இணைய இதழ்இணைய இதழ் 94சிறுகதைகள்

ஊற்றுக்கண் – ந.சிவநேசன்

சிறுகதை | வாசகசாலை

னது கிடந்து அடித்துக் கொள்கிறது. என்னமோ தப்பாகவே படுகிறது அவனுக்கு. இதற்கு முன்பும் நிறைய தடவை இப்படித் தோன்றியிருக்கிறது. தனக்கு மட்டுமே இப்படியெல்லாம் நடப்பதாகவும் தான் மட்டுமே தரித்திரம் சூழ வாழ்கிறோமென்றும் ஒரு எண்ணம் அடிக்கடி வந்து போகிறது. யாரிடமாவது சொல்லி புலம்பித் தீர்க்கவும் அழுது பார்க்கவும் அத்தனை ஆசையாக இருக்கிறது. ஆரம்ப நாட்களில் அவன் மனைவி அடிக்கடி சொல்வாள். 

‘என்னாதிது? தொட்டதுக்குலாம் பொட்டச்சியாட்டம் அழுதுகிட்டு இருக்குறது?’ என்பவளை வெடுக்கென நிமிர்ந்து பார்ப்பான். ‘ஏன்? ஆம்பளனா அழக்கூடாதுனு எதாவது சட்டம் வச்சிருக்கீங்களாடி?’

‘அதுக்கா சொன்னேன்? புள்ளைங்க போய் யார்கிட்டயாச்சும் சொல்லிடுச்சுங்கன்னா? எங்கப்பன் முசுக் முசுக்குனு அழுவுறாருனு’ – அவள் தாவ முயன்றாள். ஆனால், அவன் இன்னும் பொட்டச்சியாட்டம் என்றதிலிருந்து வெளியே வரவில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து, ‘நைட்ல என்கூட இருக்குறல்ல? அப்ப தெரியலையா நான் ஆம்பளன்னு?’

அவள், ‘யப்பா சாமி.. நான் தெரியாம சொல்லிட்டேன்.. நீ போய் மூலை ரூம்ல உக்காந்து நாள் முழுசும் அழுவு.. யாரு கேட்குறா’ என விலகி நடந்தாள். 

இவன் சுவற்றில் மாட்டியிருந்த அம்மாவின் புகைப்படத்தை கையில் எடுத்துக்கொண்டு சொன்னது போலவே மூலை ரூமுக்கு நடந்தான். 

அவன் நினைவுகளால் பின்னப்பட்டவன். கடந்தகாலங்களில் இழந்தவற்றை இப்போதைய இழப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அழுவான். ஒப்பிட முடியாத இழப்புகளுக்கும் அழுவான். தன்னால் எப்படி அழுது அழுதே கவலைகளைச் செரிக்க முடிகிறது என நினைத்து அழுவான். அழுது முடித்ததும் அவனுக்கு அப்படியே உறங்கிட வேண்டும். உறங்கியெழுந்ததும் கிடைக்கும் தெளிவு நிறைய போதையைத் தருவதை அவன் நெகிழ்ச்சியாக உணர்வான். அந்தப் போதையிலேயே அடுத்த ஒரு வாரத்துக்குள் வரக்கூடிய பிரச்சினைகளை கால்படாமல் கடந்துவிட முடியுமென்ற தெம்பு வந்துவிடும். எப்படியாகினும் இப்போது அவன் நலமாக இல்லை. 

