
“ஏப்ள..ஏய்.. சீனிகட்டிங்குறவளே…”
தூரத்திலிருந்து சத்தம் போட்டுக்கொண்டே வந்தாள் பாப்பாத்தி. நீர் தெளிக்கும் ஓசையுடன் பாப்பாத்தியின் ஓலம் இணைந்து புதிய சுருதியில் சீனிக்கட்டியின் காதில் வந்தடைந்தது.
அருகில் வர வரப் பாப்பாத்தி குரலைக் குறைத்துக்கொண்டே வந்தாள். பாப்பாத்தியின் கால்தடத்தையும் வரும் வேகத்தையும் மனதிலேயே அளவெடுத்து மிகச்சரியாக வாசல் முழுதும் தண்ணீர் தெளித்துவிட்டு வாளியைக் கீழே வைத்தாள். பாப்பாத்தி வந்தடையவும் வாளி கீழே வைக்கவும் சரியாக இருந்தது.
பக்கத்தில் வந்ததும் சத்தத்தை மட்டுப்படுத்தி வீட்டின் உள்ளே தலையை நீட்டி ஆட்கள் தூங்குவதை உறுதிப்படுத்திக்கொண்டாள்.
“யாரும் தொழுவ எந்திரிக்கலையோ?”
“சஹர் செஞ்சுட்டு தொழுதுட்டு மறுக்கா ஒறங்கிட்டிருக்காக..”
“சஹருக்கு என்ன செஞ்ச?”
“ஏன்டி மூளைய கழட்டி வச்சவளே! நோம்பு தெறக்க ஒரு வெஞ்சனம், நோம்பு வைக்க வேறொரு வெஞ்சனமா செய்யப்போறேன்? பள்ளிவாசல்ல கொடுத்த நோம்பு கஞ்சிய சுடவச்சு பத்திரப்படுத்தியிருந்தேன். அதுதான் நானும் புள்ளையளும் சாப்டோம்”
ஈரம் படர்ந்த திண்ணையில் இருவரும் அமர்ந்துகொண்டனர்.
“ஒம் மச்சாங்காரர் வந்த சேதி தெரியுமா? ஒன்னய கூப்டு அனுப்புச்சாக”
“ஏ? அது எம்மச்சானாதான் இருக்கணுமா? செல்லையா ராவுத்தரு ஒன் அண்ணங்காரரா இருக்கக் கூடாதா?”
சலிப்பதைப் போல் முகத்தை வைத்திருந்தாலும் உள்ளுக்குள் வெட்கம் எட்டிப் பார்த்திருந்தது சீனிக்கட்டிக்கு.
“ந்த்தா! உள்ளாற பூரிக்கிறதுதான் செவப்பாகி கன்னம் காட்டிக் கொடுக்குதே” பாப்பாத்தி சீனிக்கட்டியை வம்பிழுத்தாள்.
“அடியே! கருமமே! ரொம்ப நாளுகழிச்சு கறியாணம் காச்சப்போற சந்தோஷத்துல பூரிச்சேனாக்கும். செல்லைய்யா ராவுத்தரு சும்மாவா கூப்டுவிடுவாரு? வர்ர வழிலையே நாகூர் ஆண்டவுக கோழிக்கடைல ரெண்டு கிலோல ஒரு உசுரு கோழிய அடிக்கச் சொல்லணும். இப்பவே கோழியாணம் வாசன என் நாசிக்குள்ள கும்முன்னு நெரம்புது பாத்துக்க!”
“கரெக்ட்டா சொல்லு சீனிக்கட்டி..
அது கோழியாணத்தோட வாசனதானா.. செல்லையா அண்ணனோட அத்தர் வாசனையா?”
நாற்பதை நெருங்கும் பெண்களுக்கே உரித்தான கேலியும் கிண்டலுடனும் சீனிக்கட்டியும் பாப்பாத்தியும் சிரித்துக்கொண்டார்கள்.
ஏதோ ஒருவகையில் செல்லையா ராவுத்தருக்கு பாப்பாத்தி தங்கை முறை வேண்டும்; தூரத்துத் தாய்வழி சொந்தம். ஆனால், சீனிக்கட்டிக்குச் சொந்தத் தாய் மாமு மகன். சொந்தமென்றாலும் தூரமென்றாலும் இந்தக் கிராமத்தில் ஒவ்வொருவரும் உறவு முறையில் பின்னிப் பிணைந்தவர்கள்.
செல்லையா ஊரின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். சீனிக்கட்டி, பாப்பாத்தி உள்ளிட்டவர்கள் அவரிடம் ஜக்காத் பணம் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளவர்கள்.
