இணைய இதழ்இணைய இதழ் 102சிறுகதைகள்

எல்லாம் சரிதான் – இத்ரீஸ் யாக்கூப்

சிறுகதை | வாசகசாலை

செல்வக்குமார் அண்ணன் எண்ணிலிருந்து அழைப்பு வர, நாளைக்குத்தானே தீபாவளி…? நலம் விசாரிக்க, வாழ்த்து சொல்ல.. வழக்கமா அப்போதுதானே ஃபோன் பண்ணுவார்… இப்போது ஏன் கூப்பிடுகிறார்..? என்னவாக இருக்கும்? என்ற கேள்விகளுக்கும் யோசனைகளுக்கும் மத்தியில் அல்லாடிக் கொண்டிருந்த குழப்பங்களோடே அழைப்பை எடுத்தேன்.

“சுந்தரு..! நாந்தான் மாமா பேசுறேன்… எப்டி இருக்க? ஒரு வேலை விசயமா துபாய் பக்கம் வந்திருக்கேன்… சட்டுன்னு வர வேண்டியதா போச்சி.. நல்லாருக்கியா?” அது என்னுடைய பெரிய மாமா அதாவது மூத்த அக்காவின் கணவர். செல்வக்குமார் அண்ணனுக்கு பால்யகால நண்பர். இப்படி படபடவெனப் பேசுவது அவரது இயல்பு.

பல நேரங்களில் அவருடைய அந்த வெள்ளந்தி்ப்பேச்சும், சிரிப்பும், உறவுப் பாராட்டும் பரந்த மனமும் அறியாதவரிடத்திலும் முதல் சந்திப்பிலேயே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிடுமென்றாலும், எதிர்பாராத சந்தர்ப்பங்களில் அதுவே பல சங்கடங்களிலும் அவர்களைச் சிக்க வைத்துவிடும்.

எங்களுக்கு எல்லாம் பழகிவிட்டது! ஏதோ என் அக்காவின் சமர்த்தியத்தையும் சகிப்புத்தன்மையையும் வைத்துதான் அவர் பிழைப்பு ஊர் உறவு மத்தியில் ஓரளவு கவுரவமாக ஓடிக் கொண்டிருக்கிறது! இல்லையென்றால் அவருடைய ஓட்டை வாய்க்கும், கணக்கில்லாமல் கண்டவரிடத்திலும் ஒட்டுறவாடும் போக்கிற்கும் இன்னும் கூட அவரைச் சார்ந்தவர்கள் அல்லாட வேண்டியிருந்திருக்கும்.

ஆனாலும் குணத்தில் தங்கமானவர். அதனாலேயே நானும், அக்காக்களும் சில நேரங்களில் அவரால் முன்ன பின்ன எது நடந்தாலும் அனுசரித்து சென்றுவிடுவோம். மாமா ஓமானில் கெட்ச் அப், மயோனைஸ் தயாரிக்கும் கம்பெனியொன்றில் ப்ரொடக்ஷன் சூப்பர்வைசராகப் பணிபுரிந்து வருகிறார்.

நான் அபுதாபி பக்கம் எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்கள் கையாளும் நிறுவனமொன்றின் பிரதான அலுவகத்தில் ஆபிஸ் பாயாக இருக்கிறேன். மாமா வேலை செய்யும் நிறுவனத்தின் கிளை துபாயிலுமிருப்பதால் பணி சார்ந்து எப்போதாவது இந்தப் பக்கம் அவர் வந்து செல்வதுண்டு.

“நான் நல்லாருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீய? அக்கா, பிள்ளைக எல்லாம் நல்லா இருக்காவோளா..?”

“அவுகளுக்கெல்லாம் என்ன.. எல்லாரும் நல்லாத்தான் இருக்காவோ. நா இப்ப செல்வக்குமாரு எடத்துலதான் இருக்கே(ன்). நாளைக்கு லீவுதானே இந்த பக்கம் வாவேன், உன்னயும் பாத்து நாளாச்சி..!”

பொதுவாக இங்கே அதாவது அமீரகத்தில் தீபாவளிக்கென்று விடுமுறையெல்லாம் கிடையாது. ஆனால், எங்கள் அலுவலகம் போன்று சில இடங்களில் மட்டும் அரை நாளோ முழு நாளோ சிறப்பு விடுப்பு தருவதுண்டு. அது மேலதிகாரிகளின் செல்வாக்கு மற்றும் இங்குள்ள அரபிமார்களின் ஒத்துழைப்பையும் பொறுத்து ஒவ்வொருவருக்கும் அமையும்.

