நியாயங்கள்
எடுபடாது என்று
தெரிந்த பின்
பேச முடியவில்லை
அருகில்தான் இருந்தது
சொற்கள் நிரம்பிய பை.
*
அப்பா எப்படி
இருக்கிறார்
என்று கேட்க
முடிவதில்லை
அப்பா இறந்த
நாளிலிருந்து.
மரணக் கடலில்
கலந்த பின் என்னவாகும்
என் நினைவுகளின் நதி?
*
இட்லிக்கும் சட்னிக்கும்
இடையிலான தூரம்தான்
உனக்கும் எனக்கும்
இரண்டும் ஒன்றையொன்று
எப்போது வேண்டுமானாலும்
கபளிகரம் செய்துவிடலாம்
இட்லி எப்போதுமே
வெள்ளந்திதான்
வண்ண வண்ணமாய் சுண்டி
இழுப்பது சட்னி
வாசனையும் சுவையும்
தினம் ஒரு தினுசாகத்தான்
இருக்கிறது
தொட்டுத் தடவி
சட்னியை உள்ளிழுக்கும்
இட்லிக்கு வீரனென்ற இறுமாப்பு
இறுதியில் இட்லியை
காலி செய்துவிட்டு
இவ்வளவுதானா என்று இறுமாப்போடு சிரிக்கிறது சட்னி.
- enavao79@gmail.com