சீனிக்கட்டிக்குச் சிறுவயதில் படிப்பு ஏறவில்லை. பள்ளிக்கூடம் போவதாகக் கூறி திரௌபதியம்மன் கோவில் குளத்துக்கப்பால் மண்டிக்கிடந்த கருவேலப் புதருக்குள் தனக்கென ஓர் இடத்தைச் சுத்தப்படுத்தி அங்கே ஓய்வெடுப்பது அவள் வாடிக்கை. பாங்கு சத்தம்தான் பள்ளி முடியும் நேரத்திற்கான அவளின் அலாரம். அந்த விளையாட்டுத்தனம் பின்னாளில் வினையாய் முடியவிருந்ததை அவள் அறிந்திருக்கவில்லை.
சீனிக்கட்டியின் அத்தாவுக்கு வாரச் சந்தை வியாபாரம். எங்கெல்லாம் சந்தையிருக்கிறதோ அங்கெல்லாம் மாடு பூட்டி புறப்பட்டுவிடுவார். ஓடியாடி உழைத்தாலும் ஒழுகும் ஓட்டுவீடு வாழ்க்கைதான்.
சீனிக்கட்டி, தன் கணவனின் தங்கை மகள் என்றாலும் வீட்டின் மருமகளாய் ஏற்க மறுக்க செல்லையாவின் அம்மாவுக்கு ஏழ்மையும் படிப்பறிவின்மையும் காரணங்கள். மனைவியின் சொல்லைத் தட்டாத தாய்மாமுவோ, சொந்தத் தங்கையின் மகளை விடுத்து, மலேசியாவில் சுகபோகமாய் வாழும் மச்சினனின் மகளை செல்லையாவிற்குக் கட்டிவைக்க இசைந்தார். இப்படியே ஆண்டுகள் உருண்டோடி இப்போது சீனிக்கட்டி செல்லையா வீட்டுத் திண்ணையில் அமரும் நாள் வரைக்கும் வந்திருக்கிறது.
“நீ வாழ வேண்டிய வீடு… வாசல்ல காவுகாத்துட்டு நிக்கிறவ… என்ன விதியோ போ..” – பாப்பாத்தி சொன்னபோது சீனிக்கட்டி அதட்டினாள், ‘ஏப்ள! வாய மூடு.. மலாயாக்காரிக்கு கேட்டுடப் போவுது, இந்தத் திண்ணையும் இல்லாம ஆக்கிடப் போறா”.
மலாயாக்காரி என்பது செல்லையா ராவுத்தரின் மனைவி. மலேசியா பிரஜை என்பதால் மட்டுமல்ல, இங்கே ஒவ்வொருவருக்கும் மூன்று வகைப் பெயர்கள் உண்டு. நிஜப்பெயர் ஒன்று. பெருமைப்படும் அளவுக்கு வைக்கப்படும் பட்டப்பெயர் ஒன்று. அவரில்லாத போது அவரை குறிப்பிடுவதற்கான சங்கேதப் பெயர்கள் சில.
பரந்த வீட்டில் விரிந்த திண்ணையை ஐந்து அடுக்கு படிக்கட்டுகள் இரண்டாய் பிரித்திருந்தது. ஐந்து படிகளைத் தாண்டினால் அபாரமான நிலைக் கதவு. அம்மம்மா உயிரோடு இருந்தவரை சீனிக்கட்டி இவ்வீட்டில் ஓடியாடி விளையாடியிருக்கிறாள். மரப்படிக்கட்டு வழியே மேலே ஏறிப்போனால் வரிசையாய் இருக்கும் மூன்று அறைகளில் ஒரு பெரியதைத் தனக்கென கற்பனை செய்து வைத்திருந்தாள். அம்மா அப்படிதான் சொல்லிக் கொடுத்தாள், “எங்கண்ணங்காரனுக்கு மூத்த மருமகளா அந்த வீட்டுக்கு நீதான் போவ. பொட்டப்புள்ளையா பொறந்துட்டன்னு ஒன்ன கைல
தூக்கமாட்டாம வீம்பு பண்ணிட்டு கெடந்தேன். எங்கண்ணேன் அப்ப ஒரு வார்த்த சொன்னான், “பொம்பள புள்ள பொறந்துடுச்சுன்னு ஏன் கண்ணு வடிச்சுட்டு கெடக்க? அப்படியா ஒன்ன விட்டுவேன்? எம் மூத்த மவன் செல்லையா என் மருமவளுக்குதான்.”
