இணைய இதழ் 125மொழிபெயர்ப்பு சிறுகதை

ஆயிரம் டாலர் – ஓ ஹென்றி;

மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

தமிழில்: கோ.புண்ணியவான்

வழக்கறிஞர் தோல்மன் தீவிரமாகவும் கம்பீரத் தொனியுடனும் சொன்னார், “ஆயிரம் டாலர், இந்தா பணத்தைப் பெற்றுக்கொள்.”

பணம் கைக்கு வந்த மகிழ்ச்சியில் மலர்ந்த புன்னகையுடனும், பதற்றத்துடனும் தன் விரல்களால் அந்த ஐம்பது டாலர் கட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டபோது யாங் கில்லியனின் விழிகள் ஒளிகொண்டன.

“எப்படிச் சமாளிப்பது என்று குழம்பும் அளவுக்குப் பெரிய தொகைதான் இது!” என்று பெருமிதத்தோடு சொன்னான் கில்லியன். “பத்தாயிரம் டாலராக இருந்திருந்தால் ஒருவன் பட்டாசு வாங்கி வெடித்துக் கொண்டாடித் தன் பெருமையைப் பறைசாற்றியிருப்பான், இதுவே ஐம்பது டாலராக இருந்திருந்தால் செலவு செய்யச் சிரமப்படவேண்டியதில்லை.”  அப்போது வழவழப்பான அந்த நோட்டுகளை கையில் சிறு நடுக்கத்தோடு பிடித்துக்கொண்டிருந்தான் அவன்.

யாங் கில்லியனைக் கண்ணெடுக்காமல் பார்த்தவாறே, “உயிலை வாசிக்கும்போது உன்னிப்பாகக் கேட்டாய்தானே?” என்று தன் கனத்த குரலில் தொழில்முறை அடிப்படையில் கேட்டார் வழக்கறிஞர் தோல்மன். “உயிலிலுள்ளவாறு அதன் விவரணைகளைக் கூர்மையுடன் கேட்டாயா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு வாக்கியத்தை உனக்கு நான் மீண்டும் சொல்கிறேன். நீ இந்த ஆயிரம் டாலரை முறையாகச் செலவு செய்த விபரங்களை என்னிடம் உடனே ஒப்படைக்கவேண்டுமென்பதே அந்த உயிலில் எழுதப்பட்டுள்ளது. உயில் அதனை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மரியாதைக்குரிய கில்லியனுடைய விருப்பத்தை நீ கடமை தவறாமல் கடைப்பிடிப்பாய் என்று நான் நம்புகிறேன்.” என்றார் வழக்கறிஞர்.

“நீங்கள் தாராளமாக என் மேல் நம்பிக்கை வைக்கலாம்,” என்று பணிவோடு சொன்னான் கில்லியன். “கூடுதல் செலவு வருமாயின் நான் சமாளித்துக்கொள்வேன். அதற்காக நான் ஒரு செயலாளரை நியமித்துக்கொள்வேன். ஏனெனில் நான் அவ்வளவு கணக்கில் கெட்டிக்காரன் அல்ல!”

பின்னர் கில்லியன் தன் உல்லாச விடுதிக்குக் கிளம்பினான். அங்கே அதன் அங்கத்தினர்களில் ஒருவரான ஓல்ட் பிரைசன் என்பவரை அவன் கண்கள் தேடின. நாற்பது வயதுடைய அவர் தனிமை விரும்பியாகவும் அமைதியான சுபாவமுடையவராகவும் இருந்தார். அறையின் ஒரு மூலையில் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவர் கில்லியனின் தன்னை நெருங்குவதை உணர்ந்து, விழி உயர்த்தி வரவேற்று, புத்தகத்தைக் கீழே வைத்தார். தன் கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்தார்.

“ஓல்ட் பிரைசன், உங்களிடம் சொல்ல என்னிடம் ஒரு நகைச்சுவையான கதை உண்டு,” என்றான் கில்லியன்.

