
தமிழில் ஸ்ரீராம் கோகுல்
முத்திரை குத்திவிட்டார்கள்!
[Northumbrian coal miner eating his evening meal by the Bill Brandt, 1937
https://umma.umich.edu/objects/northumbrian-miner-at-his-evening-meal-1984-1-291/
என்ற புகைப்படத்திலிருந்து ஊக்கம் பெற்றது]
மடக்மடக் என்று பீர் குடித்தபடி
பெருமிதத்துடன் இளித்து
வெற்று விதண்டாவாதங்கள்
மற்றும் கோட்பாடுகளில்
மூழ்கியபடி,
விஷமி பொய்களைக்கொண்டு
‘மற்றவர்’ என்று
உன்னை முத்திரை குத்திவிட்டார்கள்,
உன் மூளையைச் சலவை செய்பவர்கள் –
அவர்களால் முடியும் என்பதினால்தானே!
நேற்றுதான்
காஃபிக் கடையில்
நாம் நிம்மதியாய் அமர்ந்திருந்தோம்,
வயதான நார்தம்பிரிய சுரங்கத் தொழிலாளி
மாலை டீ அருந்துவதை
உன் மனைவி திகைத்துப் பார்த்தபடி.
அதற்குள் உன்னை
குழப்பமிக்க புரிந்துணர்வில்லா வெளியாள்
என முத்திரை குத்திவிட்டார்கள்.
எவ்வளவு பிளவுபடத்தக்கது இது,
தற்போது நீ வெளியேற்றப்பட வேண்டியவர்,
அவள், தங்கக் கூடியவள்!
நீயும் என்னைப் போல் உணர்ச்சிவசப்படா வெளியாள்,
‘மற்றவர்’ என்பதை நான்
என் தோளில், மூக்கில், கொழுப்பில் உடுத்திக்கொள்கிறேன்.
இல்லையேல் விதியே என்று
இயற்கையின் பழைய சூதினை
நான் மறக்க நேரிடும்.
நாம் அனைத்தினையும் மீண்டும் பெருமிதம் கொள்ளலாமா?
நீ உனது வேற்றுமையில்
நான், எனதில்.
சரணாலயம்
நான் யார்
நான் எங்கு இருக்கிறேன்
இங்கே நான்
வாழ்வதற்கான
புகலிடம் காணலாமா?
இங்கே நான்
பாதுகாப்பாக உணரக்கூடிய,
பயமில்லாமலும் பாரபட்சமில்லாமலும்
காதலிக்கவும் காதல் வசப்படவும்
தன்னுரிமை கொண்ட
சரணாலயம் அடையலாமா?
இங்கே நான்
நம்பிக்கையுடன் கனவு காணவும்
நிம்மதியுடன் வாழவும்
பாதுகாப்பாக இருக்கவும் ஓர் இடம்
காணலாமா?
கண்டுபிடித்துவிட்டேன் சரணாலயத்தை,
எனது பாதுகாப்பான வாழ்விடத்தை,
இங்கே இனிமையான பாடல்கள்
பியானோ விசைகள் வழியே
எனது சிந்தனைகளுக்கு உயவூட்டும்.
இதுவே இயற்கை
எனது கடமைதான் என்னென்ன?
வாழ
காதலிக்க
காதல் வசப்பட
இவ்விடத்தில்
நான் கண்டுவிட்டேன்
என் சரணாலயத்தை
எனது பாதுகாப்பான வாழ்விடத்தை.
ஆசிரியர் குறிப்பு :
பேஷன்ஸ் எசின்வோக் முனைவர் பட்டம் பெற்ற பிரிட்டிஷ்-நைஜீரிய கவிஞர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர். இவரது படைப்புகள் ‘தி லாஸ்ட் பீச்’ (டீன் நாவல்), ‘டிரில் பேபி டிரில்’ (கவிதைத் தொகுப்பு) மற்றும் ‘தி பிளாக் ரிவர்’ (சுற்றுச்சூழல் நாவல்).



