![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/11/SRK_7909-780x405.jpg)
1) இடது பாதத்தில் கரும்புள்ளி தென்பட்டது
வருடினேன் திடமாக இருந்தது
கடப்பாரைகளை எடுத்து வரச்சொல்லி
நண்பர்களை அழைத்தேன்.
மின்விளக்குகள் கட்டி
இரவோடு இரவாக
நீள் குச்சியொன்றைத் தோண்டியெடுத்தார்கள்.
ரத்தச் சகதியைத் துடைத்தால்
அது பென்சில்.
எல்லோரும் சிரித்தார்கள்.
ரப்பர் வைத்த பென்சில்.
சிதைந்த பாதத்தை அழித்துவிட்டு
புது பாதத்தைத் தீட்டிக் கொண்டேன்.
2) மஞ்சளேறிய
டொப்ளிக்கா பழங்களைப் போல
ஊரின் உடல்கள்
முத்திய கொப்பளமாகின.
எந்த மருந்துகளும்
சொல் பேச்சு கேட்கவில்லை.
இறுதியாக மருத்துவர்களே
இப்படி எழுதிக் கொடுத்துவிட்டனர்.
‘மண்ணடுப்பின் வெதுவெதுப்பில் உடல்களை ஒத்தடமாக்கிட வேண்டுமாம்.’
எந்நெருப்புக்கும்
விரிசல் விடாத அடுப்பிற்கு
நோயில்லாத
மண்ணும் நீரும் கல்லும் வேண்டுமே.
3) எனது இஸ்திரிப் பெட்டியின் கங்குகளுக்குள்
பப்பாளி மரத்தை வளர்க்கிறேன்.
உடைகளின் சுருக்க உறுப்புகளில்
பால் தெளிக்கும் மரத்தின் பயணத்தில்
மனிதர்கள்
பின்னோக்கி நகர்கிறார்கள்.