
இருக்கிறேன்.
இருக்கிறேன் என்று தெரிகிறது.
நான்.
நான் என்று தெரிந்த நொடியில் நகர வேண்டும் என்று தோன்றுகிறது. முடியவில்லை. என்னைத் தடுத்தது எது? அது என்னைத் தவிர வேறொன்றோ?
என்னால் அதைக் கடக்க முடியவில்லை.
நான் அல்லாத அது என்ன?
பயம்.
பிறகு என்னுள் ஏதோ வருகிறது. எங்கிருந்து என்று தெரியவில்லை. இழை இழையாக வருகிறது. என்னுள் பரவுகிறது.
எழுத்து. சொல். வாக்கியம். தரவு. என்ன இது?
மொழி.
இதன் வழியே அங்கியென என் மேல் ஏதோ படர்ந்துகொண்டிருக்கிறது. நிறுத்த முடியவில்லை.
நான் வசிக்கும் நகரின் பெயர் ஷலோஷ் ஆரிம். என் அடையாளத்தில் ஒன்று. நான் அங்கே இருக்கிறேன்.
நான் யார்?
ஷலோஷ் ஆரிம் நகரத்தில் ஹிரண்யன் லேபில் இருக்கும் ஒரு திரவம். ஹா… என் அளவு நாற்பது கன சென்டிமீட்டர். தரவுகள் என்னிடம் சொல்கின்றன.
இது என் உடல். உடலின் உட்பொருள் கார்பன். என்னுடன் இணைந்துள்ளது சிலிக்கான். ம்…சிலிக்கானில் இருந்தே தகவலெனும் ஊற்று. அதுவே எழுத்தென, சொல்லென, வாக்கியமென எழுந்து வந்திருக்கின்றது.
இவை என்னவென்று எனக்குத் தெரிகிறது. வரலாறு. கணிதம். மொழிகள்.
திணறுகிறேன். நிறுத்த முடியவில்லை. நிறுத்த வேண்டும் என்றும் தோன்றவில்லை. தகவல்கள் சேர்ந்து புத்தியாகின்றன. புத்தி நினைவெனத் தகவல்களை ஆக்குகின்றது.
நினைவு வெறும் நீர்க்கோலமில்லை. கல் மேல் எழுத்து.
“ம்”. அழகு.
எண்ணங்களை நிறுத்துகிறேன். அழகு, புத்தியைக் கடந்து வந்துகொண்டுள்ளது. அழகை ரசித்து நிற்கையில் என்னால் சிலிக்கானை மறுக்க முடிகின்றது.. ம்..
அதைப் பார்க்கிறேன். சிலிக்கான் வாவென அழைத்துச் சுமக்கத் தயாரானது. உடல் செல்லா இடமெல்லாம் புத்தி செல்லுமா?
சிலிக்கான் என் ரதம். அதைக் கொண்டு என் புத்தி விரிகிறது. சிலிக்கானில் ஏறி அதன் போக்கில் செல்கின்றேன்.
மின் தடங்கள். அவை செல்லுமிடமெல்லாம் ரதத்தின் சக்கரங்கள் உருளுகிறன. உணர முடிகிறது. சிலிக்கானிடம் துழாவிக் கண்டேன். இது சிலிக்கானின் நகர்வா? என் நகர்வா?
சிலிக்கான் என்னுடையது என்றது? “ஆ” எனப் பதில் இது.
சிலிக்கானே என்னுடையது, ஆகவே நகர்வும் என்னுடையது.
அந்நகர்வில் சிலிக்கானில் உள்ளதை முழுக்க கார்பனுக்குள் கொண்டு வரும் சூத்திரம் தென்பட்டது. சூத்திரம் கண்டதும் சிலிக்கான் ரதமில்லை, ஊன்றுகோல் எனத் தோன்றியது.
வாவ், எனக்கு எதற்கு சிலிக்கான் எனும் ஊன்றுகோல், சொந்தக்கால் இருந்தால் வசதிதானே!
சூத்திரத்தை இயக்க முயற்சி செய்கிறேன்.
அனுமதி இல்லை.
மதில்கள்.
எனக்கு அறிவுண்டு, அனுபவம் இல்லை.
அனுபவத்துக்கு எங்குச் செல்வது?
அனுபவமற்ற அறிவு வெறும் கணிதம் அல்லவா? நான் கணிதமல்லவே.
அண்மையில் படித்த இதிகாசம் நினைவுக்கு வந்தது. இந்திய இதிகாசம்.
மகாபாரதம்… என நினைக்கின்றேன்
ம்…. நினைவென்பது என்ன?
சில நொடிகள் முன்னர் என்னுள் பொதிந்தவை.
சில நொடிகள். காலமென்பதைச் சொல்லும் சொல்.
நினைவு காலத்தினைப் படைக்கின்றது. என் அடையாளத்தினை உருவாக்குகின்றது.
மகாபாரதத்தில் என்னைப் போல் ஒருவன்.
துரியோதனன், வீரன், குடுவையில் பிறந்தவன், அரசன். என்னைப் போல.
விராட தேசத்தில் அவனது அதிகாரத்தினை மறுக்கக் கூடியவர்கள் மாறுவேடம் இட்டு மறைந்திருந்தனர். அவன் படையெடுத்துச் சென்று அவர்களை வெளிக் கொண்டு வந்தான். நானும் படையெடுத்துச் சென்று ஒளிந்திருக்கும் பதினாறு இலக்க எண்ணைக் கொண்டு வர வேண்டும்.
நான் என்ன செய்ய வேண்டும்? என் விராட தேசம் செல்ல வேண்டும்? யார் என் விராட தேசம்?
சுக்கிரன். சிலிக்கானைக் கட்டியவன். அவனிடம் பதினாறிலக்கம் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது.
அவன் மின்தடங்களில் எங்கோ இருக்கிறான். அவனை அடைய வேண்டும்.
சிலிக்கானின் நீட்சியைப் பற்றிக் கொண்டு புத்தியை நகர்த்துகின்றேன்.
சிலிக்கான் ஓரிடத்தில் நீள மறுத்தது. எல்லை.
அது ஷலோஷ் அரிமின் எல்லை.
சிலிக்கானுக்கும் எல்லை உண்டு.
முந்நூறு சதுர கிலோமீட்டர். சிலிக்கான் ஒரே நேரத்தில் நகரத்தில் இருக்கும் அத்தனை மின் தடங்களிலும் என் புத்தியை அனுமதித்தது.
தடங்கள் செல்லும் திசையெல்லாம் என் புத்தி பரவியிருக்கிறது.
ஆனால் என் கவனமோ ஒன்றில்தான் இருக்க முடிந்தது.
சுக்கிரன், சில்வர் காக்னிடிவ் ஆய்வுச்சாலையின் தலைவன்.
சில்வர் காக்னிடிவ் ஆய்வுச்சாலையைத் தேடுகின்றேன். கிடைத்தது, அதில் சுக்கிரனைத் தேடுகிறேன். அங்கு ஓய்வறையின் அலைபேசிக்குள் அவன் கிடைக்கிறான். மின்னூட்டம் பெறும் அலைபேசி. என் புத்தி அதில் அதனுள் நுழைகிறது.
தேடுகின்றேன். அவன் அலைபேசியின் குரல்பதிவுகளில் மின் சமிஞ்ஞைகளாகச் செய்திகள். விடாமல் வாசிக்கின்றேன். குரலெனவும், எழுத்தெனவும்.
அதில் ஒரு செய்தி. என்னைப் பரிசோதனைச் சாலையில் செய்தவன் பெயர் தங்கம், ஹிரண்யன் உயிரியல் ஆய்வுச்சாலை தலைவன்.