அண்ணனிடம் அப்படியொரு வாக்கு வாங்குவதற்காகப் பிறந்து அரைநாள் கூட தாண்டாத சீனிக்கட்டியைத் தீண்டவிடாதபடி தன் மகளை நடிக்கும்படி ஆட்டம் ஆட வைத்தது அம்மம்மாதான் என்பதைப் பின்னொருநாளில் சீனிக்கட்டி அறிந்துகொண்டாள்.
“நீ பால் கொடுக்கமாட்டேன், தொடமாட்டேன்னு கத்து. ஒங்கண்ணன் மனசு எறங்கிடுவான்.” எனச் சொல்லியிருக்கிறாள். சீனிக்கட்டியின் அம்மாவும் அதேபோல் நடித்து செல்லையாவின் தந்தையான தன் அண்ணனிடம் காரியம் சாதித்தாள்.
இருவருக்கும் தாயான கிழவியே அதைப் பெருமையாகவும் சொன்னாள். “செல்லக்கட்டின்னு அவனுக்கு பேரு வச்சவதான் ஒனக்கு சீனிக்கட்டின்னு பேரு வச்சேன், பேரும் சோடியும் பொருத்தமா இருக்கட்டுமேன்டு”
“நெசமாவா அம்மம்மா?”
“அடி! அக்பரம்மா தாயி கபுரு மேல சத்தியமா”
அம்மம்மாவின் சத்தியம் அப்போது தித்தித்தது. தான் கண் மூடும் காலம் வரை மகன்களிடமிருந்து மிரட்டியோ ரகசியமாகவோ நடித்தோ சலுகைகளை மகள்களுக்குக் கடத்தும் கோடான கோடி இயல்பான அம்மம்மாக்களைப் போலவேதான் சீனிக்கட்டியின் அம்மம்மாவும். இத்தகைய கள்ளக் கடத்தல்கள் தங்குதடையின்றி நடைபெறுவதற்காகவே ‘மாமியார்’ எனும் அகங்காரத்துடன் ஆட்சி அதிகாரம் செலுத்தும் அதே கோடான கோடி இயல்பான அத்தம்மாக்களைப் போலவேதான் செல்லையாவின் அத்தம்மாவும். அம்மம்மா இருந்தவரை சீனிக்கட்டியின் அம்மாவால் இவ்வீட்டில் அம்மம்மாவின் மறுநகலாக அதிகாரத்தைச் செலுத்த முடிந்தது. மாமியார் இருக்கும் வரை செல்லையாவின் அம்மாவும் தன் சுயரூபம் காட்ட முனைந்ததில்லை.
இன்னும் கிழவி சீனிக்கட்டியிடம் சொல்லியிருந்தாள், “வேறொருத்திய கூட்டியாந்தா என்னைய ஆஞ்செடுத்துப்புடுவா. நீ எம் மவன் வீட்டுக்கு வந்து செல்லையாவுக்கு பொஞ்சாதியானதும் இந்த கெழடியை அம்போன்னு விட்டுடக் கூடாது செரியா?”
“டெய்லி ஒன் தலைக்கு பேன் பாத்து, ரெண்டு காலும் அமுக்குவேன். அதுவும் அக்பரம்மா தாயி கபுரு மேல சத்தியம்”
இதெல்லாம் சீனிக்கட்டியின் ஏழு முதல் பத்து வயதில் நடந்த சம்பாஷனைகள்.
சீனிக்கட்டிக்குக் கொஞ்சம் விபரம் புரியும் வயதில்தான் செல்லையாவின் நிஜப்பெயர் ‘ரஜப் கான்’ என்பதும் தன் பெரியம்மாவின் மகளுக்கு ராசாத்தி எனச் செல்லப் பெயர் சூட்டி இதே பெயர்ப் பொருத்தக் கதையை அவளிடம் சொல்லியிருந்ததாகவும் அறியக் கிடைத்தது. அம்மம்மாவிடம் சண்டையிட்டாள்.
“யா! அம்மம்மா…! எனக்கு ரம்ஜான் பீவின்னு பேரு வச்சிருந்திருக்கலாம்ல நீய்யி..”
“ஏன்டி மதியெழந்தவளே! எம் பேரன் ரஜபு நெற பொறைல பொறந்தான், நீ என்ன ரம்ஜான் பொறையிலையா பொறந்த?”
“சரி! ரமீஸா, ரமீலான்னு பேர் வச்சிருந்திருக்கலாம்ல?”
