இணைய இதழ் 125கவிதைகள்

ஜேக்கப் மேஷாக் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

கெத்சமனே

அற்புதங்களின்
வழித்தடங்களிலோ
அயர்ச்சியின் கிறக்கத்திலோ
நீ என்றுமே என்
கண்களுக்குத் தென்பட்டதில்லை

உனக்குப் பிடித்த
எனது பெரும் புன்னகை வழியும்
சுந்தரப் பொழுதுகளில் நீ
என்னோடு லயித்ததில்லை.

நான் குதூகலிக்கும்போதோ,
மகிழ்ச்சி முக்தியில் கட்டியணைக்க முற்படும்போதோ
உன் கதகதப்பான உருவத்தைக் காற்றில் துழாவுகையில்
அது என்னை ஆரத்தழுவியதில்லை.

நான் காதல் வயப்பட்டபோதோ,
அதில் வியாகுலப்பட்டபோதோ கூட
என்னுடன் நீ இல்லை.

மீட்டாத யாழின் பேரமைதியை
சுமக்கும்போது எனதருகில் இல்லாத நீ

பேரழிவின் விளிம்பில்
பெருஞ்சத்தத்தோடு
இரத்தம் சொட்டப் பீறிட்டு அழும்
ஒரு குழந்தையாய் நான் முழங்காலிட்டபோது
என் முன்னே பிரகாசித்தாய்.

பிழை செய்ய விரும்பும்
ஓர் குறும்புக் குழந்தையின் விரலைச் சுடும் நெருப்பின் சிரிப்பில்
வெதும்பி அழும் குழந்தையின்
பரிசுத்தக் கண்ணீரை ஏந்திக்கொள்ள
என்றும் எத்தனிக்கிறாய்.

இப்போதெல்லாம்
யாரும் பார்த்திடாத என் மறுமுகத்தின் வாசம்
உன் நுகர்தலுக்காக காத்துக் கிடக்கிறது.
இப்போதெல்லாம்
அழுதல் அத்தனை சௌகர்யமாக இனிக்கிறது.

காரணமின்றி அழும் சிலாக்கியத்தை
நீ வரமாய்க் கொடுத்ததனால்
என் வாரத்தின்
எல்லா நாட்களும் வியாழனாகிவிடக் கூடாதா என்று
ஸ்தோத்திர பலியோடு வேண்டும்,
எனதருமை கெத்சமனே நீ!

*

நீ…நான்...

வார்த்தைகளுக்கும், எழுத்துகளுக்கும்
பிடிபடாமல் நழுவும் நெருடல் நீ.
கலைந்த கனவை மீட்டெடுக்கப் போராடும்
வளர்ந்த குழந்தை நான்.

எத்தனை தொலைவு ஓடினாலும்..
வட்டத்தின் தொடக்கப் புள்ளியிலேயே
வந்து முடிகிறது என் தேடல்.

எல்லா நேரங்களிலும்
மையப்புள்ளியில் நங்கூரமிட்டு
என் காலத்தின் எல்லா கடிகார முட்களையும்
கட்டியணைத்துக் கொண்டு வட்டமிடுவதில்
உனக்கென்ன பேரானந்தம்?

உண்மையில் நீ யார் தெரியுமா?
என் மனம் எத்தனை அனுபவித்தாலும்
ஏற்க மறுக்கும் போலிப் புலங்காகிதம்.

அமிர்த ருசி கொண்ட
அதீதமாய் வழியும் விஷக்கோப்பை

நீ…
ஈன்ற பொழுதில்
யாரையும் நெருங்க விட்டிடாத
தாய் நாய்.

நான்…
உன் தற்காலிகப் பாசம் தீர்ந்த பின்னும்,
நீ வெறுமனே விரட்டியடித்த போதிலும்,
யாரோவென்று கடந்து சென்றபோதிலும்,
உன் வரவுக்காகவும்
உன் இருப்புக்காகவும்
உன் அரவணைப்பிற்காகவும்
உன் முலைப்பாலுக்காகவும்
ஏக்கத்தோடு ஏங்கி நிற்கும் உடல் ஒட்டிய
குழந்தை நாய்.

நீ…
வந்தோரை பொய்சிரிப்பில் வழியனுப்பிய பிறகு
உதடுகள் முனகும் கொச்சை வார்த்தை.

நான்…
முன்பதிவு செய்யப்படாத இரயில் பெட்டியில்
உன் கண்ணாடிச் சிரிப்புகளை
உடையாமல் மனதில் வைத்துப் பயணிக்கும்
தூரத்துச் சொந்தம்.

ஊடலின் களிப்பு நீ!
ஊடல் தீர்ந்த பின்னும்
உனக்கிடப்படும் நெற்றி முத்தம் நான்.!

*

தொலைதலும் பிரிதலும்...

அழுக்கு பிடிக்காத பாதங்களை வேண்டும்,
எல்லா கோவில் தெய்வங்களிடமும்
முற்றத்தில் சிறைபட்டிருக்கும் செருப்புகள்
வேண்டிக் கொள்கின்றன…
தங்களின் தொலைதலில்
புதிய பாதங்களை வேண்டி!

என்னுள் நான் வேண்டும் தொலைதல்
மிக ஆழமானது,

பெயரிடப்படாத கருந்துளை ஒன்றில்
கிணற்றுக்கல்லாய் தூக்கியெறியப்படும்
ஒற்றை வால் நட்சத்திரம் போல்.

காதல் சாயம் பூசப்பட்ட
காமத்தில் சிதையும் நாணம் போல…

என்னுள் நான் கேட்கும் பிரிதல்
தற்கொலைக்கு முன்னால் அவசர அவசரமாக
கிறுக்குப்படும் கறை படிந்த காகிதம் போல.

பிஞ்சுக் குழந்தையின் இதயநோயின்
மரண விளிம்பில், மெதுமெதுவாய் உருகும்
உயிரின் கூச்சலைப் போல!

சாதிக்கொலையில்
அவளுக்கும் அவனுக்குமான
கல்லறை இடைவெளியைப்போல!

*

jacobjack182@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button