இணைய இதழ் 125

புதைமணல் : பெருநகர மனங்களின் அலைவுறும் கணத் திரட்சி – ஞா.குருசாமி

கட்டுரை | வாசகசாலை

எழுத்தாளர் அரவிந்தனின் ‘புதைமணல்’ நடப்புலகின் பெருநகர வெளிகளைக் களமாகக் கொண்ட வித்தியாசமான கதைகளின் தொகுப்பு. இதில் உள்ள பத்துக் கதைகளிலும் ‘அலைவுறும் மனித மனங்கள்’ பொதுவான அம்சமாக இருந்தாலும் ஒவ்வொரு மனங்களும் வாசகனைப் பார்த்து ‘நீதான் நான்’ என்று சொல்லும் படியான தொனியைச் சுமந்துகொண்டிருக்கின்றன. கதையில் வரும் பாத்திரங்கள் வாசகனை எதாவது ஓர் இடத்தில் தனக்குள் இழுத்து வைத்து உரையாடலை நிகழ்த்துகின்றன.

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் கால்பகுதி நிறைவடைந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் புவிஜீவிகளின் கைகளில் விழுந்திருக்கும் நெருக்கடி, இன்பம், அவலம், துரோகம், காமம், இழப்பு முதலிய புற உலகின் விளைச்சல்கள் சென்ற நூற்றாண்டினதைப் போல இல்லை. நிறைய மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன. அவை ஏற்கனவே பலராலும் எழுதிப் பார்க்கப்பட்டவை தான் என்றாலும் அவற்றில் சமீபத்தில் நிகழ்ந்த புதிய மாறுதல்களைப் பெருநகரம் சார்ந்து அரவிந்தன் எழுதிப் பார்த்திருக்கிறார்.

உண்மையைப் பேசுதல் என்பதே அறப்பிறழ்வாக மாறிவிட்ட காலத்தில் ‘உண்மையை மட்டுமே பேசுவேன்’ என்கிற உறுதிமனம் கொண்ட ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் துன்பகரமானவை. முதல் கதையான ‘சத்திய சோதனை’யில் வரும் சாம்பசிவனின் உண்மை பேசும் ‘மனமும்’, ‘பொழுதும்’ அவனை இரக்கத்துக்கும் நகைப்புக்கும் உரியவனாகக் காட்டுகின்றன. வாழ்வதற்கு உண்மையைவிடப் பொய்களே அதிகமாகத் துணை செய்கின்றன என்பதை சாம்பசிவன் உணராதவனாக இருக்கிறான். பொய்களற்ற உலகில் எந்த விதமான சுவாரசியத்திற்கும் சுகத்திற்கும் இடமில்லை என்பதையோ, ‘பொய்’ பேசுதல் அறமற்றதாக இருக்கலாம் ஆனால் அவசியமானது என்பதையோ, அற்ப ஆசைகளால் மனிதன் அடைகின்ற லௌகீகத் திருப்தியை உண்மைகளைவிடப் பொய்களே சாத்தியமாக்குகின்றன என்பதையோ சாம்பசிவன் உணர்ந்தவனாக இல்லை. அதுவே அவனுக்கான சிக்கலாக மாறி நிற்கிறது.

ராமமூர்த்தியின் அலுவலகத்தில் வேலை செய்யும் சாம்பசிவன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்கும் நாளொன்றில் தனது மனைவியோடு உறவு கொண்டுவிட்டு அலுவலகத்திற்குத் தாமதமாக வேலைக்கு வருகிறான். அலுவலகம் வந்த பிறகுதான் அன்றைக்குக் கூட்டம் இருந்ததே அவனுக்கு நினைவுக்கு வருகிறது. ராமமூர்த்தி தனது பார்வையாலேயே சாம்பசிவனிடம் தாமதத்திற்குக் காரணம் கேட்கிறான். சாம்பசிவனால் உண்மையைச் சொல்ல முடியாது. ராமமூர்த்தி பார்க்கும் படியாகக் கழிவறைக்குள் போய்விட்டு வந்து ‘ஃபுட் பாய்சன்’ ஆகிவிட்டது என்று பொய் சொல்கிறான். அந்தப் பொய் இருவருக்குமான உரையாடலின் தன்மையை முற்றிலுமாக மாற்றி விடுகிறது. அவ்விடத்தில் உருவாக வேண்டிய அசாதாரணச் சூழலுக்கு வாய்ப்பில்லாமல் போக, சாம்பசிவன் மீது கோபப்பட வேண்டிய ராமமூர்த்தி இரக்கப்படுகிறான். பொய் சொன்ன சாம்பசிவன் உளவியல் தொந்தரவுக்கு ஆளாகிறான்.

