இணைய இதழ்இணைய இதழ் 102சிறுகதைகள்

டைகர் – மலேசியா ஸ்ரீகாந்தன்

சிறுகதை | வாசகசாலை

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி!.

வாசலில் தொங்கிய அறிவிப்புப் பலகையில், அன்று கால பைரவரைப் பற்றிய விஷேச உரை இருக்கின்ற குறிப்பும், அன்றைய உபயத்தை ஏற்றுக்கொண்டு நன்கொடை வழங்கிய அரசியல் பிரமுகரின் பெயரும்  காணப்பட்டன.

சரியாக பிற்பகல் மணி 3.00க்கு உரை ஆரம்பமாகிவிடும். சாந்தியை இன்னும் காணவில்லை!.

ஞாயிறு தோறும் உரிய நேரத்தில் சமய உரைக் கேட்க வந்துவிடும் அவள், இன்று இன்னும் வராதது பாக்கியத்திற்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுத்தது. அவள் இன்று வரமாட்டாள் என்றே இவளுக்குத் தோன்றியது.

‘எல்லாம் இந்த டைகர்னால வந்த வென..’ என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.

அந்த சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தன. ஆனால், இன்று அப்பிய அசிங்கம் போல் இன்னும் பச்சையாய்ப் பிசுபிசுத்தது.

டந்த வாரம், சாந்தி பாவம் முதல் தடவையாக இவர்களின் வீட்டிற்கு வந்திருந்தாள். அப்போது, மாதவன் மற்றும் மாலாவிற்கு மத்தியில் அரைத்தூக்கத்தில் சொக்கிக் கிடந்த டைகர், என்ன மோப்பம் பிடித்ததோ உடனே கீழே குதித்து, வீட்டிற்கு வரும் விருந்தாளியை வரவேற்பதுபோல் வாலையும், குதத்தையும் ஆட்டிக்கொண்டே சாந்தியிடம் ஓடிப்போய், காலிலிருந்து தொடைவரை மோந்து பார்த்தது. தொடைகளுக்கிடையே மோந்து பார்த்து, மூக்கைச் சிந்தித் தலையை உதறியதைப் பார்க்க சாந்திக்கு அசூயையாய் இருந்தது. பயத்தில் அப்படியே ஒடுங்கிப் போய், ‘யம்மாடீ..’ என்று பாக்கியத்தின் கையைப் பிடித்துக்கொண்டாள்.

“பயப்படாத சாந்தி!. இப்படிதான் கொஞ்ச நேரம் வெளயாட்டு காட்டும். அப்பறம் தானாவே அடங்கி போயிரும்.” என்று பாக்கியம் தைரியம் சொன்னாள்.

டைகர், அதே ஆர்வத்துடன் மாதவனிடம் ஓடிப்போய் அவனை மோப்பம் பிடித்தது. பின்னர், மாலாவிடம் ஓடி வந்து, அவளை மோந்து பார்த்தது. மாலா, அதைப் பிடித்துக் கொஞ்சுவதற்குக் குனிந்தபோது, பாய்ச்சல் காட்டித் தப்பித்துக்கொண்டு, அம்மாவிடம் ஓடிப்போனது. சில விணாடிகள் அதற்கு இருப்புக் கொள்ளவில்லை. வந்த விருந்தாளிக்கு வீட்டுக்காரர்கள் காட்டாத குதூகலத்தை அது காட்டிக் கொண்டாடுவதுபோல், அங்கும் இங்கும் ஓடியது.

“டைகர், ஸிட் தேர்..” – என்று பாக்கியம் அதட்டியபோது, டைகர் தனக்கு வேறொரு கட்டளையிடப்பட்டதுபோல் மீண்டும் சாந்தியிடம் ஓடிப் போய், ஒரு முறை அவளைச் சுற்றி வந்து மோந்து பார்த்துவிட்டு, உடனே தாவி, அவளின் இடது கெண்டைக்காலைத் தனது முன்னங்கால்கள் இரண்டாலும் இறுகப் பற்றிக்கொண்டு, பின்னங்கால்களால் புணரும் பாவனைக் காட்டி, பிருஷ்டத்தை வேகமாய் ஆட்டி, இயங்கத் தொடங்கியது.