“பொம்பள புள்ளைய கட்டிகொடுத்துட்டா அது இனி வேற வீடு. தகப்பன் வீட்லதான் பேரு வைப்பாங்க. என் பேரனுக்கு நா பேரு வச்சேன், உனக்கு ஒன் அத்தம்மாகாரி பேரு வச்சிருக்கா. பேருக்கு ஒரு பொருத்தம் இருந்தா போதும்டியே! ரெட்டப்பட ஆவாது நமக்கு. ஒத்தப்படை தான் ராசி. அந்த ராசிக்கே நீ எம் பேரனை கட்டிக்குவ பாரேன்”
சீனிகட்டி அழுதாள். “செல்லையா மச்சானுக்கு ராசாத்தியக்காவ கட்டிக் கொடுத்துட்டா?”
“ராசாத்தியோட அத்தம்மாக்காரி கட்டிக்கொடுக்க விடமாட்டாடி!
அவுக சொந்தத்துலதான் கட்டிக்கொடுப்பாக. நீதான் என் சாடை.. ராசாத்திலாம் அவ அத்தம்மா வகையறா… ஒடம்பும் நெறமும் அப்படியே அந்த வழில தான் பொருந்துது. மட்டுமில்லாம ராசாத்திக்கும் செல்லையாவுக்கும் 2 வயசு முன்னபின்ன. உனக்கும் அவனுக்கும்தான் 7 வயசு வித்தியாசம். எல்லா வகைலையும் நீதான் எம் பேரனுக்குப் பொருத்தம்.”
சத்தியங்களையெல்லாம் பொய்யாக்கிவிட்டு அம்மம்மா சீக்கிரமே இறந்துவிட்டாள்.
சத்தியத்தை நினைவூட்ட அம்மம்மாவும் இல்லை. மாமுவை முழுமையாக ஆக்கிரமித்த மாமியை மீறி அம்மாவுக்கு அவரைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்க நேக்குபோக்கு தெரியவில்லை. அவரும் ஒரு கட்டத்தில் கைவிட்டுவிட்டார்.
மாமு இறந்ததும் மாமி தன் தாய்வழி சாதிசனங்களோடு மலேசியாவிலேயே தங்கிவிட்டாள். இத்தா வீட்டில் அவளைக் கடைசியாகப் பார்த்தது. அதன்பின்னர் கணவன் வழி ஊருக்கு வருவதேயில்லை. செல்லையாவுக்கும் மலேசியாவிலேயே தாய்மாமு மகளுடன் திருமணம் முடிந்தது.
“தேவதை மாதிரி நீளமான வெள்ளக்கலரு கெவுனு மாட்டிவிட்டு மேடைல செல்லையா கட்டிக்கிட்ட பொண்ண வச்சிருந்தாங்க” எனத் திருமணத்துக்குப் போய்வந்த ஒருசிலர் ஊருக்கு வந்து சொன்ன கதைதான் சீனிக்கட்டியை வந்தடைந்தது. “கைக்கழுவ தண்ணி ஏதுன்னு தெரியாம தண்ணியாட்டம் இருந்த ஜூஸ்ஸுல கழுவினோமப்பா.” என செவன் அப்-இல் கைகழுவிய சம்பவங்கள் போல் சில ஒருமாதம் கடந்தும் ஊருக்குள் பேச்சாக இருந்தன. திருமணம் ஆகி மூன்று வருடங்களைக் கடந்திருந்தாலும் சீனிக்கட்டிக்கு ஏமாற்றத்தின் அழுகை எட்டிப் பார்க்கத் தவறவில்லை. யாருக்கும் தெரியாமல் சில காலம் அழுதாள். பின்னர் பழகிக்கொண்டாள்.
செல்லையாவுக்கு மலேசியாவில் மாமனார் தொழிலைப் பராமரிப்பதுதான் தொழில். ஆனால், வருடந் தவறாமல் ஒவ்வொரு ரம்ஜான் பெருநாளிற்கும் ஒருவாரம் முன்னதாகவே ஊருக்கு வந்துவிடுவார். தந்தைவழி உறவையும் சொந்த ஊர் மீதான பந்தத்தையும் கடைசிவரை பேணிவருவது மாமு வீட்டில் செல்லையா ஒருவர் மட்டுமே.
சீனிக்கட்டி பழங்கதைகளையெல்லாம் அசைபோட்டபடி இருந்தாள், கிழவியிடம் சத்தியம் வாங்கிய அதே திண்ணையில் அமர்ந்திருந்தபடி.
“வாங்க மக்கா! நல்லாருக்கீயளா… செத்த இருங்க துணியெடுத்துட்டு வார்ரேன்” – வந்த வேகத்தில் உள்ளே போனாள் செல்லையா ராவுத்தர் மனைவி. உள்ளே அவர்களை அழைத்து அமர வைப்பதை விடவும் வாசலில் வந்து பேசுவது அவளுக்கு இலகுவானதோ என்னவோ.
