
திட்பம்
அவளுடைய அழுகையும் கோபமும் துளியளவுகூட அவனை அசைத்ததாகத் தெரியவில்லை. அழுத்தம் நிறைந்த அந்தத் தருணத்தை வெகு சாதாரணமாக அவன் கையாண்டுகொண்டிருந்தான். பொங்கி எழுந்த ஆத்திரத்தில், அவனை வாய்க்கு வந்தபடி பேசிச் சபித்துக் கொண்டிருந்தாள் அவள். அவன் மேல் அவள் கொண்ட அந்தக் காதல் அந்த நொடியிலிருந்து இனி ஏற்றுக்கொள்ளப்படவே போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் அவளும்; என்ன நடந்தாலும் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற உறுதியோடு அடர்ந்த மௌனத்தில் அவனும் இருந்தார்கள்.
இறுகிய முகம், ஒதுங்கி ஒதுங்கி நிற்கும் குணம், ஆழ்ந்த அமைதி என இருண்மை முகமாகவே காட்சியளிக்கும் அவன், அவள் வேலை செய்து வந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தான். நாட்கள் செல்லச் செல்ல, அவன் வகுத்திருந்த அந்தத் தனிமை எல்லையை அவள் கொஞ்சமாகக் கடந்திருந்தாள். அவனுக்கு அது மன ஆறுதலாகத் தோன்றினாலும், பெரிய நெருடலாகவே இருந்தது.
காலத்தின் காயங்களால் உண்டாகிற வெறுமை, தனிமை, ஏக்கம் இவற்றால் பீடிக்கப்பட்டிருந்த அவனுடைய நாட்களை நிரந்தர வசந்தமாக மாற்றி விடுகிற எண்ணத்தில் அவள் இருந்தாள். அத்தியாவசியங்களில் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அவனது வெறுமையை நிரப்புகிற முனைப்புகளை அவள் செய்யத் துவங்கினாள். பசி, ஏக்கம், சிறு உடல்நலக் குறைவு எனக் கடினமாகத் துவங்கிய அவனது ஒரு நாளில், அவள் கரம் பற்றியதும், தலை கோதியதும், உணவூட்டியதும் அவனுக்கு மிகப் பெரிய மன விடுதலையாய் இருந்தது.
சின்னச் சின்ன அடிப்படைப் புரிதல்களில் தொடங்கித் தொடர்வதுதான் அன்பு; மறுப்பில்லை. இன்னொருவர் வாழ்வில் வருகிற போது தனிமை விலகும்; மாற்றுக் கருத்து இல்லை. தொடர்ந்த நாட்களில் சின்னச் சின்னப் பயணங்கள், தேநீர், உணவுகள், சிறு அணைப்புகள், முத்தங்கள் என அவர்களின் நாட்கள் மெருகேறிக் கொண்டிருந்தன. தொடக்கம் முதலே அவளது அன்பின் செய்கைகள் அவனுக்கு வலியத் திணிப்பது போன்ற ஓர் உணர்வைத் தந்து கொண்டே இருந்தது. முடிந்த அளவு தடுத்தும், அதை மீறி நிகழ்ந்து விடுகிற தீண்டல்களை அவனால் தவிர்க்க முடியாமல் தவித்து வந்தான்.
அன்பின் துவக்கம் வெறும் உணர்வுகளாலானது; நீளும் கரங்களை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளக்கூடியது. நாள்பட நாள்பட இயல்புகள், மாற வேண்டியவை, மாற்ற வேண்டியவை என அன்றாடங்களுக்குள் அது பொருந்தும் போது, பொருத்தமாக அமைந்துவிட்டால் வாழ்வின் இறுதிவரை கூட தொடரக் கூடியது. பொருத்தமில்லை எனில், ஒரு பக்கம் உலகளவு காதல் இருந்தாலும் பலனற்றுப் போகக் கூடியது. அவளது அன்பு தூய்மையாக இருந்தாலும், அவனுக்காக எதையும் இழந்து விடத் துணியுமளவு பெரிதாகத் தோன்றினாலும், அவனுக்கு அவள் பேரில் அதே போன்றதொரு பேரன்பு தோன்றவே இல்லை.
