இணைய இதழ்இணைய இதழ் 94சிறுகதைகள்

தனிமை – ஹேமி கிருஷ்

சிறுகதை | வாசகசாலை

டிக்கட்டுகளில் இறங்குகின்ற முகேஷின் காலடி சப்தம் மறையும் வரை வாசலில் நின்றிருந்த பூர்வா கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டாள். பெரிதாக ஏதும் வீடு கலைந்திருக்கவில்லை. சில நிமிடங்களில் நேர்ப்படுத்திவிடலாம் போலத்தானிருந்தது. மணி ஏழுதான். நடைப்பயிற்சி போகலாமா இல்லை மிச்சமிருக்கும் அன்றாட வேலைகளை பார்க்கத் தொடங்கலாமா? இடுப்பை பிடித்துப் பார்த்தாள். இப்போதுதான் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது. சோம்பேறித்தனம் பார்க்காமல் போய்விடலாம். வெளியே நடைப்பயிற்சிக்கான ஷூவை அணிய ஆரம்பித்தாள்.

அமெரிக்கா வந்த ஆரம்ப காலத்தில் தனி வீட்டில் வசித்தார்கள். வாரமொரு நாள் காய்கறிகள், பால் என வாங்க, இந்திய கடைகளுக்கும், காஸ்ட்கோவிற்கும் முகேஷுடன் சேர்ந்து அவளும் போவாள். காலையில் சென்றால் எப்படியும் மதியம் ஆகிவிடும். வந்து பொருட்களை எல்லாம் பிரித்து வைத்து, அதன் பின் சமைப்பதும் சாப்பிடுவதும் நேரங்கெட்ட காரியமாகிப் போனது. பிறகு முகேஷ் மட்டும் கடைவெளிக்குச் சென்று வருவதாக முடிவு செய்தரகள். இவளுக்கு வெளியில் செல்லும் நேரமே அரிதாகியிருந்தது. பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயேதான் அடைந்து கிடந்தாள். ஒரு நாள் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டருகேயிருக்கும் மர பெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்த போதுதான் தூக்கி வாரிப் போடுவது போல் ஒரு உண்மை உறைத்தது. அவள் வேற்று மனித முகங்களைப் பார்த்தே மாதக்கணக்காகி விட்டது. அவளது கணவன் முகேஷைத் தவிர வேறு யாரையும் பார்த்த நினைவில்லை. அன்றிரவு தூக்கமே வரவில்லை. நிம்மதியில்லாமல் நடு இரவில் அழத் தொடங்கினாள். பிறகுதான் அந்த வீட்டை மாற்றி, ஒரு ஐம்பது பேர் வசிக்கக் கூடிய இந்த அடுக்ககத்திற்கு குடி வந்தார்கள். இங்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், அருகில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதே போதுமென்றிருந்தது. சற்று வெளியுலகம் பார்க்கவே, அடுக்கக வளாகத்திற்கு வெளியே நடைப்பயிற்சியை ஆரம்பித்தாள்.

அவளது நண்பர்களிடம், உறவினர்களிடம் பேசும்போது, அமெரிக்க வாழ்க்கையென்றாலே வாரந்தவறாமல் ஊர் சுற்றுவது, ஆடம்பர கேளிக்கைகள், உயரமான கட்டிடங்கள், வசதியான வாழ்க்கை எனதான் முடிவுக்கு வருகிறார்கள். ஆனால், இவள் வசிக்கும் கிராம வாழ்க்கை இன்னும் சவாலானது. கட்டுப்பாடுகள் மிகுந்தது என சொன்னாலும் நம்ப இயலாமல் ஆச்சரியப்படுகிறார்கள்.

பூர்வா அடுக்ககத்தின் வெளியே வந்து சாலையில் பாதாசாரிகளுக்கென இருக்கும் நடைபாதையில் நடக்கத் தொடங்கினாள். எதிரே தொப்பி அணிந்த எழுபது வயது முதியவர் வழக்கமாய் தரும் அதே ஹலோ, அதே சிரிப்பு.. இன்னும் முன்னோக்கி பத்தடி தூரத்தில், கூன் முதுகுடன் பெருக்கல் குறி போல் நடந்து முதுமூப்படைந்த பாட்டியும் எதிர் வருகிறார். வழக்கம் போல, “ஹெல்லோ குட் மார்னிங், ஹேவ் அ குட் டே” என பற்கள் தெரிய சொன்னார். தினந்தவறாமல் அவரின் சுறுசுறுப்பை பார்த்து அதிசயிக்கிறாள். சற்று தூரத்தில் தென்படும் மைதானத்தில் சிலர் டென்னிஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

நடைப்பயிற்சியின்போது அடுக்ககத்திலிருந்து இடப்பக்கம் நேராகச் சென்று, வலப்பக்கம் ‘டெல் மான்டே’ தெருவில் உள் நடந்து, அங்கிருக்கும் வீடுகளை பராக்கு பார்த்துக் கொண்டே நடப்பாள். நேரம் போவதே தெரியாது. அந்த தெருவின் முடிவில் வலப்பக்கம் திரும்பி, ‘ஸான் ஃபிலிப்பே’ சாலையில் வந்த தூரத்திலேயே நடந்து மீண்டும் வலப்பக்கம் ‘க்ரீன் லேக்’ தெருவில் நடந்தால் வீதியின் முடிவில், மறுபக்கம் அவளது அடுக்ககம் தென்படும். இதுதான் தினமும் அவள் மேற்கொள்ளும் நடைபயிற்சிக்கான பாதை.