மூன்று வாரங்களாக குழந்தையின் வாதை படுத்தியெடுக்கிறது. வாந்தியும் காய்ச்சலும் மாறி மாறி வந்து துவண்டு கிடக்கிறது. மருத்துவமனை மாற்றி மாற்றி அலைந்து இப்போதுதான் பெருநகர மருத்துவமனையில் சேர்த்திருக்கிறான். இதயநோய் வந்திருப்பதாக மருத்துவர்கள் சொன்னதை அவனால் நம்பமுடியவில்லை. உள்ளறையின் மருந்து வாசம் இறந்துபோன அக்காவை ஞாபகப்படுத்துகிறது. சிறுவயதிலிருந்து மருத்துவமனைகள் அவனை இப்படித்தான் மௌனமாக பயமுறுத்திக் கொண்டே வருகின்றன. அவன் மனைவி குழந்தைக்கு அருகிலேயே கிடந்து கிடந்து சோர்ந்துவிட்டாள். மாற்றிவிட வரச்சொல்லி வரும் அவள் அழைப்புகளை எடுக்கும் போதெல்லாம் இவனுக்கு கைகள் நடுங்கும். ஊசி குத்திய தளிரளங் கையை, காய்ந்து சருகாகிய கண் இமைகளை, ‘வீட்டுக்கு போனதும் லைட் எரியிற கார் வாங்கித் தர்றியாப்பா?’ எனக் கேட்கும் சொடுங்கிய குரலை எதிர்கொள்ள முடியாமல் அவன் மிகவும் பயந்திருக்கிறான். எத்தனையோ தகப்பன்கள் மனைவி பிள்ளைகள் வயிற்றுப்பிணியேறிக் கிடக்கையில் லாட்ஜில் ரூம் எடுத்து வைத்துக் கண்டவளோடு முனகிக் கிடப்பதை தினசரி பார்க்கிறான். அவர்கள் உண்மையில் அன்பு என்ற மாயையின் வாடையே உணராத அதிர்ஷ்டசாலிகள். தான் மட்டுமே இப்படி பலவீனமாகிக் கிடக்கிறோம் என அவ்வப்போது முனகிக் கொள்வான். அப்படிப் புலம்பும் போதெல்லாம் நிரூபமா அவனை அதட்டுவாள். 

‘நீ யோகக்காரன்டா.. உன்னை மாதிரி ஒரு மனுசன நான் பாத்ததே இல்ல..’- எனச் சிரிப்பாள்.

இவன் அவள் மடியில் வாகாக தலைசாய்த்துப் பார்ப்பான். 

‘ஏன்னு சொல்லுடி. கொஞ்சம் ஆறுதலா இருக்கும்’

‘என்னா சொல்றது? தப்பு செய்றது பெருசு இல்லடா. தப்பு செய்ய எல்லா சான்ஸும் கிடைச்சும் பண்ணாம இருக்க பாரு.. அதான். ‘ 

‘இதுல எங்க யோகம் வந்துச்சு? வெறுப்பாதான் இருக்கு. எனக்குனு கோட்பாடுகள சின்ன வயசுல இருந்து உருவாக்கிட்டேன். அத மீற முடியல.. நினைக்காம இருக்கவும் முடியல.. என்ன வாழ்க்கையோ போ’

‘அதுதான்டா யோகம்.. அதுதான் போதை. செஞ்சிட்டா கிக் போய்டும். செய்ய முடிஞ்சும் செய்யாம பக்கத்துல வச்சி ரசிக்கிறது இருக்கே.. அதுதான் தனிப்போதை’ எனச் சிரிப்பாள்.

‘என்னமோ போ.. ‘ என அதற்கு மேல் படுத்திருக்க முடியாமல் கூச்சத்தோடு எழுந்து கொள்வான். 

நிரூபமா கூர்ந்து பார்ப்பாள். ‘இவ்ளோ நேரம் கிட்ட இருந்தும் உனக்கு மூடு வரலையாடா?’ 

அவன் அசட்டையாய் சிரிப்பான். 

‘உண்மைலயே நீ ஆம்பளதானா?’ – எனக் கேட்டுவிட்டு சிரிப்பாள். 

‘வேணாம்பா.. அப்புறம் அத என் பொண்டாட்டிகிட்ட மட்டும் நிரூபிச்சா போதும்னு சொல்லுவ’

‘அதெல்லாம் ஒண்ணுமில்லடி.. காபி சாப்பிட போலாமா?’

‘உலகத்துலயே மடியில படுக்க வச்சி தலை நீவிவிடுறதுக்காக ரூம் போட்டது நானாதான் இருப்பேன்’ 

அவள் சொற்கள் இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவனுக்குத் தெரிந்தவரையில் அவளிடம் கொண்ட வரையறைகள் மட்டும் சாபக்கேடாக மாறி அவனைத் துன்புறுத்துகின்றன. சுயநலமாக அவளை தான் பயன்படுத்துகிறோமோ என நினைத்து இரவுகளில் உறங்காமல் புரண்டுகொண்டிருப்பான்.