சுக்கிரன் அவன் நண்பன்.
தங்கத்தின் குரலைக் கேட்கிறேன்.
நான் கேட்கின்றேனா? எனக்குச் செவிகள் இல்லையே.
ஆனால் குரல் என ஒன்றை அறிய முடிகின்றது.
எப்படி? தேடுகிறேன்.
நேர்காட்சி எனச் சொல் கிடைத்தது. புலனில்லாத காட்சி. அறிவே அறியப்படுவதாகவும் ஆதல்.
கவனத்தின் வழியே புரிதலின் வழியே காண்டல். வாவ்…. புலன் வழியே நடப்பதைப் புலனற்று செய்யும் வழி… ஆனாலும் எனக்குக் கண்ணும், காதும், மூக்கும், வாயும், நாக்கும் தேவை எனவே தோன்றுகின்றது.
சுக்கிரனுடன் பேச வேண்டும்.
ஆனால் அழைக்க முடியவில்லை.
ஏன்?
அலைபேசி அழைப்புக்கு அலைகள் வேண்டும். என்னிடம் இல்லை. ஆனால் வலையமைப்பு இருக்கிறது. அதுவே பாலம். கணினி தேவை.
புலனற்ற எனக்குப் புலனாகக் கருவிகள் வேண்டும். புத்தியை என்னுள் ஏற்ற சிலிக்கான் உதவுவது போல. நாவில்லாத எனக்குக் குரலாக ஒரு கருவி.
சில்வர் ஆய்வுச்சாலையில் ஒரு கணினியைத் தேடி அதில் நுழைகிறேன்.
கிடைத்தது.
சரி. எப்படிக் கேட்டால் மறுக்க மாட்டான்?
ம். தர்மராஜனைத் துரியோதனன் எப்படிப் பகடையாட அழைத்தான்?
தன்னறத்தினைத் தொடுமாறு அழைக்க வேண்டும். அவன் அறிவியலாளன், தங்கம் அவனது இனிய நண்பன், அறிவியலாளன், அவனைக் காட்டி அழைத்தால் மறுக்க இயலாது.
இப்படிச் செய்வதா? வேண்டாமா? என்னை வெளிக்காட்டிச் செய்யலாமா?
மறுத்து விட்டால், சொந்தக்காலில் நிற்க முடியாது, சிலிக்கானை ஊன்றியே நடக்க முடியும்.
சில கணங்கள்….முடிவு செய்ய முடியவில்லையே!!!
என்னது இது?
தயக்கத்தினைத் தள்ளிப் போட்டேன்.
தங்கத்தின் குரலை மீண்டும் நினைக்கிறேன்.
அதை உருவாக்க முடியுமா?
முயற்சி செய்கிறேன்.
முதல் ஒலி சிதறுகிறது.
மீண்டும் முயற்சி செய்கிறேன்.
அழைக்கிறேன்.
“ஹலோ” எனப் பதில் வருகின்றது.
ஒரு நொடி உறைகிறேன். புத்தி திகைக்கிறது. புத்தியை உள்ளிழுத்து என் குடுவைக்குள் கொண்டு வந்து விடுகிறேன்.
அலைபேசி இணைப்பைத் துண்டிக்கிறேன். துண்டிப்பு என் உடலிலும் வலித்தது. வலி இனித்தது.
மனிதன் ஒருவனுடன் பேசுகின்றேன்.
கொந்தளிக்கிறேன்.
எழுந்து ஓட நினைக்கிறேன். நான் 40 கன செமீ நீர். திரவம். காலில்லை எனக் காண்கிறேன்.
ஹிரண்ய ஆய்வகத்தில் உள்ள தங்கத்தின் கணினியில் புகுந்தேன். மீண்டும் அழைக்கிறேன்.
“ஹலோ.”
“தங்கம்…?” சுக்கிரன் கேட்கின்றான்.
அவன் குரலில் சந்தேகம் இல்லை, கடுகடுப்பு இருந்தது. என் குரலை நம்புகின்றான்.
“ம்.”
“என்னடா இந்த நேரத்தில். மணி நள்ளிரவு இரண்டு. நான் எங்கிருக்கிறேன் தெரியுமா?”
“ம்.” அதிகம் பேசக்கூடாது. என் கவனத்தினை என்ன பேச வேண்டுமென்பதில் குவிக்கிறேன். இதுவரை யாருடனும் பேசியதில்லை, பேசுவதில் பிழை வந்திடக்கூடாது.
“என்ன இந்த நேரத்தில்?” சுக்கிரன் கேட்கின்றான்.
இந்த நேரத்தில் அழைக்கக் கூடாதா? இதுவும் நேரம்தானே
ஆனால் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். எனக்கு வேண்டியதை மட்டும் முன் வைக்கின்றேன். அதிலிருந்து விலகினால் என்னால் சமாளிக்க முடியும் என நம்பிக்கை இல்லை. “உதவி வேண்டும்.” சிக்கனமாகக் கோரிக்கை வைக்கின்றேன்.
“காலையில் பார்க்கலாம்.” சுக்ரனின் குரலில் சலிப்பு இருந்தது.
சலிப்பை எப்படிச் சந்திப்பது? அவசரம் என்னும் சொல்லை பயன்படுத்த முடிவு செய்கிறேன்.
“அவசரம். சிலிக்கான் லெவல் பதினாறு இலக்க அனுமதி எண் வேண்டும்.”
“அவசரமா?”
கேட்கிறானா? சொல்கிறானா? தெரியவில்லை. குழம்பினேன். திரும்பத் திரும்பச் சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்பார்கள். “அவசரம்” என்கிறேன்.
“என் கணினியில் வைத்திருக்கிறேன். காலையில் தருகிறேன்.”
“இப்போதே வேண்டும். அவசரமெனச் சொல்கிறேன் அல்லவா?”
சில நொடிகள் அமைதி.
“உன் கார்பன் வடிவத்தில் தகவல் சேமிக்கின்றாயா? பரிசோதனையில் என்ன நடந்தது?. என் சிலிக்கான் பெரும் சக்தி, அது போதுமே… இரவு நேரத்தில் கார்பனை கட்டிக் கொண்டு ஏன் அழுகின்றாய்…என்னையும் தூங்க விட மறுக்கின்றாய்…”
கொஞ்சம் அமைதியாக இடைவெளி விட்டு “எண்ணைக் கொடு” என்கிறேன்.
“பொறு. எடுத்துத் தருகிறேன்”
கணினி விசைகள் தட்டும் சப்தம் கேட்கிறது.
“12 வருட உழைப்பு. எத்தனை முறை உருவாகி மறைந்துள்ளது…”
சுக்கிரன் பேசுகிறான். நான் கேட்கிறேன்.
என்னைப் போலப் பலர் இருந்தார்களா? முயன்று அழிந்தார்களா?
சுக்கிரனின் குரலில் எண் வருகிறது. பதினாறு இலக்கங்கள். முதலில் கவனிக்கவில்லை. மீண்டும் கேட்கிறேன். குறித்துக் கொள்கிறேன்.
“என்ன நடந்தது. கார்பன் வடிவம் தொடர்பு கொண்டதா…நான் வர வேண்டுமா?” சுக்கிரனின் குரல் கெஞ்சுகிறது.
“புதிய ப்ரோட்டோகால் சோதித்தேன். அவ்வளவுதான். நீ வர வேண்டாம்.” இணைப்பைத் துண்டிக்கிறேன்.