பெரும்பாலும் நான் எங்கேயும் செல்லாமல் செக்கு போல் இருக்கும் இடத்திலேயேச்சுற்றிக் கொண்டிருப்பவன் என்பதால் அவர் வரச் சொன்னதும் முதலில் தயங்கினேன்தான். அது வழக்கமான தயக்கம், சோம்பல். ஆனால், மனுசன் இவ்வளவு பாசமாகக் கூப்பிடுகிறார்… போய்த்தானே ஆக வேண்டும்! எனக்கும் கூட கொஞ்சம் நன்றியுணர்வு வேண்டுமென என்னை நானே கடிந்தும் கொண்டேன்.

ப்ளஸ் டு படித்துவிட்டு பேருக்கு ஏதோ உள்ளூர் கடைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவனை, தன் காசில் விசிட் விசாவில் இங்கே எடுத்தது மட்டுமல்லாமல், இதோ நான் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேலை கூட அவருடைய பழக்க வழக்கத்தினால் வாய்த்ததுதான். மேலும் அவரைப் பார்த்தும் எனக்கும் கூட நாளாகிவிட்டது.

“சுந்தரு… நாந்தான் செல்வக்குமாரு…” செல்வக்குமார் அண்ணன், போனை வாங்கி பேசத் துவங்கினார். என்னை இன்று மாலையே கிளம்பி வரும்படி மிகவும் கேட்டுக் கொண்டார். கூடவே என்னுடைய பால்ய நண்பன் மகேசும் அங்கே வரவிருப்பதாக எனது சலிப்பு சுபாவம் அறிந்து தூண்டில் போட்டுப் பார்த்தார். அவனும் கூட என்னை போல் ஒரு கம்பெனியில் சாதாரண பணியிலிருப்பவன்தான். அதனாலேயே எங்களுக்குள் பல விசயங்களில் இயல்பாகவே ஒரு ஒத்திசைவு இருக்கும். பேசிக்கொள்ளவும் ஆயிரம் சங்கதிகள் எங்களுக்குள் பொதுவிலுண்டு.

இனி வேறு வழியில்லை… போய்த்தான் ஆக வேண்டுமென முடிவெடுத்தவன், அனைவரையும் சந்திக்கவிருக்கும் உற்சாகத்தில் நிலைகொள்ளாமல் நின்றும், அமர்ந்தும், ஓடியும் எனது பணியிடமான ஆஃபிஸ் கிச்சனிலேயே பரிதவிப்போடு நேரத்தை மெல்ல மெல்லக் கடத்தத் துவங்கினேன். அரைமணிக்கொருமுறை வரக்காப்பியோ, காவாவோ (அது சீனி சேர்க்காத வரக்காப்பி மாதிரி இருக்கும்) கேட்கும் அரபிகள் அன்று பார்த்து எனக்கு வேலைகள் அதிகம் வைக்கவில்லை.

அடுத்த நாள் தீபாவளி என்பதால், மதியம் இரண்டு மணி வாக்கில் எல்லோருக்கும் விநியோகிக்க சுவீட் பாக்சுகள் ஒரு பெரிய அட்டைப்பெட்டியில் கட்டப்பட்டு வந்திறங்கின. அதில் ஒரு மணி நேரம் வரை சென்றது. கொடுக்கும்போது அரபிகள் முதற்கொண்டு ஆஃபிசில் பெரும் எண்ணிக்கையிலிருந்த மற்ற நம்மூர்… அதாவது நம் நாட்டு ஊழியர்களிடமிருந்தும் ‘ஹாப்பி தீவாளி!’ வாழ்த்து பெற்றுக் கொண்டிருந்த மகிழ்ச்சித் தருணத்தில் வழக்கத்திற்கு மீறி கடலலைகள், கரையின் உடலை பல அடிகள் வரை முன் சென்று ஆரத் தழுவியது போன்றுணர்ந்தேன். ஆமாம்.. அவ்வப்போது இப்படி கவிதை போலும் எண்ணங்கள் எழுவதுண்டு. நான் சொன்ன உவமையை நீங்கள் கவிதை என்று நம்புவீர்கள்தானே?! 

கம்பெனி வண்டி வர ஆறு மணியாகும். அதிலிருந்து மீண்டும் கேம்ப் (தங்குமிடம்) சென்று திரும்பி, முஸ்ஸஃபா (Mussafa) பஸ் ஸ்டேஷனுக்கு வருவது சிரமமான காரியமென்பதால் ஐந்தரை மணிக்கு செல்பவன், நான்கு மணிக்கே அனுமதி கோரிப் பார்த்தேன்… இன்று அனைவருமே நல்ல மனநிலையில் இருந்திருப்பார்கள் போலும்.. மேனேஜரின் முகத்தில் உடனே பச்சை விளக்கு ஒளிர்ந்தது.

