
அம்மாவின் மூன்று பெயர்கள்
அம்மாவுக்கு மாமியார்
அவளது அம்மம்மாதான்
மாமனாரோ தாய்வழித் தாத்தா
அம்மாவின் அப்பா
அவளது அம்மம்மாவின் தம்பி
அவர் கல்யாணம் கட்டிக்கொண்டது
தனது அக்காவின் மூத்த மகளை
பெண் எடுத்து
பெண் கொடுத்து
பெண் எடுத்த
தொடர்கதை
அம்மாவோடு நிறைந்தது
அதன் பின்பு
கொடுக்கல்
வாங்கல் இல்லை
அம்மாவின் ஜாதகத்தில்
அவள் பெயர்
பூமாரி அம்மாள்
திருமண அழைப்பிதழில்
பூங்கொடி
இப்போது வந்த
வாக்குச்சாவடி சீட்டில்
பூக்கொடி
பூமாரியம்மாளை விட
பூக்கொடியை விட
பூங்கொடி
மென்மையானது
’ங’ப் போல் வளை
என்ற ஔவையின்
ஆத்திச்சூடி போல்
‘பூங்கொடி’ அம்மாவும்
சுற்றத்தை அரவணைத்து
வாழ்கிறாள்
ங மட்டும்
புழங்கும் சொற்களில்
இருந்துகொண்டு
ங வரிசையின்
பன்னிரு உயிர்மெய்களைக்
காப்பது போல்
குடும்பத்தைக் காக்கிறாள்.
*
கட்டியங்காரி
அப்பாவுடன் பிறந்தவர்கள்
ஏழு பேர்
அதனால் அப்பத்தாவிற்கு
ஏகப்பட்ட பேரன் பேத்திகள்
என் பெயரைக் கூட அறியாத அப்பத்தா
நான் அவளைப் பார்க்கச் சென்றால்
மன்னன் வருகைக்கு
கட்டியம் கூறுவதைப் போல்
அவள் கூறும்
மூன்று வார்த்தைகள்:
‘கண்டெடுத்த கனியே, கிளியே;
சீம கலெக்டரு;
ஜில்லா மயிலு’
அம்மா ஏச ஏச
நான் பம்பரம் விட்டு
வீட்டின்
கொல்லஞ்செங்கல் தளத்தை
பொத்தலிடும்போது
அம்மம்மா சொல்வாள்
‘மன்னன் பம்பரம்
மணலிலும் ஆடும்’
என்று
அம்மம்மா
வேறு யாரும் அல்ல
அப்பத்தாவின் மூத்த மகள்.
*
முளைக்கொட்டு
அதுவரை இடிக்கும் உரல்களாக
வெறும் கற்களாகக் கிடந்தவை
கவிழ்த்துப் போட்டு
குலவையிட்டு கும்மி அடிக்க
நிலையில் வைத்த பின்
தொட்டு உணரும் தெய்வமாகின்றன
குமரிகள் வட்டமிட்டு
கும்மி கொட்டுவதைக்
காணும் குழந்தைகள்
தாங்களும்
கும்மி அடிக்கிறோம் என்று
அவர்களுக்கு இடையில் புகுந்து கொண்டு முரண்டு பிடிக்கிறார்கள்
அப்போது ஒரு வட்டம்
இரண்டு வட்டங்கள் ஆகிறது
இப்போது
வெளிவட்டம் குமரிகளுக்கு
உள்வட்டம் குழந்தைகளுக்கு
கும்மிக்கல்லைச் சுற்றும்
குழந்தைகளின் உள்வட்டம் நிலவு
குமரிகளின் வெளிவட்டம்
நிலவைச் சுற்றும் ஒளிவட்டம்
வட்டங்களுக்கு வெளியே
உட்கார்ந்து கொண்டு
வேடிக்கைப் பார்க்கும்
பேரிளம் பெண்கள் எல்லாம்
கருமுகில்கள் போல்
தங்களது இளமைக்கால நினைவுகளைச் சுமக்கும் வானம்
”தன்ன நன்னே நான நன்னே
தன்னேனே தான தன்னானே…”
என்ற இரண்டு மெட்டுக்கள்தான்
அனைத்துப் பாடல்களுக்கும்
மெட்டு மொட்டாக
வளை குழுங்க கைக்கொட்டும்போது
பாட்டு பூவாகிறது
மற்ற பாடல்களுக்கு எல்லாம்
ஒருமுறை மட்டுமே
கைக்கொட்டும் பெண்கள்
ஆனிப்பொன்
பாட்டுக்கு மட்டும்
இருமுறை தொடர்ச்சியாகக் கொட்டி
கொஞ்சம் இடைவெளி விட்டு மூன்றாம் முறையாகக் கொட்டுகிறார்கள்
”வாராலம்மா வாராளே
வடிவழகி வாராளே
வட்ட வட்டப் பொட்டழகி
வடக்குத்தெரு மாரியாத்தா…”
என்று கணபதி பாட்டி படிக்கும்போது
உறங்கச் சென்றால்,
”ஆனிப்பொன் மண்டப ஊஞ்சலிலே
செல்வ முளைமாரி ஆடுகிறாள்”
என்ற பாட்டு பாடும் போது
உண்மையிலே ஊஞ்சலில் வைத்து தாலாட்டியதைப் போன்று
இந்த ஆடிக்காற்றுக்கும் அதுக்கும்
உறக்கம் சொக்கிக்கொண்டு
வந்து சேரும்.
