இணைய இதழ்இணைய இதழ் 65சிறுகதைகள்

காத்திருக்கிறேன் – ஆவுடையப்பன் சங்கரன்

சிறுகதை | வாசகசாலை

நான் வந்து மூணு மணி நேரம் ஆச்சு… உனக்காக காத்துட்டிருக்கேன்… நீ வருவியா கார்த்திக்?

நல்லா காத்தடிக்குது. நேத்து மழை பெஞ்சுருக்கு போல… எல்லாமே பச்சை பசேல்னு ஃப்ரெஷ்ஷா இருக்கு. உனக்கு இந்த கிளைமேட் ரொம்ப பிடிக்குமில்ல… எத்தனை தடவை சொல்லியிருக்க… 

பெருக்குற அம்மா மூணு தடவை என்னைத் தாண்டிப் போய்ட்டாங்க… யார்ரா இவ ரொம்ப நேரமா பெஞ்சில் உட்கார்ந்துட்டு இருக்காளேன்னு யோசிச்சிருப்பாங்க போல… முந்தி நீ ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா வந்தா கூட எனக்கு எவ்வளவு கோபம் வரும்… ? இப்ப,சிரிப்புதான் வருது… ஆமா எனக்கு கோவம் வராத விஷயம்தான் எது… ? எல்லாத்துக்கும் கோபப்பட்டு கோபப்பட்டு இப்போ எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிறேன்…

ஆனா, நீ அப்படி இல்லையே கார்த்திக். எல்லாமே உனக்கு ஜோக்தான். எதையுமே சீரியஸா எடுக்கவே மாட்ட… ஆனா, கடைசியில நீ அப்படி இல்லையே… மாறிட்டியே… ! எப்படி கார்த்திக்… ? நான் தானே…? என்னால தானே…?

முதல் முறையா உன்னைப் பார்த்ததை நினைச்சுப் பார்க்கிறேன்… நம்ம பர்ஸ்ட் இயர்ல கிளாஸ்குள்ள நான் நுழைஞ்சதும் மொதல்ல கண்ணுல பட்டது நீதான்… ஜேம்ஸ், ராஜ் கூட உட்கார்ந்திருந்தே… லவ் அட் பர்ஸ்ட் ஸைட்டெல்லாம் இல்லை… அதெல்லாம் உனக்கு கொஞ்சம் ஓவர்… இன்னும் சொல்லப்போனா உனக்கு நான் வச்ச பட்டப்பெயர் ‘குரங்கு’. கிட்டத்தட்ட பர்ஸ்ட் இயர் முழுக்கவே என் பிரண்ட்ஸ் உன்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க… அப்படி ஒண்ணும் நீ பெரிய சேட்டையெல்லாம் பண்ணலை… இருந்தாலும் நீ பல்லை காட்டிட்டிருந்ததை பார்த்தா அப்படித்தான் தோணுச்சு … பின்னாடி அந்த சிரிப்புக்கு நான் எவ்ளோ அடிமையாவேன்னு அப்போ எனக்குத் தெரியலை…

நீ ரொம்ப அழகா சிரிப்பே… தெரியுமாடா???… ஒரு சின்ன குழந்தை சிரிக்கிற மாதிரியிருக்கும்… நாம லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அந்த சிரிப்பை பார்த்துட்டேயிருக்கணும் போல தோணும்… இனி உன்னை அழவே விடக்கூடாதுன்னு தோணும்… அழுகைங்கற வார்த்தையே உன் வாழ்க்கையில வர விடக் கூடாதுன்னு எத்தனை தடவை நினைச்சிருப்பேன் தெரியுமா… கடைசியில நீ அழுததுக்கு ஒரே காரணம் நான்ன்னு எப்படிடா ஆச்சு…?