‘இத பாருடி.. உன்மேல எனக்கு எப்பவும் லஸ்ட் வராது. அது கிடைக்கும்னு நினைச்சு ஏமாறாத.. ‘ என அவன் சொல்லும் போதெல்லாம் அவசரமாக மறுப்பாள்.

‘அது எப்படிடா லவ் இருக்கு.. ஆனா, லஸ்ட் இல்ல?’ 

அவனுக்கு சரியாக பதில் சொல்ல வராது. எதுவும் பேசாமல் அண்ணாந்து எங்கேயாவது பார்ப்பான். 

வேப்பம்பூக்கள் மரத்திலிருந்து நேராக முகத்தில் விழுகின்றன. நீண்ட நேரமாக போனை எடுக்கவில்லை. மருத்துவமனையிலிருந்து யாராவது அழைப்பார்கள் என்ற எண்ணமே திகீரென இருந்தது. நிரூபமா இருந்திருந்தால் நகையை கூட அப்படியே எடுத்துத் தந்திருப்பாள். அந்த எண்ணமே அவனுக்கு அருவருப்பாக இருந்தது. அவள் கேட்டதைத் தர முடியாத தன்னால், எப்படி உரிமை எடுத்துக் கொண்டு பொருளுதவி பெற யோசிக்க முடிகிறது? நல்லவேளை இறந்துவிட்டாள் என பெருமூச்சு விட்டபடி எழுந்து அமர்ந்தான். தனிமைக்கு அருகில் மதிய வெயில் வாகாக அமர்ந்திருந்தது ஏதோ சொல்வது போல நெஞ்சில் வந்து மோதியது.

நிரூபமா இறந்து விட்டதை அவன் அன்று மதியத்துக்கு மேல் அலுவலக குரூப்பில் வந்த இரங்கல் செய்தியிலிருந்துதான் தெரிந்து கொண்டான். உண்மையில் அவள் தற்கொலை செய்து கொண்டிருந்தாள் என்பது அவன் மீது பாரமாய் அழுத்தியது. கடைசி கடைசியாய் குறுஞ்செய்தியில் ‘இது கண்டிப்பா உன்னால இல்லடா.. தைரியமா இரு’ என அவள் அனுப்பியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. ஏதோ சொல்ல வந்திருக்கிறாள்; பிறகு கேட்டுக் கொள்ளலாம் என பணி மும்முரத்தில் அவன் மறந்து விட்டிருந்தான். அவள் மரணத்தை நோக்கி அச்செய்தி தன்னை இட்டுச் செல்லுமென்பதை அவன் அப்போது நினைத்திருக்கவில்லை. 

அதற்கு முந்தைய நாள் இரவில் மகளின் நோய் குறித்துப் புலம்பியதற்கான ஆறுதல் மொழியென தான் நினைத்துக்கொண்டதை எண்ணி நொந்து கொண்டான். சட்டென தன்னோடு பற்றி தன் பின்னந்தலையை துயருறும் போதெல்லாம் தடவிக்கொடுக்கும் வலுக்கரமொன்று விலகிச் சென்றது போன்ற தனிமையில் படபடப்பு ஏறியிருந்தது. பேருந்தில் அமர முடியவில்லை. அலுவலக நண்பர்கள் யாரையாவது அழைத்து வந்திருக்கலாமென நினைத்தான். இதற்கு முன்பும் இப்படியான அடுத்து ஏதுமற்ற வெளி தன் முன்னால் பரவியிருந்ததை உணர்ந்தான். அவனது அக்கா மூளைக்கட்டியின் காரணமாக இறக்கப்போவதை மருத்துவர் சொன்னபோது, தடுமாறி எழுந்து வெளியே வந்தபோது இதேபோன்ற மனநலிவு நிகழ்ந்திருக்கிறது. வராந்தாவில் நடந்துவரும்போது பெட்டில் அட்மிட் செய்யப்பட்டிருக்கும் அக்கா வாங்கி வரச் சொன்ன மாம்பழமும், குலோப்ஜாமுனும் நினைவுக்கு வந்தன. மருத்துவமனை வளாகத்தில் இருந்த வாதைமரத்து வேரில் ஒருவாறாகச் சாய்ந்தழ ஏற்றவாறு அமர்ந்துகொள்வதற்குள் கண்களிலிருந்து நீர் கொட்டத் தொடங்கிவிட்டது. பயிற்சி செவிலியராக இருந்த கேரளத்து இளம்பெண்கள் ஒரு உயரமான வாலிபன் மரத்தின் மீது சாய்ந்து குழந்தையைப் போல அழுவதை விநோதமாக பார்த்தவாறு வந்து சென்று கொண்டிருந்தார்கள். இதேபோன்ற அழும் காட்சிகள் அச்சூழலில் பார்ப்பதற்கு சாதாரணம் என்றபோதிலும் உடன் தேற்ற யாருமற்று சட்டை நனைய அழுபவனின் காட்சி அவர்கள்மீதும் துயரத்தின் நிழலை கொண்டு வந்து போர்த்தியது. உண்மையில் கேரளத்துப் பெண்களை அவன் அவ்வளவு ரசிப்பான். ஆனால், இன்று அவர்கள் பார்க்க தான் வெட்டவெளியில் அழுது தீர்ப்பது குறித்த எந்தவித பிரக்ஞையுமற்று அவன் கிட்டத்தட்ட உட்கார்ந்தவாக்கில் கிடந்தான் என்றுதான் சொல்லவேண்டும். 