நமக்கானவர்கள் என்ற உணர்வு தருகிற தைரியம், எந்த எல்லை மீறலுக்கும் கொண்டு போய் விடுவது இயல்பு தானே? தொடர்ந்த நாட்களில் அவன் மேல் அவள் எடுத்துக் கொண்ட உரிமை, எல்லைகளையெல்லாம் தகர்க்கும் படியாய் இருந்தது. முடிந்த அளவு தவிர்த்தே வந்தான். அவன் சிக்கிக் கொண்டிருந்தது ‘ஏற்கவா, மறுக்கவா?’ எனும் பெரும் மனக்குழப்பத்தில். தீர்க்கமானவனாய் ஒரு நாளில், அவளிடம் எடுத்துச் சொல்லத் துவங்கினான். தனக்கு இந்த உறவில் விருப்பமில்லையென்றும், இது ஒருபோதும் பொருத்தமாக இருக்காது என்றும் விளக்கினான். ஆனால், அவளிடமிருந்து அவனுக்கு வந்த பதில் வேறு விதமாய் இருந்தது.
முந்தைய அன்பின் காயங்களால் அவன் மனம் பயப்படுவதாகவும், நாள்பட நாள்படத் தன் அன்பால் அதைச் சீராக்கி எல்லாவற்றையும் மறக்கச் செய்து, இறுதிவரை அவனோடு உடனிருப்பதாகவும் அவளிடமிருந்து பதில் வந்தது. உண்மையில் அவன் பயம் அதுவல்ல. யாரோ வருவதும் போவதும், இன்னொருவர் மீண்டும் வருவதும் அவரும் போவதும் என மாற்றங்கள் நிகழ்வது இயற்கையின் நியதிதான். அவளது அன்பு எவ்வளவு தூய்மையாக இருந்ததோ, அதைவிடப் பலமடங்கு அதிகாரமாகவும் இருந்தது. அவளுக்காக அவன் முற்றிலுமாக மாற வேண்டி இருந்தது; பொய்களைச் சொல்ல வேண்டி இருந்தது; மறைக்க வேண்டி இருந்தது; நடிக்க வேண்டி இருந்தது. அந்த அன்பில் அவனால் அவனாக இருக்க முடியவில்லை.
மாறிக் கொள்வதும், விட்டுக் கொடுப்பதும், இசைந்து போவதும் அன்புதான்; மறுப்பில்லை. அன்பு கொடுக்கப்படும் போது மாறலாம், திணிக்கும் உணர்வாகி விட்டால் நிச்சயம் கசந்து போகும். அவளிடமிருந்து மெல்லத் தன்னை விலக்கிக் கொள்ளத் துவங்கினான்; இடைவெளிகளை உருவாக்கினான். ஒருவருக்கு நாம் பொருத்தமில்லை என நம் உள்ளத்தின் ஆழத்தில் உணரத் துவங்கி விட்டால், எவ்வளவு பொருத்தினாலும் பொருந்தாது தானே? ‘வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் அந்த ஒருவர் போதும்’ என்ற உணர்வை ஏனோ அவளது காதல் அவனுக்குத் தரவே இல்லை. அவளோ, என்ன ஆனாலும் அவன் மீதான அந்தக் காதலைக் கைவிட முடியாது என்கிற உறுதியில் நின்றாள்.