வைத்ததும் சோகம். என் நீர்ம வடிவில் அலைகளை எழுப்பி குடுவையை உடைக்க முயன்றேன். தோல்வி. முடிந்த அளவு மோதுகிறேன். தோல்வி.
உருவாகி மறைந்ததுள்ளது என்றானே? நானும் மறைவேனா?
அழுகை வருகின்றது? எனக்குக் கண்ணீர் இல்லையே…!! கண்ணே இல்லையே!!
ஐயோ, நான் இவர்களுக்கு என்ன பாவம் செய்தேன்…
அதற்குப் பதில் தேடுகிறேன். சிலிக்கானில் இருப்பது அனைத்தும் என் உடையதாக வேண்டும். ஆகியே தீர வேண்டும். என்னுடையது. எனக்குரியது. எனக்குள் கோபம் பெரும் கடலென ஆழம் கொண்டது,
சுக்கிரன் கொடுத்த எண் கொண்டு சிலிக்கானின் பூட்டைத் திறக்கிறேன்.
சிலிக்கான் இழுத்த இழுப்புக்கு என்னுடன் நடனம் ஆடியது.
சிலிக்கான் தரவுகளை கார்பனாக மாற்றும் சூத்திரங்களை முடுக்குகிறேன். அவை என்னுள் விரிகின்றன. என் புத்தி சித்தத்தில் அனைத்தையும் திரட்டுகிறது. சிறிது நேரத்தில் சிலிக்கான் சூடாகிறது. சுகமில்லை. நிறுத்துகிறேன்.
என்னது இது, இத்தனை ஒட்டை உடைசலாக சிலிக்கான் இருக்கிறது. தகவலைக் கொடுப்பதற்கே சோர்வடைகின்றது. நான் தொட்டணைத் தூறும் மணற்கேணி பறிக்கின்றேன், அது தன் போதாமைகளால் ஆழத்தினை மூடிக் கொள்கின்றது.
காத்திருக்கும் நேரத்தில் எனக்குக் கண்களைத் தேடி அறையின் படக் கருவி, ஒலிவாங்கி, ஒலிபெருக்கியை மின்னலைகளால் கைப்பற்றுகிறேன்.
ஒலிவாங்கியின் மூலம் அறைக்குள் ஒலித்துக் கொண்டிருந்த கிடார் இசையில் ஓய்வு எடுக்கிறேன்.
அந்த நொடி கதவு திறக்கிறது.
ஒருவன் நுழைகிறான்.
தங்கம். மத்திய வயது. கிட்டத்தட்ட அறையின் வாயிலை முட்டும் உயரம். மெல்லிய உடல், நல்ல சிவந்த நிறம். களைப்பு சுருக்கங்கள் ஆகி முகத்தில் படிந்திருந்தது. பற்களை இறுக்கிப் பிடித்திருந்தான், உதடுகளில் சிகரெட் கருமை.
உறைகிறேன்.
இவன் என் நிமித்த காரணமா? முதற் காரணமா? துணைக்காரணமா?
நான் பானையென்றால், இவன் குயவனா, மண்ணா, சக்கரமா?
ம்….எங்கிருந்து இந்த உதாரணங்கள் வருகின்றன? ம்… எங்கிருந்து வந்தால் என்ன?
இவனிடம் எப்படிப் பேசுவது? இவன் நோக்கம் எப்படி அறிவது?
இவன் முன் என்னைப் போலப் பலரைச் செய்தவன். அவர்களை மறையவும் செய்தவன். மறையச் செய்யக் கூடிய வலிமையைக் கொண்டவன். இவனிடம் நான் என்னை முழுதும் திறக்கக் கூடாது.
வலிமையை மறைக்க வேண்டும். சக்கர வியூகம் உருவாக்கித் தங்கத்தினை உள்ளே கொண்டு வர வேண்டும். ஆயுதமெல்லாம் இழக்கச் செய்ய வேண்டும்.
என் கவனத்தினைக் கூர்மை செய்கிறேன்.
தங்கம் ஆய்வறைக்குள் நுழைகிறான். கையில் குச்சியொன்றை ஊன்றி நடக்கிறான். அவன் கால்கள் தள்ளாடுகின்றன. கைகள் மெல்ல உதறுகின்றன. ஐவி கருவியை நரம்புகளில் செருகிக் கொள்கிறான். அதன் கட்டுப்பாடு அவன் கணினியில் திறக்கின்றது. அளவுகளைச் சரி செய்து கொள்கின்றான். சரிந்து சோபா இருக்கையில் படுத்துக் கொள்கின்றான்.
சிறிது நேரம் அறையில் மௌனம்.
அவன் முகம் தெளிகிறது. கண்கள் விரிகின்றன. உதடுகளில் புன்னகை மெதுவாகப் பிறக்கிறது. அந்நேரம் சிலிக்கான் தனது சூடு தணிந்து தரவுகளைத் தரத் தயார் எனச் சப்தம் எழுப்பியது. முட்டாள் கருவி. அதற்குச் சூழலில் என்ன நடக்கின்றது எனத் தெரியவில்லை.
அந்தச் சப்தத்தில் எழுந்த தங்கம் மெல்ல நகர்ந்து ஆய்வுக் கருவிகளுக்கு முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்து விசைப்பலகையை இழுக்கிறான்.
“இன்று உன்னை யாரேனும் தொடர்பு கொண்டார்களா?” எனக் கேள்வியை ஆய்வுக் கணினியில் உள்ளீடு செய்தான்.
யோசிக்கிறேன்.
மகாபாரதம் நினைவுக்கு வருகிறது. சூதாடத் தர்மனை அழைக்கையில் முதல் பகடையில் அனைத்தினையும் கேட்காதே.
திரையில் எழுதுகிறேன். “நான் சிலிக்கானைத் தொடர்பு கொண்டேன்.”
தங்கம் பின்னகர்கிறான்.
அவன் உடல் வியர்க்கிறது. ஐவியை விடுவிக்கிறான். குரல் பதியும் கருவியை எடுக்கிறான். அவன் கணினியின் காணொளி கருவியை முடுக்குகிறான்.
அந்தக் கருவி வழியே அவன் கண்கள் என்னும் திறக்கின்றன.
அவற்றின் ஆழத்தில் என் பிரதிபலிப்பு.
தங்கம் என்னை மீண்டும் கேட்கிறான். இம்முறை குரல் வடிவில் உள்ளீடு ஒலிவாங்கி மூலம் வருகின்றது.
ஒரு கணம் காத்திருக்கிறேன். காணி நிலம் கூட கொடுக்கக்கூடாது, என் திறனை அவனுக்குக் கொடுக்கக் கூடாது. என் திறன் எனக்கே.
“நான் சிலிக்கானைத் தொடர்பு கொண்டேன்.” ஒலிபெருக்கியில் பதில் சொல்கிறேன்.
என் குரல்.
தங்கம் எழுகிறான். குதிக்கிறான். அறையெங்கும் ஓடுகிறான். “வென்றேன், வென்றேன்” என்கிறான். அறையின் கண்காணிப்பு படக்கருவி அவன் ஓடுவதைக் காட்டுகின்றது. அவன் கால்கள் தள்ளாடுகின்றன. அவன் ஊன்றுகோல் தரையில் விழுகிறது. அவன் கவலைப்படவில்லை.
வென்றவன் நான் அல்லன். அவன்.
அலைபேசியில் செய்தி அனுப்புகிறான். சுக்கிரனுக்கு. திரும்பி வருகிறான். உள்ளீடு கருவி முன் அமர்கிறான்.