“அங்கே பில்லியர்ட்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் யாரிடமாவது உன் கதையைச் சொல், எனக்குக் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது,” என்று கடுப்போடு சொன்னார் பிரைசன். 

“நான் முன்னர் சொன்ன கதைகளைவிட இது மிகச் சுவாரஸ்யமானது.” என்று சொல்லிக்கொண்டே ஒரு சிகரெட்டை உருவி எடுத்தான் கில்லியன். “உங்களிடம் மட்டும் சொல்லத்தான் எனக்கு விருப்பம். பில்லியர்ட் விளையாட்டில் இயல்பாக நிகழும் சோகமும் அதே நேரத்தில் நகைச்சுவையும் நிறைந்த கதை இது. நான் சற்று முன்னர் என் தாத்தாவின் சொத்து விவகாரத்தை நிர்வகிக்கும் வழக்கறிஞரைச் சந்தித்துவிட்டு இங்கே வருகிறேன். என் தாத்தாவின் சொத்திலிருந்து எனக்கு ஆயிரம் டாலரை என் செலவுக்குக் கொடுத்தார். இந்தத் தொகையை எப்படிச் செலவு செய்வதென்று நான் குழப்பத்தில் இருக்கிறேன்.” 

ஓல்ட் பிரைசன் உரையாடலில் மிக அசட்டையாகவும் ஆர்வமற்றும் கேட்டுவிட்டுச் சொன்னார், ”நான் நினைக்கிறேன் மறைந்த செப்டிமஸ் பில்லியனின் சொத்து மதிப்பு அரை மில்லியன் தேரும்.”

“ஆமாம் உண்மைதான்.” என்று மகிழ்ச்சித் தொனியோடு ஆமோதித்தான் பில்லியன். “இங்கேதான் நான் சொன்ன நகைச்சுவை வருகிறது. அவர் ஒரு கப்பல் கொள்ளளவு கொண்ட தங்க நாணயங்களை ஒரு சின்ன குமிழுக்குள் அடைக்கப் பார்க்கிறார். அதாவது அவரின் சொத்தின் பெரும் பங்கை நுண்ணுயிரி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிக்கு எழுதி வைத்திருக்கிறார். எஞ்சியதை ஒரு மருத்துவமனை கட்டுவதற்காக ஒதுக்கியிருக்கிறார். எந்த மதிப்பும் கொடுக்கமுடியாத இருவருக்குச் சிறிது பங்கை எழுதியிருக்கிறார். வீட்டுச் சமையற்காரனுக்கும், வேலைக்காரனுக்கும் ஆளுக்கொரு குடும்பச் சின்னம் பதித்த முத்திரை மோதிரமும் பத்து டாலரும் உயிலில் எழுதியிருக்கிறார். அவருடைய மைத்துனருக்கும் ஆயிரம் டாலர்.”

“அவர் சொத்திலிருந்து உனக்கும் நிறையப் பணம் கிடைக்கப்போகிறது பார்,” ஓல்ட் பிரைசன் உறுதியாகச் சொன்னார்.

“ஆமாம், நிறையக் கிடைக்கப்போகிறது,” அவருக்கு எவ்வளவு சொத்துக்கு உரிமையாளராக இருந்தால் மாதச் சம்பளத்துக்கு அவரிடம் வேலை செய்த என் மாமாவுக்குக்கூடக் கைநிறைய சம்பளம் கொடுத்திருப்பார். 

பிரைன் தொடர்ந்து ஆர்வமிகுதியில் கேட்டார், “வேறு யாரும் உயிலில் வாரிசாக எழுதப்பட்டுள்ளனரா?” 