டெல்மான்டே தெருவிற்கு போகும் வழியில், ஓரிடத்தில் வரிசையாக அதுவாகவே தழைத்த வாழை மரங்கள் இருக்கின்றன. முன்னெப்போதே எவரோ வைத்தது போல. ஒவ்வொரு வருடமும் ஒன்று பலவாகி, சின்னஞ்சிறு வாழைத்தோட்டம் போலிருக்கிறது. ஒரு மரத்தில் வாழைப்பூ கனிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து முன்னிழைகள் காற்றில் பிய்ந்து நடைபாதையில் வாழைப்பூக்களாய் உதிர்ந்து கிடந்தன. பூர்வாவிற்கு கையெட்டும் தூரத்தில்தான் வாழைப்பூ தொங்குகிறது. எடுத்து ஆசையாக சமைக்கலாமென தோன்றும். ஆனால், எவரும் அதனைப் பறிக்காமல் கடந்து போவதால். அவளுக்கும் பறிக்க மனம் வரவில்லை.

இப்படித்தான் ப்ளூ பெர்ரி பழங்கள் உதிர்ந்து கிடக்கும் ஒரு வீடு ‘டெல் மான்டே’ தெருவில் இருக்கிறது. மற்ற வீடுகள் போலின்றி, போதிய பராமரிப்பு இல்லாத வீடு. வீட்டின் முன்பகுதியில் சீரற்ற புல்வெளியும் புதர்களும் மண்டிகிடந்தன. புதர்களுக்கு நடுவில் அலைபேசி நிலை நிறுத்தும் தாங்கியில் அலைபேசி ஒன்றை மாட்டி வைத்திருக்கிறாகள். தினம் நடப்பவைகளை வீடியோ எடுக்கிறார்கள் போலும். சுவற்றில் பழுப்பு நிற பூச்சுக்கள் மங்கிப் போய், சில இடங்களில் சுவர் பெயர்ந்திருக்கிறது. சுவர், கதவு, சாளரங்கள் என எல்லாமே பழையதாகவும் அழுக்காகவும் இருந்தன. எப்போதாவது மட்டும் அவர்கள் வீட்டுக் கதவு பாதி திறந்திருக்கும். எவருமில்லையெனில் அந்த வீட்டை லேசாக கவனிப்பாள். வீட்டின் நடைபாதையிலேயே நிறைய தட்டுமுட்டு சாமான்கள் கிடக்கும் . ஒரு இந்திய வீட்டை நினைவுபடுத்தும் வீடு அது. முன் முற்றத்தில் ப்ளூ பெர்ரி செடிகளை பராமரித்து வந்தார்கள் அந்த வீட்டில் வசிக்கும் இரு ஒல்லியான இளம் பெண்கள்.

அந்த வீட்டில் ஒரு மூதாட்டியும் இருக்கிறாள். உடல் முழுக்கப் போர்த்தியது போல் மடிப்பு மடிப்புகளாய் தளர்ந்திருந்தது தேகம் வயது நூறுக்கும் மேலிருக்கலாம் என சொல்லும். கூன் முதுகிருந்தது. மெல்ல எட்டு வைத்து நடப்பார். அந்த வீட்டில் ப்ளூ பெர்ரி செடிகளைத் தவிர வெவ்வேறு சிறு செடிகளையும், மரங்களையும் பராமரித்தார்கள். இருப்பினும் நடைபாதைக்கருகே சற்று பெரிதாய் கிளைத்திருக்கும் செடிகளில் ப்ளூ பெர்ரி பழங்கள் காய்த்து தொங்குவது பார்க்க அழகாய் இருக்கும். அந்த இரு இளம்பெண்களும், எப்போது பார்த்தாலும் மண்வெட்டியைக் கொண்டு நிலத்தில் ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள் அல்லது நிலைதாங்கியில் வைத்திருக்கும் அலைபேசியை பார்த்து ஏதாவது சொல்லத் தொடங்குவார்கள். இவளை பார்த்தால் சினேகமாய் சிரித்து அந்த தினம் சிறக்க வாழ்த்துகளைச் சொல்வார்கள்.

ஒரு நாள் அவளிடம் கை நிறைய ப்ளூ பெர்ரி பழங்களைத் தந்தார்கள். கூடவே அவர்கள் ஒரு யூட்யூப் சேனல் வைத்திருப்பதாகவும், அதனை ஆதரிக்கச் சொல்லியும் கோரிக்கை வைத்தார்கள். இவளும் வீடு வந்து அவர்களின் எல்லா காணொளிகளையும் ஒன்றுவிடாமல் பார்த்தாள். அவர்களிடம் தினமும் சிறிதாவது கதை பேசுமளவுக்கு நட்பு கொண்டிடவேண்டும் என முடிவெடுத்தாள். மறுநாள் அவர்களிடம் சொல்லலாமென பார்த்தால், பிறகு வந்த நாட்களில் அவர்களைப் பார்க்கவில்லை. பெர்ரி பழங்கள் பறிக்காமல் எல்லாம் கொத்து கொத்தாய் கீழே விழுந்து நிறைய வீணாய் போயிருந்தன. நல்ல பழங்களை எல்லாம் சேகரித்து அவர்கள் வீட்டு மரத்தினருகே வைத்துவிட்டுப் போனாள். நாட்கணக்கில் அவள் வைத்துவிட்டுப் போன பழங்கள் எல்லாம் காய்ந்து போய் அப்படியேதான் கிடந்தன. கல்லூரியோ அல்லது படிப்பு முடிந்தோ அவர்கள் சென்றிருக்கலாம். இது அவர்களது பாட்டி வீடாக இருக்கலாம் என அனுமானித்தாள். இங்கு எவர் எப்போது வெளியில் வருகிறார்களெனத் தெரிவதில்லை இல்லையெனில் பிறகு பார்க்கவே இயலாதபடி திடீரென காணாமல் போகிறார்கள்.

