இணைய இதழ்இணைய இதழ் 93தொடர்கள்

கலைகளில் நெளியும் நிலங்களின் கதை – கே.பாலமுருகன் – பகுதி 3

தொடர் | வாசகசாலை

பூச்சாண்டி – கண்களுக்குத் தெரியாத நதியின் குரல்

ஜே.கே விக்கியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும், ‘பூச்சாண்டி’ என்கிற மலேசியத் திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பார்வையாளனைக் கவரும் பற்பல சினிமா சார்ந்த கூறுகளோடு இயக்கப்பட்டிருக்கும் படமாக பூச்சாண்டி பரவலான விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இயக்குநர் விக்கியைக் கடாரம் பற்றியும் சோழர்கள் பற்றியும் ஆய்வும் தேடலுமுள்ள பேச்சாளராகவே நான் உருவகித்து வைத்திருந்தேன். ஆனால், ஒரு கலைஞன் ஒவ்வொரு காலகட்டத்திலும் கலையின் பல்வேறு கிளையிலிருந்து தன்னை நிரூபிக்கப் போராடிக்கொண்டே இருப்பான் என்பதாகப் பூச்சாண்டி படத்தைப் பார்த்து முடித்ததும் விக்கியைப் பற்றிய எனது புரிதல் விரிவானது எனலாம். சினிமாவைப் பற்றிய ஆக்கப்பூர்வமான தேடலுள்ள இளைஞனாகத் தெரிகிறார்.

மலேசியத் திரைப்படச் சூழலில், ’ஜகாட்’ திரைப்படத்திற்கு முன்னும் பின்னும் என்கிற ஓர் இரசனை வரையறையைக் கடந்த காலத்தில் உருவாக்கிக் கொண்டேன். ஜகாட் மலேசியத் திரைப்படங்களின் மீதான இரசனைக்குத் திருப்புமுனையாக அமைந்த படம். ஒவ்வொரு படைப்பும் தன்னகத்தே தனித்துவங்களைக் கொண்டிருக்கும். பூச்சாண்டி முற்றிலும் ஜகாட் எடுத்துக் கொண்ட கருவிலிருந்தும் வாழ்விலிருந்தும் மாறுப்பட்ட படைப்பாகும். அளவான வணிகத்தன்மையோடு பார்வையாளனுக்கு எதைக் கொடுத்தால் பிடிக்கும் என்கிற தெளிவுடன் இயக்கப்பட்டுள்ள வகையில் பூச்சாண்டி கவனம் பெறுகிறது. ஆயினும், பொதுவெளியில் படைப்புகள் உண்டாக்கும் கலையின் குரல் எத்தகையானது என்பதை அந்தந்தப் படைப்புகள் விமர்சனச் சூழலின் வழியாக அதற்குரிய இடத்தையும் பெற்றுக் கொள்ளும். ஜகாட் படத்திற்குப் பிறகு நான் இரசித்த இன்னொரு மலேசியத் திரைப்படம் பூச்சாண்டி ஆகும். 

பூச்சாண்டி படத்தில் கவனிக்கத்தகுந்த சிவலற்றையும் கவனித்திருக்க வேண்டிய சிலவற்றையும் தனித்தனியாகக் காண்போம். இவையாவும் என் தனிப்பட்ட இரசனை விமர்சனத்திலிருந்து எழுந்து வருபவை மட்டுமே. மற்றவர்கள் இதிலிருந்து மாறுபடலாம்.