“தூங்கும்போதும் இவ்வளவு நகையோடையா தூங்கியிருப்பா? வளையல்லாம் நெளிஞ்சுடாது?” – சீனிக்கட்டி பாப்பாத்தி காதில் ஓதினாள்.
“தகடாட்டமா இருக்கு? ஒவ்வொரு வளையலும் எருமதண்டி கெடக்கு. பவுன் கூடயா இருக்கும். அதெல்லாம் வளையாது” பாப்பாத்தி கிசுகிசுத்தபோது தன் கையில் இருந்த சிவப்பு ரப்பர் வளையலைப் பார்த்தாள் சீனிக்கட்டி. நிறம் மங்கிய பாப்பாத்தியின் வளையலை விடவும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. பாப்பாத்திக்கு அறியாதவண்ணம் இலேசாய் புன்னகைத்துக்கொண்டாள்.
செல்லையா ராவுத்தர் மனைவி திண்ணைக்கு வந்தாள். சமதர்மம் பேணுவதாகத் திண்ணையில் மறு எதிர்புறம் அமர்ந்துகொண்டு துணியை நீட்டினாள்.
“முக்காக் கை வைக்கணும். இடுப்பு தெரியாம எறக்கமா வைக்கணும். இந்த துணி போதும்ல?”
“போதும்க்கா. தாராளம்”
“இருபத்தேழு ரவுக்கும் பெருநாளைக்கும் மட்டும் ஒடனே தெச்சு
கொடுத்துடு. மிச்சம்லாம் ஊருக்கு நாங்க கெளம்புறதுக்குள்ள தச்சுடுவீல?”
“தச்சுடலாம்க்கா…”
வாயால் சொல்லிவிட்டாளே தவிர அவள் உடம்பெல்லாம் முடியாது என அடாவடி செய்துகொண்டிருந்தது. வீட்டில் இன்னும் தைக்கப்படாமல் இருக்கும் ஊர்ப் பெண்களின் ரவிக்கைத் துணிகள் சபித்துக் கொண்டிருக்கலாம். சீனிக்கட்டிக்கு மறுக்க வழியில்லை. செல்லையா வருடாவருடம் கொடுக்கும் பெருநாள் பணத்தைக் கொடுக்க விடாமல் தடுத்துவிடுவாளோ என்ற பயம் அவளிடம்.
“அண்ணே ஒறங்குறாவளோ”-பாப்பாத்தி மலாய்க்காரியிடம் கேட்டாள்.
“இல்லல்ல..மச்சான், சஹர் செஞ்சுட்டு வெள்ளனமே பள்ளிக்குப் போய் தொழுதுட்டு இப்பதான் நொழஞ்சாங்க. இன்ன நேரத்துக்கு குளிச்சு முடிச்சுருப்பாக.வரச் சொல்றேன், பாத்துட்டு
போங்க. என்ன? உள்ள வேலகெடக்கு. வாறேன்!”
ஒவ்வொரு ரவிக்கைக்கும் கூடுதலாக ஐம்பது ரூபாய் வைத்து பத்து ரவிக்கைகளுக்குத் தையல் கூலியைச் சீனிக்கட்டி கையில் திணித்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டாள். ‘வேலைக்காரர்களே அவ்வீட்டில் நிறைய உண்டு, இவளுக்கு என்ன வேலை வந்துவிடப் போகிறது? இங்கிருந்து தப்பிக்க ஒரு காரணம். அவ்வளவுதான்’ சீனிக்கட்டி வெறுமையாய் உள்ளங்கைக்குள் இருந்த சலவைத் தாளைப் பார்த்தாள்.
“அந்தம்மா உன்கிட்டதான் தைக்கும்னு உனக்கு தெரியாதா? முன்னமே மத்தவள்களோடத எல்லாத்தையும் தச்சு முடிச்சு தயாரா இருந்திருக்கலாம்ல.” –பாப்பாத்தி சீனிக்கட்டியின் பார்வையைச் சலவைத் தாளிலிருந்து தன் பக்கத்திற்கு மீட்டாள்.
