இணைய இதழ்இணைய இதழ் 67கட்டுரைகள்

பனிவிழும் பனைவனம்: போரும் புன்னகையும் – சிறில் அலெக்ஸ் 

கட்டுரை | வாசகசாலை

த்தனை விதவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள் இந்த உலகத்திலே… ‘காலம்’ செல்வம் அத்தனை விதமான மனிதர்களையும் சந்தித்திருக்கிறார். அவரது மூன்று புத்தகங்களையும் வாசித்தவர்கள் இதை உணரக்கூடும். செல்வத்தின் புத்தகங்கள் விதவிதமான மனிதர்களை நமக்குக் காண்பிக்கின்றன. அவர் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு கதாபாத்திரம். விசித்திரமான ஏதோ ஒன்று அவர்களிடம் உள்ளது அல்லது செல்வத்துக்கு அப்படித் தோன்றுகிறது. செல்வத்தின் புத்தகங்களை ‘ஆளுமைகளின் கண்காட்சி’ எனச் சொல்லலாம். ‘காலம்’ செல்வத்தின் எழுத்து, ஆளுமைகளைக் காட்சிப்படுத்த விளைகிறது. அவர் ‘இவனைத் தெரியுமல்லோ?’ என்பதுபோல நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார் அவர் சொல்லி முடிக்கையில் ‘அவனை’ நமக்கு நன்றாக, அன்யோன்யமாகத் தெரிந்துவிடுகிறது. இது அவர் எழுத்தில் நிகழும் ஒரு மாயம். அவர் நம்மிடம் காட்டும் ஒவ்வொரு ஆளுமையும் ஏதோ ஒரு வகையில் நம்மைக் கவர்கின்றனர். அவர் யாரையும் வெறுப்பதில்லை; எனவே, நாமும் அவர் காட்டும் எவரையும் வெறுப்பதில்லை. 

‘பனிவிழும் பனைவனம்’ செல்வத்தின் அண்மைய புத்தகம் 2022ல் காலச்சுவடு பதிப்பாக வெளிவந்துள்ளது. இதில் அவரது இளமைப்பருவத்தில் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் வாழ்ந்த அனுபவங்களிலிருந்து துவங்கி ரஷ்யா, ஜெர்மனி என எங்கெங்கும் காணும் மனிதர்களை, ஆளுமைகளை அவர்களின் இயல்புகளைக் கோணல்களை பதிவு செய்திருக்கிறார். 

இப்படி ஒரு தொகுப்பை, நேரடியாகத் தொடர்பற்ற மாந்தர்களின் தனித்தனி கதைகளை ஒரு புத்தகத்தில் படிக்கையில் அவை உதிரிப் பதிவுகளாகத் தோன்ற வாய்ப்புக்கள் அதிகம். பனிவிழும் பனைவனம் இப்படி ஒரு தோற்றத்தை அளிக்கிறது. இப்புத்தகத்தின் உள்ளடக்கத்தை கீழ்கண்டவாறு வகுத்துக்கொள்ளலாம். 1977 துவங்கி செல்வத்தின் இளமைப்பருவ நிகழ்வுகள், இதில் காதல்(கள்), வேலை தேடுதல், வேலை செய்தல், குடும்ப நிகழ்வுகள் என ஒரு பகுதி, இவற்றின் வழியாக ஈழ அரசியல் மற்றும் ஈழப்போரின் துவக்க காலத்தைக் குறித்த பதிவுகளும் உள்ளன. செல்வம் வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளும், அவர் ஜெர்மனி சென்று சேரும் பயண அனுபவமும் ஒரு பகுதி, அடுத்து ஜெர்மனியில் அவரது துவக்க கால வாழ்க்கை. இறுதியாக அவர் போருக்குப் பின் ஊர்திரும்பிய அனுபவம்.