அவளுடைய வீட்டிலிருந்து ஐந்தாவது வீட்டில் ஒரு ரஷ்ய இளம்பெண் இருந்தாள். தங்க நிற சுருள் முடியை சடைபின்னி முன்னாலிட்டு, சிவப்பு நிற நைட்டி போலொரு அங்கியில்தான் எப்போதும் அந்த பெண்ணை பூர்வா பார்த்திருக்கிறாள். துணிகளை லாண்டரிக்கு எடுத்துச் செல்லும்போது இவளைக் கண்டால் ஈறு தெரிய சிநேகமாய் புன்னகைப்பாள். சில சமயம் அப்பெண் எதிரில் வரும் இவளை கவனிக்காமல் கடந்து சென்றாலும், பின் நினைவு வந்தவளாக, இவளை அழைத்து ஹலோ சொல்லி சிரிக்கவும் செய்திருக்கிறாள். எப்போது எங்கு பார்த்தாலும் மலர்ந்த முகமாய்தான் அவளைப் பார்த்திருக்கிறாள். ஒரு நாள் திடீரென அவள் வீட்டுக் கதவை உடைத்தார்கள். தடவியல் துறையிலிருந்து வந்து சோதனை செய்து போனார்கள். அவள் காணாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள். அவள் காணாமல் போனதே ஒரு மாதம் கழிந்த பின்னர்தான் தெரியும். அவளுடைய எல்லா உடமைகளையும் வெளியே குப்பைக் கிடங்கில் அடுக்கக ஆட்கள் இட்டார்கள். எல்லாம் ஒரு மணி நேரத்தில் நடந்து முடிந்தது. அதன் பின் எந்தவித தகவலும் அவளைப்பற்றி பூர்வா அறியவில்லை. எவராவது இவள் போலவே சம்பந்தமே இல்லாத அப்பெண்ணை நினைத்து மாதக்கணக்கில் கவலைப்பட்டிருப்பார்களா எனத் தெரியவில்லை.

இப்போது ப்ளூ பெர்ரி பழ வீட்டில் எல்லா மரங்களும் காய்ந்து கிடக்கின்றன. பின்பனிக் காலத்தில் எல்லாம் கருகிப் போயிருக்கும். அவர்கள் வீட்டில் மட்டுமல்ல எல்லார் வீட்டிலும் மரங்கள் கருகிப் போய் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. இங்கிருக்கும் அமெரிக்கர்களின் வீடுகள் ஓவியம் போலிருக்கின்றன. முன்பக்கம் முழுக்க கண்ணாடிச் சுவர்களாலான வீடுகள். கூடத்திலும், திறந்தவெளி சமையலறையிலும் சின்னதாய் விளக்கு ஒளிர்ந்திருக்கும் வெண்பூச்சு மரச் சுவர்களில் வேலைப்பாடுகள், ஓவியங்கள், மர அலமாரி முழுக்க ஒழுங்கமைக்கப்பட்ட புத்தகங்கள், விலையுர்ந்த சோபாக்கள். ஆனால், எவரும் அமர்ந்து பார்த்ததில்லை. எந்த வீட்டிலும் ஒரு பொருள் கூட இடம் மாறிப் பார்த்ததில்லை. எப்போதாவது ஏதாவது ஒரு வீட்டில் ஒரு பெண் சமைப்பதைப் பாத்திருக்கிறாள்.

ஒரு பியானோ வைத்திருக்கும் மாளிகை அவள் கண் முன் எப்போதும் நிற்கும். அந்த மாளிகையில் பியானோவை மட்டும் வைத்திருக்க ஒரு பெரிய அறை. கண்காட்சியில் வைத்திருக்கும் பழங்கால பியானோ போலிருந்தது அவ்வறை. சுவற்றில் பீத்தோவனின் ஆளுயர புகைப்படமொன்று மாட்டப்பட்டு சிறு விளக்கு புகைப்படத்திற்கு மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சாலையிலிருந்து அனைவரும் பார்க்கும்படி மிகப்பெரிய கண்ணாடிச் சுவர். அவளுக்கு ஒரு ஆசை இருந்தது. நாள் முழுக்க அங்கு நின்று அந்த பியானோவை எவரேனும் இசைக்கிறார்களா எனப் பார்த்து விட வேண்டும். குறைந்தபட்சம் மனிதர்கள் நடமாடுவதையாவது பார்த்துவிட வேண்டும். ஆனால், அரை மணி நேரம் கூடுதலாக ஒரே இடத்தில் நின்றால் கூட போலிஸ் விசாரிக்க வந்துவிடும். அந்த வீடு மட்டுமல்ல அவ்வீதியிலிருக்கும் எந்த வீட்டிலும் மனிதர்களை அவள் பார்த்ததில்லை. கார்கள் மட்டும் வெளியே வரும். உள்ளே போகும் .