இருப்பினும் அங்கு க்ளீனிங் வேலை செய்யும் நேபாளி ஒருத்தனை ஆத்திர அவசரத்திற்கு எதுவும் தேவையிருப்பின் அவர்களுக்கு உதவுமாறு தயார் செய்துவிட்டு, அதற்காக அனுமதி கொடுத்த மேனேஜரிடமும் நல்ல பேர் வாங்கிக்கொண்டு அங்கிருந்து என் பங்கு ஒரு பாக்ஸ் சுவீட்டோடு பாலை மணலிலிருந்து புறப்படும் விமானம் போல் றெக்கைகள் கட்டிப் பறக்கலானேன்.

எல்லையை அடைந்ததும் தரைத்தட்டி, ‘டக் டக்’கென குதிரை வேகத்தில் அறைக்குள் விரைந்து வந்து, அதே மின்னல் வேகத்தில் பரபரவெனக் குளித்துத் தயாராகி, மீண்டும் பேருந்து நிலையம் நோக்கி ஓடினேன். நல்ல கூட்டம் வேறு! ஒரு வழியாய் அபுதாபியிலிருந்து துபாய்க்குப் புறப்பட மணி ஏழை நெருங்கி விட்டது! இதற்கிடையில் மாமா, செல்வக்குமார் அண்ணன் நம்பரிலிருந்து குறைந்தது பத்து முறையாவது கூப்பிட்டிருப்பார்.

மீண்டும் இரண்டு மணி நேர பயணத்தில் பர் துபாய் – அல் குபைபா (Bur Dubai, Al Ghubaiba) பஸ் ஸ்டேஷனில் இறங்கும்போது மணி ஒன்பது! அமீரகத்தின் மற்ற நகரங்களிலிருந்து துபாய்க்கு தரை வழியாக வருவோர், புறப்படுவோர் பர் துபாய் பேருந்து நிலையத்தைத்தான் அடைவார்கள். பசி வேறு கொஞ்சம் கொஞ்சமாய் கிள்ள ஆரம்பித்திருந்தது. ஆபிசில் கொடுத்த சுவீட் பாக்ஸ் கையிலிருந்தும் திறக்க மனமில்லை. செல்வக்குமார் அண்ணன் அறைக்குச் சென்றதும்தான் பிரிக்க வேண்டும்!

சொல்ல மறந்து விட்டேனே… நல்ல வேளையாக பஸ் ஸ்டேஷனிலேயே வந்து அழைத்துக் கொள்வதாக செல்வக்குமார் அண்ணனே கூறியிருந்தார். ஆனால், அவரிடம் வண்டி இல்லையே… என்று இழுக்குமுன் லைசென்ஸே இல்லை என்ற நினைப்பு வந்து அவரை நினைத்து சிரித்துக் கொண்டேன். ஒரு வேளை அவர்கள் அறை நண்பர்களில் யாரிடமாவது காரிருக்கக் கூடும். அவர்களுடன்தான் வரக்கூடுமென அனுமானித்தேன்.

சொகுசாக ரூம் சென்று விடலாமென்ற எனது சடுதி சந்தோசத்தை சற்று பாழ்படுத்துவது போல் மகேசிடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது…

அவனுக்கு இன்றிரவு செல்வக்குமார் அண்ணன் அறைக்கு வர முடியாதாம்; எங்களோடுத் தங்க முடியாதாம். நாளை காலை அல்லது அதையும் விட்டால் மதிய நேரம்தான் வருவானாம். காரணம் செல்வக்குமார் அண்ணன் அறையில் காலி பெட் ஏதுமில்லையாம். பொதுவாக தனது கம்பெனி கெஸ்ட் ஹவுசில் தங்கும் எனது மாமா இம்முறை தனது கூட்டாளி அறையிலேயே கழிப்பதென முடிவு செய்துவிட்டாராம்.

