நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா? வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின்படி, மனிதனுக்குக் கடவுள் அறிமுகமாகிய அடுத்த கணத்திலேயே சாத்தானும் அறிமுகமாகிறான். பைபிளின் முதல் அதிகாரத்தின் முதல் மூன்று அத்தியாயத்திலேயே இவை நடந்துவிடுகின்றன. மனிதனைப் பொறுத்தவரை, கடவுள் என்னும் நேராற்றல் அறிமுகமாகிய கணத்திலேயே எதிராற்றலும் அறிமுகமாகிவிடுகின்றது. இப்படித்தான் பேரண்டத்தின் ஆரம்ப நிகழ்வும் நடந்ததாக அறிவியல் சொல்கின்றது. எப்படி? சொல்கிறேன். இதற்கு, 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகக் கருதப்படும் சம்பவத்தை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். இன்றிருக்கும் அறிவியலின்படி, உண்மையாகவே நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் அது. அந்தச் சம்பவத்தினுள் நுழையும்போது, சற்றுக் கவனமான உள்வாங்கல் தேவைப்படும். அதனால், மனைவிக்கு வெங்காயம் நறுக்கிக்கொடுக்க வேண்டிய கணவர்கள், வெட்டிக் கொடுத்துவிட்டு வாருங்கள். அடிக்கடி காப்பி கேட்கும் கணவர்களின் வாய் வெந்துபோகுமளவு சூட்டுடன் காப்பியைக் கொடுத்துவிட்டு மனைவிகள் வரலாம். இனி நிதானமாகப் படிக்கத் தொடங்குங்கள்.
முடிவில்லா எடையும், முடிவிலி அழுத்தமும் கொண்ட நான்கு அடிப்படை விசைகள் ஒன்றுசேர்ந்து, நம்பவே முடியாத சிறுபுள்ளியாய் ஒடுங்கியிருந்தன. காலமோ, நேரமோ அப்போது அங்கில்லை. இடம்கூட அங்கில்லை. அதுவொரு பூச்சியப் பரிமாண நிலை. பூச்சியக் கணமும்கூட. அந்தப் பூச்சியக் கணத்திலிருந்து நமக்கான நேரமும், காலமும் ஆரம்பிக்கிறது. இனி வரப்போகும் ஒவ்வொரு நுண்ணிய கணத்திலும், நம் பேரண்டத்தின் வெளியும் இணைந்து விரியப்போகிறது. காலமும், வெளியும் சேர்ந்தே விரிவதால், அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்காமல், ‘காலவெளி’ (Space time) என்னும் ஒரே பொருளாகக் கருதினார் ஐன்ஸ்டைன். அதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். இப்போது, நமக்குத் தேவை எந்த விரிவும் நடக்காத பூச்சியக்கணம் மட்டுமே. அந்தப் பூச்சியக் கணத்தை இன்றுள்ள காலக் கணக்கின்படி 10^-36 நொடி என்று எடுத்துக் கொள்வோம். அதாவது, 1 உடன் 35 பூச்சியங்களை இணைத்து வரும் இலக்கத்தின் ஒரு பங்கு நொடியின் அளவுகாலம். அதுவே, நம் பூச்சியக் கணம் எனக் கொள்வோம். அதற்குமுன் எந்தக் காலமும் இல்லை. அந்தக் கணத்தில், நான்கு விசைகளின் ஆற்றல் அனைத்தும் பேரொளியாத் திரண்டு காணப்பட்டது. அடுத்து வந்த 1/10000 நொடியில், அதாவது, 10^-32 வது நொடியில், அந்த ஆற்றலுடைய பேரொளி, ஒருவகைக் குழம்பாக மாறத்தொடங்கியது. அந்தக் குழம்பின் உருவாக்கத்திற்கு ஒருவகை நுண்துகள்களே காரணமாக இருந்தன. ‘குவார்க்’ (Quark) என்னும் நுண்துகள்களே அவை. குவார்க்குகளினால் உருவான அந்தக் குழம்பையே ‘ஆதிக் கூழ்’ (Primordial soup) என்கிறார்கள். ‘குவார்க் கூழ்’ (Quark soup) என்றும் சொல்வார்கள். உருவான குவார்க் கூழ் சாதாரணமாக உருவாகவில்லை. கடவுளும், சாத்தானும்போல, ஒன்றையொன்று எதிர்த்தன்மை கொண்ட இருவகைக் குவார்க்குகளாக உருவாகின. நேரேற்றம் கொண்ட குவார்க்குகளும் (up quark), எதிரேற்றம் கொண்ட குவார்க்குகளுமாக (anti up quark) உருவாகின. அதாவது, குவார்க் துகள்களும், எதிர்க் குவார்க் துகள்களும் தோன்றின. ஒருமைப் புள்ளியாக இருந்தது இப்போது கிட்டத்தட்ட 2 மீட்டர் அளவுள்ள நுண்ணண்டக் கோளமாக மாறியது. ஒரு பேரண்டத்தையே நிரப்பக்கூடியளவு துகள்கள் அங்கே, அப்போதே உருவாகியிருந்தது. அப்போது, துகள்களின் நெருக்கத்தால் ஏற்பட்ட மாபெரும் அழுத்தத்தால், பிரமாண்டமான வெடிப்பாக அண்டம் விரிவடைந்தது. 10^-6 வது நொடியில் பேரண்டமாய் அது விரிந்து காணப்பட்டது. இந்த நேரக் கணக்கெல்லாம் மனிதனால் உணர்ந்துகொள்ளவே முடியாத மீச்சிறு கணங்களாகும். கண் சிமிட்டும் நேரமென்பதெல்லாம் இங்கு மாபெரும் அளவீடு.
