பெயர்
இந்தப் பெயர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்
இன்னும் நன்றாக இருந்திருப்பேன்
யார் சொல்லிக் கொடுத்தார்கள் இதனை இவ்வுலகிற்கு?
பின்னாலே துப்பாக்கியுடன் துரத்துகிறது
அசராமல் ஆடும் ஆட்டத்தை தினமும் செய்ய முடிவதில்லை
பகீரங்கமாய் முன்வைப்பதை விட்டுவிட்டு
எத்தனை நாளைக்குத்தான் நானும் நசுக்கியே விடுவது
இந்தப் பெயர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்
இன்னும் நன்றாக இருந்திருப்பேன்
******
வாழ்க்கை பூ
கால்கள் பிடறியடிக்க
நகரத்தைச் சுற்றி வந்ததற்கு
ஞானப்பழம் எதுவும் கிடைக்கவில்லை
தலையை எங்கு திருப்பினாலும்
பல்லாயிரம் தலைகள் உருண்டோடுகின்றன
ஓட்டப்பந்தயத்தின் முடிவிலிருக்கும்
கயிறை நோக்கி விரைகிறோம்
தூரம் போய்க்கொண்டே இருக்கிறது
வியர்க்க விறுவிறுக்க ஓடிவரும்
வாழ்வை நிப்பாட்டி ரோஜாவைத் தருபவர்களே
நானும்
எத்தனை முறைதான்
காதில் பூ வைக்க.
*********