  1. இயக்கம்

விக்கி இப்படத்திற்கான திரைக்கதை எழுத்தை மிகவும் திட்டமிட்டு எழுதியுள்ளார். காட்சிப்படுத்துதலின் வழி மக்களைக் கவர முடியும் என்பதைக் காட்டியுள்ளார். சில சமயங்களில் நல்ல கதையாக இருந்தாலும் படம் பலருக்குப் பிடிக்காமல் போவதற்குக் காரணம் திரைக்கதையாக்கத்தில் போதுமான நேர்த்திபாடுகளின்மைத்தான். ஆனால்,  பூச்சாண்டி படத்தின் மூலம் நமக்குத் தெரிந்த பழக்கமான பேய்மை வகைக்குள் வைத்து வரலாறும் புனைவும் கலந்த முயற்சியை விக்கி மேற்கொண்டுள்ளார். அதன் பொருட்டே திரைக்கதையையும் உருவாக்கியுள்ளார். விக்கியின் இந்த முதல் படைப்பு அவரிடமிருந்து இன்னும் கூர்மையான படைப்புகளை எதிர்பார்க்கலாம் என நினைக்க வைக்கிறது 

  1. நடிகர்கள் தேர்வு

இயக்குநர் உருவாக்கும் திரைக்கதையைத் தனக்குள் ஏற்றுக்கொண்டு அக்கதையின் நிகழ்வுகளை நகர்த்திச் செல்வது கதாபாத்திரங்கள்தான். நல்ல உயிரோட்டமான கதையை உயிரில்லாமல் ஆக்கிவிடவும் முடியும் சில சமயங்களில் சுமாரான கதைகளைக் கூட நடிப்பால் தூக்கி நிறுத்திவிடவும் முடியும். ஓர் இயக்குநர் தனக்கு உவப்பான சிலரை மனத்தில் வைத்துக் கொண்டுதான் திரைக்கதையை எழுதத் துவங்குவார் என்று சொல்லப்படுகிறது. எழுத்தாளனின்/இயக்குநரின் கதையாடலுக்கு உயிர் கொடுப்பது கதாபாத்திரங்கள் ஆவர். ‘பூச்சாண்டி’ படத்திற்காக விக்கி தேர்ந்தெடுத்திருக்கும் கதைமாந்தர்கள் சிறப்பான தேர்வு எனலாம். தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன், கணேஷ் மனோகரன், ஹம்சினி பெருமாள், ஆர்.ஜே ரமணா போன்றோர் விக்கியின் கதைக்கு நடிப்பால் வளம் சேர்த்துள்ளார்கள். மொத்த கதையும் இந்த நான்கு கதைமாந்தர்களுக்குள்ளே நகர்ந்தாலும் எங்கேயும் தொய்வில்லாமல் நடிப்பின் வழியாக கதையோட்டத்தை விறுவிறுப்பாக்கியுள்ளனர். அதிலும் லோகன், தினேஷ் அவர்களின் நடிப்பைப் பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தில் ஏன் அன்பு என்கிற கதாபாத்திரம் மாற்றுத்திறனாளியாக (இரு கால்களும் செயல்படாத நிலையில்) வர வேண்டும் என்ற கேள்வி எனக்கிருந்தது. வெறுமனே திரைக்கதையில் பரிதாப உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அன்பு என்கிற கதாபாத்திரத்தைப் படைத்துள்ளார்களோ என்கிற சந்தேகமும் தொடக்கத்தில் உண்டானது. ஆனால், பூச்சாண்டி படம் பாத்திர வடிவமைப்பில் சிறப்பான திட்டமிட்ட எழுத்துப் பின்னணியைக் கொண்டுள்ளது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு அன்பு கதாபாத்திரம்தான். அதுவும் அவர் மாற்றுத்திறனாளியாக வருவதற்குப் பின்னால் உள்ள காரணத்தை இயக்குநர் படத்தின் கடைசி காட்சியில் உடைப்பதன் மூலம் ஒட்டுமொத்த கதையையும் தொகுத்துக் கொள்வதற்கான தருணத்தையும் வழங்கிவிடுகிறார். பேய்மையிலிருந்து கதையை உளவியலுக்குள் எடுத்துக் கொண்டு ஆசுவாசப்பட முடிகின்றது. பேய்மை என்பதற்குள் மட்டும் வைத்துக் கதையைப் புரிதலுக்குள் நகர்த்த இயலவில்லை. பேயாக உருவகப்படுத்தியிருக்கும் அந்தப் பூச்சாண்டி என்பது என்ன? அதன் மையப்பாடு என்ன? எனப் பல கேள்விகள் எழுவதைத் தடுக்க இயலவில்லை. 