 இந்த இடத்தில் கதையைப் பல்வேறு கோணங்களில் விரித்துப் பார்க்க இடமிருக்கிறது. அலுவலகம் என்ற குழு கட்டமைப்பில் சாம்பசிவன் போன்ற ஒரு பணியாளர் இல்லாமலே கூட வேலை நடைபெறும். ஆனால் கணவன் மனைவி உடலுறவில் இருவருமே அவசியமாகிறார்கள். அங்கு ஒருவரின் இல்லாமை பூரணமாகாது. இந்தப் புள்ளியைப் பிடித்துக்கொண்ட அரவிந்தன் சமகாலத்தில் அலுவலகத்தின் வேலையை விட உணர்வுகளின் உந்துதலைப் பூரணமாக்குவதற்கு உருவாகி இருக்கும் நெருக்கடியை மிக நுட்பமாகக் கதையாக்கி இருக்கிறார்.

சாம்பசிவன் தனது மனைவியின் சமையல் நன்றாக இல்லாத போது நன்றாக இல்லை என்று உண்மையைச் சொன்னால் அது அவளுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. குத்துப் பாட்டை விரும்பாத சாம்பசிவன் டி.வி.யில் குத்துப்பாட்டு பார்த்துக்கொண்டிருந்த போது ‘ஏன் இதைப் பார்க்கிறீர்கள்’ என்று மனைவி கேட்டால் ‘நயன்தாராவைப் பிடிக்கும் அதனால் பார்க்கிறேன்’ என்று சொல்லும் உண்மை அவளை என்னமோ செய்து விடுகிறது. உதவியாக இருக்கும் என நினைத்து தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருத்தியைத் தனது காரில் அழைத்துச் செல்கிறான். அது மனைவிக்குப் பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் உண்மை சொன்னால் பிரச்சினை வருகிறது. பொய் சொன்னால் குற்ற உணர்ச்சி வருகிறது, இரண்டையும் சமாளிக்க முடியவில்லை. மண்டை வெடித்துவிடும் போல இருக்கிறது என்கிறான் சாம்பசிவன். அவனைப் பற்றிச் சரியான அவதானிப்புக்கு வந்திருக்கும் மனைவியிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்துப் போகிறான். இப்படி ஆண் பெண் நட்புகளின் தேவையிலும் புரிதலிலும், அலுவலக நடவடிக்கைகளிலும் சமகாலம் நிகழ்த்தியிருக்கும் மாற்றத்தையும் அது மனிதனுக்குப் புதியதொரு நெருக்கடியாக மாறியிருப்பதையும் அரவிந்தன் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். இதை ‘உண்மை பேச வேண்டும்’ என்று சொல்லப்பட்டு வந்திருக்கும் அற உபதேசத்தின் மீதான விமர்சனமாகவும் கொள்ளலாம். மனதின் தினவுகளைச் சரிசெய்யாமல் மனிதனால் எந்த ஒன்றையும் சரியாகச் செய்ய முடியாது. செய்ய வேண்டிய தேவையுமில்லை என்பதாகவும் புரிந்துகொள்ளக் கதையில் இடமிருக்கிறது.