சாதி

செல்வத்தின் மொழிபில் தவிர்க்கமுடியாமல் இடம்பெறுவது ஈழத்தின் சாதிப் பாகுபாடுகள். சிறுவர்கள் சினிமா டிக்கட் வாங்கும் இடத்திலும் ‘நீங்க என்ன சாதிடா?’ எனக் கேட்கக்கூடிய அளவில் மிகச் சாதாரணமாக சாதிப் பாகுபாடு பார்க்கும் கலாச்சாரம் ஈழத்தில் இருந்திருக்கிறது. இதை இன்றைய வாசிப்பில் சாதாரணமாகக் கடந்துபோக முடியவில்லை. மிகச் சாதாரண உரையாடல்களிலும் சாதி குறித்த கவனம் எழுவதை செல்வம் தவிர்க்க முடியாமல் பதிவுசெய்துள்ளார். ஈழத்தின் சாதிப் பாகுபாட்டின் ஒரு சோற்றுப் பதமாக அவர் நமக்குக் காண்பிப்பது ‘யோசெவ் மாஸ்ற்றர்’. யோசெவ் மாஸ்ட்டர் ஒரு முக்கியஸ்த்தர். ஆனால், இன்றைய நம் பார்வையில் ஒரு கேடுகெட்ட சாதியவாதி. பிற சாதி இளைஞன் ஒருவன் காவல் ஆய்வாளர் பணிக்குத் தேர்வாகிறபோது ஊரில் பலரிடம் கையெழுத்து வாங்கி அவரை ஒரு குற்றவாளியாக்கி அவருக்கு வேலை கிடைக்காமல் செய்கிறார். அவர் சொல்லும் காரணம் ‘அவன் இங்கே இன்ஸ்பெக்றர் ஆகி வந்தால் நாம் அவன் முன் கைகட்டி நிற்கவேண்டும்’ என்பதுதான். 

அடுத்ததாக, யோசெவ் மாஸ்ட்டர் வேற்று சாதிப் பையன் ஒருவன் டாக்டர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவனுக்கு உள்ளூரில் ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாகச் சொல்கிறார். முதலில் அவர் இந்த ஆசிரியர் வேலையை அப்பையனுக்கு வாங்கித்தர மறுத்திருந்தார். ஈழத்தின் சாதிய சமூக அமைப்பின் தாக்கம் வெளி நாட்டிலும் அவர்களைப் பின் தொடர்கிறது. 

நார்வேயிலிருந்து ஊருக்குத் தொண்டு செய்யத் திரும்பி வந்த குட்டியண்ணன் ‘நம் சாதிக்கு மட்டும் ஏதேனும் செய்யுங்கள்’ என வற்புறுத்தப்பட்டு மனம் வருந்துவது இன்னொரு உதாரணம். உண்மையில் இவை நாம் இன்றும் தமிழ் நாட்டிலும் காணும் சித்திரங்கள்தான். 

சாதி மட்டுமல்ல வர்க்க வேறுபாடும் வலுவாக இருந்திருக்கிறதை செல்வம் சுட்டிக்காட்டுகிறார் ‘மேலோங்கிகள்’ எனப்படும் மேட்டுக்குடிகள் வெளிப்படையாக வர்க்க வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டிப் பேசும்போது பெரும் கசப்பும், அருவருப்பும் இயல்பாக எழுகிறது. செல்வம் இவற்றை கிறித்துவர்களை உதாரணமாகக் கொண்டு சொல்லும்போது தனிப்பட்ட முறையில் இது இரட்டிப்பான ஓர் அவலமாக எனக்கு அமைந்துவிட்டது. ஆனால், செல்வம் இவற்றைக் கதைகளைப்போல சுவாரஸ்யத்துடன் சொல்லிச் செல்கையில் வெறும் கசப்புணர்விலிருந்து நாம் இதை ஒரு அனுபவமாக, ஒரு ஞானமாக உள்வாங்கிக்கொள்ள முடிகிறது.

போர்

ஈழ அரசியலின் துவக்க காலம், ஈழப்போரின் துவக்க காலம் ஆகியவை பனிவிழும் பனைவனம் நூலில் தன் வரலாற்றினூடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈழ அரசியல்வாதிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இருந்த இடைவெளியை ‘வைஜெயந்திமாலா’ ஜோக்கின் வழியாக செல்வம் சுட்டிக்காட்டும்போது அரசியல் புத்தகங்கள் கூட தரத்தவறும் அறிதலை அடைகிறோம். 

ஈழப்போர்குறித்த செய்திகள் நம்மிடம் உதிரிச் செய்திகளாகவே வந்து சேர்ந்தன. முக்கிய நிகழ்வுகள் மட்டுமே, அதுவும் போர் தீவிரமடைந்தபின் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளே நம்மிடம் வந்து சேர்ந்துள்ளன. செல்வம் சொல்லும் போரின் துவக்ககால சித்திரங்கள் வியப்பளிக்கக்கூடியவை கூடவே சிந்தனையைத் தூண்டுபவை. ஈழ இளைஞர்கள் ஆங்காங்கே பண்ணைகளை எடுத்து ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். சிறிய சிறிய தாக்குதல்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. மூன்று போலீசார் எரிப்பு, போலிஸ் நிலையங்கள் தாக்கப்படுதல் போன்ற வன்முறைகள் என உதிரியான பரவலான பல நிகழ்வுகளின் வழியே பல ‘இயக்கங்கள்’ உருவாகி வருகின்றன. மிக அதிர்ச்சியான செய்தியாக நான் கண்டது ஆரம்பகட்டத்தில் இயக்கங்களால் செய்யப்பட்ட வங்கிக்கொள்ளைகள். அரசின்மையின் அல்லது அரசின் மீதான நம்பிக்கையின்மையின் வெளிப்பாடுகள் இவை என்றாலும், இந்தப் பெருங்குற்றங்களிலிருந்து உருவாகி வரும் புரட்சிகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் எனும் சிந்தனையும் வராமல் இல்லை. 