எல்லாத்துக்கும் என் கோபம்தானே காரணம்… நாம நேசிக்கிறவங்ககிட்டதான் கோபிக்க முடியும்னு சொல்றதெல்லாம் சும்மா… லவ்வர்ன்னா என்ன கோபத்தை கொட்டற குப்பைத்தொட்டியா?… அது ஒரு சறுக்குப் பாதை… ஆரம்பத்துல கட்டுக்குள்ள இருக்கற மாதிரித்தான் தெரியும்… ஆனா, போக போக நாமளே நினைச்சாலும் நிறுத்த முடியாது…

உனக்கு ஞாபகமிருக்கா?… ஒரு மழை நாள்… ரெஸ்டாரண்ட்டில் உட்கார்ந்து பேசிட்டிருந்தோம்… நீ வச்சிருந்த குடை அழகாயிருந்தது… கொடுன்னு கேட்டேன்… நீ தர முடியாதுன்னு சொன்னே… சும்மா விளையாட்டுக்குத்தான்… ஆனா, எனக்கு கோபம் வந்திருச்சு… நான் பேசாம இருக்கறதைப் பார்த்துட்டு நீ என்கிட்ட குடையைக் கொடுத்தே… நான் வேணாம் வேணாம்னு சொன்னேன். நீ கேக்கல… எனக்கு வந்த ஆத்திரத்தில் குடையப் பிடிங்கி தூக்கி தூர வீசினேன். அந்த நிமிஷம் இருந்த உன் முகத்தை நினைச்சா இப்போவும் எனக்கு அழுகை வரும்… எவ்வளவு அவமானப்பட்டிருப்பே… எத்தனை பேர் பார்த்திட்டிருந்தாங்க… எவ்வளவு வருத்தப்படிருப்பே… இருந்தாலும் எதுவும் பேசாம குடையை எடுத்துட்டுப் போனியே… என் மனசுல அந்த காட்சி ஓடிட்டேயிருக்கு கார்த்திக்… அது ஞாபகம் வரும் போதெல்லாம் என்னை நானே வெறுத்திடுவேன்….

நான் கொடுமைக்காரி இல்லை கார்த்திக்… உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கேன். ஏன்டா என்கிட்ட பேசின..? பேசாம போய் இருந்தா நீயாவது நிம்மதியாக இருந்திருப்பேயில்ல… சாரி கார்த்திக் சாரி… சாரி… சாரி… சாரி… உன்னை நான் பார்த்திருக்கக் கூடாது… பேசியிருக்கக் கூடாது…

ஆனால், நீதானே முதல்ல என்கிட்ட பேசினே… ஞாபகமிருக்கா… நம்ம ஃபர்ஸ்ட் இயர் டூர்ல… அப்போல்லாம் நீ என்னை சைட் மட்டும்தான் அடிப்பே. நான் கண்டுக்க மாட்டேன் என்கிட்ட பேச ரொம்ப பயந்திட்டிருந்தயில்ல… எனக்குத் தெரியும்… எனக்கும் பேச ஆசைதான் ஆனா, எனக்கும் ஒரு பயம்… மே பீ அப்பவே எனக்குத் தெரியுமோ என்னவோ.. நான் உன் கிட்ட பேசினா உன்ன லவ் பண்ணுவேன்னு… தெரியலை… ஆனா, டூர் ஒரு புது உலகம் இல்லையா… நம்ம வழக்கத்தில் இருந்து தப்பிச்ச சந்தோஷம், புது இடங்கள், நம்ம கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்ந்திருது… அப்போ நீ என்கிட்ட பேசம் போது எனக்கு பயமில்லை. யோசிச்சுப் பார்த்தா அந்த டூர் முழுக்க நீ மட்டும்தான் என் கிட்ட பேசணும் அப்படின்னு ஆசையா இருந்தது. கூட நிர்மலா இருந்தா… இருந்தாலும் அவ பேச்செல்லாம் எனக்கு ஒரு பேக்ரவுண்ட் சத்தம் மாதிரிதான் தோணுச்சு. உன்கிட்ட எவ்வளவு ப்ரீயா பேசினேன்… இப்பவும் ஆச்சரியமா இருக்கு. நான் பேசின முதல் பையன் நீதான்… அந்த டூர் முழுக்க நீதான் இருந்தே கார்த்திக்… நீ வர கொஞ்ச நேரமானாலும் மனசு உன்னை ரொம்பத் தேடும்… ஒரு தடவை நீ பஸ் எடுக்கற வரை எங்கயோ போய் தொலைஞ்சுட்டு கடைசியா வந்து ஏறின… அந்த பத்து நிமிஷத்துல நான் பட்ட பாடு!!!… விட்டா, உன்னை அங்கேயே அறைஞ்சுருப்பேன்… அப்படியே உன்னை கட்டி இறுக்கி எங்கேயும் போக விடாம எனக்குள்ளேயே வச்சுக்கிட்டு இருப்பேன்… உன்னை அவ்ளோ லவ் பண்ணேண்டா… உன்னை எப்போ பார்க்கிறேனோ அந்த செகண்ட், என் மனசுல ஒரு சந்தோஷம்… ஒரு இனம் புரியாத உணர்ச்சி… வானத்துல பறக்கிற மாதிரி, பட்டாம்பூச்சி றெக்கையை தொடுவது மாதிரின்னு உவமை சொல்லலாம்… ஆனா, எதுவும் என் அந்த நிமிஷத்தைச் சொல்லாது… பத்தாது… அது உன் நிமிஷம்… ஆமாம்… என் கார்த்திக் நிமிஷம்… 