வசந்த காலத்தில்தான் எந்த உபத்திரவமும் இல்லாமல் எல்லாவற்றையும் அழகாய் ரசிக்க முடிகின்றது. குளிர்காலத்தில் கடுங்குளிர் வாட்டி எடுக்கின்றது, வெயில் காலத்தில் கொடும் வெப்பமாய் வாதை தருகின்றது. வருடத்தில் எட்டு மாதங்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது. மீதமிருக்கும் மாதங்களில் நிமிடத்திற்கு ஒரு தட்ப நிலையாய் உருமாறுகின்றது. நல்ல வெயிலில் நடந்து செல்லும்போது பத்தடி தூரத்திலேயே திடீரனத் தாங்க முடியாத குளிரெடுக்கும். குளிரில் நடந்தால் திடீரன மழை கொட்டும். விழித்தெழும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கால நிலை. இதுவும் அவளுக்கு பழகிப் போய்விட்டது.

ஸான் ஃபிலிப்பே சாலையின் நடை பாதையில் நடக்கும் போதெல்லாம் காற்றில் ஓரிடத்தில் மல்லிகைப்பூ வாசம் வரும். எந்தச் செடி என அங்கே தேடிக் கண்டறிந்தாள். சிறு சிறு கொத்தாய் வெண்மொக்குகள் கொண்ட மெல்லிய இலைகளாலான கரும்பச்சைசெடி. என்ன வகையென அவளுக்குத் தெரியவில்லை. அந்த இடத்தில் மட்டும் ஆழ்ந்து அதன் வாசத்தை நிரப்பிக் கொண்டு நடப்பாள். சாலைகளின் ஓரத்தில் அணிவகுத்து நிற்கும் மரங்களில் பலவித நிறத்தில் இலைத்துளிர்கள் சாலையை பேரழகு படுத்தியிருந்தது. சிவப்பு மேபிள், சிவப்பு ஓக், மஞ்சள் நிற துலிப், ஊதா நிற ரெட்பட் என கலவையான நிறங்களில் மரங்கள் கொள்ளை அழகில் சாலைகளின் ஓரத்தில் ஒய்யாரமாய் நிற்கின்றன. ஆனால், நின்று ரசிக்க ஒரு மனிதரைக் கூட காணவில்லை. எப்போதாவது வண்டிகள் போகின்றன. வருகின்றன. நிலத்தில் உதிர்ந்த காய்ந்த பூக்களும் சருகுகளும் தனிமை துயரத்தில் அலைந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நொறுக்கியவாறு நடந்து வருகிறாள். அந்த சப்தத்தை அவள் மட்டுமே கேட்கிறாள்.

எல்லாவற்றையும் தனிக்காட்டு ராணியாய் பார்த்துவிட்டு, தனது அடுக்ககத்தின் உள்ளே நுழைந்தாள். அடர்ந்த பைன் மற்றும் ஓக் மரங்களுக்கிடையே அவளது அடுக்ககம் இருக்கிறது. நிலம் முழுக்க பைன் மரத்திலிருந்து விழுந்த பைன் கோன்கள் விரவிக் கிடந்தன. சின்னஞ்சிறு பொம்மை பைன் மரம் போலிருக்கும், விதைகள் பொதிந்த பைன் கோன்களை சிறிய வயதில் ஊட்டியில் அலங்காரப் பொருட்களாய் பாத்திருக்கிறாள். அவற்றை காசு கொடுத்து வாங்கி வீட்டில் வைத்திருக்கிறாள்.

அடுக்ககத்தின் முதல் மாடியிலிருக்கும் அவள் வீட்டிற்குச் செல்ல, வராண்டாவிற்கு நடந்த போது, அவ்வளவு பெரிய வராண்டாவில் அவளுடைய காலணி தடம் எதிரொலிக்கிறது. வெறுமை மெல்ல அவள் இதயத்தில் அழுத்தத் தொடங்கியது. வீட்டின் கதவைத் திறப்பதற்கு முன் எவராவது முன்பின் வருகிறார்களா என கவனித்தாள். அப்படித்தான் சில வருடங்கள் முன்பு ஒரு இந்தியப் பெண் நடைப்பயிற்சி செய்துவிட்டு வீட்டு கதவைத் திறக்கையில் சடாரென பின்வந்து அவளை வீட்டினுள் தள்ளி கதவைச் சாத்தி துப்பாக்கி முனையில் ஒருவன் அனைத்தையும் கொள்ளையடித்துப் போன செய்தி செவிவழி வந்தது. அதற்கு பிறகு மிக எச்சரிக்கையுடனே இருக்கவேண்டியதாகியிருக்கிறது.. தினமும் இது போல் கதை முகேஷ் மூலமாகக் கேட்கிறாள். அவளது அடுக்ககத்தில் மேல் மாடி வீட்டில் கூட துப்பாக்கிச் சூடு சில வாரங்கள் முன்புதான் நடந்தது.

