
அறிந்திராத முகம்
நீட்டிய விரல்களுடன்
குற்றம் சாட்டியபடியே
வாழ்க்கை முழுவதும்
நடந்தான் அவன்
ஒளியை மறைத்தது
தூசி என்றான்
கதவுகள்
திறக்காது போனபோது
சாவியைச் சபித்தான்
பாதைகள் கடினமானபோது
பூமியைப் பழித்தான்
தோட்டம் வாடியபோது
மழையைத் தூற்றினான்
உள்ளத்தின் சுடர்
மங்கியபோது
புயலைச் சாடினான்
பிரச்சினைகளை
விதைப்பது பிறரென்றும்
பாதிக்கப்படுவது
தானென்றும்
உள்ளுள் மறுகினான்
ஒவ்வொரு வீழ்ச்சிக்கும்
மற்றவரைச் சுட்டினான்
ஒவ்வொரு காயத்திற்கும்
சுற்றியிருப்போரே
காரணமென்றான்
உலகமே தவறானது
பொய்யானதென்றான்
காலம் செல்லச் செல்ல
அவனது சொற்கள்
தேய்கின்றன
சாக்குகளும் புகார்களும்
அவனுள் அடுக்கடுக்காய்
படிகின்றன
ஒரு மாலை வேளையில்
மங்கும் வெளிச்சத்தில்
மெல்ல இரவு
மௌனத்தை விரிக்கையில்
கடன் வாங்கிய
பதில்கள் யாவும்
கரைந்து போய்
கனமான கேள்வியொன்று
மனதை அழுத்தியபோது
திரும்பிப் பார்க்கிறான்
எதிரியும் இல்லை
கூட்டமும் இல்லை
தலைக்குள்
இடியின் குரலும் இல்லை
இருந்தது
ஒரு கண்ணாடி மட்டும்
விரிசல் விட்டிருந்தாலும்
உண்மையை மட்டுமே
பிரதிபலித்து—
துடைக்கக் கை நீட்டுகிறான்
தன்னையே தொடுகிறான்
தூசுக்கு அடியில்
ஆண்டுகளுக்கு அடியில்
பழகிப் போன
அச்சங்களுக்கடியில்
பொறுமையாக
தனது பார்வையைத்
தக்க வைத்திருந்தது
அம்முகுரம்
அதனுள்
அந்நிய முகம்
எதுவும் தோன்றவில்லை—
பன்னெடுங்காலமாக
அவன் அறிந்திருந்த, ஆயின்
ஒருபோதும் அறிந்திராத
ஒரு முகம் மட்டுமே இருந்தது
திறத்தல்
சாவிகள்
சாத்தியமற்ற கனவுகளைக் கொண்ட
சிறிய உலோகத் துண்டுகள்
எந்தக் கதவையும்
தமதாக்கிக்கொள்வதில்லை
எந்தப் பூட்டுக்குள்ளும்
வேரூன்றுவதில்லை
இருப்பினும் தமக்கு அப்பாலுள்ள
ஒன்றின் வாக்குறுதியை
தமதெனச் சுமந்து திரிகின்றன
விடுவிக்கின்றன
அடைத்து வைக்கின்றன
நடுங்கும் கரங்களாலும்
சில உறுதியான விரல்களாலும்
திருப்பப்படுகின்றன
வங்கி அட்டைகள், ரசீதுகளுக்கு நடுவே
பயணிக்கின்றன
மறக்கப்பட்ட பொருட்களுக்கு இடையே
மௌனமாக உறங்குகின்றன
மிகவும் தேவைப்படும் தருணத்தில்
தொலைந்து போகின்றன
எங்கும் தேடப்பட்டு இறுதியில்
தேடிக்கொண்டிருந்த கையிலேயே
கண்டறியப்படுகின்றன
வழிவழி வந்தவற்றின்
கூர்மையான விளிம்புகள்
தலைமுறைகளின் கரங்களால்
மென்மையாகின்றன
புதிதாக வருபவை
திறக்க வேண்டிய கதவை
அறியும் முன்னரே
பரவசத்தில் மின்னுகின்றன
காலத்தின் உரசலில்
பொலிவை இழந்து
கீறல்களைத் தாங்கிக்கொண்டு
தாம் நுழைந்த இடங்களின்
நினைவுகளைச் சுமக்கின்றன
மழுங்கியவை
எங்கும் பொருந்தாது போகின்றன
கூர்மை கொண்டவையும்
ஒருபோதும் நிகழ வாய்ப்பற்ற
ஒரு திருப்பத்திற்காகக்
காத்துக் கிடக்கின்றன
பிறகு சில உள்ளன
எந்தப் பூட்டுகளுக்காகவும் அன்றி
வேறெதற்கோ படைக்கப்பட்டவையாக
நாம் புரிந்து கொள்ளும் வரை
எதையும் திறக்காமல்—
நம்முள் இருக்கும்
ஏதோவொன்றைத் திறக்க
உருவாக்கப்பட்டவையாக