‘சாதிச் சண்டைக்கு வாங்கிய துப்பாக்கிகள் இப்போது தேசியச் சண்டைக்குப் பயன்படுத்தப்படுகின்றன’ எனும் வார்த்தைகள் ஈழச்சமூகத்தை, ஈழப்போரைக் குறித்த ‘ரொமாண்டிக்’ சிந்தனைகளைக் கேள்விகேட்கச் செய்கின்றன.

வன்முறையை ஒரு செயல் திட்டமாகக் கொள்வதை ஓர் இயல்பான விஷயமாக செல்வம் பதிவு செய்கிற நிகழ்வுகள் பல. அதில் அவர் தன்னைத் தானே குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும் செய்கிறார். உறவினரான ரதி மாமியின் கணவரை ‘இயக்க’ ஆட்களைக்கொண்டு. பணம் செலவழித்து, அடித்துக் காலை உடைக்கச் செய்கிறார் செல்வம்.

இப்படிப் பல புதிய கோணங்களில் ஈழ வரலாற்றையும் என்னேரமும் பெரும் வன்முறைக்குத் தயாராகிக் கொண்டிருப்பதைப்போலத் தோன்றும் நம் சமகாலத்தையும், நம் சமூகத்தையும் எடைபோட ஒரு கருவியை செல்வம் அளிப்பதாகவே தோன்றுகிறது. 

பயணம்

செல்வத்தின் வெளிநாட்டுப் பயணம் குறித்த அனுபவங்கள் திகிலூட்டுபவை மட்டுமல்ல உலக அளவிலான மானுட அவலங்களில் ஒன்றாக இவை ஆவணப்படுத்தப்படுகின்றன. அவர் போர்க்காலத்தில் அகதியாக அல்லாமல் பிழைப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்ல முனைந்த பலரில் ஒருவர். உள்ளூர் ஏஜென்சிகளின் சுரண்டல்கள், ரஷ்ய மற்றும் ஐரோப்பிய மாஃபியாக்களின் ‘கவனிப்பு’, மொழிதெரியாத நாட்டில் கதியற்றுத் துன்புறும் நிலை, சட்டத்தின் கெடுபிடிகள், சிறைத்தண்டனை என விரியும் இவ்வனுபவங்கள் இரு மரணங்களில் உச்சம் பெறுகின்றன. இவற்றின் நடுவிலும் செல்வம் சிரிக்க மறக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

மூன்று பெண்கள்

செல்வம் போருக்குப் பின் ஊர் திரும்பி சந்திக்கும் மனிதர்களின் கதைகள் ஆரம்பத்தில் போரின் துவக்கத்தைக் குறித்த சித்திரங்களைப் போல அதிர்ச்சியளிக்கக்கூடியவை. போரின் விளைவுகளின் உதிரிச் சித்திரங்களானாலும் அவை ஆழமான மனப்பதிவை ஏற்படுத்தியவை. முன்னாள் போராளி பவானியின் கதை ஒரு தீவிர நாவலின் முடிவைப்போல ஆழமானது. பவானியைப் பெண்பார்க்கவரும் வெளிநாட்டுக்காரரின் இலட்சியவாதம் துவண்டு விழும் இடம் நான் முன்பு சொன்ன போர் குறித்த ‘ரொமாண்ட்டிக்’ சிந்தனைகள் தடுக்கி விழும் கணத்தை மிகத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறது. அவன் ஒரு போராளியைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனும் இலட்சியம் கொண்டவன். ஆனால், அவன் மனதில் பதிந்திருக்கும் போராளிப்பெண்ணின் சித்திரம் சீருடை அணிந்த ஒரு வீரப்பார்வை பார்க்கும் ஒரு பெண். ஆனால், சிறையில் வாடி வதங்கிய பவானியை அவனுக்கு நிராகரிக்கத் தோன்றுகிறது. அவள் அறுவெறுக்கும் வகையில் அவன் ஐம்பதாயிரம் ரூபாயை அவளுக்கு அளிக்க முற்படுகிறான். பின்னர் அவள் தன்னை விரும்பும் ஒரு சிங்களப் பெடியனை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கிறாள். இப்படி இக்கதையின் இழைகள் பலவாக உள்ளன. இலட்சியவாததின் வானுச்சிகளுக்கு ஏறி வந்த ஏணிகள் கீழே அடித்தளம் இல்லாமல் அந்தரத்தில் தொங்குவதைக் கண்டவுடன் ஏற்படும் வீழ்ச்சியை இக்கதை எனக்குக் கூறியது. 