வீட்டின் உள்சென்ற கணத்திலேயே சாத்தினாள். கதவை இழுத்துப் பார்த்து உறுதிப்படுத்தினாள். ப்ளூடூத் ஸ்பீக்கரில் பாட்டை ஒலிக்க விட்டு வீட்டை சுத்தம் செய்யத் தொடங்கினாள். வெறும் இருபது நிமிடங்களில் முடித்துவிட்டாள். எல்லாமே எப்போதும் நேர்த்தியாக வைத்திருந்தாள். எப்போதாவது எவராது திடீர் வருகையின் போது புருவத்தை உயர்த்துவதற்காகவே தினம் தினம் நேர்த்தியாக வீட்டை வைக்கப் பழகியிருந்தாள்.

சுத்தம் செய்த பின் குளியலறைக்கும் ஸ்பீக்கரை கொண்டு சென்று குளித்து முடித்தாள். காலை உணவு உண்ட பின் நேரத்தைப் பார்த்த போது வெறும் பத்தரை. இனி மாலை முகேஷ் வரும் வரை நேரம் கடத்த வேண்டும். வந்த புதிதில் எதுவும் பெரிதாகத் தோன்றவில்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு டிவி பார்க்கலாம், சிறு தூக்கம் போடலாம், எதையாவது படிக்கலாம் என்று ஒரு வருடம் கடத்தியிருந்தாள். ஆனால், ஒரு நாள் செய்யலாம்; இரு நாட்கள் செய்யலாம், ஐந்து வருடங்களாக இதை மட்டுமே செய்வது மெல்ல மெல்ல அவளுக்குள் அவஸ்தையை ஏற்றிக்கொண்டே சென்றது. அதே காலை வேலைகள், அதே நடை பயிற்சி, அதே தொப்பி போட்ட வயதானவர், அதே கூன் முதுகுப் பாட்டி, அதே டெல் மான்டே தெரு, அதே ப்ளூ பெர்ரி செடிகள், அதே பெரிய பெரிய வீடுகள், அதே ஸான் ஃபிலிப்பே சாலை மரங்கள், அதே அலைபேசி விசாரிப்புகள் எல்லாமே அதே அதே.அதே…

ஒரே ஒரு நாள் மீண்டும் மீண்டும் வருடக்கணக்காய் மறுசுழற்சி ஆகிறதோ என குழம்பும் வகையிலான மாற்றமில்லாத நாட்கள். அவள் இருப்பு கொஞ்சமும் சுவாரஸ்யமற்ற மாபெரும் வெட்டவெளி சிறை போலிருந்தது. ஆனால், இந்த இடமே இரைச்சலென்று, இன்னும் உட்புறமாக வனமனடர்ந்த இடங்களில் வீடு கட்டிச் செல்பவர்களுண்டு. அப்படிச் செல்பவர்களை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. மனிதர்களற்ற இடங்களில், எவரிடமும் எதையும் பகிராமல் வாழ்நாள் முழுக்க தனிமையை எப்படி அவர்களால் அணைத்துக் கொள்ள முடிகிறது? அந்த வாழ்வை நினைத்தாலே அவளுக்கு பயங்கரமாக இருக்கிறது.

அவளது வீட்டு பால்கனியின் கண்ணாடிக் கதவைத் திறந்தால் அடுக்கததின் காம்பவுண்ட் அருகேயுள்ள சாலை தெரியும். சாலைக்கு அப்பாலிருந்த பரந்த வெளியில், புதிதாக மெக்கானிக் கடை ஒன்று வந்தது. அதை வைத்திருந்த இளைஞன் சோம்பலாய் பதினொன்றிற்கு திறந்து நான்கு மணிக்குள் அடைத்துவிடுவான். அந்த ஷெட்டிற்குள்ளேயே அவன் வசித்து வந்தான். சுற்றிலும் நிரம்பிய அமைதியைக் கலைக்கும்படி, கார்களின் சப்தம் அவ்வப்போது அந்த ஷெட்டிற்குள் வரும் போகும் போதுதான் இந்த உலகத்தில் உயிர்ப்புடன் இருக்கிறோமென அவளுக்குத் தோன்றியது. காரில் வருபவர்கள் அவனுக்கு முன்னமே தெரிந்தவர்கள் போல் நின்று நேரம் போக பேசுவார்கள். சிலர் சைக்கிள்களை சரிசெய்ய கொண்டு வந்து தருவார்கள். அந்த மெக்கானிக் கடையை தினமும் பார்ப்பதற்கு அவளுக்கு அலுக்கவில்லை.கையில் புத்தகத்தையோ அலைபேசியையோ பார்த்துக் கொண்டே , முகேஷ் வரும் வரை பால்கனியில் வந்து அமர்ந்துகொள்வாள். .