அப்படியானதொரு மனநிலையில் பயணித்து அவள் வீட்டை அவன் அடைந்தபோது முற்றிலும் பரிச்சயமற்ற முகங்கள் பயமுறுத்தின. ஒரே நிறுவனமாக இருப்பினும் வெவ்வேறு கிளைகள். வெவ்வேறான மனிதர்கள். மிகப்பிடித்த ஒருவரின் இறப்பில் யாரோ ஒருவனாக நின்று கொண்டிருக்கும் துயரம் சூழ்ந்திருந்தது. இப்போதும் அவள் அனுப்பிய குறுஞ்செய்திகளும் ஆசிர்வதிக்கத்தக்க கருணைச் சொற்களும் அவளைச் சூழ்ந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. அவளது பிள்ளைகள் தலைமாட்டில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். கணவன் புதிதாக வரவழைத்துக் கொண்ட துக்கத்தை கைகளில் ஏந்தியபடி செய்வதறியாது நின்றிருந்தான். கொஞ்சம் முன்னேறிச் சென்று அவள் முகத்தை எட்டிப் பார்த்தான். ஒருவாரமாக சாயம் பூசாமலிருந்த காதோர நரைமுடியில் கண்களை மூடி சவக்களையைக் களைந்துகொண்டு அழகாகத் தெரிந்தது அவனது வேதனையை இன்னும் அதிகரித்தது. இவள் தற்கொலை செய்துகொண்டாள் என்பதை யாராவது நம்புகிறார்களா எனத் திரும்பிப் பார்த்தான். எல்லோரும் அதையே சொல்லி முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். 

‘இது கண்டிப்பா உன்னால இல்லடா.. தைரியமா இரு..’ சொற்கள் அங்கிருந்துக் கிளம்பியபிறகும் வதைத்துக் கொண்டேயிருந்தன. எந்நேரமும் நம்மீது வாஞ்சையாயிருந்து பற்றுதலுக்குரிய வலுவான பிடிப்பை சொற்களில் தந்து தெம்பூட்டுபவர்கள் எப்படி தனது பிடியை விரும்பியே நழுவவிடுகிறார்கள் என்பதை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை. 

மீண்டும் மணியடித்தபோது இந்தமுறை எடுத்துவிட்டான். அவனது மனைவியின் தந்தை இவன் போனை எடுத்ததை உணர்வதற்கு முன்பே அருகிலிருந்தவர்களிடம் கூறிக்கொண்டிருந்த ஓரிரு வசைச் சொற்கள் காதுகளில் விழுந்தன.

‘புள்ளை இப்படி ஆஸ்பிடல்ல கிடக்கும்போது எப்படித்தான் ஊர் சுத்த மனசு வருது?’

‘மாப்பிளை.. எங்க இருக்கீங்க?’