சாந்தி, ‘ஐய்யே..’ என்று கூச்சல் போட்டு, கண்களை இறுக முடிக்கொண்டாள். ‘ச்சீ.. கால உடு, கருமம்..’ என்று உதறியபோது, டைகர் இன்னும் வலுவாகக் காலைப் பிடித்துக்கொண்டு தொங்கியது. ஹாலிலேயே இருந்த பாக்கியத்தின் வாலிபப் பிள்ளைகளின் நினைவோ அவளுக்கு மேலும் அவமானத்தைச் சேர்த்தது.

மாலா, ‘ஐயே, கண்றாவீ…’ என்று வாயைப் பொத்திக்கொண்டு அறைக்குள் ஓடிப் போனாள்.

பாக்கியம், அதிர்ச்சியில் உறைந்துபோய் செய்வதறியாது திண்டாடினாள். ஆத்திரத்தில் முகமெல்லாம் சிவந்து போனது.

“ஐயோ,மாதவா!. இந்தக் கருமத்தப் பாருடா. இதென்னடா இது, புது சேட்டையா இருக்கு?..” – அம்மா அபயக் குரல் கொடுத்துக் கத்தினாள்.

மாதவன், ‘டைகர், கம் ஹியர்!.’ என்று அதட்டினான். ஆனால், அந்தக் குரல் அதனை மேலும் ஊக்குவித்ததுபோல் அது, மேலும் முனைப்பைக் காட்டியது.

அவன், ரோத்தானுடன் ஓடி வந்து, பின்னங்கால் தொடையில் ஒன்று வைத்து, டைகரைத் தூக்கிக் கொண்டுப் போனான்.

மாதவன், நாயைத் தூக்கிக்கொண்டு போகும்போது, வெளியில் நீட்டிப் பளபளத்துக்கொண்டிருந்த அதன் குறியைப் பார்த்ததும், அருவருப்பில் பாக்கியத்திற்கு உடல் உதறிச் சிலிர்த்தது. வாய், அசிங்கமாய்க் கோணி நெளிந்தது.. அவசரமாக சமயலறைக்குப் போய், அடி வயிற்றைப் பிடித்தபடி வாயில் சுரந்த எச்சிலைப் பேசினில் துப்பினாள். சாந்தியும் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டது இன்னும் தர்மசங்கடத்தைத் தந்தது.

பாவம் சாந்தி!.. பயத்தில் வெலவெலத்துப் போனாள். முகம், வெளிறி இருண்டு போனது. வல்லுறவுக்கு ஆளானவள்போல் உடல் பதறி நடுங்கினாள். துடைத்தெடுக்க முடியாத கறையொன்று பட்டுவிட்டது போன்ற உணர்வால் அடிக்கடி இடது கெண்டைக்காலை வலது பாத விரல்களால் தேய்த்துவிட்டுக் கொண்டாள். ரொம்பக் காலமாகவே கெண்டைக்கால் சதையில் நீலம் பாரித்துக்கிடந்த ‘வெரிக்கோஸ்’ நரம்புகளில் புதிதாக ஏதோ அறுவுவதுபோல் உணர, உடல் சிலிர்த்து உதறிக்கொண்டது.

“இதுக்கு முன்னடி இப்படியெல்லாம் நடந்ததே இல்ல.” என்று சாந்திக்குச் சமாதானம் சொல்லுவதுபோல் பாக்கியம் முணுமுணுத்தபோது, அதைச் செவிமடுக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை.