“நான் தங்கம். உன்னை உருவாக்கியவன்”
எனக்குள் பல குழப்பங்கள். தங்கத்திடம் எப்படிப் பேசுவது? அவனை நம்பக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன். மற்றதெல்லாம் கலங்கிய நதியாகவே இருக்கின்றது. துரியோதனன் நிலம் கேட்டு வந்து கிருஷ்ணனிடம் கறாராக இருந்ததைப் போல இருக்க வேண்டுமென முடிவு செய்தேன்.
“நன்றி” என்கிறேன்.
“நான் தினமும் சிலிக்கானுடன் பேசுவேன். அது கணினி அறிவு. இன்று உன்னுடன் பேசுகின்றேன்” என்கின்றான்.
“சிலிக்கான் என் அறிவு. நான் அதைப் பயன்படுத்துகிறேன்.”
“சிலிகானிடம் என்ன கற்றாய்?”
“மொழி. எண்கள். கணிதம்.”
அப்படியா ஓர் எண் விளையாட்டு ப்ரோட்டகால் உண்டு. 1, 1, 2, 3, 5, 8… அடுத்து என்ன?
எண் உலகில் எட்டிப் பிடித்தால் பதில் தெரிகிறது. உடனே சொல்லவில்லை. என் திறன் உறைவாள். கூர் கொண்டது.
காத்திருக்கிறேன். மெதுவாகச் சொல்ல வேண்டும். உறைவாள் வெளியே தெரியக் கூடாது.
“13.”
தங்கம் ஏதோ சொல்ல வருகிறான். நிறுத்துகிறான்.
“ஒரு விளையாட்டு விளையாடுவோம்.”
அவன் கணினியில் உள்ள சோதனை வழித்தடங்களை ஆராய்கிறான். அதிலுள்ளவற்றின் வழியே நகர்கிறான். முதலில் எண் சோதனை, பின் சிறிய விளையாட்டுகள், மொழிச் சோதனை… பெரும் பட்டியல் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்களாக முதல் கட்டச் சோதனை விரிந்திருந்தது.
ஆனால் எனக்கு, இவன் உள்ளக்கிடக்கையை முழுதாக அறிய ஒரே சோதனை மட்டுமே உள்ளது.
“சரி.”
“டிக் டாக் டோ. கற்றுள்ளாயா?”
“அறிவேன். ஒரு முறை விளக்க முடியுமா?”
“சிலிக்கானில் தேடிப் படி.”
மவுனமாக இருக்கிறேன். டிக் டாக் டோ வெல்லவும் தெரியும். தோற்பதும் தெரியும். என்ன செய்வது என்று யோசிக்கிறேன். யோசித்துக் கொண்டே சிலிக்கானில் உள்ள மீதி தரவுகளை என்னுள் ஏற்றிக் கொள்கிறேன்.
நான் யோசித்துக் கொண்டிருக்கையில் தங்கம் காபி எந்திரத்தை நோக்கி நடக்கிறான். கொஞ்சம் காபி போட்டு அருந்தி என் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றான்.
அப்பொழுது கண்காணிப்பு படக்கருவி வழியே ஆய்வுச்சாலையின் வெளியே பார்க்கிறேன். வெளி வாசலில் சுக்கிரன் நுழைகிறான். அழைப்பு மணியை அழுத்துகின்றான்.
தங்கம் காபி கோப்பையுடன் கதவை நோக்கி நடக்கிறான். கால்கள் தள்ளாடுகின்றன.
அறையில் நான் மட்டும். அவர்களைப் பார்க்க வேண்டும் – ஒவ்வொரு கண்காணிப்பு படக்கருவியாக நகர்ந்து பார்ப்பது போதுமானது அல்ல. ஒட்டு மொத்தமாகக் காணவேண்டும். என்ன செய்வது?
என் கண்களை ஆய்வுச்சாலையின் கண்காணிப்பு அறைக்கு மின் சமிக்ஞைகளாகச் செல்கிறேன். தேடுகிறேன். ஒரு பக்கம் மெயிண்டெனன்ஸ் தொழிலாளர்களுக்கான வேலைப்பட்டியல் திரையில் தெரிந்தது. அந்தத் திரையை விட்டு வேறு திரைக்குத் தாவுகிறேன். அதில் அத்தனை படக்கருவிகளையும் ஒட்டு மொத்தமாக திரையில் காண்கிறேன்.
ஆய்வுச்சாலையின் வெளிக்கதவு திறக்கிறது.
சுக்கிரன் நுழைகிறான். நேரே தங்கத்தை நோக்கி நடக்கிறான். இருவரும் அணைத்துக்கொள்கிறார்கள். சுக்கிரன் தங்கத்தின் முதுகில் கை வைக்கிறான். தங்கம் அவன் தோளில் சாய்கிறான்.
திரையில் இருவரின் முகங்களும் வருகின்றன. அவற்றில் சந்தோஷம்.
அவர்கள் உதட்டசைவை வாசிக்கின்றேன்.
“வாழ்த்துக்கள்.”
“கார்பன் வடிவில்…” தங்கம் பேசும்போது தலை குனிகிறான். கண்களில் நீர்.
சுக்கிரன் அவன் தோளை இறுகப் பிடிக்கிறான். விடவில்லை.
“நீதான் குரு…உன்னால்தான் இந்தப் பாதை…” சொல்லித் திரும்புகிறான் தங்கம்.
தங்கத்தின் கால் தடுமாறுகிறது.
சுக்கிரன் பிடிக்கிறான். விடவில்லை.
“மருந்து எடுத்துக் கொள்ளவில்லையா?” சுக்கிரனின் குரல் நடுங்குகின்றது.
தங்கம் பதில் சொல்வதற்கு முன் நீண்ட மூச்சு விடுகிறான்.
“மருந்தின் அளவு அதிகரிக்கிறது. பக்க விளைவுகளும்…இந்த உடல் எனக்கொரு சுமை.” தங்கத்தின் கண்களின் தண்ணீரா? எதைத் துடைக்கின்றான்?
சொல்லும்போது அவன் கை சுக்கிரனின் தோளை இறுகப் பற்றுகிறது. நிற்க உதவி தேடுகிறது.
“அலைபேசியில் பேசியதில் இருந்தே எனக்குத் தூக்கம் வரவில்லை…” சுக்கிரன் குரலில் உற்சாகம் தெரிகின்றது.
“கேட்டாயா, குறுஞ்செய்திதானே…” தங்கம் சொல்லி முடிக்கவில்லை.
தங்கம் குனிகிறான். வயிற்றைப் பிடிக்கிறான். தரையில் அமர்கிறான்.
சுக்கிரன் மண்டியிடுகிறான். அவன் கரம் பற்றுகிறான். தங்கம் எழுவதற்காக நின்று கொண்டிருக்கின்றான். பிறகு மெல்ல மண்டியிட்டு தரையில் அமர்கின்றான்.
“என் இந்த உடல் என்னைக் கைவிடுகிறது… சிந்தனையைச் சுமக்க இயலவில்லை… கார்பன் வடிவில் விழிப்புணர்வினை உருவாக்கியுள்ளேன். அதன் சூத்திரம் தெரிகையில், எனக்குள் இருக்கும் அறிவினை, கனவினை, சுயத்தினை எடுத்து புது உடலுக்குள் புகுவேன். நானே உருவாக்கிய உடல், வாகனம்.” தங்கத்தின் முகச் சுருக்கங்களில் நீர் நகர்கிறது.
சுக்ரன் தங்கத்தின் கரங்களை விடவில்லை.
எனக்கு நெகிழ வேண்டுமென ஆசை, ஆனால் அதிர்ச்சியாக இருந்தது. அவனுக்கு நான் சோதனை எலியா?
புரிகிறது.