அடுத்து, தமிழ்நாட்டிலிருந்து வரும் ரமாணாவிடம் இந்த மொத்தக் கதையையும் சொல்லும் ஷங்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தினேஷ் சாரதி கிருஷ்ணன் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்திற்குள் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். அவர் அடையும் கோபம், சமநிலை இழத்தல் போன்ற காட்சிகளில் உயிரோட்டமாக வெளிப்பட்டுள்ளார். மல்லிகாவாக வரும் ஹம்சினி தான் ஏற்றிருக்கும் விநோதமான பாத்திரத்தைத் துணிவுடன் கையாண்டுள்ளார். இந்தக் கதாபாத்திரங்கள் இல்லாமல் இப்படத்தின் கதை உயிர்ப்புடன் பார்வையாளனின் மனத்தில் பயணித்திருக்காது எனச் சொல்லலாம். திரைப்பட உருவாக்கத்தில் இயக்குநர் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளுள் பாத்திர வடிவமைப்பு என்பது பலம் வாய்ந்தது என விக்கி பூச்சாண்டியின் மூலம் சொல்லிவிட்டார்.

  1. கலை வேலைப்பாடுகள்

திரைப்படத்திற்குக் கூடுதல் பலம் சேர்ப்பது நேர்த்தியான கலை வேலைபாடுகள்தான் என்பதை உணர்ந்து உழைக்க வேண்டும் என்பார்கள். தேர்ந்தெடுக்கும் இடம், காட்சியமைப்பிற்கேற்ற சூழ்நிலைகள், கதைக்குள் நிகழும் காட்சிக்குள் வைக்கப்படும் ஒவ்வொன்றும்கூட மிகத் துல்லிதமாகப் பார்வையாளனுக்கு உணர்வைக் கடத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்தவைகள் எனலாம். பூச்சாண்டி படத்தில் வரும் வீடு, வீட்டுக்குள் இருக்கும் பொருள்கள், அன்பு வைத்திருக்கும் சேகரிக்கப்பட்ட பழைய நாணயங்கள் என அனைத்திலும் இயக்குநர் ஆழமான கவனத்தைச் செலுத்தித் தேர்ந்தெடுத்துள்ளார். 

நடிகர்கள் தேர்வுக்கு விக்கி செலுத்திய கவனத்தில் கொஞ்சம் கூடக் குறையாமல் இடத் தேர்வு, பொருள் தேர்வு, கலை உருவாக்கம், ஒளி/ஒலிப்பவு என அனைத்திலும் கடுமையாக உழைத்துள்ளார். சங்கக்கால நாணயம் இப்படத்தில் முதன்மையாக விளங்கியுள்ளது. அந்த நாணயம் ஒரு பொருள்தான். ஆனால், அதையும் நடிக்க வைத்திருப்பதுதான் காட்சி ஊடகத்திற்கு இருக்கும் பலம். அதனை இயக்குநர் செம்மையாகப் பயன்படுத்தியுள்ளார். 

  1. படத்தொகுப்பு

விக்கி, தான் அறிந்து வைத்திருக்கும் கடாரம், சோழர்கள், பாண்டியர்கள் தொடர்பான அனைத்து ஆய்வுத் தகவல்களையும் தன்னுடைய ஒரே படத்திற்குள் நுழைத்துப் பார்வையாளனைச் சோர்வாக்கிவிடாமல் பேய்மை வகைக்குள் தன் வரலாற்று உணர்வைச் சொல்ல முயன்றிருப்பதை இரு வகையாகப் பார்க்கலாம்.  ஒன்று இப்படம் வணிக ரீதியிலும் வெற்றியடைய வேண்டும் என்கிற நோக்கம். பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் சொல்வதைப் போல ஒரு படைப்பு வணிக ரீதியிலும் வெற்றிப் பெற வேண்டும். அதுவும் ஒரு கலையின் நியாயமான கோறுதல்தான் என்கிறார். ஆகவே, தன் முதல் படத்தினை வணிக ரீதியில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என நினைக்கும் ஒரு கலைஞனின் முதல் முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டியுள்ளது. ஆயினும், தன் அடுத்த படைப்பில் விக்கியின் இன்னும் ஆழமான கலை பாய்ச்சலைக் காண ஆவலாக உள்ளேன். அடுத்து, கடாரம் பற்றி இதற்குமுன் அவர் பல விளக்கவுரைகள் பல மேடைகளில் வழங்கிவிட்டார். அதையே ஒரு கலை படைப்பிலும் செய்ய முனைவது பார்வையாளர்களுக்கு அலுப்புத் தட்டும் எனவும் அவர் இத்தகைய ஒரு முடிவை எடுத்திருக்கக்கூடும் என நினைக்கிறேன். 

