
மறந்தும்..மரத்தும்…
ஒருவருள் ஒருவர்
புகுந்து உணர்ந்து
ஒன்றாக வேண்டியே
அவள் வந்தாள்;
நீ அன்பெனும் வேலி கட்டி
அவள் ஆசைகளைச்
சிறைப்படுத்தினாய்;
குளிர்நீரில் குதிக்கும்
ஆமை போல முதலில்
அவள் அகமகிழ்ந்தாள்;
நாள்கள் போகப் போக
நரகத்தில் ஆட்பட்டாள்;
அடுக்களைப் பாகிலே
மூழ்கிக் கிடப்பது
அவளுக்குத் திகட்டியது;
அவள் அறையின்
அனைத்துச் சாளரங்களும்
மூடப்பட்டுவிட்டன;
உன் அறையில் உள்ள
ஒரே ஒரு சன்னல் வழியில்தான்
அவள் பார்க்கும் நிலை;
ஆனால்
அவள் யார் என்பதே
அவளுக்கு மறந்துபோக
எல்லாம் மரத்துப் போக
உதிரத் தொடங்கினாள்.
*
குருவிக் கூடு
சாலையின் ஓரத்தில்
அனாதையாய்க் கிடக்கிறது
அந்தத் தூக்கணாங்குருவிக் கூடு.
நேற்று மாலை கூட
குருவிகள் குடும்பத்துடன்
குதூகலித்து உட்கார்ந்து
கும்மாளமிட்ட வீடு.
பாவம்
எத்தனை நாள்கள்
எவ்வளவு தொலைவு சென்று
எடுத்து வந்த இழைகளோ?
சின்னஞ்சிறு அலகால்
வரைந்த சித்திரம் இங்கே
வாடிக் கிடக்கிறது.
காற்றால் வீழ்ந்ததோ?
காலத்தின் மாற்றமோ?
எப்படியோ?
இங்கே எவரும் சீந்தாமல்
பாழடைந்து கிடக்கிறது அதுவும்
நான் என் கிராமத்தில்
விற்றுவிட்டு வந்த வீட்டைப் போல.
*
காத்திருப்பு
ஆடிமாதம்தான் வருவார்
குடுகுடுப்பைக்காரர்.
வலசைப்பறவை போல
வந்து செல்வார்.
அவரது ராகமான
பாட்டைக் கேட்டு மகிழும்
சிறுவர் கூட்டம்
பறந்து வந்து மொய்த்துவிடும்.
ஒட்டுப் போட்ட சட்டையும்
கையிடுக்கில் குடையும்
முட்டி வரை கட்டியுள்ள
காவி வேட்டியும்தான் அவர்.
சூரியன் வந்து எட்டிப் பார்க்குமுன்
ஒருமுறை தெரு முழுதும் வருவார்.
ஒவ்வொரு வீட்டுக்கும்
ஜக்கம்மா குறி சொல்கிறாள்
என்று சொல்லிப் போவார்.
சிறிது நேரம் கழித்து வந்து
ஒவ்வோர் இல்லத்திற்கும்
விளக்கவுரை ஆற்றுவார்.
தானியமோ சில்லரையோ
கொடுத்தாலும் அவர் வேண்டுவது
சட்டை புடவைகள்தாம்.
தன் பேத்தி கல்யாணம்
எப்பொழுது நடக்குமென
அவர் வந்து சொல்வதற்குக்
காத்திருக்கிறாள்
கடைசி வீட்டில் ஒரு கிழவி.
*
இருள் போர்வை
இந்தக் காலம் எனக்கு மட்டும்
இருளைப் போர்வையாகக் கொண்டு
அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இதனுள்ளே நான்
எப்படியும் நுழைந்தாக வேண்டும்.
வழிமறிக்கும் முள்வேலிகள்
உடலைக் கிழிக்க முயன்றாலும்
குருதி வழிதலைப் பொறுத்துக்கொண்டு
புத்தன் போலாக வேண்டும்.
புதர்களிலிருந்து வரும் புலிகளையும்
புற்றுகளிலிருந்து வரும் நாகங்களையும்
பார்த்துப் பழகிக்கொள்ள வேண்டும்.
காட்டாறுகளில் கவனத்தையே
படகாகக் கொண்டு கடந்து
கரையேற வேண்டும்.
தானாக மிதந்து வரும்
லேசான தக்கைகள்
மிகவும் ஆபத்தானவை
நாம் ஏறி அமர்ந்தவுடன்
அடிஆழத்தில் அமிழ்த்திவிட்டு
அவை அகமகிழ்ந்திருக்கும்.
இருட்டும் வெளிச்சமும்
இங்கொன்றுதான் என்னும்
சமரசம் செய்துகொள்ள வேண்டிய
கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.
*