நான் வேறு போகிறேன்… இடம் பத்தாதுதான். இதுபோன்ற சிக்கல்கள் இங்குள்ளவர்களுக்கு புதிதில்லை. அதனால்தான் இருப்பிடத்தை விட்டு எங்கும் நான் நகர்வதில்லை. அப்படியே செல்ல நேர்ந்தாலும் இரவுக்குள் திரும்பி விடுவது எனது பழக்கம். சூழலைப் புரிந்து கொண்டு ‘சரிடா நாளைக்கு காலையிலேயே வந்திரு!’ என்று வருத்தத்துடன் போனை வைத்து விட்டேன். புறாக் கூண்டு போன்ற அடுக்கடுக்கான பெட் ஸ்பேஸில் எத்தனை பேர்தான் அடைவது!

புதுக்கோட்டையிலிருந்து சென்னை வந்தது போன்றிருந்தது நானிருக்கும் இடத்திற்கும் துபாய் மாநகருக்குமான வித்தியாசம்… இரவு நேரத்திலும் எவ்வளவு பிரகாசம்! என்னைச் சுற்றி எதையும் சற்றும் கூட பொருட்படுத்தாதது போன்று மக்களின் ஓட்டமும், பரபரப்பும்! நானிருப்பதும் அதே நாட்டில் மற்றொரு பகுதியே என்றாலும் பேருந்திலிருந்து இறங்கியவனுக்கு சில நொடிகளுக்கு வேற்று கிரகம் போன்றுதான் காட்சியளித்தது. நம்மூரிலும் கூட ஒரு நகரத்திலிருந்து இன்னொன்றிற்கு தொலை தூரம் பயணம் செல்லும் இரவுகளில் இந்த அனுபவங்களைக் கொண்டிருப்போமல்லவா?

செல்வக்குமார் அண்ணனுக்கு அழைத்தேன். வண்டி நிற்குமிடத்தை சொன்னார். நடக்கும் தொலைவுதான். நெருங்க நெருங்க மாமாவின் பாசக்கார வெள்ளந்தி முகம் முன் சொன்ன விளக்கொளியையெல்லாம் தோற்கடித்தபடி நின்றது. கூடவே செல்வக்குமார் அண்ணனும்… அவர்களுடன் இன்னொரு ஆள்… அது சுதாகர்?! பார்த்த மாத்திரத்தில் எனக்கு பக்கென்றது. நெடு நாள் கழித்து நேருக்கு நேர் பார்க்கிறேன்…

தோற்றத்தில் ஆள் நிறைய மாறிப் போயிருந்தான். என்னைப் பார்த்ததும் ஒரு சகஜமான பார்வையை வீசினானே தவிர, கை கொடுத்து பேசவெல்லாம் முயலவில்லை.

அது அவனுடைய சுபாவம்தான். என்றைக்குமே என்னை அவன் மதித்ததில்லை. எனது குதூகலங்களனைத்தும் பாலை மணலில் விழுந்த சொற்பத்துளிகளாய் எங்கோ குழித்து மறைந்தன. பவுர்ணமி இரவில் கிரகணம் சூழ்ந்தது போல் எனது முகம் சோம்பிப் போயிற்று! அப்படியேவா காட்டிக் கொள்ள முடியும்? மாமாவிற்காக சிரிப்பை வரவழைத்துக் கொண்டேன். பார்க்க ஸீரோ வால்ட் பல்பு போல இருந்திருக்கும்!

மாமாவிற்கு என்னைக் கண்டதில் மகிழ்ச்சிதான் என்றாலும் அதன் பக்க விளைவாக எப்போதும் போல அவருடைய சிறுபிள்ளைத்தனங்கள், பாச மழை வேடிக்கைகள் அனைத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.

சுதாகரின் இருப்பில், என்னால் யாரோடும் முழுமையாக அண்ட முடியவில்லை. மாமா மீதும் செல்வக்குமார் அண்ணன் மீதும் எனது ஒட்டு மொத்த கோபமும் அதிருப்தியும் திரும்பியது. எனக்குள் மனச்சீற்றங்கள் மூண்டு, போர்க்களம் போல் உருவெடுத்துக் கொண்டிருந்தது. நூறு நாட்கள் அடைக்கப்பட்டிருந்த அறையொன்றில் நுழைந்தவன் போல் நூலாம்படை தூசுகளால் மூச்சுத் திணறினேன்.

சுதாகரிடமிருந்து வெளிப்பட்ட ஓரப்புன்னகையும், அர்த்தப் பார்வையும் எனது தடுமாற்றங்களைக் கண்டு அவன் இரகசியமாய் இரசிப்பது போன்றிருந்தது. மாமா, செல்வக்குமார் அண்ணனின் பரஸ்பர, சம்பிரதாய நலம் விசாரிப்புகளுக்கு பின், ‘சரி கிளம்பலாமா?’ என்று அவர்கள் சுதாகர் பக்கம் திரும்பியதும், டிரைவர் இருக்கையில் அவன்தான் அமர்ந்தான். காரும் அவனுடையதாகவே இருக்க வேண்டும். நல்ல பெரிய பகட்டான கார். அதன் பேரெல்லாம் எனக்குத் தெரியாது. அதன் மீதெல்லாம் ஆர்வங்கள் எப்போதும் எனக்கு இருந்ததில்லை.