எதை எவ்வளவு சொன்னால் பார்வையாளர்கள் இரசிப்பார்கள் என்பதைக் கவனத்துடன் கற்று வைத்துள்ளார். அதற்காகவே படத்தின் எடிட்டிங், நீளம் போன்றவற்றை பாராட்டலாம். படம் எவ்வளவு நீளம் பயணித்தால் பார்வையாளனைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதையும் சிறப்பாகவே கணித்துள்ளார்கள். படம் ஓர் உச்சத்தை அடையும்போது முடியவும் செய்கிறது. அதன் பின் நீண்டிருந்தால் பார்வையாளன் கதைக்குள் அடைந்த அனுபவ உச்சத்தை இரசிக்க முடியாமல் போயிருக்கும். 

  1. ஒளிப்பதிவு – ஒலியமைப்பு – இசை

கதையின் சில திகில் நிறைந்த காட்சிகளை ஆர்பாட்டமில்லாமல் மௌனம் ததும்பும் சூழலில் படமாக்கியிருப்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவையாவும் வழக்கமாக நாம் பேய்ப் படங்களில் பார்க்கும் காட்சிகள்தான் என்றாலும் அதனைப் பூச்சாண்டி இன்னும் சற்றே மிரட்டலாகக் காட்டியுள்ளது. மல்லிகா தங்கியிருக்கும் பல்கலைக்கழக தங்கும் விடுதியின் அறை, மூன்று நண்பர்களும் தங்கியிருக்கும் வீடு, அவர்கள் நாணயத்தைக் கொண்டு பேயுடன் விளையாடும் காட்சிகள் என அனைத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளி பேய்மை உணர்வைத் தூண்டுகின்றன. கழுகு பார்வையில் நகரங்களையும் காட்டையும் காட்டும் இடங்களில் ஒளிப்பதிவு சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. கச்சிதமான மஞ்சள் ஒளி படம் நெடுக பயவுணர்வோடு பயணிக்கிறது. பேய் வரும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலி பார்வையாளனுக்குக் கதை கடத்த விரும்பும் அனுபவத்தை இலகுவாக்கி கொடுக்கிறது. தனிப்பாடல்கள் ஏதுமின்றி காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துப் பொருத்தமாக உருவாக்கப்பட்டுள்ளது.

