடிவந்தவதானேன்னு எந்தகாலத்திலயும் யாரும் உன்னை நெனச்சுடக்கூடாது.. அம்மா வந்து வழியனுப்பிட்டு போனான்னு பெருமையா சொல்லணும்.. அதுக்காகத்தான் வந்தேன்.. இந்தா..” என தன்னிடமிருந்த நகைப் பையை அவளிடம் தந்தாள்.
“எதுக்கு ஆண்ட்டி இதெல்லாம்.. நீங்க வந்ததே போதும்..வீட்டுக்கு வாங்க, எல்லாரும் வெயிட் பண்ணிட்டிருக்காங்க.. உங்கள பாத்தா சந்தோஷப்படுவாங்க..” என விஜியின் கணவன் மகிழ்ச்சி காட்ட –
“இப்ப எம் பொண்ணு சீர் செனத்தியோட, அவ வீட்டு உறவோட புகுந்த வீட்டுக்கு போகப்போறா..” – என விஜியைப் பார்த்து கண்கலங்கி, “என்னோட இந்த செயல் உனக்கு வித்தியாசமா படலாம், தேவையில்லன்னு கூட படலாம்.. இப்ப அப்படித் தோணும்.. என் வயசுல நீ அப்படி நெனக்கமாட்டே.. நான் அனுபவிச்சுக் கடந்த அந்த வலியை நீ எப்பவும் பட்ரக்கூடாது.. வா..”
விஜி கண்ணீரும் பெருமிதமுமாய் தனது தாயை பார்த்திருக்க – ராசம்மாவின் போன் ஒலித்தது. போனில் வேதா. “அண்ணி, நான் நம்ம ஊருக்குத்தான் கிளம்பி வர்றேன்.. விஜியை பத்தி எதாவது தகவல் தெரிஞ்சுதா?”
“வேதா.. இப்ப நான் விஜியை அவ புகுந்த வீட்ல விடவந்துருக்கேன்.. கல்யாணத்தை சிம்பிளா பண்ணியாச்சு, நாந்தான் அப்படி பண்ணச் சொன்னேன்.. தப்பா எடுத்துக்காதீங்க யாரும்.. ஊருக்கு வந்தப்பறம் நான் வெவரமா சொல்றேனே.. எல்லார்கிட்டயும் சொல்லிடு..” என தொடர்பைத் துண்டித்து, இவர்களிடம் வந்தாள், “வாங்க போகலாம்”
வாசலில் பெரிய கூட்டமே காத்திருந்த அந்த வீட்டை நோக்கி மூவரும் நடக்கத் துவங்கினார்கள்.
******