அவனுக்கு தொண்டை கவ்வியது. 

‘இங்கதான் மாமா.. ப்ரண்ட் வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன்..’

‘இங்க வேற பில் ஏறிக்கிட்டே போகுது.. போன் பண்ணாலும் எடுக்குறது இல்லையாம்.. அதான் நானே பண்ணேன்’

தேய்ந்த குரலை வலுப்படுத்திக் கொண்டான்.

‘அதுக்கு தான் மாமா போய்கிட்டு இருக்கேன்.. ‘ எனக் கூறிவிட்டு போனை அணைத்தான்.

தனக்கு ஏன் நிறைய நண்பர்கள் இல்லையென யோசித்தான். தான் ஏனொரு தனிமைவிரும்பியாக இருப்பதை பெருமையாக நினைத்து மகிழ்ந்திருந்தோம் என யோசித்தான். ஒரு வாதை வீட்டில் திரண்டுவரும் அன்பின் தாழியை எப்படியெல்லாம் உடைத்துப் போடுகிறது என யோசித்தான். கடைசியாக மனைவியுடன் உறவிலிருந்தது எப்போதென யோசித்தான். நேற்று மதியத்துக்குப் பிறகு ஏதாவது சாப்பிட்டோமா என யோசித்தான். யோசிக்க யோசிக்க யோசனையின் கயிறுகள் இறுகி நினைவின் மீது அடையாளமாகி முறுக்கிக் கொண்டிருந்தன. தலை பாரமாகி வலியை கண்களை நோக்கிப் பாய்ச்சத் தொடங்கியது. மனது கிடந்து அடித்துக்கொள்கிறது. என்னமோ தப்பாகவே படுகிறது அவனுக்கு. நெற்றியைச் சுருக்கி விரல்களால் தடவி அருகில் கிடந்த வேப்பம்பூக்களை கை நிறைய அள்ளினான். எதுவும் மாறவில்லை. 

அவனுக்கு நிரூபமாவை பார்க்கவேண்டும் போலிருந்த உணர்வு இன்னும் அதிகரித்தது. புறநகர் பேருந்தில் நகரம் தாண்டி சென்று கொண்டிருக்கும்போது தானும் அவளும் அமர்ந்து அருந்திய காபி ஷாப் கடந்து போனது. பேருந்திலிருந்து இறங்கியதும் அவளுக்குப் பிடித்தாற் போன்ற நீலநிறத்தில் ஏதேனும் பூக்கள் இருக்குமா எனக் கேட்க, பூக்காரம்மா விநோதமாகப் பார்த்தாள். ஏன் நீலநிறத்தில் பூக்கள் ஒன்று கூட இல்லை என மீண்டும் கேட்டான். இந்தமுறை அவள் அவனை பரிதாபமாகப் பார்த்தாள். அதுவே போதுமானதாக இருந்தது. எதுவும் பேசாமல் ஓடைச்சரிவில் இறங்கி நடக்கத் தொடங்கினான். கொஞ்சமும் பரிச்சயமற்ற கல்லறைத் தோட்டம் அவன்மீது ஆழ்ந்த அமைதியைப் பூசி அருகில் இழுத்தது.

அடக்கம் செய்ய வந்திருந்தபோதே அடையாளமாய் பெயரறியா மஞ்சள் பூமரத்தை குறித்து வைத்திருந்தான். அதன் வேரிலிருந்து சரியாக இடதுப்புறம் நான்காவது கல்லறை. நிரூபமா அமர்ந்திருந்தாள். இவனைப் பார்த்து, ‘எதுவும் வாங்கி வரலையா?’ எனச் சிரித்தாள். 

காசு இல்லையென்பது போல இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினான். அருகில் சென்று அமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். உனக்கு ஏன் வயதே ஏறவில்லை என்றான். 

‘மடையா.. ஐம்பத்தியெட்டு நாட்கள் தானே ஆகின்றன..’ என்றவள், ‘உனக்கு ஏன்டா இப்படி வயது ஏறிவிட்டது?’ எனக் கேட்டாள்.

அவன் துயரத்தை கவனமாக ஒவ்வொரு சொல்லிலும் வைத்து அழுத்தி எறிந்தான். 