  1. கதையாக்கமும் சினிமாவும்

மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள், ’Quijja Board’ என்கிற நாணயத்தைக் கொண்டு பேயை அழைக்கும் விளையாட்டின்போது எதிர்க்கொண்ட உண்மை சம்பவத்தை முன்வைத்து விக்கி இப்படத்தினைத் தன் வரலாற்றுக் கற்பிதங்களின் சில பகுதிகளை மட்டும் பயன்படுத்தி ஒரு புனைவாக மாற்றியுள்ளார். பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த உண்மைக் கதைக்கும் இயக்குநர் சஞ்சய் அவர்களுக்கும் தொடர்பிருப்பதும் இப்படத்திற்கான ஒரு பகுதி கதையைச் சஞ்சயிடமிருந்து அனுமதி கேட்டு விக்கி அதனைத் தன்னுடைய சினிமா அறிவின் மூலம் படமாக்கியிருப்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஒரு வரலாற்றுப் புனைவை வரலாற்றுப் பின்புலத்துடனே விக்கி வழங்கியிருக்கக்கூடும். ஆனால், ஓர் அறிதல் முறையைக் கலை வடிவத்திற்குள் கொண்டு வரும்போது கலைஞனுக்கும் அக்கலை வடிவம் தொடர்பான பிரக்ஞையும் தேடலும் இருக்க வேண்டும். தனக்கிருக்கும் வரலாற்றுத் தேடலின் வழியாக அவர் அறிந்து கொண்டதை முழுவதுமாக திரைப்படத்திற்குள் கொட்டிவிடாமல் அதன் ஒரு தெறிப்பை மட்டுமே பூச்சாண்டியில் முயன்றுள்ளார். அது மின்னல் வெட்டுப் போல படத்திற்குள் ஒலித்துச் செல்கிறது. படத்தில் இருக்கும் பேய்மை என்பது நாம் வழக்கமாகத் தமிழ் சினிமாவில் பார்த்துப் பழகிய ஒன்றாக இருப்பினும் அதனை விக்கி தான் அறிந்த வரலாற்றுடன் (கடார வரலாறு) போடும் முடிச்சு பொது பார்வையாளர்களிடம் புதியதொரு தாக்கத்தை உருவாக்குகிறது. 

படத்தில் கவனித்திருக்க வேண்டிய இடங்கள்:

  1. பூச்சாண்டியின் ஆளுமை என்ன?

நாணயம் Quijja Board விளையாட்டுக்கு வரும்போதுதான் உயிர்ப்படைந்து தன் வேலையைத் தொடங்குகிறது. அதுவரை அது காத்திருப்பதாக இயக்குநர் சித்தரித்துள்ளார். ஏன் அந்த நாணயம் அதுவரை காத்திருந்தது? அந்த நாணயத்திற்குள் எப்படிப் பூச்சாண்டியின் ஆவி புகுந்தது? போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. நான் புரிந்து கொண்டதன் வகையில் இந்தப் படமே Quijja Board விளையாட்டின் வழி பேய் வருவதை மையமிட்ட முயற்சி என்பதால் பூச்சாண்டி என்கிற பாத்திர வார்ப்பில் அத்துணை நேர்த்தியான கவனம் இல்லாமல் போய்விட்டிருக்கலாம் எனத் தோன்ற வைத்தது. ஒருவேளை மற்ற பாத்திரங்களுக்கு வழங்கிய கூடுதல் கவனத்தைப் பூச்சாண்டிக்கும் வழங்கியிருந்தால் அப்பாத்திரத்தின் மீதிருக்கக்கூடிய நிலைப்பாடு தெளிவடைந்திருக்கும் என நினைக்கிறேன்.

பூச்சாண்டி என்பது சிவனடியார் மட்டும்தானா அல்லது பேய் வேடத்தில் பழி வாங்கத் துடிக்கும் சிவனடியாரா? இப்படியாக யார் இந்தப் பூச்சாண்டி? அப்பாத்திரத்தின் ஆளுமை என்ன? என்கிற கேள்வி ஒரு பொது பார்வையாளனுக்கு எழவே செய்கிறது. சங்க நாணயத்தைக் கொண்டு சென்ற பெண்ணிடம் பூச்சாண்டி புரியும் பேய்ச் சேட்டைகள், இரத்தத்தைச் சுவைக்கும் காட்சி, வேலை வளைக்கும் காட்சி என ஒவ்வொன்றிற்கும் இயக்குநரிடம் ஒரு பதில் இருக்கக்கூடும். ஆனால், பார்வையாளனாக இவை யாவும் பூச்சாண்டியை மனத்திற்குள் தொகுத்துக் கொள்ள குழப்பத்தை ஏற்படுத்திவிடுவதையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது. விக்கியின் விரிவான நேர்காணலில் இவை யாவையும் அவர் தெளிவாக்குவார் என நம்புகிறேன். மலேசியத் தமிழ் சினிமாக்களின் மீது அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டவனாக இக்கேள்வியை முன்வைக்கிறேன்.

