இணைய இதழ் 128கவிதைகள்

விஜி ராஜ்குமார் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

கடலந்தி
எத்தனையாவது அந்தி
இதென்று கேட்கிறது
நிலாக்குருவி

பெருநெருப்பின்
குழந்தைகளைத் தாலாட்டுகிறது
கடல் தூளி

அலைத்துமிகளைச்
சேகரித்துக்கொண்டிருக்கும் பாறைகள்
இருண்டிருக்கின்றன

கடலின்
தங்கத்தகடுகளைத்
துழாவுகிறான்
படகோட்டி

தூரத்து வெண்மைகளைக்
கருப்பில் கரையவிடுகின்றன
மேகங்கள்

உச்சி வானப் பறவைக்கூட்டங்களை
எண்ணிவிடத் துணிகிறாள்
ஒரு பால்கனி சிறுமி.

இதோ இன்று
இத்தனையாவது அந்தியில்
நிகழுமோ
அந்தச் சூரியக் குளியல்


வசந்தை
அவள்
மேடையேறப் போனாள்
அல்தா பூசிய
கால் விரல்களைச் சேர்த்து
பூமியில் வைத்து அழுத்தினாள்.

கை நகங்களைப் பிய்ப்பதற்கு
வாய் வரை கொண்டு சென்று
நகப்பூச்சுக்காகத் தாழ்த்துகிறாள்

ஊசி போடப் போவதை அறிந்த
குழந்தை போல
உடல் முழுதும் நடுக்கம்

பின்னாலிருந்து பார்த்த
அவள் தாய்
அருகில் வந்து
முகத்தை நிமிர்த்தி
திருஷ்டியிட்டு
கண்ணுக்குள் பார்த்து
“என்னடி
பதற்றம்?
நீ காற்று..
இது வசந்தம்..
சென்று
ஆடிவிட்டு வா”
என்றாள்.


நீ
எவ்வளவு மகத்தான
அன்புடையவன் நீ

என்னிலிருந்து பெருகிவரும்
என்னை
இப்படி..
இப்படி உள்ளங்கையின்
ஸ்படிகமாய்
எடுத்துத் தந்திருக்கிறாய்

எத்தனை சிரிக்கிறேன்
மற்றவரின் மகிழ்விற்கு
எத்தனை சிலாகிக்கிறேன்
அடுத்தவரின்
செயலிற்கு
எத்தனை இலேசாகிறேன்
அனைவரின்
பிரிவிற்கும்

தூர நிலங்களிலிருந்து
சேகரிக்கப்பட்ட
அரிசிலைப் போல
கூழாங்கல் போல
இறகு போல
மேலும் மேலும்
உள்ளிருந்து ஒளிரும்
சொல் போல
நீ
அத்தனைக்கத்தனை
சிறப்பானவன்.

இல்லை..
இவையனைத்தும்
நீ.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button