
குள்ளம்மா
ஆளுக்கும் பெயருக்கும் சம்மந்தமே இல்லை
சராசரிக்கும் அதிகம்தான்
குள்ளம்மாவின் உயரம்
ஆயாவுக்கு குள்ளம்மா
அம்மாவுக்கு குள்ளம்மாக்கா
அண்ணனுக்கும் எனக்கும் குள்ளம்மாயா
பின்கொசுவம் வைத்த சேலை
முன்னிடுப்பில் செருகிய சுருக்குப் பை
உதடு சிவக்க வெற்றிலை என
ஆயா உயரமானது போலவே இருந்தாலும்
இலையெடுக்க மட்டும்தான் குள்ளம்மா தாத்தாவுக்கு.
****
மறதி
மறந்தே போய்விட்டது
இது நம் பாடல்
இது நம் வரிகள்
என நாம் பேசி வைத்த எல்லாமே
நினைவில் நிற்பதெல்லாம்
ஏதோ ஒன்று நாம் பேசி வைத்தோம் என்றுதான்
மறக்காமல் இருப்பதெல்லாம்
காணும் யாவிலும்
நாம் பேசி வைத்த சாயலை
கண்டுகொள்வதுதான்.
****
பூவுதிர் காலம்
அனிச்சையாய் உதிர
எத்தனிக்கும் இலைகளை
கண்டுகொள்வதில்லை யாரும்
நேற்று பெய்த மழையை
இன்று தேடி
புங்கை மரத்தை
வருடும்போதெல்லாம்
பூவுதிர் காலம்.
****
பூர்த்தி
இன்னும் என்னென்ன தேவை
ஒவ்வொன்றாக செய்துமுடிக்க வேண்டும்
ஒருவழியாக எல்லாம் முடித்த பிறகும்
கைவிட்டுப்போன ஒன்றுக்காக
நெருடிக் கொண்டிருக்கும் மனம்
வேரிருக்கும் வரை
வற்றிப் போவதில்லை
வெயில் காயும்
இலையின் பச்சையம்.
**********