அந்த கடையையொட்டி, முழுக்க இலைகளுதிர்ந்த ஒரு பெரிய மரம் உண்டு. மான்களின் கொம்புகள் நீண்டு விரிந்து வளர்ந்து நிற்பது போல், அந்த மரத்தின் கிளைகள் கிளைத்திருந்தன. இறுதிக்கும் இறுதியான ஒரெயொரு உச்சிக் கிளையில் சிவப்பு கார்டினல் பறவை ஒன்று தினமும் அமர்ந்திருக்கும். ஓயாமல் அது கூவிக்கொண்டேயிருக்கிறது. நள்ளிரவுகளில் கூட அதன் கூவல் கேட்கும். இலைகளற்ற அந்த ஒற்றை மரமும், கிளை உச்சியில் அமர்ந்து கூவிக்கொண்டிருக்கும் சிவப்பு கார்டிலன் பறவையும் பார்ப்பதற்கு சிறு கவிதை போல் தோன்றும். தினமும் கடையைத் திறந்ததும் அந்த இளைஞன் மரத்தினடியில் தானியங்களை இடுவான். நிறைய அணில்களும். குருவிகளும் இன்னும் பெயர் தெரியாத பறவைகளும் காத்திருந்து வந்து உண்ணும். அதை எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அப்போதுதான் அவள் ஒரு விஷயத்தை கவனித்தாள். அந்த கடை வந்த பின், அந்த சிவப்பு கார்டினல் பறவை ஓயாமல் கூவுவதை நிப்பாட்டியிருந்தது.

லியோ டால்ஸ்டாயின் ஒரு கதையில் வாழ்வை அடுத்த கட்ட்டத்திற்கு நகர்த்திச் செல்ல சூழ்நிலைகள் அவசியம் எனத் தொடங்கி, இல்லை தற்செயல் நிகழ்வுகள்தான் அவசியம் என கதை முடியும். அவனுடன் பிணைப்பு ஏற்பட்டதிற்கும் அவளுக்கு தற்செயல் நிகழ்வு ஒன்று தேவைப்பட்டிருந்தது.

ஒரு மாதம் முன்பு அவளுடைய கணவன் முகேஷ் வேலை நிமித்தம் இரு நாட்கள் வெளி நகரம் செல்ல வேண்டியிருந்தது. அவளை விட்டுச் செல்வது இத்தனை வருடத்தில் அதுவே முதன் முறை. தனித்து அவள் மட்டுமே இருக்க வேண்டிய சூழ்நிலை. இன்னும் அச்சத்தை கொடுத்திருந்தது. அது ஒரு வியாழக்கிழமை. மணி ஏழரை இருக்கும். மேல் வீட்டில் தபதபவென ஏதோ புல்லட் ஓட்டியது போல் சபத்ம். அடுத்த நிமிடத்தில் போலிஸ் மற்றும் ஆம்புலன்ஸ்கள் அவளது அடுக்ககத்தில் குவிந்திருந்திருந்தன. அடுக்ககத்தில் நுழைவாயில் வரை போலிஸ் வண்டிகள் நிற்கவும் ஏதோ பெரிய சம்பவம் என யூகித்தாள். நினைத்தாற்போலவே அவளுடைய மேல்வீட்டில் ஒரு பெண்ணை அவளது காதலன் துப்பாக்கியால் சுட்டிருந்தான். பூர்வாவிற்கு குப்பையை போட வெளியே செல்வதா வேண்டாமா என்ற குழப்பம். அந்த நேரத்தில் தேவையில்லாததுதான். ஆனால், அவளுக்கு அலைக்கழிக்கும்.

எல்லா இரவுகளிலும் சமையலறையை சுத்தம் செய்த பின் குப்பை பையை கிடங்கில் போட்டே ஆகவேண்டும். இல்லையெனில் அவளுக்கு அந்த நாளில் தூக்கம் வந்து தொலையாது. அப்படித்தான் ஒரு நாள் நல்ல காய்ச்சலில் இவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அன்றிரவு சமையலறை சுத்தம் செய்வதை முகேஷ் பார்த்துக் கொண்டான். நள்ளிரவில் அவளுக்கு விழிப்பு வந்தது. சமையலறைப் பக்கம் போகக் கூடாது என மனதைக் கட்டுப்படுத்தினாலும், அவளையும் மீறி சென்று பார்த்தாள். கட்டப்பட்ட குப்பை பாலிதின் பை அங்கேயே இருந்தது.

வீட்டிலிருந்து நாலைந்து வீடுகள் தள்ளி எல்லாரும் போடுவதற்கான ஒரு சிறிய குப்பைக் கிடங்கு அறை இருக்கிறது. அறையின் கதவைத் திறந்து அங்கே இருக்கும் குப்பைக் கிடங்கின் ஜன்னல் போன்ற கதவு வழியாக குப்பை பையை போட்டுவிட்டு வரவேண்டும். ஒவ்வொரு தினமுமே அந்த கதவைத் திறக்கையில் எவராவது அந்த அறைக்குள் ஒளிந்திருப்பார்களோ, அங்கிருந்து நம்மைத் தாக்குவரகளோ, துப்பாக்கி வைத்து மிரட்டுவார்களோ என்று பயந்து கொண்டுதான் தினமும் குப்பையை போடுவாள். அப்படியிருக்க அந்த நடு இரவில் வெளியே செல்ல எவருக்கேனும் ஆகுமா? நள்ளிரவாக இருந்தாலும், காய்ச்சலாக இருந்தாலும் குப்பையை அப்படியே வீட்டிற்குள் வைத்தால், அவளுக்கு நிம்மதியே இருக்காது. அன்று முகேஷை எழுப்ப மனமில்லாமல். அவளே கதவைத் திறந்து போய் குப்பையை போட்டு வந்தாள். மறு நாள் அவனிடம் திட்டும் வாங்கிக் கொண்டாள்.