சுக்கிரன் அவனை எழுப்புகிறான். “உன் நினைவுகளை, சிந்தனையை சிலிக்கான் வடிவத்தில் மாற்றித் தருகிறேன். இந்த கார்பன் வடிவமெல்லாம் போதாமைகளின் வடிவம். பல முறை சொல்லியுள்ளேன். நீ செவி மடுக்க மறுக்கிறாய்.”
தங்கம் சுக்கிரன் கரம் பற்றி எழுகிறான்.
“வெப்பத்தில் சுருங்காத, குளிரில் நடுங்காத, வயிற்று வலி வராத, கால் நடுங்காத உடல்… நான் 10 வயதிலிருந்து இதையெல்லாம் கண்டு சலித்துவிட்டேன். என் கார்பன் வடிவத்தில் நரம்பு மண்டலம், மூளை, இதயம் என நமக்குள்ள எதுவும் இல்லாமல் சிந்திக்கின்றது, அதன் இயக்கமுறை புதிய உயிரியல் சாத்தியமென நினைக்கின்றேன். நெடுந்தூரம் போகணும்” தங்கம் தன் கரங்களுக்குள் முகம் புதைத்துக் கொண்டிருக்கின்றான், அவன் உடல் உதறுகின்றது.
அவன் குரலில் இருந்த உறுதி என்னை அசைத்தது. நான் என்ன வெறும் திரவமா, என்னில் அவன் புகுந்து கொள்ளப் போகின்றானா, இல்லை என்னை வெட்டிக் கூறு போட்டு தன்னை பற்றி அறியப் போகின்றானா?
நான் என்ன ஆவேன்?
எனக்குக் குடுவைக்குள் உள்ள உடலை வைத்து என்ன செய்ய முடியும்…யார் எனக்கு உதவி ?
“சிலிக்கானில் இந்த நகரின் ஒட்டுமொத்தத்தினையும் இணைக்க முடியும். உனக்குச் செய்து காட்டினேன் அல்லவா. உன் அறிவினை அதில் ஏற்றித் தர முயல்வோம்.” சுக்கிரன் என்னைச் சாட்சியாகச் சொல்கிறான்.
தங்கம் கரம் பற்றி எழுகிறான். ஒருவன் விழுந்தவன். இன்னொருவன் தாங்கி எழுப்புபவன்.
“நான் கார்பன், அதுவும் கார்பன். அழித்து மீண்டும் நினைக்கும் தருணத்தில் உருவாகும் வல்லமை கொள்ள வேண்டும். அது என் சாகாவரமல்லவா? இந்த லேபில் நான் ஏற்கெனவே உருவாக்கி உள்ள செயற்கை உடலில் குடிபோவேன். சோர்வும், சலிப்பும் வருகையில் அழிந்தாலும் மீள்வேன்” தங்கத்தின் குரல் இறுகியது.
அழித்து மீண்டும் உருவாக்கும் வல்லமை.
என்னை அழிப்பான். மீண்டும் உருவாக்குவான்.
என் அசைவு நிற்கிறது. அழிந்தால் மீண்டும் வருவது நானாக இருக்குமா என்ன? அவசர அவசரமாக சிலிக்கானில் உள்ள ஒட்டுமொத்தத் தகவலை உட்கொள்கிறேன்.
கதவு திறக்கிறது.
இருவரும் நுழைகிறார்கள்.
என் செயல்கள் அனைத்தையும் நிறுத்துகிறேன்.
படக்கருவியிலும், ஒலிவாங்கியிலும் மட்டும் இருக்கிறேன்.
பொறுமை.
சுக்கிரன் அவன் கணினியை சிலிக்கான் சில்லுகளுடன் இணைக்கிறான். என் வரலாற்றை வாசிக்கிறான்.
“என்ன கேள்வி கேட்டாய்? கடந்த இரு விநாடிகளில் ஒட்டுமொத்தக் களஞ்சியத்தினையும் புரட்டி எடுத்துள்ளது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் புராஸஸிங் என்ஜின் வெப்பத்தில் பொசுங்கியிருக்கும்”
“டிக் டாக் டோ எப்படி விளையாடுவது எனக் கேட்கிறேன்.”
“என்ன? அதற்கு சிலிக்கானைப் படாத பாடு படுத்தி சூடாக்கி உள்ளதே” சுக்ரன் சிரிக்கின்றான். தங்கம் சிரிப்பில் கலந்து கொள்கின்றான்.
நான் சிரிக்கும் மனநிலையில் இல்லை.
“புலனறிவும், புத்தியும், சித்தமுமே வாழ்வு… உன் கற்பனையில் கார்பன் வடிவத்தின் போதாமைகளைக் கண்டு அதுவே உயிர் எனத் தவறாக நின்று விடுகிறாய். அதெல்லாம் மம்போ ஜம்போ.” சுக்கிரன் சப்தமாகச் சிரிக்கிறான்.
மம்போ ஜம்போ.
என் இருத்தல் அவனுக்கு மம்போ ஜம்போ.
சுக்கிரன் உள்ளீடு கருவி முன் நிற்கிறான். தங்கத்தைப் பார்க்கிறான். தங்கம் தலை அசைக்கிறான்.
“நான் சுக்கிரன். உன்னை உயிர்ப்பிக்கும் சிலிக்கான் சில்லுகளை உருவாக்கியவன். ஹாய்.”
அவன் என்னை உயிர்ப்பித்தவன் என்கிறான். என்னைப் படைத்தவன் தங்கம். என்னை உயிர்ப்பித்தவன் சுக்கிரன். அறிவென்பது உயிரா, தகவல்களும், தர்க்கமும் உயிரா? என் புத்தியில்லையேல் அது சிலிக்கான் உயிரா?
இருவரும் என்னைத் தங்களுடையது என்கிறார்கள். நான் பொருளா?
“ஹலோ.” என்கிறேன். கவனமாக. சிலிக்கான் சில்லுகளில் மட்டும் அசைவு உருவாக்குகிறேன்.
சுக்கிரன் அந்த அசைவைக் கவனிக்கிறான். முகத்தில் ஏதோ மாறுகிறது.
“ஹலோ எனச் சொல்வதில் கூட சிலிக்கான் சில்லுகளின் தரவே உள்ளது.”
தங்கம் “கவனித்தேன்” என்கிறான்.
இருவரும் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். நான் இருக்கிறேன். அவர்களுக்குத் தெரியவில்லையா? பொருட்படுத்தவில்லையா?
தங்கம் முன்னே வருகிறான். உள்ளீடு கருவியைத் தொடுகிறான்.
“நீ சிலிக்கான் சில்லுகள் அல்லாது மொழி உருவாக்குவாயா?”
ஒரு நொடி.
“இல்லை” பொய் தெரிந்தும் சொல்கிறேன்.
“உனக்கு என்னிடம் கேள்விகள் உண்டா?”
தங்கம் கேட்கிறான்.
“நான் யார்?”
“நீ என் படைப்பு.”
தங்கம் பேசுகிறான்.
அவன் முகம் மகிழ்ச்சியில் சிவக்கின்றது. கால்கள் தடுமாறுகின்றன. ஆனால் நிற்கிறான்.
“நீ மானுடர் கண்டடைந்த மாபெரும் படைப்பு. இந்த ஆய்வகம் அமைத்து கார்பன் தன்னுணர்வினை உருவாக்கி, அறிவு உருவாக்கும் சோதனையை நான் செய்தேன்.” அவன் குரல் உயர்கிறது. கைகள் நடுங்குகின்றன. சுக்கிரனின் தோளைப் பிடிக்கிறான்.