“ஈசியா சொல்லிட்ட. ஒளையுற கால வச்சு எவ்வளவுதான் மிதிக்க…? ஒழுங்கா படிச்சிருந்தா சத்துணவு வேலைக்குக் கூட போயிருக்கலாம் போல. என் முட்டாத்தனம்! முன்ன மாதிரி ஒடம்பு ஒத்துழைக்கிறதில்ல. நல்ல நாள்லையே வேலைக்குப் போவமாட்டான், இப்ப முட்டி வரை காலெடுத்துட்டு கெடக்கான் எம் புருசன். அவனுக்கு முன்னாடியே நா போயிடுவேன் போல”
“அடி நல்லவளே! நெறஞ்ச நாளதுவுமா என்ன பேச்சுப் பேசுற? எந்த மலக்காவது ஆமீன் சொல்லிடப் போவுது.நீ போயிட்டா ஒம் புள்ளைகள கரையேத்துறது யாரு? கூட காசு கொடுக்குதுல மகராசி. நோவாம ஜாக்கெட்டுக்கு காசு எஸ்ட்டா கெடைக்குதுல போதாதா?”
மடமடவென பொழிந்த பாப்பாத்தியிடம் வெளிப்படையாய் ஏதும் சொல்ல முடியவில்லை. சீனிக்கட்டி மீண்டும் தன் வளையலைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
உருவம் வரும் முன்னதாகவே அத்தர் திண்ணைப் பகுதியை வந்தடைந்தது. நிஜமாய் காலையில் சீனிக்கட்டி நாசிக்குள் நினைவூட்டிய, கோழியாணம் எனும் பொய்ப் பெயர் கொண்ட அதே அத்தர் வாசனைதான்.
“அட ஏம்மா வெளியே நிக்கிறீய.. உள்ளாற வாரதுதானே?” எனச் செல்லையா அதட்டியபடியே வெளியேதான் வந்தார். உள்ளிருந்தபடியே அதட்டியிருந்தாலும்கூட வீட்டுக்குள் போகும் எண்ணம் இரு பெண்களுக்கும் இல்லாதிருந்தது.
“இருக்கட்டும் மச்சான், காத்தாட நல்லாருக்கு. நீங்க சொவமாயிருக்கீயளா?”
“இருக்கேன் சீனி! நீ எப்படியிருக்க?”
“இருக்கேம் மச்சான்”
பாப்பாத்தி பக்கம் தலையைத் திருப்பினார் செல்லையா.
“பாப்பாத்தி சவுரியமா? ஒம் மகனுக காசு பணம் அனுப்புறாய்ங்களா”
“அண்ணே இருக்கேன்ண்ணே… எம் புள்ளையளும் நல்லாருக்காய்ங்க ண்ணே”
அடுக்கி வைக்கப்பட்டு மொத்தமாக முடிச்சிடப்பட்ட பணக் கவர்களை சீனிக்கட்டியிடம் நீட்டினார்.
“இதுல ஒரு கவர் ஒனக்கு. யார் யார்க்கு கொடுக்கணுமோ கவர் மேலையே எழுதியிருக்கேன்.
நீ பாத்து கொடுத்துடு. வேற யாரும் கஷ்ட்டப்படுதுகன்னா சொல்லு, அவங்களுக்கும் கொடுக்கலாம்.”
அவ்வளவுதான் செல்லையா தரிசனம் காணக் கிடைத்தது சீனிக்கட்டிக்கு. அதற்கு மேல் அந்தத் திண்ணையில் அமரும் உரிமையை இழந்தவள் மனம் முழுக்க மகிழ்ச்சியோடு புறப்பட்டாள்.
“இத என்கிட்டையே கொடுத்துவிட்டிருந்திருக்கலாம். ஒன்ன
பாக்கணுமாமாம். எப்படி வரவச்சாரு பாத்தீயா? ஆப்பிள் பழமாட்டம் பொண்டாட்டி பக்கத்துல இருந்தும் ஒன்னைய பாக்கணும்னு கூப்டு விட்டிருந்திருக்காரு பாரேன்”
வழி முழுக்க கிண்டலடித்துக்கொண்டே வந்தாள் பாப்பாத்தி.
“அதான் சொல்லிட்டீயே ஆப்பிளாட்டம் இருக்கான்னு.. ஊதிவிட்டா பொட்டுன்னு சரிஞ்சுடுவேன். என்னைய ஏன் பாக்கப் போறாரு.. நீ வேற.. மச்சானுக்குத் தோளுக்கு மேல வளந்து நிக்கிதுக அவுருட்டுப் புள்ளைக. கொமரை
கரையேத்துற வயசுல நா இருக்கேன். கேலிக்கும் அவளவில்லையா ஒனக்கு. சும்மாயிருவேன். எவ காதுலையாது விழுந்திட போவுது. வெசமா இருக்காளுக ஒவ்வொருத்தியும்.” -பொய்யாகவேனும் தடுக்கும் கடமை சீனிக்கட்டியிடம் இருந்தது. கிண்டலிலாவது செல்லையாவுக்கு ஜோடியாக இருப்பதை மனம் கொண்டாடவே செய்தது. அந்தக் கொண்டாட்டமும் வீடு நெருங்க நெருங்கப் பதற்றமாகிப் போனது.