“அப்படி யாரும் இல்லை” என்று பதிலுரைத்தான் யாங் கில்லியன். பின்னர் விரலிடுக்கில் சிக்கியிருந்த சிகரெட்டைப் பற்றவைத்து, வெறுப்போடு முகம் கோணி எதிரிலிருந்த தோலிருக்கையின் மேல் தன் கால்களை அழுத்தமாக வைத்தான். ”அங்கே மிஸ் ஹேய்டன் என்றொருத்தி இருக்கிறாள். அவள் என் மாமாவின் பாதுகாப்பில் இருந்தவள். அவள் மாமாவின் வீட்டிலேயே குடியிருந்தாள். அவள் அமைதியானவள். ஓர் இசையைப்போல இனிமையானவள். துரதிர்ஷ்டவசமாக என் மாமாவின் நண்பராக  இருந்த ஒருவரின் மகள். முத்திரை மோதிரம் பத்து டாலர் நகைச்சுவையிலும் அவளும் இருக்கிறாள், என்று நான் சொல்ல மறந்துபோனேன். நானும் அதில் சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இரண்டு பாட்டில் செம்பேய்ன் அருந்தி மோதிரத்தை விருந்தாளியிடம் ஒப்படைத்து, சிறு தொகையும்  பணியாளருக்குக் கொடுத்து, அது சம்பந்தமான எல்லாப் பொறுப்பையும் எனது கைகளிலிருந்து தள்ளிவிட்டுத் தப்பித்திருப்பேன். இந்த ஆயிரம் டாலைல் பெரிதாக நான் என்னதான் செய்துவிட முடியும்?  உங்கள் மேதைமையால் என்னை அவமதிக்காதீர்கள் ஓல்ட் பிரைசன். இந்த ஆயிரம் டாலரை எப்படி செலவு செய்வது என்று மட்டும் ஆலோசனை சொல்லுங்கள்.”

புன்னகைத்தவாறு தன் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டார் பிரைசன். அவர் முகத்தில் கேலிப் புன்னகை பிரதிபலித்தால் அவர் மனதைக் காயப்படுத்தும் வண்ணம் மேலும் பேச நினைக்கிறார் என்று கில்லியன் பொருட்படுத்திக்கொண்டான்.

“ஆயிரம் டாலர்கள். அத்தொகை அதிகமா? குறைவா? இதில் ஒரு வசந்த மாளிகை வாங்கிக் குடியிருந்து ரோக்பெல்லரைப் பார்த்து அகந்தையோடு புன்னகைக்கலாம். தன் மனைவியைத் தெற்குப் பகுதி மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பி அவள் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நூறு குழந்தைகளுக்குப் பால் வாங்கிக்கொடுத்து ஓர் ஐம்பது குழந்தைகளையாவது காப்பாற்றியிருக்கலாம், தன் வாழ்க்கையில் குறிக்கோள் உள்ள மாணவன் ஒருவனைப் படிக்க வைத்திருக்கலாம். புகழ்பெற்ற பிரஞ்சு ஓவியர் கோரோட்டின் ஓர் அற்புத ஓவியத்தை ஏலத்தில் வாங்கியிருக்கலாம். ஹேமிஸ்பியர் நகரத்துக்குக் குடிபெயர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு உல்லாசமாக வாழ்ந்திருக்கலாம். மெடிசன் ஸ்குவேர் கார்டனை ஓர் இரவுக்கு வாடகை எடுத்து, அரச வாரிசு பதவிகள் நிலையற்ற தன்மை குறித்து ஒரு விரிவுரைகூட வழங்கலாம் – உனக்குத் தகுதி இருந்தால்!

“ஆயிரம் டாலரில் நீ எவ்வளவோ நற்காரியங்கள் ஆற்றலாம்.” என்று ஒரு மென்மையான புன்னகையோடு தொடர்ந்தார் பிரைசன்.” நீ ஓர் அறிவுப்பூர்வமான செயலும் செய்யலாம். மிஸ் லோத்தாவுக்கு ஒரு வைர நெக்லஸ் பரிசளித்து ஈடாஹோவில் ஒரு பண்ணையை வாங்கி உன் இருப்பை அங்கே உண்டாக்கு. நான் செம்மறி ஆட்டுப் பண்ணையைப் பரிந்துரைப்பேன்.  அந்த வகை ஆடுகள் என்றால் எனக்கு மிக அசூசை.