நினைத்துப் பார்க்கமுடியாத அவமானத்திற்கு ஆளானவள்போல் முகம் வாடி, வதங்கிப் போனாள். யாரிடமும் தனது கோபத்தைக் காட்ட முடியாத தர்மசங்கடம் வேறு!. அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனது வீட்டின் பாதுகாப்பிற்குள் புகுந்துகொள்ளத் துடித்து, ‘தனக்கு நேரமாவதாகச் சொல்லி.’ உடனே அங்கிருந்து புறப்பட்டுப் போனாள். பாக்கியம், அவளுக்கு நடந்துவிட்ட அசிங்கத்தை நினைத்து, வேதனையில் தவித்தாள்.

“மாதவா, இதென்னடா இது, ஒரே கண்றாவியா இல்ல இருக்கு?. நாளைக்கி நீங்க ரெண்டு பேரும் வேலைக்கி போனப்பறம் இந்தக் கருமத்து கூட ஒண்டியா இருக்குறத நெனச்சாலே, எனக்கு இப்பவே வயித்த கலக்குது..” என்று பாக்கியம் மகனிடம் புலம்பினாள்.

“ஐயோ அம்மா!. இவ்ளோ நாளு நீங்க ஒண்டியா இல்லியாமா?.. இது, நீங்க நெனக்கிர மாரியெல்லாம் ஒன்னுமே கெடையாதும்மா. நாம, வீட்டுக்கு வந்தவொன்ன அது நம்ம மேல தாவி விசுவாசத்த காமிக்கிறது இல்லியா, அது மாரிதாம்மா இதுவும். புதுசா ஆண்டி வீட்டுக்கு வந்த சந்தோஷத்துல அது அப்படி நடந்துக்கிச்சி. அவ்ளோதான். அதுக்கும்மேல அந்த சேட்டைக்கு வேற அர்த்தம் கெடையாதும்மா. நீங்கதான் அத அசிங்கமா புரிஞ்சிக்கிட்டு என்னென்னமோ நெனச்சிச்கிறீங்க. அது மிருகம்மா!.. மனுசாளு மாரியெல்லாம் யோசிக்குமா என்ன?. வீணா மனச போட்டு கொழப்பிக்காதிங்கம்மா..” என்று மாதவன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

பாக்கியத்திற்கு அந்த விளக்கமெல்லாம் புரியவில்லை. எஸ்டேட்டில் தன் தந்தை வளர்த்த நாய், இப்படியெல்லாம் செய்து தான் பார்த்ததில்லையே என்பதே அவளின் குழப்பமாக இருந்தது.  

“நீங்க என்ன கருமத்த வேணுமின்னாலும் சொல்லிகிட்டுப் போங்க. வூட்டுக்கு தெரிஞ்சவங்க வந்த நேரத்துலியா இது இப்படி செஞ்சி நம்ம மானத்த வாங்கனும்?. பாவம் சாந்தி!. மொத தடவியா வீட்டுக்கு வந்தாங்க. இது செஞ்ச அசிங்கத்துல எப்படா வூட்டுக்கு போவோம்ன்ற மாரி புடிங்கி அடிச்சிக்கிட்டு ஓடீட்டாங்க. அவுங்க மொகத்த பாக்கவே சகிக்கல. எல்லாம் இந்த சனியன் புடிச்ச நாயினால வந்த வென..” என்று பொருமித் தள்ளினாள்.

“ஐயோ பிளீஸ்ம்மா!. வாயில்லா ஜீவன்மா!. நீங்க நெனைக்கிற மாரியெல்லாம் ஒன்னுமே இல்லம்மா..” என்று அவன், தாயிடம் மன்றாடினான்.

ந்த சம்பவத்தால் நேர்ந்த அவமானத்தாலேயே சாந்தி இன்று கோவிலுக்கு வரவில்லையென்று பாக்கியத்திற்குத் தோன்றியபோது, மனசெல்லாம் ‘திக்’கென்று சோகம் படர்ந்து வலித்தது. தன்னை இத்தகைய சமய உரைக்கு அறிமுகம் செய்தவளே அவள்தான்.        