“ஏன் ஒம்மச்சான் படுக்கக் கூப்டானுக்கும்? அப்படியே எல்லாத்தையும் போட்டது போட்டபடி ஓடிட்ட..”
“சீழு புடிச்ச காலு போல நாக்கும் அழுகிப் போவட்டும். பாத்து பேசுங்க.”
“ஓஹ்! ஒழுக்க வேசம் போடுறீயளோ…?”
“என்ன வேசம் போடுறாக! செய்ற ஒதவிய தெரியாம செய்யணும்னு
நெனைக்கிறாக செல்லையா மச்சான். அது சாதிசனம் தானே என் தாயிபுள்ளைக. அதுனால எம்மூலியமா இல்லாதபட்டதுகளுக்கு பெருநா காசு கொடுத்துவிடுது. ஏன் ஒரு நல்ல மனுஷன இந்த நரம்பில்லாத நாக்க வச்சு இம்புட்டு இழிவுபடுத்துறீரு.”
“ஒம் மச்சாங்காரன் இங்கே வந்து கொடுத்திருந்தா நா ஏன் கேக்கப்போறேன். ஏன், எம்முன்னாடி வச்சு ஒன்னைய ரசிக்க சங்கடமா இருக்குமோ…?”
பாப்பாத்திதான் வேகவேகமாகச் சமரசம் செய்ய இடையில் நுழைந்தாள்.
“அண்ணே.. அண்ணே.. நோம்புகாரிய இப்டிலாம் ஏசாதீக! கூட நானும்தான் போனேன். சீனி மேல பழி சொல்லாதீக.”
“இல்ல தங்கச்சி! எனக்கும் கோபம் இருக்கும்ல. ஒருதடவ கூட அந்தாளு என்ன ஏதுன்னு கேட்டு என் வாசலுக்கு வந்ததில்ல. இவ மட்டும் அவர் கூப்டுவிட்டதும் ஓடியோடிப் போறா”
“இந்த சந்துக்குள்ள அவுக கார் வருமா? இந்த சாக்கடை, நாத்தம் தாண்டிதான் அவுகளுக்கு வரதுக்கு
பழக்கம் இருக்கா? நியாயமா பேசணும். அது கொடுக்குற காசுலதான் கொஞ்சநாளைக்கு உங்களுக்கு கஞ்சி ஊத்துறேன். உம்ம
ஒடம்புலையும் ஒம் புள்ளைய ஒடம்புலயும் ஓடுற உசுருல பாதி எம் மச்சானோட சக்காத்துப் பணம். அந்த நன்றிக்காவது நாக்க அடக்கிப் பேசு”
செல்லையாவுக்கு இப்படிதான் அடிக்கடி சீனிக்கட்டி வக்கீலாக மாறிவிடுவாள்.
வாசலிலேயே காத்திருந்த பாப்பாத்தியிடம் சொன்னாள், “ஒடம்புல தெம்பிருந்த நேரத்துல ஒழைக்கப் போக வக்கில்ல… காலு போயி முடங்கி கெடந்தும் பொன்டாட்டி மேல
எம்புட்டு அதிகாரம் காட்டுறியான் பாத்தீயா?
“விடுளா! காதுல விழட்டும்னே வேகமா பேசுறீயாக்கும். மனசு பாடுப்படப் போவுது”
“ஏன் எம் மனசு பாடுபடுறதுலாம் தெரியாதாக்கும் இவனுக்கு. படுத்து எந்திரிச்சு வரத் தெரிஞ்சா நா ஏன் இவன வச்சு இன்னும் பாத்துட்டு கெடக்கேன். சொத்து பத்து இல்லைன்னுதான் என் தாய்மாமு பொண்டாட்டி என்னைய
வேணாம்னா. கட்டிக்கிட்டவனாச்சும் என்னைய ஒழுங்கா வச்சிருப்பான்னு நம்பி வந்தேன். இவனுக்கும் சேத்து நா கஞ்சி ஊத்திட்டு கெடக்கேன். கொண்டான் தொணையிருந்தா கூரைலையும் ஏறி சண்ட புடிக்கலாமாம். இவன கட்டிட்டு சண்ட போட வேணா என்னைய பிச்ச எடுக்கவிடாம இருந்தா போதாதா..
அதுக்கும் வழிய பண்ணிட்டு மொடங்கி கெடக்கான். என்னைய பாத்து என்ன வார்த்த பேசுறான்?”