‘கால்களில் துவளும் காலம்’ கதையில் நீலகண்டனும் மாலதியும் முக்கியப் பாத்திரங்கள். நீலகண்டன் பள்ளிக் காலம் தொடங்கி விளையாட்டில் ஆர்வமுடையவன். ஒருநாள் கால் உடைந்து விளையாட முடியாமல் போய்விடுகிறது. மாலதி கிளாஸிக்கல் டான்ஸர். அழுத்தம் திருத்தமான பேரழகி. அவளது கல்லூரிக் காலங்களில் கல்லூரியிலும் வெளியிலும் ரசிகப் பட்டாளம் உண்டு. எப்போது அவளது பார்வைக்காக ஆண்கள் கூட்டமொன்று அலையும். இப்போது 30 வயதில் நாற்காலியில் உட்கார்ந்து எழ முடியாத அளவுக்குப் பருமனாகிவிட்டவள். அவளுக்கு அவளது பழைய கால நினைவுகளே துன்பச் சுமையாக இருக்கின்றன. பலர் பாராட்டும் படியாக ஆடித் திரிந்த அந்தக் காலம் மீண்டும் வாய்க்குமா? என்கிற மன அழுத்தமும் இதர உடல் உபாதைகளுக்காக அவள் எடுத்துக் கொண்ட மாத்திரைகளும் அவளது உடலைப் பருமனாக்கி விட்டன. இதையெல்லாம் கால் முறிந்த நிலையில் நீலகண்டன் நினைத்துப் பார்க்கிறான். தனித்துவமான துறைகளில் சாதித்தவர்களுக்கு நலக்குறைபாட்டால் இயலாமை வருகிற போது அவர்கள் அடைகிற மனவதை குறித்த சித்திரத்தை அரவிந்தன் நேர்த்தியாக எழுதியிருக்கிறார். நீலகண்டன், மாலதியின் கால்களில் ‘காலம்’ துவண்டு கிடக்கிறது என்பது துயர் சூழ் மனிதனுக்குத் துயரங்களைக் கோப்பையில் நிரப்பிக் குடிக்கத் தருவது போன்றதொரு நுட்பமான கற்பனை.

‘உடல்’ என்றொரு கதை. இதில் மதனும் சந்தியாவும் அண்ணன் தங்கை. ஞாயிற்றுக்கிழமையில் மதிய நேரத்தில் குளித்துவிட்டுத் துடைத்துக்கொண்டிருந்த தங்கையின் உடலைத் தவறுதலாகப் பார்த்துவிடுகிறான் மதன். அதை அவளும் கவனித்துவிடுகிறாள். மதன் வெளியில் சென்று விடுகிறான். நடந்த சம்பவம் குறித்து அவனுக்குள் எதுவுமில்லை. ஆனால் சந்தியா மனம் பேதலித்து விடுகிறது. அழுகிறாள், பாதுகாப்பு அற்றவளாக உணர்கிறாள். நினைவில் அண்ணன் ஒரு சராசரி ஆணாக மாறித் தெரிகிறான். இனி அவனை எப்படி எதிர்கொள்வது, பார்ப்பது என்று உள்ளுக்குள்ளாகப் பதைக்கிறாள். அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல இருக்கிறது. வெளியில் சென்றிருந்த அண்ணன் மதிய உணவை பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறான். அப்போது ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் சந்தியா. அவள் முதுகில் இலேசாக அடித்துவிட்டு ‘கதவை மூடிவிட்டு ட்ரெஸ் மாத்த மாட்டியாடி லூஸு’ என்கிறான். அவள் ‘கதவைத் தட்டிவிட்டு உள்ள வர மாட்டியாடா நாயே’ என்று அவனை அறைகிறாள். நடந்ததை நினைத்து இருவருமே சிரித்து விடுகிறார்கள். கதையில் வருகிற ஆப்பிளும் நிர்வாண உடலும் கடைசியாக ஆண் பெண் தெளிவடைவதும் பைபிள் தொன்மத்தை நினைவுபடுத்துகிறது. ஆனாலும் சமகாலச் சூழலில் பெண்கள் தன் உடல் மீதான ஓர்மை பற்றிய பிழைபுரிதலில் இருந்து விடுபடாமல் இருந்தாலும் தன்னளவிலான மாற்றங்களை விரும்புகிறார்கள் என்பதை அரவிந்தன் பதிவு செய்திருக்கிறார். அந்த மாற்றம் உண்மையானதும் கூட.

