இணைய இதழ் 125கவிதைகள்

பிரபு கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

காதல் ஒரு மாய உயிரி

திகட்டத் திகட்ட காதலிப்பதெல்லாம்
பிற்போக்குத்தனமானது
அது ஒரு மடமை, அறிவிலியின் உச்சம்.

சிலிர்க்கச் சிலிர்க்க அதன் ஸ்பரிசங்களுக்குள்
மூழ்கி எழுதலென்பது இயலாத ஒன்று.

காதலில் மூழ்குதலென்பது மட்டுமே
மிக எளிமையாக நடந்தேறும்.

நீரில் மூழ்கி எழுவதைப் போல
இரண்டு மூன்று வாய்ப்புகள்
அனிச்சையாக வருவதில்லை

ஒருவேளை திரும்புதலின் பற்று உங்களுக்கு இருந்தால்
மிகுந்த மெனக்கெடல் தேவைப்படலாம்

மூன்று பிறைகளுக்குப் பின்னால்
அதன் சரீரங்களுக்குள்
உங்களை ஒப்படைத்துக்கொண்டால் நன்று.

சுயத்தைப் பற்றிய சிந்தனைகளற்று
காதலின் அலாதியில் மூழ்கித் திளைக்கலாம்.
அதில் தவறேதுமில்லை.

ஆனால், சுயம் உங்களையே பற்றிக்கொள்ள நேர்ந்தால்,
சுயம் கனகச்சிதமாக அதன் வரையறைக்குள்
தன்னைப் பகுப்பாய்வு செய்துகொண்டால்,
சுயம் திடமாக தன்னை மீட்டுக்கொள்ளத் துடித்தால்,
வெளியேறி விடுங்கள்!

காதல் தன் அபத்தங்களை காலம் தாழ்த்திய பின்பே
வெளிக்கொணரச் செய்யும் ஆபத்தானது

அது தன்னைத்தானே உண்டு மாய்த்துக்கொள்ளும்
ஒரு மாய உயிரி

நீங்கள் அதன் செரிமானத்திற்கு அதிகத் தீணியிட்டால்
அதன் பசியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்

தகுந்த இடைவெளிகளுக்குள் ஊடல் கொள்ளுதல்
என்பது ஒரு வழி
தன்னை மீட்டுக்கொண்டே வருவதென்பது ஒரு வழி
பிரித்துக் கொடுத்தல் என்பது இன்னொரு வழி

காதலின் குரூரத்தைக் கண்டு, கேட்டு, பெற்று என
எப்படியோ உணர்ந்தவர்கள் தப்பிக்க முயல்கிறார்கள்

ஆனால், அவர்களுக்குத் தெரிவதேயில்லை
அது தன்னைப் பற்றிக்கொள்ளாதவர்களை
இன்னும் குரூரமாகத் தின்று தீர்க்குமென.

*

கனா

நிழலைப் பின்தொடர முடியாத,
இருள் சூழ்ந்த கனவில்
யாரையும் காண முடிவதில்லை .

வெறும் வெறுமையை அளந்து கொண்டிருக்கும் அந்தக் கனவில்,
சில அசாத்தியங்கள் நிகழ்ந்ததேற முடிகின்றன

தனிமை என்றால் தனிமை

யாரோ இருக்கிறார்கள் என்றால் இருக்கிறார்கள்

காதலோடு இருக்கிறார்கள் என்றால்
காதலோடு இருக்கிறார்கள்

கோபத்தோடு இருக்கிறார்கள் என்றால்
கோபத்தோடு இருக்கிறார்கள்

அச்சமூட்ட வந்திருக்கிறார்கள் என்றால்
அச்சமூட்டத்தான் வந்திருக்கிறார்கள்

யாரென நாம் நிர்மானிப்பதுதான் பிம்பம்
எதற்கென நாம் உணர்வது மட்டும்தான் பிரதானம்.

இதே போன்ற ஒரு கனாவில்தான் வெளிச்சத்தில்
கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறோம் இப்பூமிப்பந்தின் மேல்

இங்கும் அதே அசாத்தியங்கள்தான்

தனிமை என்றால் தனிமை

யாரோ இருக்கிறார்கள் என்றால்
யாரோ இருக்கிறார்கள்

காதலோடு இருக்கிறார்கள் என்றால்
காதலோடுதான் இருக்கிறார்கள்

கோபத்தோடு இருக்கிறார்கள் என்றால்
கோபத்தோடுதான் இருக்கிறார்கள்

அச்சமூட்டுகிறார்கள் என்றால்
அச்சம்தான் மூட்டுகிறார்கள்

எப்படி எண்ணங்களோ அப்படியே!

ஒரே ஒரு மாற்றம்
இங்கு கண்ணுக்குப் புலனாகுவதெல்லாம்
வெறும் பார்வைக்கு மட்டுமே

யாரென, எதற்கென நாம் பார்ப்பதுதான் பிம்பம்

ஆனால், உணர்தலென்பது சுயநிலை கடந்தது.

*

பிரிவைத் தற்காலிகமென எண்ணிக்கொண்டிருக்கிறவர்கள்

பிரிவைத் தற்காலிகமென எண்ணிக்கொண்டிருக்கிறவர்கள்

பிறகெப்படி என்ற கேள்வியை
பிறகெப்போதும் கேட்க முடியாமலேயே போவதுண்டு

பிரிவு, நிரந்தரமாகத் தன்னை மீட்டெடுக்கும் என
நம்பிக்கொண்டவர்கள் தன்னை மீட்டுக்கொண்டு விட்டனர்.

அது தற்காலிகமானதெனவும், காதல் அழியாததெனவும்
நம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்குள் அப்படியேதான்
இருக்கிறது காதல்.

காதல் மிக இலகுவான ஹைட்ரஜன் பிணைப்பைப் போல
ஏதாவது இரு முனைகளை ஈர்த்துக் கொண்டிருக்கும் அருவம்.

விடுபடுவதற்கென எந்த அசாத்தியமும் அதற்குத் தேவையில்லை.

பிணைப்பிற்கென எந்த நிலைப்பொருளும் கூட
அதற்குத் தேவையில்லை.
உயிரோட்டமிக்க நினைவுகள் இருந்தாலே போதுமானது

பிரிவைத் தற்காலிகமென எண்ணிக்கொண்டிருக்கிறவர்கள்
இப்படித்தான் நினைவுகள் வழியாக
காதலின் பிணைப்பிற்குள் உள்ளாழ்ந்தபடி
அதனைப் புனிதமெனக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

*

prabuuu33@gmail.com


மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button