
நரிவிரட்டு
உறக்கத்தில் நகைக்கும்
பாப்பாவைப் பார்த்து
‘கனவில் நரி விரட்டுகிறதா?
ஆதலால் குட்டியம்மா
சிரிக்காளா?’ என்று
உசாவுகிறாள் அப்பத்தா
ஓர் ஊரில் ஒரு நரி
அதோடு சரியல்ல இது
இது நரியைப் பரியாக்கும்
நாரியின் லீலை
பரிமேல் அழகர் வந்தால்
வையையாகும் வேலை
வேலை என்றால் கடல்
ஆழி, அளக்கர், பௌவம், என்று
கடலுக்குப் பெயர்கள் சூட்டி
தயரதனின் புகழை
ஒரே கவிதையில்
இசைக்கிறான் கம்பன்.
முகில்நிலா
கிழக்கை விட
மேற்கில் அழகாக
இருந்தது அந்தப்
புலரி வானம்
மேகத்திற்கு
எழிலி ஏற்ற பெயர்தான்
பகலில் மேகமாகவாவது
இருந்துவிட்டுப் போகிறேன் என்று
கெஞ்சுகிறது நிலவு
நிசிக்கு மட்டுமல்ல சசி
நீ என் இச்சைக்கு இனிய மது
சந்திரமதி
தேன்நிலா காணாமல்
பால்நிலா ஜனிப்பதில்லை
பழகப் பழக
பால்நிலா புளிப்பதில்லை.
நன்முல்லை
ஊடல்
புலப்பல்
பிணக்கு
துனி எல்லாம்
சம்சாரியின்
மருத வயல்தான்
முகவாய் தொட்டால்
அவள் நகைவாய்
முல்லை.
செவி நுகர் கனி
பனையோலையில் செய்தது
மரத்தால் செய்தது
நெகிழியில் செய்தது
என எத்தனையோ
கிலுக்குகள் இருந்தாலும்
அவள் மடியில்
அமர வைத்தால்
கணுக்கால் கொலுசைத் தேடி
கிலுக்காக்கி
விளையாடுகிறது குழந்தை
முன்பு பிடிக்காமல் இருந்த
முத்துக்கள் நிறைய வைத்த
கொலுசு
இப்போது பிடிக்கிறது அவளுக்கு
குழந்தைக்குச்
செவி நுகர் கனியாவதால்.
மாதுளம் பூ
முத்தம்மா பாட்டி
இன்றும் மகா சிவராத்திரியில்
கொதிக்கும் நெய்யில்
கையால் அப்பம் சுட்டு
அடியார்களுக்கு வழங்குகிறாள்
பூசாரி சீறும் காளியை
சிருங்காரியாகச் சோடிக்கிறார்
அபிராமி அந்தாதியில்
ஆத்தாளை எங்கள்
அபிராம வள்ளியை
என்ற பாடலைப் பாடி
பூசை வைக்கிறார்
வேறெங்கேயும்விடக்
குலதெய்வக் கோவிலில்
உரிமையோடு
உபாசனை செய்யலாம்
அம்பிகையை
அந்தாதி எனும்போது
அந்தமும் ஆதியும்
அவள் என்பது பொழிப்பு.