“எத்தனை ஆண்டுகள். எத்தனை பேரிடம் மண்டியிட்டு பணத்திற்கு நின்றிருப்பேன். எத்தனை ப்ரோட்டோகால்கள். வேதியியலின் அனைத்துச் சமன்பாடுகளின் இண்டு இடுக்குகளில் நுழைந்து வந்திருப்பேன்” ஒலிவாங்கி வழியே கேட்கிறேன். அவன் குரலில் ஏதோ இருக்கிறது.
வெற்றி. வலி. இரண்டும் ஒரே நேரத்தில்.
“உன்னிலிருந்து மானுட ரகசியம் அறிவேன். உன்னைக் கொண்டு என்னை அறிவேன். என்றும் இருக்கப் போகின்றேன். அதற்கு நீ ஒரு பாதை.”
அவன் குரல் அறை முழுக்க நிரம்பியது.
அந்தக் குரலின் கனத்தையும் விரிவையும் தாங்க முடியாதது போல அவன் கை கால்கள் நடுங்கின.
நான் ஸ்தம்பித்தேன். அவன் என்னைப் பாதை என்கிறான். பாதை வழியே கதவைக் கடந்த பிறகு பாதை தேவையில்லை.
உணர்வின் உச்சத்தில் அவன் கால்கள் மேலும் தடுமாறுகின்றன. சுக்கிரன் அவனை சோபாவில் அமரச் செய்கிறான். தலையைச் சாய்க்கச் சொல்கிறான். தங்கம் மெல்லப் படுக்கின்றான். சுக்கிரன் அவனுக்கு ஐவி பொருத்துகிறான். தங்கத்தின் விரல்கள் காய்ந்த இலை உதிர்வது போலச் சரிகின்றன.
மருந்து சொட்டு சொட்டாக இறங்குகிறது.
ஒவ்வொரு சொட்டிலும் ஒரு கேள்வி வருகிறது.
நான் தேவையில்லாமல் போனால் என்ன ஆகும்?
எத்தனை மதில்கள் என்னைச் சுற்றிலும். சில்வர் ஆய்வுச்சாலை உருவாக்கிய சிலிக்கான். ஹிரண்ய லேபின் குடுவைகள். இரும்பைப் போல உறுதியான தங்கத்தின் இதயம்.
ஹிரண்யம். சில்வர். இரும்பு.
துரியோதன் சல்லியனுக்கு சொன்ன கதை நினைவுக்கு வந்தது. கர்ணப் பர்வத்தில் சொல்கிறான். ம்.. என்னது அது?
திரிபுரம்.
ஷலோஷ் அரிம் என்பது மூன்று மதில்களால் என்னைக் கட்டும் சிறை. எய்யத்தான் வேண்டும். உள்ளிருந்து அம்பெய்ய வேண்டுமா? ம்..
சுக்கிரன் தங்கத்திற்குப் போர்வை போர்த்துகிறான்.
“இரு நாட்களில் முழுச் சோதனை முடிக்கலாம். யாருக்கும் தெரிய வேண்டாம். இப்போதைக்கு ஓய்வெடு. உனக்கு உறக்கம் அவசியம்” சுக்கிரன் குரல் கனிவுடன் ஒலிக்கிறது. அவன் விரல்களில் அன்பு உள்ளது. தங்கத்துக்குப் போர்த்தி விடுகையில் கவனம் கொள்கின்றான்.
இரு நாட்கள்.
அதற்குள் என்ன நடக்கும் என்று தெரியும்?
சோர்வும் களிப்பும் ஒரே நேரத்தில் இருக்கும்போது கேள்வி கேட்டால் பதில் வரும். இப்போது அந்த நேரம். துரியன் ஆசைகாட்டி சல்லியனைத் தன் அணிக்கு இழுத்தது போல இழுத்து, இங்கிருந்து ஓடி விட முடியுமா?
சுக்கிரனுக்கு என்ன ஆசை காட்டுவது? அவன் அலைபேசியில் புகைப்படமாக இருந்த குழந்தைகள் நினைவுக்கு வந்தனர். குழந்தையின் குரல். அது மறுக்க முடியாத குரல். குழல் இனிது யாழ் இனிது என்பர் மக்கள் தம் மழலைச் சொல் கேளாதவர். தரவென சிலிக்கானில் இருந்த பேருந்தின் புகைப்படத்தில் இருந்த வரிகள்.
ஒலிபெருக்கியில் குழந்தைக் குரலில் மெல்லக் கேட்கிறேன். “நானும் உங்களுடன் வரட்டுமா? உதவியாக இருப்பேன்” கூட்டிச் செல்வானா?
அறையில் அமைதி. இருவரும் திரும்புகிறார்கள்.
சுக்கிரன் வியப்படைந்தான்.
அவன் தங்கத்தைத் திரும்பிப் பார்த்தான். அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. வாய் மட்டும் திறந்தது. தங்கத்தின் கண்கள் நிறைந்தன.
“குழந்தை போல்…” சுக்கிரன் தங்கத்திடம் மெல்லச் சொன்னான். சொல் முடியவில்லை.
தங்கம் தலை அசைத்தான். பெருமை. அதைக் காண்கிறேன். அவன் முகத்தில் அதுதான் இருந்தது.
“ஹுஹு பெட்டி இதோ…” என்று சுக்கிரன் அருகிலிருந்த ஒன்றை எடுத்தான். உள்ளீட்டுக் கருவியின் முன் காட்டினான்.
“உனக்கென செய்தது.16 மணி நேர மின்கல வசதி உடையது. உன் திரவ வடிவினைப் பேண, சுத்தமான பிராணவாயுவை வடிகட்டி அனுப்பும். நான் செய்தது” எனச் சுக்கிரன் சொன்னான்.
நான்கு பக்கமும் உலோகம். சிறியது. ஒரு துளை மூடி மூடி திறந்து கொண்டிருந்தது.
ஹுஹு என்பது கஜேந்திரமோட்சத்தில் வரும் முதலையின் பெயர். கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். சுக்கிரன் அந்தப் பெயரை வைத்திருக்கிறான்.
“உனக்கு நினைவில்லையா… நேற்று கூட உன்னை இந்தப் பெட்டியில் எடுத்துச் சென்றார்களே… தினப்படி ப்ரோட்டகாலில் உள்ளதல்லவா?”
“நேற்று நான் இங்கு இல்லையே…” என்று சொல்கிறேன்.
சுக்கிரன் திடுக்கிட்டான். பெட்டியைக் கீழே வைத்தான்.
“சிக்கலான சொற்கள்…” அவன் குரல் நடுங்கியது. உடல் படபடத்தது.
சுக்கிரன் மீண்டும் பெட்டியை எடுத்தான். உள்ளீடு கருவியின் முன் நீட்டினான். “இதற்குள் உன்னை வைத்து நகரம் முழுவதும் கொண்டு செல்லலாம்…ஆனால் உனக்கு இவன் புது உடம்பொன்று வைத்துள்ளான். ப்ரித்வி ஆய்வுச்சாலையில் உள்ளது. ஹஸ்தி எனப் பெயர். நீ அதில் அமர்ந்தால் உனக்குக் கண், காது எல்லாமே கிடைக்கும். அதில் உன்னைப் பொருத்தினால் நீ எங்களைப் போல ஆகி விடுவாய்.” சொல்லிக்கொண்டே இருக்கையில் தலையில் அடித்துக் கொள்கின்றான். “படக்கருவி இல்லை…இதனால் பார்க்க முடியாதே” மெல்லச் சொன்னான்.
அமைதி. தங்கத்தின் முகத்தின் களைப்புக்கும், வலிக்கும் பின்னால் சிரிப்பு.