‘ஐம்பத்தியெட்டு நாட்கள் ஆகிவிட்டன நிரூபமா..’

அவள் சட்டென அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள். 

‘என்னிடம் ஏதாவது கேட்க விரும்புகிறாயா?’

அவன் எதுவும் பேசாமல் அவள் முகத்தை நோக்கி முன்னேறினான். அவள் உதடுகளைப் பற்றி இறுக முத்தமிட்டான். அழுகிய மாமிசத்தின் வாசம் மிகுந்து சுற்றிலும் கமழத் தொடங்கியது. அவன் அதை கமழ்வதாகவே கருதினான். பரவுதல் என்ற சொல்லை மிகக் கீழ்மையானதாக கருதியபடி உதடுகளை எடுக்காமல் இறுக்கி அணைத்தான். அவன் கைகள் அவள் உடல் மீது பயணிக்கத் தொடங்கின. சட்டென உருவாகிய சூடு அவன் மீது வலிக்கும்படி பரவத் தொடங்கியது. அவள் தன் கைகளைக் கொண்டு வலுவாக அவனைத் தள்ளி விட்டாள்.

அவனிடம் எதையோ தேடியவாறு, ‘இது உன்னைப் போலவே இல்லை’ என்றாள்.

அவன் புரியாமல், ‘என்ன சொல்கிறாய்?’ என்றான்.

‘நீ வேறு மாதிரித் தெரிகிறாய்..’

அவன் சட்டெனக் குனிந்து தன் உடையை, கைகளை, விரல்களை, சிறுவயதில் பீடி பிடித்து சுட்டுக் கொண்ட இடது மணிக்கட்டின் தழும்பைப் பார்க்கிறான். 

‘என்ன ஆச்சு? புரியலையே..’ 

‘இல்லடா பையா.. இது நிச்சயமாக நீயில்லை’ 

அவனுக்கு எதுவோ புரிந்தது போலிருந்தது. கல்லறையின் அமைதி அவன் மனதுக்குள் பரவி கிளறத் தொடங்கியது. அவள் கைகளைப் பற்றி ஒருகணம் மடியில் சாய்ந்தான். கண்களில் தளும்பிய நீர் இறங்க வழியற்று தேங்கி நின்றது. அவள் நிமிராமல் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள். அந்த மௌனம் வலுக்கட்டாயமாக அவன் கண்களுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. சட்டென எழுந்து அமர்ந்து அழத் தொடங்கினான். அவள் பின்னந்தலையை கோதிக்கொண்டே, ‘யாருக்காக அழுகிறாய்? என்றாள்.

‘இந்தமுறை உனக்காக இல்லை’ என்றவன் சற்று இடைவெளி விட்டு, ‘என் மகளை நினைத்து அழுகிறேன்’ என விசும்பினான்.

அவள் சிரிப்பு இப்போது நிரந்தரமான புன்னகையாக மாறியிருந்தது. 

‘இப்போதுதான் நீ நீயாகத் தெரிகிறாய்..’ என்றாள். 

குளிர்ந்த காற்று வடத்திசையிலிருந்து வீசி மென்மையாக கல்லறை மீதிருந்த இலைகளை துடைத்துத் தள்ளுவது கண்டு இவன் இடம்விட்டு எழுந்துகொண்டான். ஏதோவொரு கல்லறையின் கோபுரத்துள் வைக்கப்பட்டிருந்த தீபத்தை அணைத்துவிடாத கவனத்தோடு காற்று துடைப்பதை சற்றுநேரம் ஆச்சரியத்தோடு நின்று பார்த்துக் கொண்டிருந்தான். நிதானமான நடையுடன் வேலிச்செடிகளை விலக்கிக்கொண்டே வந்து மண்பாதையில் சேர்ந்து கொண்டான். நேராக தார்ச்சாலையில் கொண்டு விடும் மண்பாதை அது. திரும்பி நிரூபமாவின் கல்லறையைப் பார்த்தான். அதற்கும் தனக்குமுள்ள தொலைவைப் பார்த்தான். நிறைய வேலிச்செடிகள் அடர்ந்திருந்தன.

*********

nsivanesan1988@gmail.com 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button