நீயும் என்னை எவ்வளவு லவ் பண்ணினே!!!… என் பர்த்டே எல்லாம் எப்படிக் கொண்டாடுவே … எந்த இடத்துக்கு போனாலும் ஏதாவது வாங்கிட்டு வருவியே?… ஞாபகமிருக்கா?… எவ்வளவு நாள் உனக்கு டயர்டா இருந்தாலும் என்கிட்டே பேசிட்டிருந்திருக்கே… நான் ஏதாவது சொன்னா கேட்டா உடனே எனக்கு வாங்கித் தந்திருவே… எவ்வளவு அழகான உலகம் நம்ம ரெண்டு பேர் இடையே இருந்துச்சு… என்னாச்சு கார்த்திக்… ? ஏன் நாம பிரிஞ்சோம்?… தேவதை கதைகளில் வர மாதிரி கடைசி வரை சந்தோஷமாவே இருந்திருவோம்ன்னு நினைச்சேன்… சந்தோஷமும் துக்கமும் வானவில் மாதிரி, முடிவே தெரியாத மாதிரி தோணும்… ஆனாலும், முடிவுக்கு வந்திரும்… 

பிரச்சினை நம்ம செகண்ட் இயர்லதான் ஆரம்பிச்சது. அன்னைக்கு வினோத் சார் என்கிட்ட பேசிட்டு இருக்கிறதை பார்த்துட்டே… சும்மாத்தான் பேசிட்டிருந்தோம்… ஏதோ பாடம் பத்திதான்… ஆனால், நீ ஒத்துக்கலை… அன்னைக்கு நைட் எவ்வளவு சண்டை போட்டே… என்னை நீ அழ வச்ச முதல் தடவை அதுதான் தெரியுமா?… அந்த அழுகையைப் பார்த்ததும், நீயும் அழுது ஒரு வழியா நாம சமாதானம் ஆனதும், நீ சொன்னியே ஞாபகம் இருக்கா… “எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு… ஆனாலும், அந்த வினோத் சரியில்லைம்மா… பசங்க உன் முன்னாடி ஒண்ணு பேசுவாங்க, இங்கே ஹாஸ்டலில எப்படி பேசுவாங்கன்னு எனக்குத்தான் தெரியும்”… எனக்கு சிரிப்புதான் வந்துச்சு… என்னை பார்த்தா எப்படி இருந்துச்சு… இருந்தாலும் உன் பொறாமை அப்போ எனக்கு அழகாத் தோணுச்சு… என் மேலே வச்சிருக்கிற அன்போட சாட்சியா தோணுச்சு… அதனால்தான் ஒத்துக்கிட்டேன்… ஆனால், நீ சொன்னதை பத்தி எப்போதாவது யோசிச்சுப் பார்த்தியா கார்த்திக்?… யார் என்ன பேசினா என்ன?… உன்னை மாதிரி என்னை பாத்துக்க முடியுமா?… என் அன்பு அவ்வளவு சீப்பா என்ன?… ஆனால், அன்னைக்கு இதை நான் கேக்கலை… யோசிக்கலை