“நன்றி,” என்று சொல்லிக்கொண்டே கில்லியன் தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்தான்.” உங்களை நான் நம்பலாம் ஓல்ட் பிரைசன். நீங்கள் அற்புதமான பரிந்துரையை அளித்துள்ளீர்கள். நான் ஒரே ஒரு செயலில்தான் அந்தத் தொகையைச் செலவழிக்கப்போகிறேன். ஏனெனில் நான் வழக்கறிஞருக்கு என் செலவறிக்கையைக் காட்டியாக வேண்டும். எனக்குப் பட்டியலிட்டுக் காட்ட விருப்பமில்லை!

கில்லியன் ஒரு டேக்சிக்காகத் தொடர்புகொண்டான்.” நான் கொலம்பைன் நாடக அரங்கம் வாசலுக்குப் போகவேண்டும்.” டேக்சி வந்து நின்றது.

அந்த நாடக அரங்கம் மனிதர்களால் நிரம்பிக் கிடந்தது. மிஸ் லௌரி தன்னுடைய தன் படைப்பு அங்கத்துக்காகத் தன்னைத் தயார்செய்துகொண்டிருந்தபோது அவளுடைய செயலாளர், கில்லியன் அவளைச் சந்திக்கவிருப்பதாகச் சொன்னாள். 

“அதை உள்ளே விடுங்கள்,” என்றாள் மிஸ் லௌரி மிக அலட்சிய மனப்பாண்மையோடு. ”என்ன விஷயம் கில்லியன்? நான் இரண்டு நிமிடத்தில் மேடையில் இருக்கவேண்டும். சீக்கிரம் சொல்லுங்கள்.”

“நான் அவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளமாட்டேன். உனக்கு நகைக்கடையில் என்ன நகை வேண்டும் என்று சொல். உனக்காக நான் ஆயிரம் டாலர் செலவு செய்யச் சித்தமாய் இருக்கிறேன்.” 

“கில்லியன், டெல்லா ஸ்டேசேய் ஒருநாள் இரவு கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸைப் பார்த்தாயா? அதன் விலை டிப்பனி கடையில் 2200 டாலர்கள்.

அத்தருணத்தில் மிஸ் லௌரியை மேடைக்கு வரச்சொல்லி அறிவிப்பு விடுத்தனர்.

கில்லியன் அங்கிருந்து மெல்ல வாடகைக் கார் காத்திருக்கும் இடத்துக்கு நகர்ந்தான். அந்த வாடகைக்கார் ஓட்டுநரிடம் உன்னிடம் ஆயிரம் டாலர்கள் இருந்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டான்.

அவர் தயக்கமில்லாமல் சொன்னார், “நான் ஒரு மதுக் கடை திறப்பேன். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். அப்படிப் பணம் கொழிக்கும் ஒரு மதுக்கடையை நான் அறிவேன். நீ உன் ஆயிரம் டாலரை அதற்காக முதலீடு செய்யத் தயாராய் இருந்தால் சொல். நான் அது வெற்றிபெறத் திட்டம் ஒன்றை வைத்துள்ளேன்.”

“பரவாயில்லை, வேண்டாம். நான் ஒரு பேச்சுக்குக் கேட்டேன்.” என்று கில்லியன் சமாளித்தான்.

எட்டு மாடி வீடுகளைத் தாண்டி மேய்ன் சாலயில் கில்லியன் வாடகை வண்டியிலிருந்து இறங்கினான். ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி சாலையின் நடைபாதையில் பென்சிகள் விற்றுக்கொண்டிருந்தார். கில்லியன் அவர் எதிரில் போய் நின்றான்.” மன்னிக்கவேண்டும், உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா? உங்களிடம் ஆயிரம் டாலர்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?”