செம்மல்
ஒட்ட வெட்டினால்தான்
சளி பிடிக்காது என்ற
அறிவுரைக்கு இணங்கி
ஒட்ட முடியை
வெட்டிய பின்
தலையைப் பார்த்து
கரிச்சா மண்டை,
சட்டி மண்டை என்று
அக்கம் பக்கத்து
அத்தைகள் அக்காக்கள் எல்லாம் கேலி பேசியது ஒரு காலம்
காலம் அகாலம் ஆகாமல் இருக்க
உண்ட ஆலாலத்தை
கண்டத்தோடு கட்ட
உமையின் விரல்கள்
முயன்றபோது
கண்டம் நீலகண்டமானது
அண்டத்தின்
வானமும் கடலும் கூடத்தான்
அரும்பு மீசையுடன் கூடவே
அருகம்புல் போல
புல் மேயும்
ஆட்டுக்கு இருப்பதைப் போல
தாடைக்குக் கீழ்
ஆங்காங்கே முளைத்த
தாடியைப் பார்த்து
‘ஷேவ் செய்யலயா சார்?’ என்று
ஜோதி அக்காதான்
முதன்முதலாகக் கேட்ட நினைவு
அதற்காகவே, ‘ஜில்லட் கார்ட்’
ரேசரோடு ஷேவிங் க்ரீம், பிரஸ் வாங்கி சவரம் தொடங்கினேன்
அதன்பின் எப்போது என்னைக்
கொஞ்சம் தாடியோடு பார்த்தாலும்
ஜோதி அக்கா
அதே கேள்வியைக் கேட்கத் தவறியதில்லை
இப்போது மணமாகி
வேற்றூர் போன ஜோதி அக்காவை
சமீபத்தில் பார்த்தேன்
மூன்று வார தாடியோடு இருந்த நான்
ஆனால் இப்போது அக்கா கேட்கவேயில்லை
‘ஷேவ் செய்யலயா சார்?’
அரும்பு முகையைத் தாண்டி
அலராகி விட்டது
இனி வீயும் செம்மலும்தான்.
மாலை மதி
கரிமத்தாளுக்கு
கீழ் இருக்கும்
அடிக்கட்டை எழுத்தாக
மெல்லிசான நிலவு
அசலாக்க வர வேண்டும்
அந்தியை முந்திக்கொண்டு
இரவு.
பிள்ளைத்தமிழ்
உன்னைப் பொருத்தவரை
ஆடைதான்
ஆபாசம்
நிர்வாணம்
நிர்மலம்
ஆணவம்
கன்மம்
மாயை
அண்டாத
ஆண்டவனின்
சாயை
சிற்றின்பச் சேற்றில்
மலர்கின்ற பேரின்பத் தாமரை
எழுபிறப்பும் பழி தீண்டாமல் இருக்க
மெய் தீண்ட வந்த நான்மறை
கண்வளரும் கவிதையே
சிருஷ்டிக்கு
திருஷ்டி படுமா?
திமிர்ந்த ஞான
மமதையே
நெருப்பைப் போல்
ஒளி என்ன சுடுமா?
*