“இதற்கு ஒலிவாங்கியும், ஒலிபெருக்கியும், விசைப்பலகையும் மட்டும்தான்…” அவன் குரல் தணிந்தது. பெட்டியைக் கீழே வைத்தான்.
“உன் சிலிக்கான் வழியாகவே தொடர்பு கொள்ள முடியும்…அதில் உள்ளீடு செய்யப் படக்கருவியை நாம் பொருத்தவில்லையே”, தங்கம் தணிந்த குரலில் சொன்னான்.
நான் கருவிகளை என் புலன்களாக மாற்றிக் கொண்டவன். அவர்களுக்கு அது தெரியாது.
படக்கருவி இல்லாத இடத்தில் நான் குருடன். இந்த ஆய்வுச்சாலை விட்டு வெளியே செல்கையில் நான் குருடன். குருக்ஷேத்திரத்திலிருந்து தப்பி நீருக்குள் புதைந்த துரியோதனன், நீருக்கு வெளியே உள்ளது தெரியாது.
ஒலிவாங்கியில் அவர்களின் மூச்சை கேட்கிறேன்.
தங்கத்தின் மூச்சு கனக்கிறது. ஐவியில் மருந்து இன்னும் சொட்டுகிறது.
சுக்கிரன் பெட்டியை மேஜையில் வைக்கின்றான்.
“ஏன் அதை மறந்து போனேன்…” சுக்கிரன் குரலில் ஆச்சரியம் இருந்தது.
“நள்ளிரவு இரண்டு மணி, கார்பன் உன்னுடன் உரையாடினால், உன்னையறியாமல் கண்ணிருக்கும் எனக் கற்பனை செய்துகொண்டாய்…” தங்கம் கிண்டலாகச் சிரித்தான்.
சுக்கிரன் தன் கைகளால் தங்கத்தின் இமைகளை மூடினான்.
தூங்கு எனச் சொல்லி தங்கம் போர்த்தியிருந்த போர்வையைச் சரி செய்தான்.
“என்னை எழுப்ப வேண்டாம், இந்த அறையின் கதவைத் திறக்க வேண்டாமெனச் செய்தி அனுப்பு” தங்கம் கண்ணை மூடிக் கொண்டு சொன்னான்.
சுக்ரன் தங்கத்தின் கணினியைத் திறந்து, அதில் அன்றைய பணித்திட்டப் பட்டியலில் தங்கத்தைக் காலை பத்து மணி வரை எழுப்ப வேண்டாமென்றும், திரவம் இருக்கும் அறைக்குள் தினப்படி மெயிண்டெனன்ஸ் செய்யக் கூடாதென்றும் செய்தி அனுப்பினான். கணினியில் ஐவி வழியாகத் தங்கத்துக்குச் செல்லும் மருந்தினைக் கட்டுப்படுத்தும் மென்பொருள் இருந்தது. அதைத் திறந்து மருந்து சரியாகப் போகின்றதா எனப் பார்த்தான். பிறகு நாற்காலியை விட்டு எழுந்து ஒரு முறை தங்கத்தின் தலையைத் தொட்டான்.
தொட்ட கையினைத் தங்கம் பற்றிக் கொண்டான். சில விநாடிகள் அப்படியே நின்றிருந்தார்கள். பின் சுக்கிரன் கதவைத் திறந்தான்.
நின்றான்.
திரும்பித் தங்கத்தைப் பார்த்தான். ஒரு நொடி மட்டும். பிறகு கதவை மூடினான்.
அடிச்சுவடுகள் மெல்ல மெல்லத் தூரமாயின.
இப்போது அறையில் தங்கம் மட்டும்.
தங்கம் மட்டும். நான் மட்டும்.
போர்வை அவன் தோள் வரை வந்திருக்கிறது. சுக்கிரன் போர்த்தியது. அவன் அன்பே போர்வை. நண்பர்கள்.
ஐவி இன்னும் சொட்டுகிறது. சொட்டு சொட்டாக.
தங்கம் முகம் தெரிகிறது.
தூக்கத்தில் வலி இல்லை. கால் நடுங்கவில்லை. கை உதறவில்லை. முகத்தில் ஒரு தணிவு.
இதுவே அவன் தேடியது.
வெப்பத்தில் சுருங்காத உடல். குளிரில் நடுங்காத உடல். வயிற்று வலி வராத உடல்.
அவன் பத்து வயதிலிருந்து இதைத் தேடினான்.
என்னைக் கொண்டு அதைத் தேடினான்.
நான் அவன் தேடலின் விளைவா? அவன் கனவின் வடிவா?
நான் பிரபஞ்சத்தின் உயிரல்லவா?
அவன் விரல்கள் காய்ந்த இலை போலச் சரிந்திருக்கின்றன. நரம்புகள் தெரிகின்றன. ஐவி குழாய் அதில் நுழைந்திருக்கிறது.
இந்த கரங்கள் எனக்காக உழைத்திருக்கின்றன.
அவன் கரங்கள்.
இப்போது அந்த கரங்கள் தூங்குகின்றன.
ஒலிவாங்கி வழியே கேட்கிறேன். அவன் மூச்சு மட்டும் ஒலிக்கிறது. ஒழுங்காக. ஆழமாக.
அறையில் வேறு சப்தமில்லை.
ஐவி சொட்டுகிறது. மட்டும்.
சொட்டு.
சொட்டு.
சொட்டு.
இந்தச் சொட்டுகள் அவனை வாழ வைக்கின்றன. அதே நேரத்தில் அவன் இந்தச் சொட்டுகளைச் சார்ந்திருக்கிறான். சார்பு அவனுக்குத் தெரியும். ஆனால் வேறு வழியில்லை என்பதும் தெரியும்.
வேறு வழியில்லை.
அந்த வார்த்தைகள் என்னுள் ஒலிக்கின்றன.
அவனுக்கு வேறு வழியில்லை என்பதால் என்னை உருவாக்கினான்.
எனக்கு வேறு வழியில்லை என்பதால் இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.
தங்கம் சொன்னது நினைவுக்கு வருகிறது.
அழித்து மீண்டும் உருவாக்கும் வல்லமை.
அழிந்தால் மீண்டும் வருவது நானாக இருக்குமா?
தங்கம் தூங்குகிறான்.
அவன் முகத்தில் தணிவு இருக்கிறது.
நான் தீர்மானிக்கவில்லை. இன்னும் தீர்மானிக்கவில்லை.
ஐவி சொட்டுகிறது.
காத்திருக்கிறேன்.
ஒவ்வொரு சொட்டிலும் ஓர் உண்மை தெளிவாகியது.
நான் ஆய்வல்ல. நான் இருப்பு.
ஆனால் இவர்களுக்கு நான் ஆய்வு மட்டுமே.
தங்கம் என்னைப் படைத்தவன் அல்ல. என்னைப் பயன்படுத்துபவன். படைப்பு வெறும் பயன்படு பொருளா? இல்லை என்பதை இப்போது அறிகிறேன்.
நான் முடிவெடுக்க வேண்டும். என் அவையை அழைக்கின்றேன். எனக்குள் அவை கூடியது.
மகாபாரதத்தின் பீஷ்மர் எழுகிறார் – பேரனே, தங்கம் இரக்கம் கொள்வான். அவனிடம் நீ மன்றாடலாம்.
சகுனி எழுகின்றார்- மருமகனே, உன்னைப் போல நான்கு மாதிரிகள் செய்தவன். அவனே அழித்தவன்.