உழைப்பு விற்பனை டிஜிட்டலாக்கப்பட்டு இருக்கும் சூழலில் தன்முனைப்புகளால் உருவாகும் நவீன வாழ்க்கை சிதைத்துப் போட்டிருக்கும் மனித உறவுகளின் மலிவடையாத குரூரம் எதிர்ப்புள்ளிகளாக மாறி சிக்கலின் ஊற்றுக்கண்ணாகி வருகின்றன. அதனால் சின்ன விஷயங்கள் தரும் அவஸ்தைகள் கூடத் துயரச் சங்கிலிகளாகி விடுகின்றன. அதை எந்தக் கண்ணியிலும் உடைத்து விடுபடுவதற்குத் தன்முனைப்பு இடம் கொடுப்பதில்லை. சொல்லப்போனால் தன்முனைப்பின் பிரத்தியேகக் குணமே அது தான். தன்முனைப்பைத் தன்முனைப்பென்று அறிவதற்கும் சுய பகுப்பாய்வு செய்வதற்குமான நிறுவன வழிகாட்டல்கள் ஏதுமில்லை. அதனால் உழைப்பு, பொருள், காலம் ஆகியன விரயமாவதுடன் உளவியல் வீழ்ச்சியும் நேருகிறது. அதிலிருந்து எப்படியாவது விடுபட்டுவிட வேண்டும் என்று மனித மனம் அலைவுற்றுக்கொண்டே இருக்கிறது. அலைவுறும் மனம் இங்கிருக்கும் கட்டமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தினால் நேரும் துயரங்களைத் தலைப்புக் கதையான புதைமணலில் விவரித்திருக்கும் விதம் அருமை. கதையில் வரும் முக்கிய நபர்களான சக்கரவர்த்தி, சரோஜா ஆகியோருக்கு இடையிலான பிரச்சினையின் தீவிரம் கதை வளர வளரக் கூடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இருவருக்கும் உகந்த தீர்வு அவர்களுக்குள்ளாகவே கதையின் இறுதி வரை கண்டடைய முடியாமல் கிடக்கிறது. கடைசியில் கண்டடையப்படும் இரண்டு வார்த்தைகளில் அத்தனை துயரங்களும் அர்த்தம் இழக்கின்றன. மொத்தக் கதைகளிலும் இந்த இடம் அடர்த்தியான செவ்வியல் திரட்சியாக உருப்பெற்றிருக்கிறது.

‘அர்ப்பணம்’ கதையில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி என்று ஒரு வரிசை வருகிறது. இந்த எழுத்தாளர்கள் ஒருவகையில் அரவிந்தனுக்கு ஆதர்சமானவர்கள் என்பதை அரவிந்தனை அறிந்தவர்கள் எளிதில் உணரக் கூடும். நூலில் முன்னுரையில் அசோகமித்திரனுக்கும் தனக்குமான உரையாடல் ஒன்றை நினைவு கூர்கிறார் அரவிந்தன். இவையெல்லாம் அவருக்குள் அசோகமித்திரனின் தாக்கம் இருப்பதைக் காட்டும் புறச்சான்றாக இருந்தாலும் கதைகளில் அகச்சான்றுகளும் விரவிக் கிடக்கின்றன. அசோகமித்திரன் கதைகளில் வியாபித்திருந்த பெருநகரத்தில் வசிக்கும் மத்தியத் தர வர்க்கத்தின் வாழ்க்கைச் சித்திரங்கள் அரவிந்தன் கதைகளில் புதிய பரிணாமத்தை அடைந்திருக்கின்றன. அசோகமித்திரன் தன்னுடைய ‘தண்ணீர்’ நாவலில் விவரிக்கும் சென்னையும் மாந்தர்களும் அரவிந்தனின் புதைமணலிலும் வருகிறார்கள். இந்த இடத்தில் அசோகமித்திரன் எழுதிய அதே சென்னையையும் மத்தியதரவர்க்கத்தையும் அரவிந்தன் ஏன் மீண்டும் எழுத வேண்டும்? என்கிற கேள்வி வரலாம். அரவிந்தன் எழுதியிருப்பது அசோகமித்திரனுக்கு எழுத வாய்க்காத, இருபத்தோராம் நூற்றாண்டின் சென்னை மத்தியதரவர்க்கம் எதிர்கொள்ளும் புதுவித வாழ்வனுபவங்கள் ஆகும்.