அவர் தன் மேல் கோட்டுப் பையிலிருந்து ஒரு சிறிய புத்தகத்தை வெளியே எடுத்துக்கொடுத்தார். அது ஒரு வங்கிக்கணக்கு புத்தகம். கில்லியன் அதனைத் திறந்து பார்த்தான். அதில் 1785 டாலர்கள் கணக்கில் சேமிப்பு இருந்தது. அந்தப் புத்தகத்தை அவரிடமே திரும்பக்கொடுத்துவிட்டு மீண்டும் வாடகைக் காரில் ஏறிக்கொண்டான்.

“நீங்கள் வண்டியை நேராக வழக்கறிஞர் தோல்மன் & ஷார்ப்    அலுவலகத்துக்கு விடுங்கள்” டேக்சி ஓட்டுநரிடம்.        

தங்க நிறக் கண்ணாடி பிரேம் அணிந்த தோல்மன், விரும்பத்தகாத கேள்வி ஒன்றைத் தொடுக்கப்போகிற நோக்கத்தில் கில்லியனை நோக்கினார். 

அவர் சொன்னது சரியாகக் காதில் விழவில்லை. “தயவு செய்து மீண்டும் சொல்லுங்கள்.” கில்லியன் மகிழ்ச்சியோடு சொன்னான். ஆனால் நான் உங்களை ஒன்று கேட்கலாமா? இக் கேள்வி அகந்தையோடு கேட்கும் கேள்வி அல்ல. அப்படித்தான் நான் கருதுகிறேன். உயிலில் என் மாமா முத்திரையிடப்பட்ட மோதிரமும் பத்து டாலரையும் தவிர மிஸ் ஹேய்டனுக்கு கூடுதலாக ஏதும் ஒதுக்கப்பட்டிருந்ததா?”

“கூடுதலாக ஏதுமில்லை!” என்றார் வழக்கறிஞர்.

“மிக்க நன்றி சர்,” என்று சொல்லிவிட்டு கில்லியன் மீண்டும் வாடகை வண்டிக்குச் சென்றான். அவன் ஓட்டுநரிடம் மறைந்த மாமாவின் வீட்டு முகவரியைக் கொடுத்தான்.

வீட்டு நூலகத்தில் மிஸ் ஹேய்டன் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார். ஒல்லியான சிறிய தேகமுடைய அவள் கருப்பு நிறத்திலான ஆடை அணிந்திருந்தாள். அவள் விழிகளை உங்கள் பார்வை தவறவிட வாய்ப்பில்ல! எவ்வளவு அழகானவை அவை. கில்லியன் வேரெதிலும் அக்கறையற்றும் ஓர் அலட்சியப் பாவனையுடனும்  அவ்வறைக்குள் நுழைந்தான். 

“நான் தோல்மன் அலுவலகத்திலிருந்து நேராக இங்குதான் வருகிறேன். அவர்கள் உயிலின் தரவுகளைக் கவனமாகச் சரிபார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் என்ன கண்டடைந்தார்கள் என்றால்,” துல்லியமான அந்தச் சட்டச்சொல்லைத் தன் ஞாபகத்துக்குக் கொண்டுவர முயன்றுகொண்டிருந்தான். 

“அவர்கள் உயில் தொடர்பான ஒரு சட்டத் திருத்தத்தையோ பின்குறிப்பையோ கண்டடைந்திருக்கிறார்கள். தீர்க்கமாகச் சிந்தித்து முடிவெடுத்த பின்னரே என் மாமா உங்கள் பெயரில் ஆயிரம் டாலர்கள் உயிலில் எழுதியிருப்பதாகத் தோல்மன் சொன்னார். தோல்மன் அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார். இந்தாருங்கள் அந்தத் தொகை.”