விரிந்த அண்டமெங்கும் சிறு இடைவெளியில்லாமல் குவார்க் நுண்துகள்களால் நிரப்பப்பட்டிருந்தது. ஆண் பெண்ணாக உயிரினங்களைப் படைத்தது போல, இரவு பகலென இயற்கையைப் படைத்த்தது போல, அந்த நுண்துகள்களும் நேர்த்துகள், எதிர்த்துகள்கள் என்னும் இருவகைத் துகள்களாக உருவாகியிருந்தன. ஆனால், இரண்டுமே சொல்லிவைத்ததுபோலச் சம அளவில் உருவாகியிருந்தன. அப்போதுதான் அந்த ஆச்சரியம் நடந்தது. பேரண்டத்தை உருவாக்கிப் பூமியையும் அதில் வாழ்வதற்கு மனிதனையும் உருவாக்க வேண்டுமென்பதுதான் இயற்கையின் முடிவு என்றால், இப்படித் துகள்களும், எதிர்த்துகளுமாக நிரம்பியிருக்கும் நிலை சரியே வராதிலையா? அதனால், அவற்றை அழித்து, மனிதனும், உயிரினங்களும் உருவாவதற்கான சாத்தியங்களைச் செய்ய ஆரம்பித்தது இயற்கை. அதனால், நம்பவே முடியாத அந்த நிகழ்வு அங்கு நடந்தேறியது. அறிவியலில் மிகுந்த பயன் தரக்கூடிய ஆச்சரிய நிகழ்வு அது. அளவில் சமமாக இருந்த துகள்களும், எதிர்த்துகள்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, பெரும் ஆற்றலை வெளியிட்டபடி ஒன்றையொன்று அழித்து, இல்லாமல் போயின. நேர்த்துகள்களும், எதிர்த்துகள்களும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து, தாமாகவே அழியத் தொடங்கின. பேரண்டம் முழுவதும் பரவியிருந்த அனைத்துத் துகள்களும் இல்லாமல் அழிந்து, வெறும் அண்டமாக மாறத்தொடங்கியது. இப்படியே இவையெல்லாம் அழிந்துபோனால், எதுவுமே இல்லாத வெற்றண்டமாகியிருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை. யார் வகுத்த வழியோ, யார் விதித்த விதியோ, 96 விழுக்காடுத் (96%) துகள்கள் அழிந்துபோக, நான்கு விழுக்காடு நேர்த்துகள்கள் அழியாமல் எஞ்சின. அந்த எஞ்சிய நான்கு விழுக்காடுத் துகள்களாலேயே, இன்றுள்ள உடுக்கள் (நட்சத்திரங்கள்), உடுத்திரள்கள் (காலக்ஸிகள்), கருந்துளைகள், கோள்கள் என எல்லாம் தோன்றின. அந்த நான்கு விழுக்காட்டுத் துகள்களிலேயே இவ்வளவு பிரமாண்டமான பொருட்களெல்லாம் தோன்றியிருந்தால், நூறு விழுக்காடும் அழியாமல் இருந்திருந்தால், அவற்றால் எவ்வளவு தோன்றியிருக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு உடுவுக்குக் (நட்சத்திரத்துக்குக்) கைக்கெட்டும் தூரத்திலேயே அடுத்த உடு உட்கார்ந்து கொண்டிருக்கும். அண்டம் முழுவதும் உடுக்கள் மோதிமோதிச் சிதைந்தபடி நெருக்கமாய், அசைய முடியாமல் காணப்படும். அப்படியொரு நிலையில், பூமி எப்படித் தோன்றுவது? மனிதனும், உயிரினங்களும் எப்படி உருவாவது? எல்லாமே அம்போதான். ஆனால், இயற்கைக்கென ஒரு கணக்கு இருக்கிறது. அது கணிதத்தின் அடிப்படையில் இயங்குவது. அதன் கணக்கு எப்போதும் தப்பியதில்லை. அப்போதும் தப்பவில்லை. நான்கு விழுக்காடு அண்டத்தை எங்கும் போகாமல் தன்வசமே பிடித்து வைத்துக் கொண்டது.