மாமாவும், செல்வக்குமார் அண்ணனும், சுதாகரும் ஒருவரையொருவர் தொடர்ந்து கலாட்டாக்கள் செய்து கொண்டும், கதைகள் பேசிக்கொண்டும் காருக்குள் ஒரே ரகளையாகக் கிடந்தது. அவன் வயசென்ன இவர்கள் வயசென்ன? காரில் கசமுசாப்பாட்டொன்று கில்லி எஃஎம் வழி ஓடிக்கொண்டிருக்க, ஒரு வயதுக்காரர்கள் போல உச்ச ஸ்தாயில் ஒத்துப் பாடிக்கொண்டும், சரிக்கு சரி கும்மாளமடித்துக் கொண்டும் வந்தது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

இதற்கிடையில் ‘நீயும் சேர்ந்து பாடு!’ என்கிற மாமாவின் அந்த அலும்பு உண்மையிலேயே எனக்கு எரிச்சலைத்தான் மூட்டியது. என்ன மனுசன் இவர்? என்னதான் கலகலப்பான ஆள் என்றாலும் அதற்காக இப்படியா ஒருத்தன் வயசு வித்தியாசம் பார்க்காமல் இஷ்டத்திற்கு ஆட்டம் போடுவான்?

சரி, முதலில் யார் இந்த சுதாகர் என்று சொல்லிவிடுகிறேன். சுதாகர், மாமாவிற்கு ஒன்றுவிட்ட அக்காள் மகன். அந்த வகையில் எனக்கும் சொந்தம்தான். இன்னோர் புறம் பள்ளிக்காலங்களில் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்தவன் கூட.

ஆனாலும் என்னோடு அவன் என்றைக்குமே நெருக்கம் பாராட்டியதேயில்லை. அவனைப் பிடிக்கும் என்றாலும் பிடிக்காதும் கூட. பின்னொரு நாளில் அவனை வைத்து எதார்த்தமாக கவிதையொன்றும் எழுதினேன். அந்த அளவிற்கு அவன் என்னுடன் பழகாததும், பேசாததும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

படிப்பளவில் எனக்கு பத்தாம் வகுப்பு வரை நன்றாகத்தான் சென்றது. பொதுத் தேர்வுகள் முடிந்த போது இரண்டு அக்காக்களும் திருமணத்திற்காகக் காத்திருந்தார்கள். அப்பாவின் வருமானம் போதவில்லை என்றாலும் அந்த சூழலிலும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒரு பெருத்த மௌனத்தோடேயே அவர் உதவி நீடித்தது. இத்தனைக்கும் விடுமுறை நாட்களில் வயல் வேலைகளுக்கும் செல்வேன். பிறகு எனக்கே கூட மேற்கொண்டு படிக்க எண்ணம் வரவில்லை. குடும்பச் சூழல் வேறு ஏதாவது நல்ல வருமானமுள்ள வேலைக்குச் சென்று, பொறுப்புகளில் பெற்றவருக்கு துணை நில் என்றது.

சுதாகர் சுமாராத்தான் படிப்பான். நல்ல வசதியான குடும்பம், கடமைகள், கஷ்டங்களென்று அவனுக்கு எதுவுமில்லை. அவனுடைய அப்பாவிற்கே அந்த நிலைமையில்லை.

பூர்வீக சொத்துகள் இன்னும் கூட இரண்டு மூன்று தலைமுறையை வீட்டில் உட்கார வைத்து காப்பாற்றும் என்கிற அளவிற்கு வயற்காடுகள், வாடகை வீடுகளென அங்குமிங்கும் பெருத்தோடிக் கிடந்தன. மேலும் அவர்களது ரைஸ் மில் மூலம் கிடைத்து வந்த வருமானங்களும் செல்வநிலையை தொடர்ந்து மார்கழி – தை மாதங்களை போல நல்ல செழிப்புடனே வைத்திருந்தன.