அடுத்த நாள் வினோத் சார்கிட்ட ஏதோ ஒரு சப்பை காரணம் சொல்லி சண்டை போட்டேன். பாவம் மனுஷன். கடைசி வரை அவருக்குப் புரியலை… அப்புறம் அவரை நான் பார்க்கவேயில்லை. என் வாழ்க்கையிலே இருந்து அப்படியே மறைஞ்சு போயிட்டார் . நிறைய பேர் அப்படித்தான். சில நாள் நம்ம வாழ்க்கையிலே ரொம்ப முக்கியமா இருப்பாங்க. அப்புறம் வாழ்க்கை ஓட்டம் நம்மைப் பிரிச்சுடும். விலகி மிதந்து போய்டுவாங்க. ஆனால், சிலரைத்தான் நம்மால பிரியவே முடியாது கார்த்திக். என்ன வேணா கொடுக்கலாம்னு தோணும். அதான் அன்னைக்கு ஐ லெட் யூ கிஸ் மீ…

முதல் காதலோட முதல் முத்தம்… அந்த அனாடமி டிசக்சன் ஹால் திருப்பத்துல… காலேஜே சாயங்கால அமைதியில் இருந்தது… அவ்வளவு அழகாயிருந்தது… ஆனால், அடுத்த நிமிஷமே தாண்டக் கூடாத ஏதோ ஒரு கோட்டைத் தாண்டிட்டேன்னு தோணுச்சு… அது உன் மேலே இருக்கிற நம்பிக்கையின்மையால இல்லை… சின்ன வயசுல இருந்து வந்த எச்சரிக்கை உணர்வால்… ஆனால், அப்போ அதெல்லாம் தெரியலை… புரியலை… வெறும் கோபம்தான் வந்தது… அந்த முத்தம் முடிஞ்ச அடுத்த நிமிஷம் என் அமைதிக்கு காரணம் புரியாம குழம்புனியே… இதுதான் காரணம்… அன்னைக்கும் சரி… அதுக்கப்புறம் நீ என்னைத் தொட்ட ஒவ்வொரு தடவையும் சரி… I felt very guilty… அப்பா அம்மா நம்பிக்கையை மோசம் பண்றோம்ன்னு உறுத்தல்.. அதே சமயம் அந்த நெருக்கம் தரும் அமைதி… அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது… சந்தோஷமும் குற்ற உணர்ச்சியுமான ஒரு கலவை… அப்போ உன்னை என்னவெல்லாம் பேசியிருக்கேன்… நீ இதுக்குத்தான் என்கிட்டே பழகுறியா?… என் உடம்பு கிடைச்சா என்னை விட்டுப் போய்டுவியா?… எவ்வளவு கேட்டிருக்கேன்… சத்தியமா கோபத்துல கேட்டதுதான்… ஆனா, அதனால எவ்வளவு நீ கஷ்டப்பட்ட!!!… 

ஆனா, நீயும் என்னைக் கஷ்டப்படுத்தினியே கார்த்திக் … இப்படி சொல்லக் கூடாதுன்னுதான் தோணுது… ஆனா, சொல்லாம இருக்க முடியலை… அந்த நேரத்துல அப்படித்தானே நடந்தது. ஒண்ணு மாத்தி ஒண்ணா எத்தனை பிரச்சினை?… நான் யாருகிட்ட பேசினாலும் உனக்கு கோபம் வர ஆரம்பிச்சுருச்சு… நீ கட்டுப்பாடு போடப் போட, எனக்கும் உன் மேலே கோபம்தான் ஜாஸ்தியாச்சு … சரியா தப்பான்னு யோசிக்காம வார்த்தைகளை வீச ஆரம்பிச்சோம்… ஒருத்தரயொருத்தர் குத்தி கிழிச்சோம்… எத்தனை இரவுகள் அழுகையிலேயே கழிஞ்சது… எத்தனை சமாதானங்கள்… இனி இப்படி நடக்காதுன்னு எவ்வளவு தடவை நம்மளை நாமளே ஏமாத்திக்கிட்டோம்…