ஒரு பக்கம் மிகைக்காதல், ஒரு பக்கம் விருப்பமின்மை என முரண்பட்ட ஓர் அன்பின் பயணம் நிகழ்ந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில், அவள் எவ்வளவு வாதிட்டு, போராடிப் பார்த்தும் அவன் முடிவிலிருந்து துளியளவும் மாறவில்லை. இப்படியான இன்னொரு நாளில், அவள் எடுத்த கடைசி ஆயுதம்—தன்னைத் தந்து விடத் துணிந்தது. யாரோ சொல்லிக் கொடுத்திருக்கலாம் அல்லது பொதுச் சமூகத்தில் உலவுகிற ஆண்கள் மீதான பலவீனமாகவோ, வழிக்கு வர வைக்கும் உத்தியாகவோ அவள் உணர்ந்திருக்கலாம். கைகூடி வந்த ஒரு வேளையில், அவனே எதிர்பாராத ஒரு சூழ்நிலையில், தன்னை முழுமையாக அவனுக்குக் கொடுத்து விடுகிற முனைப்பில் இருந்தாள்.
அவன் நிலைகுலைந்து போனான். ஏங்கிய மனமும் உடலும் அவள் வசம் கொஞ்சமாய் விழத் தொடங்கி இருந்தது. ஆனாலும், புத்தி எச்சரித்துக் கொண்டே இருந்தது. கடுமையாய் தன்னுடனே போராடி, ஒத்துழைக்காமல் அவளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.
அங்கிருந்து அவன் நகர முற்பட்டபோது அவள் இழுத்துப் பார்த்தாள்; அவன் இசையவே இல்லை. அதற்குப் பின் அவளுடன் பேசுவதைக் கூட நிறுத்திக் கொண்டான். நாட்கள் நகர்ந்தன. மீண்டும் அவளாகவே வலியச் சென்று அவனிடம் தன்னை விளக்க முற்பட்டாள். அன்பு, காதல், காமம் எல்லாமும் கலந்ததுதான் வாழ்வு என்றெல்லாம் சொல்லிப் பார்த்தாள்; அழுது பார்த்தாள். வெகு நேரமாய் அவள் பேசிய போதும், அவனிடம் மௌனம் மட்டுமே பதிலாய் இருந்தது.
அவள் பேசிய அத்தனையையும் உள்வாங்கிக் கொண்டு, தொண்டையைச் செருமியபடி பேசத் துவங்கினான்:
“நான் ஆரம்பத்துலயே சொன்னேன் எனக்கு விருப்பம் இல்லைனு. ‘சரியாகிடும், சரியாகிடும்’னு ஃபோர்ஸ் பண்ணுனது நீ. நான் ஏற்கனவே காதலால உடைஞ்சு போனவன்தான், இப்பவும் எனக்குனு யாரும் இல்லைங்கிற எண்ணம்தான் முழுசா இருக்கு. நீ என்னை இவ்ளோ லவ் பண்ணியும், எனக்கு நீ இருக்கனு துளியளவு கூட தோண மாட்டேங்குது. நீ உன்னை முழுசா எனக்குக் குடுக்கத் தயார் ஆனப்பவே என்னை நீ எவ்வளவு நம்புறனு புரிஞ்சது. ஆனா, எனக்கும் விருப்பம் இருக்கணும்ல? உன்னோட விருப்பங்கள் வேற, என்னோட விருப்பங்கள் வேற. பழகின இந்தக் கொஞ்ச நாள்ல நீ சொல்ற எதையும் நான் கேக்கலனு ஏகப்பட்ட சண்டை வந்து, நீ கோவிச்சிட்டு இருந்திருக்க.”
“முழுசா நாலு நாள்கூட சண்டை இல்லாம தொடர முடியாத இந்த லவ், எப்படி வாழ்க்கை முழுக்க சந்தோஷமா போகும்னு நினைக்கிற? உன் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி என்னால மாற முடியும், ஆனா அந்த லைஃப்ல நான் நானா இருக்க மாட்டேன். நீ இல்ல, யார் என் வாழ்க்கையில வந்தாலும் நான் உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். எனக்குனு சில சுதந்திரம் இருக்கு; அதையெல்லாம் செய்யக் கூடாதுனு முடக்கிட்டு, நீ மட்டும்தான் அப்படீனு என்னால வாழ முடியாது. அது காதலாவும் இருக்காது. நான் இப்பவும் சொல்றேன்… நான் பழகின முதல் நாள்ல இருந்தே எனக்கு உன்கிட்ட ஓர் அந்நியத்தனம் இப்ப வரைக்கும் தெரிஞ்சிட்டேதான் இருக்கு. மனசுல இருந்து சொல்றேன், என்னால உன்னை நெருங்க முடியல.”