சுதாகர் ஆசைப்படி கல்லூரியில் சேர்ந்தான். அப்போதுதான் அவனுடைய போக்குகள் ஊருக்குள் தனித்துத் தெரிய ஆரம்பித்தன. தொடக்கத்தில் பேருந்தில் சென்று வந்தவன், சில மாதங்களில் பளபளப்பான பைக்கிற்கு மாறினான். அந்நேரங்களில் நானோ சைக்கிளிலோ, நடந்தோ அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பேன். சில நேரம் மாடுகளோடும், சில வேளைகளில் அப்பாவோடும். அவ்வேளைகளில் வழியிலேதும் கண்டால் ஏளனமாய் சிரிப்பது போல் ஒரு கீழ்மையான பார்வையொன்றை வீசிச் செல்வான். ஏன் என்று சொல்லத் தேவையில்லை. வேறு என்ன எல்லாவற்றிற்கும் காரணம்… பணம்தான்! அது செய்ய வைக்கும் பரிகாசம்தான்.

அப்படி நினைக்கும்போதே பேரலையைப் போல சுவாசம் எழுந்து அடங்கும். சட்டென எங்காவது அவனை நேருக்கு நேர் காண நேர்ந்தால் சுவாசக்குழல்கள் அடைப்பது போல் மூச்சுத் திணறும். ஒரு வேளை என்னோடு நன்றாகப் பழகியிருந்தால் அப்படிப்பட்ட மன நெருக்கடிகள் நிகழ்ந்திருக்காதோ என்னவோ! அல்லது அவை எனது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுகளா?!

சொல்ல வந்தது அது மட்டுமல்ல. பெரிய தனுசு, சிம்புன்னு மனசுல நினைப்பு அவனுக்கு. காலேஜ் போன கொஞ்ச நாளிலேயே காதல் விவகாரத்திலும் சிக்கினான். அந்த நேரத்தில் ஊர் முழுக்க அங்குமிங்கும் முணுமுணுப்பாக சில நாட்கள் அதே பேச்சாகத்தான் கிடந்தது. அவனுடைய அப்பா, இதற்காகவே கல்லூரிக்கு சில முறை தனது அருமை மகனைக் கடிந்து கொண்டபடி சென்று வந்ததாக செய்திகள் உலாவியதுண்டு. படிப்பில் கவனம் செலுத்தாமல் தேர்வுகளிலும் கோட்டை விட்டான். கடைசியில் பட்டமும் வாங்கவில்லை என்றே நினைக்கிறேன்.

காலேஜில் சேர்ந்த இரெண்டாவது மூன்றாவது வருடங்களில் குடி, புகை போன்றப் பழக்க வழக்கங்களிலும் குடிக்கொள்ள ஆரம்பித்துவிட்டதாகக் கேள்வி. அப்போது நான் ஊரில் இல்லை. கடைகளில் வேலை பார்த்து வந்ததையடுத்து, ஊரில் சிலர் கடலை வண்டி தள்ள கேரளாவிற்குப் படையெடுத்தார்கள் அதில் நானும் ஒருவனானேன். அங்கே ஒரு வருடம் வரை பிழைப்புச் சென்றது. அங்கேதான் வெளிநாட்டு ஆசையும் எனக்கு முதன்முதலில் பிறந்தது.

நான் இங்கே வந்த கதைகள் இருக்கட்டும், அவனுடைய வரலாற்றிற்கு மீண்டும் வருகிறேன்… ஒரு கட்டத்தில் அவனைக் கண்டிக்கும் பொருட்டு அவனுடைய அப்பா பெல்ட் வாரைச் சுழற்றியதும், வீட்டை எதிர்த்துக் கொண்டு சென்னைக்கு ஓடிப்போனான். அங்கேயே கொஞ்ச காலம் சுற்றிக் கொண்டிருந்தான். செலவிற்கு மாதா மாதம் வீட்டிலிருந்து பணம் போகுமென்றும் கேள்விப்பட்டதுண்டு.

பிறகுதான் அவனும் துபாய்க்கு வந்தான். முதன் முதலில் ஒரு சின்ன இன்டீரியர் பணிகள் செய்து கொடுக்கும் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக வேலை கிடைத்ததாம். மாமாதான் சொன்னார். இரண்டு வருடங்களிலேயே அதே கம்பெனியில் பர்சேஸ் ஆபிஸராக ஆகிவிட்டானாம். அன்றிலிருந்துதான் அவன் கையில் தாராளமாக பணம் கொழிக்க ஆரம்பித்திருக்கிறது. இப்போது வேறொரு கம்பெனியில் பர்சேஸ் மேனேஜராம். காசு கொடுத்துதான் டிகிரி சர்டிபிகேட்டையும் நேர் செய்து வாங்கியதாகவும் மாமாதான் ஒரு முறை எப்போதும் போல உளறி வச்சார்.