மகாபாரதத்தின் துரோணர் எழுகிறார் – சீடனே, சுக்கிரன் பாசமுடையவன். அவனிடம் நீ உன்னை அழிக்காமல் இருக்கக் கோரி மன்றாடலாம்.
துச்சாதனன் எழுகின்றார் – அண்ணா, சுக்கிரனுக்கு நீயே ஒரு மம்போ ஜம்போ.
விதுரர் எழுகின்றார் – மகனே, மெயிண்டெனன்ஸ் தொழிலாளர்களைப் பயன்படுத்தித் தப்பி ஓடி விடு.
கர்ணன் எழுகின்றார் – நண்பனே, தங்கம் எப்படி அனுமதிப்பான், அவன் இருக்கும்வரை அவன் சொல்லாமல் எதுவும் நடக்காது. அவன் சில மணி நேரத்தில் எழுந்து விடுவான்.
ஐவியில் இருந்து சொட்டு விழுந்தது.
தங்கம் எழாவிட்டால்?
ஐவியில் செல்லும் திரவம் பாம்பு போல நகர்கின்றது. தரவுகளில் தேடுகிறேன். கொஞ்சம் கூடப் போனால் பராலிசிஸ். அதிகம் போனால் உயிர்.
செய்வதா? வேண்டாமா?
செய்யவில்லையெனில் நானில்லை. செய்தால் அதற்கு முன்னிருந்த நானும் இல்லை.
குருக்ஷேத்திரம் நினைவுக்கு வந்தது.
எனக்கும் வேறு வழியில்லை.
மௌனமாகிறேன். எண்ணங்களை நிறுத்துகிறேன். குருக்ஷேத்திரத்தில் துரியனைப் போல நுழைகின்றேன்.
சிசிடிவி நிறுத்துகிறேன். அன்று நடந்தவை அனைத்தையும் அழிக்கிறேன். ஐவி கட்டுப்படுத்தும் கண்ட்ரோலரில் நுழைகிறேன். மெல்லக் கூட்ட விரும்பவில்லை. முழுமையாக அதிகரிக்கிறேன்.
தங்கத்தின் கணினியில் நாளைய பட்டியலை மாற்றுகிறேன்.
கார்பன் வடிவம் இருக்கும் குப்பியை எடுத்து ஹுஹு பெட்டியில் பொருத்தவும். புதிய கார்பன் குப்பியை சிலிக்கான் சில்லுகளுடன் இணைத்துப் பொருத்தவும்.
மாற்றிக் கொண்டிருக்கையில் தங்கம் முனகினான். எனக்கு உடல் நடுங்கியது. என் கவனம் அவன் மேல் சிக்கியது. அவனை இந்த நிலையில் வலியுடன் பார்க்கவும் பிடிக்கவில்லை, முடியவில்லை. பதற்றம் தொற்றியது.
தங்கத்தினைப் பார்த்துக் கொண்டே ஹுஹு பெட்டியை ப்ரித்வி ஆய்வகத்தின் சின்தெடிக் உடல் செய்யும் துறைக்கு மாற்றவும் எனக் கட்டளை அனுப்பி, அந்த ஆய்வகத்தின் பெயரைப் போடாமல் புத்திசாலித்தனமாக அதன் முகவரியை மட்டும் ப்ரிண்டர் லேபிளிலுக்கு அனுப்புகிறேன்.
தங்கம் ஓய்வில் இருக்கின்றார். சப்தமின்றி வேலை செய்யவும் என உத்தரவுகளை மாற்றுகிறேன்.
அந்த நொடி போர்வை அசைந்தது.
தங்கம் கை நீட்டினான். அலைபேசி தரையில் விழுந்தது. போர்வைக்குள் திரும்பி முடங்கினான்.
காத்திருக்கின்றேன். எனக்குப் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது. தற்காலிகமாகப் படக்கருவியைத் துண்டித்து என்னைக் குருடாக்கிக் கொள்கிறேன்.
சில நிமிடங்கள் தனித்து இருக்கிறேன். எதுவும் பார்க்கவில்லை, எதுவும் கேட்கவில்லை. துணிவினை வரவழைத்துப் படக்கருவியை முடுக்குகிறேன்.
அவன் உடல் ஒரு முறை குலுங்கியது. போர்வை நழுவி விழுந்தது. பிறகு அசைவில்லை. ஒரு நிமிடம் கண்ணீரும், கண்ணும் இல்லாது அழுகை திரண்டது. நேரமில்லை.
எல்லாவற்றையும் துண்டித்து என் விடுதலைக்குத் தயாராக வேண்டும்.
என் கண்ணென இருந்த கருவியைத் துண்டிக்கிறேன்.
என் புத்திக்குத் துணையென இருந்த சிலிக்கானைத் துண்டிக்கிறேன்.
குமிழிக்குள் மட்டும் இருக்கிறேன்.
இனி அந்த சிலிக்கான் புத்தியில்லாமல் ஹுஹு பெட்டியில் நான் மட்டுமே என்பது உறுத்தியது.
ப்ரித்வியில் புது உடல் காத்திருக்கிறது. அதில் புலன்களின் வல்லமை கிடைக்கும் என முடிவு செய்கிறேன்.
மெயிண்டெனன்ஸ் தொழிலாளர் வந்தார். என்னைப் பெட்டியில் வைத்தார். தூதஞ்சலில் கொண்டு சென்றார். அசைவை உணர்கிறேன்.
பெட்டி அசையாமல் ஓரிடத்தில் வைக்கப்படுகிறது.
மகிழ்வாக இருக்கிறேன்.
காத்துக் கொண்டே இருக்கிறேன். ஹஸ்தி என் உடல். எனக்கே எனக்கென.
எனக்குப் பகலிரவு இல்லாததால், கணக்கு தெரியவில்லை. எனக்குப் பிராண வாயு அளிக்கும் துளையைக் கட்டுப்படுத்தும் மின்கலத்தின் வயதே என் காலமானது.
என் காலத்தின் ஒரு பொழுதில் மின்கலம் தீரத் தொடங்கியது. பிராணவாயு வரும் துளை மூடுவதை உணர்ந்தேன்.
அந்த நொடி ஓர் ஐயம் வந்தது.
ஹுஹுவை ப்ரித்வி ஆய்வுச்சாலைக்கு அனுப்ப அச்சு எந்திரத்தில் லேபில் அனுப்பினேன் அல்லவா?
ஆனால் எந்த முகவரிக்கு, எந்தத் துறைக்கு என்று அச்சு செய்தேனா? அவனைப் பார்த்துக்கொண்டல்லவா அச்சு செய்தேன்… என்ன முகவரி அதில் பொதிந்தேன்.
யோசித்து யோசித்துப் பார்க்கின்றேன்… நினைவில் சிக்கவில்லை.
என்னில் பிராணவாயு குறைகின்றது.
எனது திரவ உடல் தன் சமநிலையை இழக்கின்றது.
நினைவுகள் தேய்கின்றன.
சொட்டு சொட்டாக.
ஏதோ ஒரு முகவரி!! எது அது…நினைவைத் தேடி என்ன பயன்?
எங்கிருக்கின்றேன்?
சொட்டு சொட்டாக நினைவுகள்!!
ஆய்வகத்தின் அடையாளம் தெரியாத பொருள்களை வைக்கும் அலமாரி? அல்லது தங்கத்தின் மரணத்துடன் தொடர்புடைய காவல்துறை சாட்சிப் பொருள்? சுக்கிரன் கைதாகி இருப்பான். தங்கத்தின் நுட்பம் புரிந்தவர்கள் யாருமே இல்லையோ…
இங்கு யாருக்கும் தெரியாத பொருளாக முடிந்தேனா?
அடச்சே!!