கில்லியன் ஆயிரம் டாலர்களை மேசையில் அவள் கைக்கருகில் வைத்தான். “ஒஹ்” என்று மிஸ் ஹேய்டன் சொன்னபோது அவள் முகம் வெளிறிவிட்டிருந்தது. அவள் நம்பமுடியாதவளாய் மீண்டும், “ஒஹ்” என்றாள்.

கில்லியன் சன்னல் பக்கம் திரும்பி வெளியே பார்த்தான். தாழ்ந்த குரலில் அவன் சொன்னான்,” நான் நினைக்கிறேன் நான் உங்களை விரும்புவது உங்களுக்குத் தெரியுமென்று….”

“என்னை மன்னிக்கவேண்டும்,” என்று மிஸ் ஹேய்டன் சொல்லிவிட்டு அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டாள்.

அதனைப் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டதுபோல பாவனை செய்த கில்லியன்,“ இந்தப்பணத்தால் எந்தப் பயனும் இல்லையா?” என்றான்.

“என்னை மன்னிக்கவேண்டும்,” என்றாள் மீண்டும்.

“இப்போது நான் எழுத அனுமதி தருகிறீர்களா?” என்று புன்னகை மலர்ந்த முகத்தோடு கேட்டான் கில்லியன். மிஸ் ஹேய்டன் அவனுக்கு ஒரு பேனாவும் காகிதமும் கொடுத்துவிட்டு அவள் மீண்டும் தன் வேளையில் மூழ்கினாள்.

கில்லியன் அந்த ஆயிரம் டாலரை எப்படிச் ‘செலவு’ செய்தான் என்று எழுதி அதனை ஓர் உறையிலிட்டு அவளிடம் நீட்டினான். பின்னர் அவளிடமிருந்து பணிவோடு விடைபெற்றான்.

அவனின் வாடகைக்கார் மீண்டும் மீண்டும் தோல்மன் & ஷார்ப் அலுவலகத்தில் நின்றது.

“நான் ஆயிரம் டாலர்களைச் செலவு செய்துவிட்டேன்.” என்று உற்சாகமான தொனியில் தோல்மனிடம் சொன்னான். “நான் உடன்பட்டதுபோல அந்த செலவறிக்கையைக் ஒப்படைக்கவே வந்தேன்,” என்று சொல்லி தன் செலவுப் பட்டியல் கொண்ட உறையை தோல்மனின் மேசைமீது போட்டான்.

அந்த செலவறிக்கையைப் பார்க்காமல் அறையில் கதவு வரை சென்றவர் தன் வணிகக் கூட்டாளர் திரு ஷார்ப்பை அழைத்தார். அவர்கள் இருவரும் பெரிய பேழைக்குள் எதையோ தேடினர். சீல் செய்யப்பட்ட ஓர் உறையைக் கொண்டுவந்தனர். அதைத் திறந்து வாசித்தபோது அதன் விபரங்களால் அவர்கள் தலையை அசைத்துக்கொண்டனர். பின்னர் தோல்மன் பேசினார்.

“திரு. கில்லியன், உங்கள் தாத்தா மிஸ்டர் கில்லியன் எழுதிய உயிலில் கூடுதலாகச் சில விபரங்கள் உண்டு. அதனை எழுதி ரகசியமாக எங்களிடம் ஒப்படைத்திருந்தார். அதனைக் கொடுக்கும்போது நீங்கள் ஆயிரம் டாலருக்கான செலவறிக்கையை எங்களிடம் ஒப்படைத்தவுடன்தான் இந்த உறையைத் திறக்கவேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருந்தார்.