கணவன் காதுக்கும் எட்டும்படி சத்தமாகவேதான் கொட்டித்தீர்த்தாள் சீனிக்கட்டி. இவ்வளவு கொதிப்புடன் பேச வைத்தது அவள் கணவன் அல்லன் என ஏளனமாய் சிரித்துக் கொண்டது சிவப்பு ரப்பர் வளையல்.
ஒரு வருடம் கழிந்தது.
அடுத்த பெருநாளிற்குள் சூழல் பாதி மாறியிருந்தது. சிறியதாய் இருந்த புண் கால் எடுக்கும் அளவுக்கு மாறி, அப்போதும் சரியாகாததால் அந்த ரணத்திலேயே மரணித்துப் போனான் சீனிக்கட்டி கணவன். மகனுக்கு இன்னும் ஒரு வருடப் படிப்புண்டு. மகள் வயதுக்கும் வந்துவிட்டாள்.
காலின் உளைச்சலை மீறியும் சீனிக்கட்டி வேகமாய் தையல் இயந்திரத்துடன் மிதித்துப் போராடினாள்.
“ஏய் சீனிக்கட்டி… இன்னும் நீ போயி செல்லையா மச்சான பாக்கலையா? அவர் வந்து நாலு நாளாச்சே.”
“ம்!”
“என்ன ம்? ஒனக்கொரு கவரு கொடுத்திருக்காரு. யார் யாருக்கு கொடுக்கணுமோ அதெல்லாம் எழுதி வச்சிருக்காராம். கொடுத்துடுவீயாம்”
“ம்”
“ஒம் புருசன் எறந்ததுக்கு வருத்தப்பட்டாரு. கவர்ல எக்ஸ்ட்ரா பணம்
வச்சிருக்குறதா சொன்னாரு. ஏதாச்சும் தேவைன்னா கேப்பீயாம்.”
“மலாயாக்காரி ஜாக்கெட் கொடுத்து விட்டு நாலு நாளாச்சு. நேத்தே தச்சுட்டேன். ஒன்னு செய்யி! எக்ஸ்ட்ரா அந்தம்மா கொடுத்த தையக்கூலியை மம்பாத்து கெழவிட்ட என்னோட சதக்காவா கொடுத்துடு. கெழவிய பாக்குறப்ப என் அம்மம்மாவ பாக்குறாப்ளையே இருக்கு. மலாயாக்காரிகிட்ட தைச்ச ஜாக்கெட்டை கொடுத்துடு. எனக்குள்ள பணக் கவரை மச்சான்கிட்டையே திருப்பி கொடுத்துடு.”
“ஏ லூசா நீ.. வீடு கெடக்குற நெலைல… கொமர வச்சிருக்க! என்ன நெனச்சுட்டிருக்க? காச திருப்பிவிடுற?”
“நா இத்தால இருந்தப்ப போன் போட்டு கூட மௌத் விசாரிக்கல, சரி! இம்புட்டு காலமாச்சுல? அவர் வந்து நாலு நாளாச்சுல. வீட்டு வேலக்காரிய வுட்டு சட்டத்துணி கொடுத்துவிடத் தெரிது மலாயாக்காரிக்கு, ஆள்விட்டு என்னைய கூப்டுவிடத் தெரிது மச்சானுக்கு. ஆனா, புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் மௌத் விசாரிக்கக் கூடவா என் வீட்டுக்கு வர வழி தெரியாது? எப்பவும் இல்லாதப்பட்டவங்க தான் எறங்கி போவணுமா? நா செல்லையா ராவுத்தர மச்சானாதான் பாத்தேன். அவர் என்னைய பக்கீர்ச்சியா பாத்திருக்காரு போல. எனக்கு இந்த சக்காத்து பணம் இனி வேண்டாம்.”
“அண்ணே கேட்டா என்ன சொல்ல?”
“மவங்காரன் வேலைக்குப் போக ஆரம்பிச்சுடுவான். இனி சக்காத்து வேணாம்னுச்சுன்னு சொல்லிடு”
பாப்பாத்தி பேச முடியாமல் அப்படியே திண்ணையில் உட்கார்ந்துகொண்டாள்.
அடுத்த ஊதாப்பூ நிறம் ரவிக்கைக்கு நூல்கண்டு தேட டப்பாவைத் திறந்த போது மங்கிப் போன சிவப்பு ரப்பர் வளையல் மட்டும் சீனிக்கட்டியிடம் வாய் திறந்து கேட்டது, “பக்கீர்ச்சிக்கு இம்புட்டு ரோசம் தேவைதானா?”