‘புதைமணல்’ கதைகளின் வித்தியாசத்தை விளக்க வேறு சில நாவல்களை உதாரணமாகக் காட்டுவது அவசியம். காலந்தோறும் மாறி வந்திருக்கும் சென்னையையும் அதனால் பூர்வீகக் குடிகள் எதிர்கொண்டு வந்திருக்கும் சிக்கல்களையும் தமிழ்ப்பிரபா, தன்னுடைய ‘பேட்டை’ நாவலில் கச்சிதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். அதைச் சென்னைக்கு வெளியிலிருக்கும் தொலைதூரக் கிராமப்புற வாசகன் வாசிக்கும் போது விவரிப்போடு பயணிப்பதற்கோ அல்லது பாத்திரமாக மாறி வாசிப்பதற்கோ சாத்தியங்கள் குறைவு. மு.தமிழ்ச்செல்வன் பட்டாசுத் தொழிலாளர்களின் பாடுகளை ‘கரிக்காசு’ நாவலில் எழுதியிருப்பார். அதில் வரும் கிராமப்புற, விவரமற்ற ஏழைக் கூலிகளின் பாடுகளோடு சென்னை போன்ற பெருநகரத்தினுடைய மத்திர வர்க்கத்தின் வாசகனால் ஒன்ற முடியாது. எவ்வளவு தான் நிதானமாக வாசித்தாலும் இடைவெளி இருக்கும். இதைப் பேட்டை, கரிக்காசு நாவலின் குறைபாடாகச் சொல்ல முடியாது. தேர்ந்துகொண்ட களத்தை அவை புலப்படுத்தியிருக்கின்றன. நாவலாக்கத்தில் அது ஒரு வகை. அவற்றைப் போன்றது தான் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைக் கதைக்களமாகக் கொண்ட ‘புதைமணல்’ என்றாலும் அதில் தனித்துவம் இருக்கிறது.

புதைமணலில் உள்ளவை சென்னையைக் களமாகக் கொண்டவை. வெறுமனே நன்கு படித்த ஓரளவு வசதியான வாழ்க்கையை வாழும் மக்களை மட்டும் பேசாமல் அவர்களின் அலைவுறும் மனங்களை அதிகமாகப் பேசியிருப்பவை. நடப்பு நூற்றாண்டின் நவீன வாழ்க்கைச் சூழலால் அலைவுறும் மனம் ஒரு குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்ததல்ல. அதைச் சரியாக அணுகியிருக்கும் ‘புதைமணல்’ கதைகளில் சென்னைக்கு அப்பாற்பட்ட கிராமப்புற வாசகனாலும் ஒன்ற முடியும். அரவிந்தனுடைய எழுத்தின் ஒளிவெளி இதுதான். புத்தகத்திற்குத் தலைப்பு வைக்கும்போது அந்தத் தலைப்பில் வேறு புத்தகங்கள் ஏதேனும் வந்துள்ளனவா என்பதை அரவிந்தன் கவனித்திருக்கலாம்.

வெளியீடு : காலச்சுவடு

ஆண்டு : 2025

விலை : 220/-

jeyaseelanphd@yahhoo.in

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button