சாதாரண நாட்களே அப்படியென்றால், கொலை நடந்த அன்று சொல்லவா வேண்டும். ஒரு வழியாக தைரியம் வந்து குப்பையை போடச் சென்றாள். அவளது தளம் மற்றும் மேல்தளம் முழுக்க கருப்பு உடையில் பெரிய துப்பாக்கிகளை வைத்து மிக உயரமாகவும் பிரமாண்ட உருவத்திலும் போலிஸார் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முன் அவள் சிறு வண்டு போலிருந்தாள். அவளைப் போல் அங்கு வசிக்கும் ஒரு சிலர் எந்த வித கலவரமும் இல்லாமல் அவர்கள் பாட்டுக்கு இயல்பாய் தாழ்வாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். இவள் பத்தடிக்கே நெஞ்சில் பயம் அப்பி, குப்பையை கிடத்திவிட்டுத் திரும்பினாள். இயல்பாய் இருப்பது போலவும் காட்டிக் கொள்ள வேண்டும். வேகமாகவும் வீட்டிற்குள் செல்ல வேண்டும். அதே நேரம் அங்கு என்ன நடந்தது என கண்களால் ஆராயவும் வேண்டும் அவளுக்கு.

வீட்டிற்குள் வந்து பூட்டிக் கொண்டும் அவளுக்கு நடுக்கம் குறையவில்லை. இது போன்ற குற்றங்கள் அங்கொன்றும் புதிதல்லதான். ஆனால், அப்போது ஆறுதலுக்கு முகேஷ் இருந்தான். இப்போது எவருமில்லை. இரவுகளென்றாலே ஒரு வித பலவீனம் மனதிற்குள் புகுந்து கொள்கிறது அவளுக்கு. ஒரு மரணம் அதுவும் ரத்தம் தெறிக்க வெகு அருகில் நிகழ்ந்ததென்றால் எப்படி இயல்பாய் இருக்க முடியும்? தூக்கம் எப்படி வரும்? என்ன செய்வதென அறியாமல், பின்னிரவில் பால்கனிக்கு வந்து நின்றாள். மெக்கானிக் ஷெட்டில் வசிப்பவனின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவனது பால்கனியில் அமர்ந்து கொண்டிருந்தான். அருகே அவனது மேற்கத்திய பாடல் இசைந்து கொண்டிருந்தது. சிவப்பு கார்டினல் பறவை அதே கிளையில் சிலை போல் அமர்ந்து கொண்டிருந்தது. அந்த கொடுந்தனிமையில் எவருமே இல்லை என்பதை விட எவராவது இருக்கிறார்கள் அவளுக்கு. அச்சமும் தனிமையும் தோய்ந்த அவ்விரவில் அவனும், அவளும், மற்றும் உச்சிக்கிளை சிவப்பு கார்டினல் பறவையுமாக ஒரு மெல்லிய இழை பின்னத் தொடங்கிய கணம் அதுவாக இருந்தது. அவளுக்கு தான் நினைத்த நேரம், ஆறுதல் வேண்டி நின்ற நேரம், தன் கண்முன்னே தெரியும் ஒரே மனித முகம் அவனுடையதாக இருந்தது. அப்போதிருந்து, கார் ஷெட்டிலும், அவனது பால்கனியிலுமே எப்போதும் வசிப்பவனின் மானசீக ஆறுதலை இறுகப்பற்றத் தொடங்கினாள். அவனே அது அறியாதது வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று. அவனுக்கு இப்படி தனிமையில் உழலும் ஒருத்தி, தன் வாழ்வை கவனித்து கொண்டிருப்பாள் என்று கூடத் தெரிய வாய்ப்பில்லை. அவன் போக்கில் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.

அந்த இளைஞன் எப்போதும் கடையில் டயர் , மோட்டார், சைக்கிள், அல்லது அங்கிருக்கும் கார்களை நோண்டிக்கொண்டிருப்பான். வேலை செய்ய அலுப்பாக இருந்தால் ஒலிப்பெருக்கியில் பாடல்களுடன் அவனும் சத்தமாக பாடிக் கொண்டேயிருப்பான். வெட்ட வெளி என்பதால் பாடல்கள் மென்மையாக எதிரொலிக்கும். அது எல்லாமே புரியாத மொழியில் இருந்தது.

அந்த இளைஞன் மாலையில் ஷெட்டை உள்ளிருந்தே சாத்திக் கொள்வான். இரவில் அந்த ஷெட்டில் ஒரே ஒரு அறையில் மட்டும் விளக்கு எரியும். அந்த அறையின் பால்கனி இவள் வீட்டிற்கு எதிரே இருந்தது. வார இறுதிகளில் வீட்டின் வெளியே பார்பிக்யூ அடுப்பில் கறிகளைச் சுட்டு, மதுவுடன் தின்பான். அவனிடம் பழைய ஜீப் ஒன்று இருக்கிறது. பின்பகுதியில் சற்று ஒடுங்கி, முன் பகுதியில் சற்று உடைந்தும் இருந்தது. சில சமயங்களில் இரவில் அவனுடைய கிடாரை எடுத்துக் கொண்டு எங்கோ பயணிப்பான். அவன் இரவு விடுதிகளில் இசைப்பவனாக இருக்கலாமென அவளாக யூகித்துக் கொண்டாள். ஆரம்பத்தில் அவனை ஹிஸ்பானிக் என்று நினைத்தாள். ஆனால், ஒலிப்பெருக்கியில் அடிக்கடி அவன் கேட்கும் பாடல் ஒன்றை கூகுள் செயலி மூலம் கண்டறிந்து அவன் பொலிவிய நாட்டுக்காரன் எனக் கண்டறிந்தாள்.