“அப்புறம் இன்னொன்னும் சொல்றேன். உடம்பு ஆசை எனக்கு இல்லாம இல்ல; ஆனா அதை மட்டும் வச்சு நான் என் வாழ்க்கைய தீர்மானிக்க விரும்பல. நான் உன்னை காயப்படுத்தல, உனக்கு நான் பொருத்தமில்லனு சொல்றேன். நான் இனி எந்தச் சூழ்நிலையிலயும் உன் வாழ்க்கையில வரமாட்டேன். எனக்குத் தெரிஞ்சு நான் தெளிவா யோசிச்சுதான் பேசுறேன். உன் மனசு கஷ்டப்பட்டதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்” —இப்படியாகப் பேசி முடித்தான்.
அவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த அவளுக்கு அழுகையும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது. “உன் முன்னாடி நான் நல்லா வாழ்ந்து காட்டுறேனா இல்லையான்னு பாரு! என்னை யூஸ் பண்ணிட்டு கழட்டி விட்டுட்டல? உனக்கு நான் இல்ல, யாருமே செட் ஆக மாட்டாங்க. கேக்க நாதி இல்லாமதான் போவ! இனி உன் மூஞ்சியிலயே முழிக்க மாட்டேன்!” என்றெல்லாம் உக்கிரமாகக் கத்திக்கொண்டிருந்தாள்.
அமைதியாகச் சிரித்தபடி கிளம்பி நின்ற அவன், “உன் எல்லா வாழ்த்துக்கும் சாபத்துக்கும் நன்றி. காதல்ங்கிற பேர்ல அடிமையா வாழ்றதை விட, என் விருப்பத்துக்கு நான் தனிமையிலயே சுதந்திரமா வாழ்ந்துட்டு போயிடுவேன். அப்புறம் இன்னொரு நல்ல செய்தி, நான் வேலையை ரிசைன் பண்ணிட்டேன். இனி இங்க வரமாட்டேன். என்னைப் பாக்குறப்பலாம் ‘இவனை லவ் பண்ணுனோம்’கிற ஞாபகம் உனக்கு வந்துடக் கூடாது. அதனால நான் போறேன்.”
“ஒரு சின்ன அட்வைஸ்… எல்லா ஆம்பளையும் காமத்துக்கு அடிமை இல்ல; புடிக்காததைப் புடிக்காதுனு தைரியமா சொல்றவங்களும் இருப்பாங்க. உனக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன். உன் குணத்துக்கு ஏத்த மாதிரி ஒருத்தர் உனக்குனு வருவார், சந்தோஷமா வாழு. திரும்பவும் சொல்றேன், நான் உனக்குப் பொருத்தமில்ல. உன்னை நான் பயன்படுத்தவும் இல்ல; அந்த உரிமையை நான் உன்கிட்ட எடுத்துக்க விரும்பல. போறேன்… குட் பை!” என்றபடி அலுவலகத்திலிருந்து கிளம்பி நடக்கத் துவங்கியிருந்தான்.
அன்பாகவே இருந்தாலும், வேண்டாமென்றால் வேண்டாம் என உறுதியாக நின்று தன்னை விடுவித்துக் கொண்டதில் அவன் மனம் இலகுவாகி இருந்தது. உற்சாகமாகத் தொடங்கி இருந்தான் தன் எல்லாப் பயணங்களையும்.