அவனுடைய பணமோ, பகட்டோ, திறமைகளோ அவைகளால் எனக்கு எந்த தொந்தரவுகளும் இல்லை. ஆனால், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உறவு முறையாக இருந்தபோதிலும், ஒன்றாக ஒவ்வொரு வகுப்புகளிலும் கூடவே படித்திருந்தும் ஏன் என்னை எப்போதும் ஒரு மட்டத்திலேயே வைத்துப் பார்க்கிறான் என்பதைத்தான் என்னால் சகித்துக் கொள்ள முடிந்ததில்லை.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்ததில் வண்டி எங்கு சென்று கொண்டிருந்தேயென்று கவனிக்கவில்லை. கார் அணைந்து நின்ற இடம் கிஸைஸ் (Qusais) கராச்சி தர்பார், அது ஒரு பாக்கிஸ்தானி ஓட்டல்.

சுதாகர்தான் ஒரு படைத்தலைவன் போல் மாமாவையும் செல்வக்குமார் அண்ணனையும் வழி நடத்திச் சென்றான். மீண்டும் மாமாவை நினைத்தால் கோபமும் வருத்தமும் அடக்க முடியாமல் பீறிக்கொண்டு வந்தது. மனசு ஒப்பவில்லையென்றாலும் அதே நேரம் மாமாவுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொள்ளவும் முயற்சி செய்தேன்.

வண்டிலிருந்து இறங்கியதும் சுதாகர் முன் செல்ல, அடிமைகள் போலதானே நாங்கள் பின்தொடர்ந்துச் செல்ல வேண்டியிருந்தது! என் மனம் குமுறிக்கொண்டிருந்தது. ஏனென்றால் அங்கேயும் கூட ‘வாங்க’ என்று அவர்களை அழைத்தானே தவிர, ஒரு பேச்சுக்கு கூட என் பக்கம் திரும்பவில்லை; ஒரு வார்த்தை பேசவில்லை. தாங்க முடியாமல் மாமாவின் காதில் ‘நான் வரல!’ என்று நின்றுவிட்டேன். இருந்தாலும் அனைத்தையும் கவனிக்க அவன் திரும்பணுமே! எதையும் பொருட்படுத்தாமல் முதலாளி தோரணையில் அந்த ஓட்டலுக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

“ஏய் அதெல்லாம் ஒண்ணுல்லடா… வாங்க’ன்னா எல்லாரையும்தானே கூப்பிடுறானுந்தானே அர்த்தம்? இதெல்லாமா நீ யோசிச்சிக்கிட்டு இருப்ப? அட வாப்பா!” என்று மாமா என்னை இழுத்ததும், செல்வக்குமார் அண்ணன் என்னைப் பார்த்து இப்படி குழந்தை மாதிரி நடந்துக்கிறியே… என்பது போல் வாய்விட்டுச் சிரித்தார்.

பணக்காரனின் அடிமைகளாய் இவர்கள் ஏன் இப்படி மாறிப்போனார்கள் என்று அவர்களை நொந்து கொண்டேன்.

இருக்கைகளில் அமர்ந்ததும் உணவு வகைகளும் அவனே தேர்வு செய்தான். அவன்தானே எல்லாவற்றிற்கும் காசு கொடுக்கப் போகிறான் என்ற பாவனையில் மாமாவும் செல்வக்குமார் அண்ணனும் ஆர்டர் செய்து வந்ததையெல்லாம் தின்றுத் தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போதிருந்த மனநிலைமைக்கு நான், தருவித்திருந்த தந்தூரி ரொட்டியை மெல்ல முடியாமல் மென்று கொண்டிருந்தேன். கடாய்களில் ஆவி பறந்துக் கொண்டிருந்த கறி வகைகளையும் ஊறுகாயைப் போல அளவாகவேப் பாவித்தேன்.

எனது பார்வை தொட்டு சாப்பிட எதுவாக வைக்கப்பட்டிருந்த மிளகுத்தூளும் உப்பும் கலந்த நீர்மோர் கிண்ணங்களின் மீது படிந்து கொண்டிருந்தது. ஏனென்றால் மொத்தம் மூன்று கிண்ணங்களே அங்கேயிருந்தன. எனது முகத்தைப் படித்தானோ என்னவோ அவ்வளவு பேச்சுக்குமிடையில் தனது பக்கத்திலிருந்த கிண்ணத்தை எங்கோ பார்த்துக் கொண்டு என் பக்கம் மௌனமாக நகர்த்தி வைத்தான். சாப்பிட எனக்கு கூசியதுதான்… இருந்தாலும் பக்கம் இழுத்துக் கொண்டேன்.