என்னால உன் நிலைமை புரிஞ்சுக்க முடிஞ்சது கார்த்திக்… ஆனா, நம்ம வாழ்க்கையிலே நாம ரெண்டு பேர் மட்டும் தனியாள் இல்லையே… நமக்குன்னு யாரும் வேணாம்னு பேச வேணா நல்லாயிருக்கும்… ஆனால், சாத்தியமா?… ஏண்டா உனக்கு அது தோணலை?… உனக்கு நான் மட்டும் போதும்… வேற யாரும் வேணாம்… அதுதான் உன் லவ்… அதுதான் உண்மையான ஒரே லவ்ன்னு நினைச்சே… ஆனா, அதை என்னாலே ஒத்துக்க முடியலியே… ஒரு முறை நிர்மலா சொன்னா… உங்க ரிலேஷன்ஷிப் டாக்ஸிக்ன்னு… எனக்கு அப்படித் தோணலை… நீ ஒரு பயத்துல இருந்தே… உன்னை விட்டு நான் போயிருவேன்னு பயம்… முடியுமான்னு நீ யோசிக்கலை… அந்த பயமே என்னை என் காதலை எவ்வளவு அசிங்கப்படுத்தறதுன்னு உனக்குப் புரிஞ்சுதா?… உன்னை விட இன்னொருத்தன் அந்த அன்பை எனக்குத் தர முடியுமாடா?… ஒரு பொண்ணு பையன்கிட்டே எதிர்பாக்கிறதே அதுதானே… நம்ம பிரச்சனையே இதுதான்… நாம ரெண்டு பேரும் கோபிக்கறதுலையும் நியாப்படுத்தறதுலையும் இருந்தோமே தவிர நம்ம உறவை ஆராய முயற்சிக்கலையே… ஆனா, அதால என்னவெல்லாம் நடந்துச்சு…

எப்படியெல்லாம் நீ மாற ஆரம்பிச்சே… ஆரம்பத்துல ஒவ்வொரு சண்டைக்கப்புறமும் ஒரு சந்தோசம் வரும்… அப்பாடா!!! பிரச்சினை முடிஞ்சதுன்னு… ஆனா, போகப் போக பயம்தான் வந்தது… அடுத்து என்ன வரும்… எப்படி சமாளிக்கப்போறோம்னு… ஒரு முறை நான் நிர்மலா ரூமுல உக்காந்திருந்த போது உன்னோட கால் வந்தது… போனை எங்கே வைச்சோம்ன்னு தெரியாம நான் பட்ட பதட்டத்தை பார்த்தவள், ஏண்டி இவ்வளோ டென்ஷனாகுறன்னு கேட்டா… அதுக்கு கொஞ்ச நாள் முன்னாடித்தான் நீ போன் பண்ணி நான் எங்கயோ இருந்ததாலே எடுக்கலைன்னு சண்டை போட்டு முடிச்சிருந்தோம். அதை சொன்னேன். அவ கடுப்பாயிட்டு கேட்டா, அவன் உன் லவ்வரா இல்லை ஓனரான்னு… உன்னோட அன்பு என்கிட்டே பறிச்சது என் சுதந்திரத்தைன்னு அப்போத்தான் எனக்குப் புரிஞ்சது…