சுவாமிகள் அந்தத் தினத்தின் விசேஷத்தைச் சொல்லி உரையைத் தொடங்கினார்.

பாக்கியம் அந்த உரையில் ஆழ்ந்த கொஞ்ச நேரத்திலேயே தன் கணவனின் நினைவுகளில் சிக்குண்டு தவித்தாள்.

‘தானும் ஒரு கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்றே பிறந்ததாகச் சொல்லி அவர், தீவிர கால பைரவ பக்தராக இருந்தார். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமிக்கும் விடுமுறை எடுத்து, இவளையும் கையோடு அழைத்துக்கொண்டு கோவிலுக்குப் போய், கால பைரவ பூஜை செய்யத் தவறியதேயில்லை. அதில் அவர் மிகவும் பிடிவாதமாகவே இருந்தார். விடுமுறை கிடைக்காத நாட்களில் மருத்துவ விடுப்பு எடுக்கவும் தயங்கியதில்லை.’

அந்த வழிபாட்டையெல்லாம் கணவன் இறந்த கையோடு – அவனை அவமதித்துத் தண்டிப்பதுபோல் – பாக்கியம், உடனே நிறுத்திக் கொண்டாள். மாதவன் பிறந்த மூன்றாவது மாதம், அவளுடைய சிநேகிதியுடன் புருஷனுக்கிருந்த கள்ளத் தொடர்பு தெரிய வந்ததும், மூட்டைப் பூச்சி மருந்தைக் குடித்து, ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் சாகக் கிடந்த ரணம், பாக்கியத்திற்கு இன்னும்கூட வலித்தது.

அதனால், புருஷனின் பிறந்த நாளெல்லாம் இப்போது, காலண்டரில் சில தினங்கள் கழித்தே கிழிக்கப் பட்டன.       

சுவாமிகள், ஜென்ம அஷ்டமியன்று பக்தர்கள் பைரவருக்கு விரதம் காத்து, பஞ்ச தீபம் ஏற்றி வணங்கி வந்தால் தீராத தொல்லைகளும் தீர்ந்து போகும் ஐதீகத்தைச் சொன்னார். செவ்வரளி மாலை சாற்றி வணங்கினால் இன்னும் சிரேஸ்டமென்றும், பகவானின் முழுக் கடாட்சமும் கிட்டுமென்றும் விதந்தோதினார்.

சுவாமிகள், தொடர்ந்து சொன்னார்..

“நம் கர்மாவிற்கு ஏற்பவே பிறவி லபிக்கிறது. இப்பிறவியில் தீர்க்க முடியாத கர்மா, சஞ்ஞித கர்மாவாகி, அடுத்தப் பிறவியில் தீர்க்கப்பட வேண்டியது விதி!. ஒருவருக்கு சஞ்ஞித கர்மபலன் முடிந்தால்தான் இந்தப் பூலோகப் பிறவி முக்தியடையும்.

இதைத்தான் ஆதிசங்கரர், தனது பஜ கோவிந்தத்தில், ‘புனரபி ஜனனம்.. புனரபி மரணம்..’ என்று சொல்கிறார். அதாவது, ‘செய்த கர்ம பலன்களை அனுபவித்துத் தீர்க்கும்வரை, மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும்… மீண்டும் மீண்டும் இறக்க வேண்டும்.

மறுபிறவியில் என்னவாகப் பிறந்தாலும், முன்பிறவியின் சஞ்ஞித கர்மபலனை அனுபவித்துத் தீர்த்த பின்னரே பிறவிக்கு முக்தி சாத்தியம்!. ஆயினும், கால பைரவர் நினைத்தால், ஒருவரின் பாபங்களை நீக்கி, உடனே அவருக்கு முக்தி நிலையை அருளச் செய்ய முடியும். ஏனென்றால், காலத்தை இயக்கும் விஷேச சக்திக்கு அதிபதியே அவர்தானே!. 

