
கவிதை
யாரோ ஒருவர்
தான் அறிந்ததை
அழகுற எழுதுகிறார்
அது அவ்வாறு இருக்கிறது
இனி யார்
எழுத வருவோர்க்கும்
உந்துசக்தியாக அது இருக்க
தனது கண்டுபிடிப்பை
முதன்மைப்படுத்துகிறார்
ஒரு அமைப்பாகவும்
பயன்பாட்டிற்கு உட்பட்டும்
கணக்கிலடங்காத
சாத்தியக்கூறுகள் கொண்ட அது
ஒரு காகிதத்தில் எழுதப்பட்ட
கோர்க்கின்ற எழுத்துகளில்
எந்த அர்த்தமும் இல்லாதிருந்தது
வாழ்க்கையைப் போல்
அனைத்துவிதமான புரிதல்களும்
குழப்பத்தை உண்டு பண்ணுகின்றன
ஒரே ஒரு புரிதலைத் தவிர
ஒருநாள்
இந்த எழுத்துகளிலிருந்து
உருண்டோடி வந்து
ஒரு பொருள் தரையில் விழுந்தது
நரம்பில் பாயும் ஒளி
விரயம் ஆகாமல் இருக்க
நான் ஒரு கவிதை எழுதினேன்.
*
கனவு
எரிக்கும் திரியை
அவள் உடலில்
மறைத்து வைத்தேன்
அதன் நுனிநாக்கிலிருந்தது
அவள் சொல்லிய
ஒரு சொல்
என்னையும் சேர்த்து எரித்தது
அவள் காதல் நெஞ்சம் கொண்டவள்
என்பது தரையில் இருக்கும்
ஈரத்தை யாரும் அறியாததைப் போல்
கல்லை உரசி
காய்ந்ததைப் பற்ற வைத்து
தீயாய்ப் பரவும்
தலைமுறையின் காலத்தில்
இடைவெளி தோன்றிய
எண்ணத்தின் ஒளியிலே
தெரிந்த அவளைப்
பிடுங்கி பிரபஞ்சத்தின்
நடுவில் இருத்தியவர் யார்?
வீட்டைவிட்டு ஓடிப்போவதும்
வீடு திரும்புவது இரு பயணம்
காற்றும் மழையும் மணலும் தூசியும்
மீனின் செதில்களென
சருமம் தோற்றம் தர
யாரோ ஒருவன்
அவளைக் கனவு காண்கிறான்.
*
மையம்
நடப்பது உன்மையெனில்
அதன் சாத்தியக்கூறுகளின்
அடிப்படையில் என் விருப்பத்தை
நிறைவேற்றிக்கொண்டேன்
இதில் என் முயற்சி ஏதுமில்லை
நதியில் அடித்துக்கொண்டு போகும்
ஒரு பொருளைப் போல்
ஒரு கட்டத்தில் நான்
நடுவராகவும் சாட்சியாகவும் இருக்கிறேன்
பயமறிந்து வாழ்பவனை
தோல்விகள் ஒன்றும் செய்வதில்லை
என் நிலையை அறிந்தவனாக
என் பயணத்தைத் தொடர்ந்தவனாக இருக்கிறேன்
மூச்சுக் குழாயிலோ முதுகெலும்பிலோ
இருக்கும் கவனத்தை
பிரித்துப் பிரித்துப் பார்க்கிறேன்
எப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறேன்
நான் சொல்வது நிஜம்
என்பதற்கு மேல்
எதோ ஒன்று இருப்பதால் மட்டும்
இருப்பு மட்டுமல்ல
கட்டற்ற வளர்ச்சியும் இருக்கிறது
மாற்றத்தின் நிறங்கள் சமிக்ஞைகளாக
எல்லையற்ற காலத்தின்
நுழைவாயிலில் நிற்கிறேன்
இரண்டாக இருப்பது
ஒன்றென அறிய முடியாத
நிலையின் பரிதவிப்பில்
இருப்பவனும் இல்லாதவனும்.
*