இருந்தாலும் அப்போக்கூட நான் எந்த முடிவையும் எடுக்கலைடா… கடைசியா அன்னைக்கு நான் சிவாக்கிட்டே பேசினதுக்கு நீ சண்டை போட்ட போதுதான் நீ எவ்வளவு மாறிட்டேன்னு புரிஞ்சது… முதல் தடவை உன்னை நான் பார்த்தப்போது நீ சிரிச்சுட்டிருந்த… ஆனால், அன்னைக்கு உன் கண்ணுல வெறுப்புதான் தெரிஞ்சது… எப்படி கத்தினே!!!… தலையில அடிச்சுக்கிட்டே… என் கூட பழகித் தொலைச்சதுதான் தப்புன்னு சொன்ன… நான் ஏதும் சொல்லாம இருக்க, அடிக்கவே வந்துட்டேல்ல… “பேசுடி”ன்னு… என் கண் முன்னாடி நான் நேசிச்ச நீ அழிஞ்சுக்கிட்டிருக்கறதை நான் அன்னைக்குத்தான் உணர்ந்தேன்… காதல் வளர்க்கத்தானே செய்யணும் கார்த்திக்… அழிக்கக்கூடாதுல்ல… எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியலை… வேற என்ன முடிவு எடுக்கணும்னு புரியலை… அதான் உன்னைப் பிரிஞ்சேன் கார்த்திக்… உன்னை வெறுத்தோ இல்லை நம்ம காதலை வெறுத்தோ இல்லை… இன்பாக்ட், உன்னை அன்னைக்கு பார்த்து நாம மூணு வருஷம் பிரிஞ்சிருப்போம்ன்னு சொல்லிட்டுத் திரும்பின அந்த செகண்டுல இருந்தே உன்னை மிஸ் பண்றேன் கார்த்திக்… இந்த மூணு வருஷத்துல உன்னை நினைக்காத, நீ என்ன பண்ணுவேன்னு யோசிக்காத நாளில்லை… நீ என்னைப் பார்க்க வந்த போதெல்லாம் வரமாட்டேன்னு சொல்லிட்டு நான் எவ்வளவு அழுதேன்னு தெரியுமா… அப்புறம் ஏன் இந்த 3 வருஷம்?… 

நாளாக நாளாக நமக்கு வாழ்க்கை கத்துக்கொடுக்கிற பாடம் நிறைய… நம்ம ரெண்டு பேருமே அப்போ முடிவெடுக்கிற நிலைமையில இல்லை… நாம காதலிச்சிட்டிருந்தோம்… ஆனால், அதைத் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கறதை நாம பார்க்கவேயில்லை… நாம சேர்ந்து இருக்கற வரை அது முடியாதுன்னு தோணுச்சு… பிரிவு அன்பை வளர்க்கும்பாங்க… முதல்ல அது நம்மைப் பத்தி நமக்கு ஒரு புரிதலை வளர்க்கும்னு நம்பினேன்… உன் விருப்பமில்லாம, உன் சம்மதமில்லாம உன் மேல நான் திணிச்ச என்னோட முதலும் கடைசியுமான நம்பிக்கை… எல்லோரும் என் நம்பிக்கையை குறை சொன்னாங்க… இது முட்டாள்தனம்னு திட்டினாங்க… நிர்மலா நேரடியாவே கேட்டா… 3 வருஷத்துல நீ இன்னொருத்தியை லவ் பண்ணிட மாட்டேன்னு என்ன நிச்சயம்ன்னு… உன்னாலே முடியுமா கார்த்திக்…? என் மனசைத் தொடற எல்லா விஷயத்துலையும் உன் ஞாபகம்தானே வருது. சந்தோஷம், துக்கம்ன்னு என் எல்லா உணர்ச்சிகளுமே உன்கிட்ட உணர்ந்ததுதானே… எது நடந்தாலும் உன்னைத்தானே நினைக்கிறேன்… பூக்காரியை தாண்டும் போது, தியேட்டர் வாசலில் நிக்கும்போது, கோவில் மணிச் சத்தம் கேட்கும் போது, புல்வெளியை பார்க்கும் போது கூட உன் ஞாபகம் தானே வருது… இந்த மூணு வருஷத்துல எத்தனை மனிதர்கள், எத்தனை அனுபவங்கள்… எல்லாத்தையும் உன்கிட்டே சொல்லணும்னு மனசுல தேக்கிட்டு காத்திருக்கேன் கார்த்திக்… மூணு வருஷம் முடிஞ்சு எப்படா இந்த நாள் வரும்னு நான் காத்திட்டிருந்த மாதிரி நீ காத்துக்கிட்டிருக்க மாட்டியா… நீ என் மேலே வச்ச அன்பு என்னை இங்கே வர வைச்சிருச்சு… நான் உன் மேலே வச்ச அன்பு அதை செய்யுமா கார்த்திக்… நீ வருவியா கார்த்திக்…?

 *******

dravudai@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button