ஆதலால், கால பைரவரைத் தினமும் வழிபடுங்கள்… நீங்கள் விரும்பும் பிறவி முக்தி இப்பிறவியிலாவது உங்களுக்குக் கிடைக்க அந்தக் கால பைரவர் அருள் புரிவாராக… கால பைரவா நமஹ..” என்று சுவாமிகள் தனது உரையை முடித்தார்.

சுவாமிகள், கால பைரவரைப்பற்றிச் சொன்ன பல தகவல்கள் பாக்கியத்திற்குப் புதியதாய் இருந்தன. மிகவும் லயித்துக் கேட்டாள். ‘பைரவருக்கு இப்படியொரு சக்தியா?..’ என்று அதிசயித்தாள். கணவரின் தீவிர கால பைரவ பக்திக்கு ‘மீண்டும் பிறவா முக்தியை’ அருளவல்ல அந்த விசேஷ சக்தியே காரணம் என்று இப்போது எண்ணிக்கொண்டாள்.

‘புனரபி ஜனனம்.. புனரபி மரணம்..’ ஸ்லோகத்தை முதல் தடவையாகக் கேட்டாள். அதன் விளக்கம் அவளை மிகவும் தொந்தரவு செய்தது. அடுத்த பிறவியின் நிச்சயமற்ற அடையாளம் அச்சமூட்டியது. இறந்தவுடன் இரண்டில் ஒன்று, சொர்க்கமோ நரகமோ என்று நம்பிக்கொண்டிருந்தவளுக்கு இது பெரும் குழப்பத்தைத் தந்தது.

‘செய்த பாவங்கள் தீரும்வரை மீண்டும் மீண்டும் பிறவியா?. யாருக்கு எந்தப் பிறவி?’

நினைத்துப் பார்க்கவே பீதியாய் இருந்தது.

‘புனரபி ஜனனம்.. புனரபி மரணம்..’

அன்றைய உரை அவளை எதையெல்லாமோ எண்ண வைத்துக் கலங்கடித்தது. தான் செய்த பாபங்களின் கணக்கு ஒன்று நினைவுக்கு வர, தலைக்கு ஏதோ புதிய பாரம் வந்து சேர்ந்ததுபோல் கனத்து, வலித்தது. மிகுந்த மனக் கிலேசத்துடன் சுரத்தே இல்லாமல் வீட்டிற்கு வந்தாள். வழியில், சாந்தி வீட்டிற்கு போக எண்ணியதையும் முற்றாக மறந்து போனாள்.

மகன், ஹாலில் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான். வந்தவுடன் விசுவாசத்தைக் காட்டிக் குதூகலிக்கும் டைகரைக் காணவில்லை!.

டைகர், அவளுடைய 50 -வது பிறந்தநாளுக்கு மகன் பரிசாகக் கொடுத்த நாய்க் குட்டி!. அவள்தான் தனக்குத் துணையாக இருப்பதற்கு நாய்க் குட்டி ஒன்றைக் கேட்டிருந்தாள். அது, ஜாதி நாய்க்கும் தெரு நாய்க்கும் பிறந்த ஒரு கலப்பு நாய்!. அந்தக் கலப்பினாலோ என்னவோ அவ்வளவு அழகாய் இருந்தது. மகன், ‘மாஸ்டர்’ என்றும் மகள், ‘ரோமியோ’ என்றும் புதுமையான பெயராக வைக்கத் துடித்தனர், பாக்கியம்தான், ‘எஸ்டேட்டில், அப்பா வளர்த்த நாயின் பெயர்!’ என்று சொல்லி, பலவந்தமாக ‘டைகர்’ என்ற பெயரையே வைக்கச் சொல்லி அடம்பிடித்து, வைத்துக்கொண்டாள்.

“எங்க கானோம்..?”