நீங்கள் மானசீகமாக கற்பனை செய்தது போல் அந்த இளைஞனின் உருவம் கிடையாது. நடுத்தர உயரத்தில், 100 கிலோ எடைக்கும் மேலான கனமான உடலையும், அதன் தொடர்பான உடல் உபாதைகளையும் சுமந்து கொண்டு திரிபவன். முகம் முழுக்க முகப்பருக்கள் வந்து போன அடையாள தழும்புகளுடன், தாடி வைத்திருந்தான். உறவுகளற்ற தனியனான அவன் எவ்வாறு நாட்களை தனிமையில் நகர்த்துகிறானென அவள் நாளுமொரு நிலையாய் புரிந்துகொள்ள முயற்சி செய்தாள். அவனுக்கு அவனது கடையும், கறியும், மதுவும், அவனுடைய பாடல்களும் போதுமென்றிருந்தது. ஒரு நெடுங்கதையாக புனைந்து எழுதத் தொடங்கி, சட்டென முடிந்துவிடக்கூடிய குறுங்கதையாக மாறிப்போனது அவளுடைய தனிமையின் கதை.

கடந்த பத்து நாட்களாய் அவன் கடை பூட்டியே கிடக்கின்றது. எப்போதும் வெளியே இரைந்து கிடக்கும் டயர்கள், இரும்பு சாமான்கள், பழைய சைக்கிள்கள் எதுவும் தென்படவில்லை. கார்களும் வருவதில்லை. ஒருவேளை வெளியூர் சென்றிருக்கலாம் என நினைத்தாள். இல்லாமல் போவது கூட துயரமில்லை. இருந்து பின் இல்லாமல் போவது வாதையாகிறது. பழகவே இல்லையெனினும் சட்டென்று ஏன் காணாமல் போகிறார்கள்? ப்ளூபெர்ரி வீட்டுப் பெண்கள், ரஷ்யப் பெண், இந்த மெக்கானிக் இளைஞன் இவர்களெல்லாம் அவரவர் இடங்களில் அவளையுமறியாமல் மனதில் வந்து போகிறார்கள். இந்த மனதிற்கு என்ன தேவை என விளங்கவில்லை.

பூர்வா சிறிது நேரம் டிவியை பார்த்துவிட்டு அணைத்தாள். அங்கே ஒரு மயான அமைதி கடந்து கொண்டிருந்தது. காற்று, காதை கப்பென்று அடைக்கின்ற பேரமைதி. வாய் திறந்து காதை விசாலமாக்கினாள். கார்டினல் பறவையின் கூவல் இன்று கேட்கவேயில்லை. ஒருவேளை அவன் வந்துவிட்டானோ என வேகமாய் பால்கனியில் கதவைத் திறந்து பார்த்தாள். அந்த மெக்கானிக் கடையருகே ஒரு சிறு ட்ரக் நின்று கொண்டிருந்தது. இரு ஹிஸ்பானிக் ஆட்கள் கூரை மேல் நின்று ஓடுகளைப் பிரித்து கீழே வீசிக் கொண்டிருந்தனர். கீழே ஒரு ஹிஸ்பானிக் பெண்ணும். கருப்பின பெண்ணும் நின்று, பிரித்த ஓடுகளை ட்ரக்கில் ஏற்றிக் கொண்டிருந்தனர். ட்ரக் வண்டிக்குள் ஏதோ மெக்சிகன் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவர்கள் பாடல்களை சத்தமாய் பாடிக்கொண்டே ஷெட்டைப் பிரிக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் முடிப்பதற்குள் மாலையாகிவிட்டது. ஜேசிபி வண்டியொன்று வந்து அவ்விடத்தை சமதளமாய் ஆக்கிவிட்டது. ட்ரக்கும் ஜேசிபியும் கிளம்பி கண்ணிலிருந்து மறைந்து போயின. மாலைக்குள் அந்த இடத்தில் அவன் வசித்ததற்கான சுவடேயில்லை. சூரியன் சாய்ந்து, மெல்ல இருள் சூழும் நேரத்தில் பூர்வா சமையலறையில் சென்று சூடாக அவளுக்கு பிடித்தவகையில் டிகாஷன் மிகுதியான காபியைக் கலந்து பால்கனி சேரில் அமர்ந்து கொண்டாள். சூடான காபியைப் பருகியபடியே அந்த ஒற்றை மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்துகொண்டிருந்த சிவப்பு கார்டினல் பறவையை பார்த்துக் கொண்டிருந்தாள். அது அவளுக்கும் சேர்த்து தனிமையை கரைத்து மெல்ல கூவத் தொடங்கியது. அது எல்லா திசைகளிலும் தனித்து எதிரொலித்துக் கொண்டிருந்தது. அதன் கூவல் வழக்கத்திற்கு மாறாக ஒரு பாடல் போலிருந்தது.

********

hemikrish@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button