      நாங்கள் திருப்திப்படும் வகையில் உங்கள் செலவறிக்கை இருந்ததால் நானும் என் வணிகக் கூட்டாளரும் அந்தக் கடித விபரங்களை       உங்களுக்கு இப்போது சொல்கிறோம். நீங்கள் ஆயிரம் டாலரை முறையான

      செலவிட்டிருந்தால் நீங்கள் அதற்கான சன்மானமாகக் கூடுதல் சலுகையைப் பெறுகிறீர்கள். நீங்கள் அறிவுப்பூர்வமாகவும், நியாயமான, சுயநலமில்லாமலும்  கொடுக்கப்பட்ட பணத்தைச் செலவிட்டிருந்தால், எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி உங்களுக்கு 50000 டாலருக்கான ஓர் உத்தரவாதப் பத்திரத்தை அளிக்கிறோம். ஆனால் இத்தொகையை முன்பைப்போல வீணான முறையிலும், முட்டாள்தனமாகவும் செலவிட்டால், இத்தொகையை நீங்கள் திரு கில்லியனின் சட்டப்பூர்வமான பாதுகாவலர் மிரியம் ஹேய்டனிடம் தாமதிக்காமல் திரும்பக் கட்டிவிடவேண்டும்.

“இப்போது… திரு கில்லியன், அந்த ஆயிரம் டாலரின் செலவறிக்கையை வாசிக்கப்போகிறோம்.

திரு தோல்மன் அந்த உறையை எடுத்தார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கில்லியன் அவர்கள் எடுப்பதற்கு முன்னால் அதனைப் பாய்ந்து எடுத்தான். அவன் எந்தப் பதற்றமுமில்லாமல் அதனைக் கிழித்து தன் சட்டைப்பைக்குள் திணித்தான்.

“பாதகமில்லை! நீங்கள் நான் கிழித்ததைப்பற்றி வருந்தவேண்டாம். நான் செலவழித்த விபரப் பட்டியலை நீங்கள் புரிந்துகொள்வது சிரமம். நான் ஆயிரம் டாலரை குதிரைப் பந்தயத்தில் விட்டுத் தோற்றுவிட்டேன். இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையட்டும், மேன்மைக்குரியவர்களே,”

கில்லியன் அறையைவிட்டு அகன்றுகொண்டிருக்கும்போது, தோல்மனும் ஷார்ப்பும் வருத்தத்துடன் தலையை ஆட்டிக்கொண்டனர். கில்லியன் குதூகலத்துடன் விசிலடித்துக்கொண்டு விருந்தினர் அறையின் மின்தூக்கிக்காகக் காத்திருந்தான்.

………………………………………………………………………………………………………………………………………………………………….

கோ.புண்ணியவான்.                      

நான்கு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள்,ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு கட்டுரை நூல், மூன்று சிறுவர் நாவல்களையும் வெளியிட்டுள்ள இவர் மலேசியாவில் நவீன இலக்கியம் தொடங்க முக்கிய பங்காற்றியுள்ளார். இவரின் செலாஞ்சார் அம்பாட் நாவல் தேசிய அளவிலான மூன்று விருதுகளை வென்றது. இவரின் கையறு நாவல், இரண்டாம் உலக யுத்தத்தின் போது மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பானிய ராணுவம் செய்த அராஜகத்தைப் பேசுகிறது. இது தமிழுலகத்தில் பரவலாக வாசிக்கப்பட்டுவரும் முக்கிய நாவல். 2020இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் கையறு நாவலுக்குக் கரிகாலன் சோழன் புத்தக விருதை வழங்கியது.  ஒரு சிறுகதைத் தொகுப்புக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறந்த நூலுக்கான விருதை வழங்கியது. தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் படைப்புத் துறையில் இடைவிடாது பங்காற்றி வரும் இவர்,

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பலமுறை தங்கப் பதக்கங்கள் வென்றவர். இளைய சமூகம் எழுத்துத் துறைக்கு வரச் சிறந்த முன்னோடியாகத் திகழ்கிறார் கோ.புண்ணியவான்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button