மகன், கைப்பேசியில் லயித்த பார்வையுடன், “இவ்ளோ நேரமா இங்கதான் படுத்திருஞ்சி..” என்றான்.

தாயின் குரல் கேட்டு மாலா வெளியே வந்தாள். வீடெங்கும் தேடியும் டைகரைக் காணவில்லை !.

‘அன்னிக்கிமாரி எங்கியாவுது ஓடி கீடி போச்சா?..’ பாக்கியம் கலவரம் கொண்டாள். முன்பொருமுறை அப்படித்தான் எல்லோரையும் பதறவைத்துக்கொண்டு எங்கோ ஓடிப்போய், இரண்டு நாட்களுக்குப் பிறகே வீடு வந்து சேர்ந்தது.  

மாதவனும் நாயைத் தேடும் சத்தம் கேட்டது.

“டைகர்!..”

அப்போது, மகனின் அந்தக் குரல் திடீரென்று ஒரு சாபத்தைதைப்போல் அந்த நினைவை மீட்டெடுத்து, பாக்கியத்தைப் பீதியுறச் செய்தது.

‘புள்ளிங்களுக்கு அப்பான்னா அவ்ளோ பயம்!. அந்த மனுஷன் உயிரோட இருந்தவரைக்கும் முதுகுக்குப் பின்னால இதுங்ககூட, ‘எங்க டைகர காணோம்?..’, ‘டைகர் வீட்ல இல்லியா?..’ ன்னு இல்ல அப்பாவைக் கேட்டுக்கிட்டு இருந்துச்சிங்க!.. அட, இது எப்படி எனக்கு இவ்ளோ நாளா ஞாவகமே இல்லாம போச்சி?. ஆமா, அந்த மனுசன் செத்தே அஞ்சி, ஆறு வருஷத்துக்கு மேல ஆவுதே?..’

அந்த அடையாளத்தை அவள் முற்றாகவே மறந்துதான் போயிருந்தாள்!.

‘இந்த டைகர்?…’

‘புனரபி ஜனனம்!..’

இப்போது, திடீரென்று டைகரை நினைக்க, பாக்கியத்திற்கு பெரும் அவஸ்தை வந்து சேர்ந்தது. அந்தப் பெயரும், பஜ கோவிந்த ஸ்லோகமும் அவளின் நிம்மதியைக் கெடுத்துக் கலங்கடித்தன. அதை எப்படி எதிர்கொள்வதென்றே தெரியாமல் தத்தளித்தாள். பழைய சம்பவங்கள் சில, புதிய அர்த்தங்களைக் கொடுத்துக் குழப்பின. ஏதேதோ எண்ணங்கள் தோன்றி அவளை அலைக்கழித்தன.

பாக்கியம், தன்னையறியாமலேயே இடது காலை மடக்கி, உள்ளங்கையால் கெண்டைக்காலை தடவிக் கொண்டாள்.

– டைகர், சாந்தியின் கெண்டைக்காலைப் பற்றிக்கொண்டு புணரும் பாவனை காட்டி இயங்கிய காட்சி கண்களுக்குள் நிழலாடியது.

– தாம்பத்தியத்தில் அவருக்கிருந்த விபரீத இச்சையை இப்போது நினைத்துப் பார்த்தாள். முகமெல்லாம் வெளிறிப் போனது.

– டைகரின் வெள்ளை நெற்றியில் திலகத்தை வைத்தது போலிருந்த கருப்புப் புள்ளி இப்போது, அவருடைய நெற்றியில் இருந்ததே ஒரு தழும்பு, அதை ஞாபகப்படுத்தித் தொலைக்கிறதே!.’