அதுசரி, நான்கு விழுக்காடு நேர்த்துகள்களால் இன்றுள்ள அண்டம் உருவாகியிருந்தால், அதற்குச் சமமான இன்னுமொரு நான்கு விழுக்காடு எதிர்த்துகள்களும் இருந்திருக்க வேண்டுமல்லவா? அவை இருந்திருந்தால், இன்றிருக்கும் நான்கு விழுக்காடு அண்டத்தையும் அழித்திருக்குமல்லவா? ஏன் அழிக்கவில்லை? எப்படி, இப்படி நான்கு விழுக்காடுகள் மிஞ்ச முடியும்? சமமான அளவுகளில் இரண்டுவகைத் துகள்களும் தோன்றியிருந்தால், அவை இரண்டுமே சமாகவே அழிந்துதானே போயிருக்க வேண்டும்? இப்போதுள்ள அண்டம் உருவாவதற்கு அடிப்படையான நேர்த்துகள்கள் மட்டும் எஞ்சியிருப்பது ஆச்சரியமல்லவா? அந்த நான்கு விழுக்காடு எதிர்த்துகள்களும் எங்கே போயின? இந்தக் கேள்விதான், பேரண்ட இரகசியத்தின் அடிப்படையாக இருந்துகொண்டு அறிவியலாளர்களை ஆட்டிப்படைக்கிறது. அவை எங்கு போயிருக்கலாம் என்பதற்கான காரணங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய கோட்பாடுகளாகச் சிலவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கோட்பாடுகளின் முடிவுகளில் ஈர்ப்புவிசையின் அடிப்படையும் மாட்டிக் கொண்டிருக்கிறது. இன்றுவரை அறிவியலாளர்கள் ஈர்ப்புவிசை என்றால் என்னவென்று சொல்லவே முடியாமல் தவிக்கிறார்கள். இந்தக் கோட்பாடுகளின் உண்மைகள் ஒருநாள் அவிழ்க்கப்படும். அப்போது ஈர்ப்புவிசை என்றால் என்னவென்றும் தெளிவாகும்.
எதிர்த்துகள்கள் எங்கே என்று கேட்கப்படும் கேள்விக்குப் பதிலாக மூன்று முக்கியக் கோட்பாடுகள் சொல்லப்படுகின்றன. “துகள்களால் உருவாக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் அண்டமெங்கும் பரவிக் காணப்படுகின்றன. பெரும் இடைவெளிகளுடன், தொலை தூரங்களில் அவை அமைந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் நம்மால் அவதானிக்க முடிகிறது. எஞ்சிய நான்கு விழுக்காடு எதிர்த்துகள்களாலும் பொருட்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். அப்படி உருவான எதிர்ப்பொருட்களும் அண்டவெளியெங்கும் பரவியிருக்கலாம்” என்று மூன்று கோட்பாடுகளில் ஒன்று சொல்கிறது. 96 விழுக்காடு வெறுமையாக இருக்கும் அண்டத்தில் அந்த நான்கு விழுக்காடு எதிர்ப்பொருட்களுக்கா இடமில்லாமல் போய்விடும்? எதிர்க் கோள், எதிர் உடு, எதிர் உடுத்திரள், எதிர்க் கருந்துளை, எதிர்க் குவேசார் என்று அவையும் அண்டத்தின் ஏதோவொரு மூலயில் இருக்கலாம் என்கிறது அந்தக் கோட்பாடு. நாம் காணக்கூடிய அண்டமென்பதே பேரண்டத்தின் மிகமிகச் சிறிய பகுதிதானே! எஞ்சியிருக்கும் முடிவில்லாப் பேரண்டத்தில் அவை எங்கேயாவது இருக்கலாம் அல்லவா? ஆனால், அதற்கான சாத்தியம் ரொம்பவும் கம்மியென்று சொல்கிறார்கள். எங்கேயாவது எதிர்க்கோள்கள், எதிர் உடுக்கள் இருக்கின்றனவா என்று தேடித் தேடிச் சலித்துவிட்டோம். இதுவரை அப்படியொன்றும் கண்ணில் படவில்லை. இருந்தால், நிச்சயம் கண்டுபிடித்திருப்போம் என்றே சொல்கிறார்கள். அதனால், இந்தக் கோட்பாட்டிற்கான சாத்தியம் சற்றுக் கம்மிதான்.
ஆனால், ஏனைய இரண்டு கோட்பாடுகளும் கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகவே இருக்கின்றன. அதில் ஒரு கோட்பாட்டின் விளைவு, ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின், கருந்துளைகள் வெளிவிடும் ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ (Hawking radiation) கொள்கையுடன் ஒத்துப்போகிறது. அவை என்ன கோட்பாடுகள் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
தொடரும்…
எனக்கு என்னமோ Parallel Universe தான் நினைவுல வந்து போகுது.