முன்னிரவுப் பேச்சு….
அது ஒரு
நவீன கேளிக்கைக் கூடம்
பலரும் ஆங்காங்கே
அமர்ந்தும், நின்றும்
சிரித்துக் கொண்டிருந்தார்கள்
குழைந்த மண்
பல உருக்களை வனைவதற்குத்
தன்னை ஒப்புக் கொடுத்தல் போல
ஒவ்வொருவரிடமும் ஒரு சொல்
தொங்கி அசைந்துக்கொண்டிருந்தது
அருள் வந்த சாமியாடி
ஆடித்தீர்த்த பின்
மலையேறுவது போல
இரவு கொஞ்ச கொஞ்சமாக வெளியேறியது
இப்போது நிபந்தனையற்ற சிரிப்புச் சத்தம்
ஒரு வாசனைப் பண்டமாக உருமாறி
இதழ்களில் பொருத்திக் கொண்டது
பல சிரிப்புகள்
என்னைக் கடந்தன
ஒவ்வொரு சிரிப்பிலும்
மூன்று காலமும் தெரிந்தது
நான் சிரிப்பிலிருந்து
இறங்க விரும்பாததால்
ஒரு ஒதுக்குப்புறம் தேடி
அமர்ந்துகொண்டேன்.
***
இப்பொழுது சிரிப்பு
சுருதி கூட்டும் ஒத்திசையாக மாறி
பேரிசையைத் தருவித்தது
அந்த மயங்கலுக்கு
அவர்கள் நடனமிடத் தொடங்கினர்
தொற்றுக் காய்ச்சலாக
பெரும் நடனக்களம் உருவாகியது
பிரமிட் வீடுகளின் பிரமிப்பாய்
கண் விரித்தேன்
அவர்களது நடனத்தில்
சிரிப்பு சுழன்றாடி
தன்னைச் சிறந்த உளவியல் நிபுணனாக
அனைவரையும்
சமமாகப் பாவித்தது
அது எரிந்த தீப்புண் மீது
புடமிட்ட மருந்தைக் தடவுவது போலிருந்தது
அந்த மாயலோக சிருஷ்ட்டிப்பிற்குள்
என்னை நுழைத்துக்கொள்ள
சாளரம் போதவில்லை
கதவைத் தேடி வெளிவந்தேன்.
***
கதவுகள் எங்குமில்லை
எனக்குத் தெரியவுமில்லை
தொழில்நுட்பக் கோளாறினால்
தடைபடும் பயணப் பதற்றம் கொண்டு
அவர்கள் மீது தடுமாறி விழுந்தேன்
அலங்கரிப்பட்ட சுவர்களில்
நிலத்துக்கு அடியிலான
தேவாலயங்கள் தெரிந்தன
நூற்றாண்டு கடந்த அதனை
அழுத்தி அழுத்திப் பார்த்ததை
அவர்கள் உணர்ந்தார்கள்
எதிர்கட்சிகளின் அமளி போன்று
கூக்குரலாகச் சிரிக்கத் தொடங்கினார்கள்
இங்கு
உடலின்றி எதுவுமில்லை
சதையின்றி எதுவுமில்லை
என்று எள்ளி எள்ளிச் சிரித்து
பசுஞ்செடி பற்றியெரிவதுவாய்
மோகித்து நின்றனர்
சதையின் கடைசி நாள் என்னவாகுமென
என் அம்மை என்பு ஆக மாறி
நிகழ்த்திக் காட்டினாள்
அவளது சிரிப்பு நீங்கள் கேட்டிராதது என்றேன்
ஒத்துக்கொள்ளாமல்
வம்பளப்பின் உச்சமாக சிரித்து நின்ற
அவர்களைப் பார்த்து,
“உடல் என்பது சதைக்கூடு
அதில், கால்கள் என்பது துளிர்க்கும் உணர்ச்சி”
என்றேன்
புரியாமல்
மீண்டும் சிரிக்கத் தொடங்கினார்கள்.
*****