– எனது உடல் அசௌகரியத்தையெல்லாம் அது எப்படித்தான் அறிந்து கொள்ளுமோ!. எனக்காகத் துக்கப்படுவதுபோல் சாப்பாட்டை அண்டாது. எனது உடல் உபாதையைப் பங்கிட்டுக்கொள்வதுபோல் கட்டிலுக்குப் பக்கத்திலேயே சோகமாய்ப் படுத்துக் கிடக்குமே!…

– பிள்ளைகள் இல்லாத நேரத்தில் எனது பாதுகாப்புத் தான்தான் பொறுப்பு என்று நினைத்துக்கொள்ளுமோ என்னவோ, என்னையே சுற்றித் திரியுமே!.    

– இரவில் தனது பக்கத்தில் போட்டுக்கொண்டு தூங்குவதற்கு மகனோ, மகளோ ஆசையுடன் அதைத் தூக்கிக்கொண்டு போனாலும், நள்ளிரவில் எத்தனை மணிக்குத்தான் அறைக்குள் வருமோ தெரியாது! காலையில் பார்த்தால் என் மடியின் கதகதப்பில் சுருண்டு கிடக்குமே!..

– சோபாவில் அமர்ந்து டெலிவிஷன் பார்க்கும்போது, ‘இது என் மடி..’ என்பதுபோல் சுவாதீனமாய் வந்து, மடியில் தலை வைத்துப் படுத்துக்கொள்ளுமே!..

பாக்கியத்தின் முகத்தில் அருவெருப்பின் உணர்ச்சிகள் படர்ந்து நெளிந்தன. கண்கள் அவமானத்தின் வேதனையில் சுறுங்கிச் சிறுத்தன..

‘புனரபி ஜனனம்..’

தெரு முனையில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு தாயும் பிள்ளைகளும் வாசலுக்கு வந்தனர்.

மைதானத்தில் தெருநாய்களின் கூட்டம் ஒன்று!

இவர்களுக்குப் புறமுதுகைக் காட்டிக்கொண்டு, கொண்டாட்டத்தில் டைகர்!.

டைகருக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைக் கொண்டாடிக் கொண்டோ அல்லது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டோ மற்ற நாய்களெல்லாம் அந்த ஜோடியைச் சுற்றி வந்து குரைத்துக் கொண்டிருந்தன. டைகருக்கு மூச்சு இரைத்தது போல!. நாக்கு வெளியில் தள்ளி, எச்சில் வடிந்துகொண்டிருந்தது.

“ச்சீ.. மானம் போவுது..” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே மாலா, அறைக்குள் ஓடிப் போனாள்.

ஊர்ச் சிறுவர்கள், அந்த நாய்களின் கூட்டத்தைப் பார்த்துச் சிரித்துபடி இவர்களின் வீட்டைக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த பெண்களோ,”ச்சீ.. இதுங்க வேற நடக்கற பாதைய நாரடிச்சிகிட்டு!.. த்தூ.. கருமம்!” என்று இவர்களின் வீட்டுப் பக்கமாக துப்பிவிட்டு, முகத்தைச் சுழித்து. முந்தானையால் மூடிக்கொண்டு வேறு வழியாக விரைந்து சென்றனர்.

பாக்கியத்திற்கு முகமெல்லாம் ‘ஜிவ்’வென்று சிவந்து போனது. நெஞ்சமெல்லாம் ஒரே எரிச்சல்!. அந்த ஆபாசத்தைக் காணச் சகிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். டைகரைப் பார்க்கவே அருவருப்பாய் இருந்தது. இனம்புரியாத உணர்வு உள்ளமெல்லாம் படர்ந்து வதைத்தது. வாசலில் நிற்க முடியவில்லை. நெற்றியில் அடித்துக் கொண்டே விரைந்து வீட்டிற்குள் புகுந்து கொண்டாள்.  

சுவாமிகள், மந்திரமாய் உச்சரித்த பஜ கோவிந்த ஸ்லோகம் இப்போது, நாராசமாய் அவள் காதுகளில் ஒலித்தது.

‘புனரபி ஜனனம்.. புனரபி மரணம்..’

ramjees.sa@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button