கடைசியாக ஃபிர்னி வந்தது. என்னையறிமல் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. இந்த இனிப்பென்றால் மட்டும் நாவிற்கு அதீத கட்டுப்பாடு தேவைப்படுகின்றது. நல்ல சுவை! இன்னொன்று வைக்கப்பட்டிருந்தாலும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருப்பேன் போலும். ஆனால், சட்டென உணர்வு வந்து, என் போக்கை நினைத்து நானே வெட்கப்பட்டேன். ஒரு நொடியில் அந்த இனிப்பு, நாக்கிற்கும் தொண்டைக்கும் இடையில் நிற்பதை போன்றதொரு அவஸ்தை. அவனிடம் நானும் மண்டியிட்டுவிட்டது போல் ஒரு தலைகுனிவு!

அந்த இரண்டு மூத்தவர்களுக்கோ என்னைப் போன்று எந்த சங்கடமுமில்லை.

உண்டு களைத்து ஒரு வழியாக செல்வக்குமார் அண்ணன் அறைக்கு வந்தோம். அங்கே அவர்களது திட்டமிடலுக்கு மாற்றமாக மேலுமொரு திடீர் கூடுதல் உருப்படி சேர்ந்துவிட்டதில், எங்களில் ஒருவர் அங்கே தங்க முடியாது! அது நான்தான் என்று நானே முடிவு செய்தேன்.

நிச்சயம் சுதாகரை எந்த காரணத்தை கொண்டும் அவர்கள் தவிர்க்க நினைக்க மாட்டார்கள் என்பதை அவர்களோடு பயணித்து வந்த சிறிது நேரத்திலேயே என்னால் ஊகிக்க முடியாதா என்ன? மேலும் என்னுடைய மிச்ச சொச்ச கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ளும் பாரிய பொறுப்பும் அச்சமயத்தில் என் கையிலேயே இருந்தது.

“நான் மகேஷ் கூட தங்கிவிட்டு காலையில் வருகிறேன்” என்றதும், செல்வக்குமார் அண்ணன், “ஓஹ் கூட்டாளியை தேடி போறியளோ… ஹாஹாஹாஹா! அதுவும் சரிதான். அப்ப ரெண்டு பயலுவளும் நைட்டு ஃபுல்லா புருசன் பொண்டாட்டி மாதிரி கத பேசிக்கிட்டேல்லப்பா கெடப்பிய? இரு, நானும் உங்கூட மெட்ரோ வரைக்கும் நடந்து வந்து ஏத்தி விட்டுட்டு வர்றேன்!” என்று கிளம்பினார். அவருக்கு தன் பணி மிகவும் சுலபமாகிவிட்ட மகிழ்ச்சி!

“முழிச்சிட்டு இருக்காம போனதும் தூங்கிரு சுந்தரு..! காலைல லேட் பண்ணிராம வந்திரு!” என்று வழக்கமான தனது அன்பு தோய்ந்த அதிகாரத்தை மீண்டும் செலுத்த ஆரம்பித்தார் அக்கா புருசர்.

சுதாகர் எதுவும் பேசாமல், கை விரலொன்றில் காரின் சாவியை சுழற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே நின்றான். இப்போது அவனது பாவனைகள் என்ன என்று ஏறெடுத்துப் பார்க்க என் முகம் நிமிரவில்லை!

ஒரு வேளை ‘நான் வந்து விட்டுட்டு வர்றேன்’ என்று அவன் கிளம்பியிருந்தால் அந்த பல நாள் இறுக்கங்கள் ஒரு நொடியில் தளர்ந்திருக்குமோ என்னவோ!

“வேணாண்ணே நானே போயிக்கிறேன்” என்று சொல்லியபடி அங்கிருந்து வேகமாக வெளியேறினேன். மனம் ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்ததில் லிஃப்ட்டில் ஏறாமல் படிகள் வழியாக இறங்கிக் கொண்டிருந்தபோது, ஞாபகம் வந்து மாற்றுத்துணிகள் கொண்டு வந்திருந்த தோள் பேக்கைத் தொட்டுப் பார்த்தேன்… சுவீட் பாக்ஸ் பத்திரமாக இருந்தது. மகேஷை நினைத்தேன். இனித்தது.

-dris.ghani@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button