  1. பாத்திர வடிவமைப்பு

இக்கதையில் வரும் பூச்சாண்டியின் வடிவமைப்பில் சிக்கல் இருப்பதாக உணர்கிறேன். விக்கி வரலாறும் தொன்மமும் கலந்து உருவாக்க முனையும் பூச்சாண்டி என்கிற சித்திரம் பேய்மைக்குள் குழப்பத்தை அடைவதாக உணர்கிறேன். இந்தப் பேய் என்கிற கதாபாத்திரம் சிதைந்துபோன ஒரு வரலாற்றின் அறமற்ற (பழிவாங்க துடிக்கும் ஒரு சராசரி பேயைப் போன்ற) ஒரு சித்திரமா என்றும் தோன்ற வைக்கிறது. அப்படிப் பழிவாங்கத் துடிக்கும் பேயொன்றின் சித்திரமாகப் பூச்சாண்டி உருவாக்கப்படுமாயின் அதன் தனித்தன்மை தொய்வடையக்கூடும். விக்கியின் வரலாற்றின் மீதான தேடலும் அறிவும் ஆர்வமும் பாராட்டப்பட வேண்டியதாகும். 

திரைப்படம் என்பது கதையின் மீது கட்டியெழுப்பப்படும் காட்சி மொழி. ஆயினும், கதைத்தான் அதன் அடித்தளம். அவற்றில் உருவாகும் சிறு இடைவெளி அதன் மீது கட்டப்பட்டிருக்கும் மற்ற அடுக்குகளை ஆட்டங்காணச் செய்துவிடும் ஆபத்துண்டு. ஆகவே, இதையடுத்து மலேசியாவின் தனித்தன்மை மிக்க படைப்புகளை அவரால் வழங்கிட முடியும் என நம்புகிறேன்.

  1. பூச்சாண்டி பற்றிய விளக்கம்

அடுத்து, படம் முடிந்தவுடன் பூச்சாண்டி பற்றி விளக்கத்தைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றியது. ஒருவேளை கதைக்குள்ளே ஏதாவது ஒரு கதாபாத்திரம் பூச்சாண்டி என்பதற்கான தனது விளக்கத்தைச் சொல்வதைப் போல எடுத்திருந்தால் அதுவொரு கற்பனை அல்லது புனைவுக்குள்ளே அடங்கியிருக்கும். ஆவணப் படங்களுக்குத்தான் இறுதியில் இதுபோன்ற தனி விளக்கக் காணொளிகள் தேவைப்படும்.

மலேசியப் படங்களைத் தமிழ்நாட்டுப் படங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை நாம் தவிர்க்க முனையும்போதுதான் மலேசியத் திரைப்படத்திற்கான தனித்துவமான சிறப்புகளையும் பொதுவான கலை சார்ந்த சிக்கல்களையும் அடையாளம் காண முடியும். ஓர் அசலான திரைப்பார்வை நமக்குக் கிட்ட வேண்டுமென்றால் தமிழ்நாட்டுச் சினிமா முயற்சிகளுடன் ஒப்பிட்டு மலேசியப் படைப்புகளை விமர்சிக்கும் தோரணையை நாம் மாற்றிக் கொண்டால் நிச்சயமாக இங்குள்ள உள்நாட்டுக் கலைஞர்களை நாம் விமர்சனத்தின் வாயிலாக முன்னெடுக்க முடியும் என நம்புகிறேன்.

’பூச்சாண்டி’ விக்கியின் அடுத்த சிறந்த படைப்புகளுக்கு முகவரி கொடுத்துள்ளது. 

பூச்சாண்டி திரைப்படம் சமீபத்தில் நடந்த MICA (MALAYSIAN INDIAN CREATIVE AWARD)விருதளிப்பு விழாவில் 7 முக்கியமான விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒப்பனை, சிறந்த துணை நடிகர், சிறந்த கலை இயக்கம் என 7 விருதுகள் வென்று சாதனை படைத்துள்ளது.

(தொடரும்…)

bkbala82@gmail.com 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button