வருணன் கவிதைகள்

அத்தனை பவ்யமாய் அத்தனை அமைதியாய்
அருகே அமர்ந்திருக்கின்றன ஏக்கங்கள்
இரவின் இருட்டுக்குப் பொருத்திக்கொண்டு
மூச்சுக் காட்டாமல்
அடுத்த சில கணங்களுக்குள்
மீதமின்றி விழுங்கக் காத்திருக்கும் குரூரம்
துளியும் தெரியாத சர்வசாந்தம்
மழைநிசிகளில் ஓயாது
நித்தமும் கரகரக்கும் நுணல்களின் அழைப்பொலி
தேங்கிய நீரும் படர்ந்துள்ள இருளும்
மீதமிருக்கும் வரை.
*
ஒரு வெற்றிடத்தைக் கொண்டு
இன்னொரு வெற்றிடத்தை
நிரப்ப முடியுமெனும் அதிசயத்தை
எவரும் நம்புவதில்லை
தோழமை
தளர்ந்து தோய்கையில்
எல்லாம் சரியாகிடும் எனத்
தேற்றும் சொற்கள் பகிரும்
நாமாகிலும்
நம்ப வேண்டாமா?
*
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு
நம் நேரங்களை ஒரே நேர்கோட்டில்
நிறுத்தி இருக்கிறது காலம்
எழுகிற அலைகள் உறையவில்லை
பறவைகளின் பறத்தல் நிலைக்கவில்லை
வீசுகிற பனையோலைகள் ஸ்தம்பிக்கவுமில்லை
நினைவுகளின் கவுச்சி தாளாமல்
நாம்தான் எதிரெதிர் திசைகளில்
தேடுகிறோம்
தவறவிடாத எதையோ.
*
மின்னலுக்குப் பிறகான
இருள் போல்
உன் அன்பு வெட்டிய பின் படரும்
வெறுமை
அன்பின் ஞாபங்களைக் காட்டிலும்
அதன் பின்னான மூர்க்கமான
இருளும் அமைதியும் தனிமையுமே
அதன் வசீகரத்தைக் கூட்டுகிறது.
அடுத்த வெளிச்சக் கீற்று
எப்போதெனும் ஏக்கத் திரியை
அதுவே தூண்டுகிறது.
சூழ்ந்திருக்கும் மசிய இருளுக்கு
மத்தியில் ஓசையின்றி
விரியும் ஒரு குறும்புன்னகையில்
மின்னலைப் போல அல்லாமல்
மெழுகுவர்த்தி ஒளியின்
குளிர்ச்சி.
*



