
ீ உணர மறுக்கும் என்னையும்
நான் ஏற்க மறுக்கும் உன்னையும்
வைத்துக்கொண்டு
எப்படி உண்ணுவோம்
காதலெனும் பெருங்கனியை.
*
நிராகரிப்பின் நீர் கமலங்கள்
அன்று
கண்ணில் பட்ட பொழுது
எங்கோயிருந்து ஒடிந்து வந்த
சின்னக் கொடி
சிரமப்பட்டு சீரழிந்து
என் தோட்டத்து மண்ணை
இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டு
அன்பின் அணிமழையை
நிராகரித்து நின்று கொண்டிருந்தது
இன்று
என் தோட்டத்துக் காற்றில்
மணமில்லா துகள் இல்லை
மலரில்லா நிழல் இல்லை
சுவையில்லா கொடி இல்லை
ஏனோ
நிஜமென்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை
இந்தக் கண்ணீருக்குத்தான்
எத்தனை பலம்!
*
சட்டென்று உச்சம் பறக்கையில்
பொத்தென்று கீழே இழுத்துவிட்டாய்
கூடு கட்டத் தெரியாமல்
கை முழுக்க தேன் கொண்டு வருகையில்
கொட்டிவிட்டுப் போகிறாய்
நீ எப்போது தேனீ ஆனாய்?
உனக்கும் எனக்கும்
அம்மா காட்டி சோறூட்டிய
அதே நிலவை
என் வானிலிருந்து மட்டும்
எடுத்துச் செல்கிறாய்
அனுமதியின்றியே
இமைகளைக் கடந்திடும்
ஒவ்வொரு துளியிலும்
ஓராயிரம் கேள்விகள்
உன்னிடம் பதில் இல்லை
என்னிடம் எதுவுமே இல்லை.
*
ஒரு பேய்க்காற்றில்
மூச்சுத் திணற பறக்கிறது ஆன்மா
அணைத்துக் கொள்ளவும்
ஆசுவாசப்படுத்தவும்
ஆறுதல் செய்து
தேற்றவும்
ஏதேனும் ஒன்றை
அனுப்பிக்கொண்டே இருக்கிறது
இயற்கை
எனில்
நான் ஏன் வருந்தப் போகிறேன்?
சூரியன் போல உச்சியில்
மினுக்கவில்லை எனினும்
ஒரு காத்தாடி போல
பறத்தலுக்குப் பழகி
சுழன்றுகொண்டே இருப்பேன்.
*
விவசாயி
வேர்வை சிந்தி
உழுது
விதைத்து
நீர் பாய்ச்சி
நிலம் காத்து விளைவித்தார்
பாகற்காய்களை
அறுவடை முடிந்த அதே மாலை
அனைத்து காய்களும்
விலைமகளிராய் சந்தைக்குச் சென்றன
விலைபோகாத சில காய்கள்
விவசாயி வீட்டில் வெந்து கொண்டிருந்தன
சோற்றோடு அதைப் பிசைந்து சாப்பிட்ட சிறுமி
‘பாகற்காய் கசக்கிறது, வேண்டாம்’
என்று சொல்லி
பனம்பழங்களைச் சுட்டுத் திண்ண
பக்கத்து வீட்டிற்கு ஓடினாள்
அப்பா பனைமரங்களை வளர்க்க நினைக்கவில்லை
சிறுமிக்கு, ”பாகற்காய் இனிக்கிறது” என்று சொல்ல
அனுபவமில்லை
உண்மை
யாதினும் கொடுமையாய்
கசக்கிறது.
*