யோகா அக்காவின் ஆளுமையும் அவளுக்கு நேர்ந்த துயரமும் நம் சமூகங்களை அளவிட நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவீடுகளில் ஒன்றாகப் பார்க்கலாம். திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் தரிக்கும் அவளை அந்த நிலைக்குத் தள்ளியது எது? வறுமையா, வஞ்சகமா, வேட்கையா அல்லது சுரண்டலா? எல்லாம்தான் என்றும் சொல்லலாம் போல. செல்வம் எதையுமே திண்ணமாகச் சொல்வதில்லை. முடிவுகளை நோக்கி உங்களைச் செலுத்துவது அவரது வேலை அல்ல. அவர் ஒரு ஜென் கதையைச் சொல்வதைப்போல நிகழ்வுகளைக் கதைகளைப்போலச் சொல்லிச் செல்கிறார். கேள்விகளும் விடைகளும் நம்முள்தான் எழுகின்றன.

லோகன் பலரை பல இயக்கங்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். போர் முடிந்தபின் அவர் தான் உயிர்வாழ்வது குறித்த குற்ற உணர்வை அடைகிறார். தன்னால் எதிர்பாராத விதமாக இயக்கத்துக்கு அனுப்பப்பட்ட தனது சித்தி மகனை நினைவுகூர்கிறார். அந்த வயதான பெண்மணி இன்றும் தன் மகன் திரும்ப வருவான் என படலையின் மேல் தினம் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறாள் என அந்தக் கதை முடிகிறது. பாரதத் தாய் போல ஒரு ஈழத்தாயை உருவகம் செய்துகொண்டால் இந்தப் பெண்தான் அந்த ஈழத்தாய் என்று தோன்றியது. 

செல்வத்தின் ஞானம்

வான்கோவின் ஓவியங்கள் சிறு சிறு கோடுகளால் ஆனவை. சிறி சிறு தீற்றல்கள் ஒரு அழகியக் காட்சியை உருவாக்குகின்றன. ‘காலம்’ செல்வத்தின் எழுத்து இத்தகையது. சிறு சிறு நிகழ்வுகள் வழியே எழுந்து வரும் ஆளுமைகள் ஒரு தொகையாக ஒரு நிறைவான அனுபவத்தை நமக்குத் தருகின்றனர். 

செல்வம் பகடி எழுத்துக்காக அறியப்படும் ஒரு எழுத்தாளர். நான் மேலே பல துயரமான, ஆழமான, என்னைத் தொட்ட சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். அது என்னுடைய வாசிப்பில் எழுந்த சிந்தனைகள். செல்வம் அதை எனக்குக் கொடுக்கவில்லை அவர் சுவாரஸ்யமான அல்லது வினோதமான, நம் அன்றாட வாழ்க்கையில் வராத மானுட நிகழ்வுகளைச் சொல்கிறார். ஒரு வகையில், எந்த நோக்கமும் இன்றிச் சொல்கிறார். அவற்றை ஆழமான நகைச்சுவையுடனும் சொல்லிச் செல்கிறார். உண்மையில் ‘காலம்’ செல்வத்தின் புத்தகத்தைக் குறித்த ஒரு கட்டுரை இத்தனை ‘சீரியசான’ மொழியில் எழுதப்படுவது நியாயமற்றது என்றே சொல்வேன். 

ஆனாலும், அவரது பகடி ஒரு ஞானியின் பகடி. அவர் போரின் நடுவே நின்று புன்னகைபுரிந்துகொண்டிருக்கும் ஒரு ஞானி. ஜென் கதைகளின் சாயல் அவரது கதைகளில் உள்ளது. அவை நம்மைப் புன்னகைக்க வைக்கின்றன அதே நேரம் நம்மை ஆழ்ந்து தியானிக்கச் செய்கின்றன. மனிதத்தைக் குறித்து சிந்திக்கச் செய்கின்றன. வரலாற்றைக் குறித்து சிந்திக்கச் செய்கின்றன. அவர் கையாளும் உதாரணங்களும் அவர் சேர்க்கும் பல சிந்தனைகளும் ஞானத்தின் வழிமுறைகள். முல்லா கதைகளின் பகடிதான் அவரது பகடி. முல்லா கதைகளின் நோக்கம்தான் அவரது நோக்கம். இந்தக் கட்டுரையைப் படித்தும் அவர் உளமாற சிரித்துக்கொண்டிருக்கக் கூடும். 

*******

cyril.alex@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button