தொடர்கள்

அடையாளம் 9: நடனக் கலைஞர் நர்த்தகி- உமா மோகன்

 “சின்னப்புள்ளத்தனமாத்தான் போனோம்…”

தான் பிறந்த மதுரையின் கலைஞன் வடிவேலுவின் வசனம் போலவே தன் வாழ்வின் திருப்புமுனையைச் சொல்கிறார் அவர்.   

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே

 எனத் திருமூலர் திருமந்திரத்தைப் பின்னாளில் எடுத்தாளுவோம் என்று அறியாத பருவம் அது. ஆனால் அப்படிப் புறப்படுவது அது முதல் முறையல்ல.

அதற்கும் சில ஆண்டுகள் முன்பாகப் பள்ளிப்பருவத்திலேயே ஒரு ஆகஸ்ட் பதினைந்தின் நடுநிசியில் வீட்டிலிருந்து வெளியேறி வாழ்வைத் தொடக்க வேண்டிய நிர்ப்பந்தமும் சந்தித்தவர் அல்லவா! ‘அவர்’ என்று ஒருமையில் சொல்ல முடியாது. இணைபிரியாத தோழமையுடன் தொடரும் அவர்கள் வாழ்வு அது!

மதுரை அனுப்பானடியில் பெருமாள் பிள்ளை-சந்திரா தம்பதியரின்  பத்து குழந்தைகளில் ஐந்தாவதாகப் பிறந்தார் நடராஜ். விவசாயமும் லேவாதேவியுமாக செல்வச் செழிப்பான குடும்பம்தான். ஆனால், பத்து வயதிலேயே பெண்மையின் சாயலை, நாட்டிய ரசனையை விரும்புகிற மகனைப் புரிந்துகொள்கிற சூழல் இல்லை.

தன் வயதொத்த சிறுவர்களோடு கிராமத்து மந்தையில் சேர்ந்து விளையாடும் பிடிப்பு இல்லை நடராஜுக்கு. பள்ளியிலும் சக நண்பர்களோடு பிடித்தமில்லை. 

இவருக்காகவே பிறந்தது போல, இதே உடலமைப்பு திரிபுகளோடும் மனச் சிக்கலோடும் கலை ஆர்வத்தோடும் அதே ஊரில் இன்னொரு சிறுவன் பாஸ்கர். ஜவுளி வியாபாரம் செய்யும் மிக வசதியான வீடு. 

ஒரு காலத்தில் பெருமாள் பிள்ளை குடும்பத்தினர் வீட்டில் நடத்திய திண்ணைப் பள்ளியில் அவரோடு சேர்ந்து படித்த தோழரின் மகன்தான் பாஸ்கர். நான்கைந்து தலைமுறைப் பழக்கம் கொண்ட குடும்பங்கள். 

சோணையா கோயிலின் முன்னுள்ள மந்தைத் திடலில் மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, கோயில் சிற்பங்களில் கண்ட நடன அசைவுகளை ஆடிப் பார்ப்பதே நடராஜுக்கும் பாஸ்கருக்குமான விளையாட்டு.

நாட்டியப் பித்து கொண்ட இவர்களுக்கு முன்னோடி என்று குடும்பத்தில்,  ஊரில் எவருமில்லை.

பள்ளிக்கூடத்தில் இருந்து நடராஜ் மதியம் மூன்று மணி அளவில் காணாமற் போவது சகஜம். மதில் தாண்டி மரங்களைப் பிடித்து இறங்குவது சொந்த வீட்டில்தான். அங்கே வானொலி கேட்டபடி அக்கா மாவு ஆட்டிக் கொண்டிருக்க மூன்றரை மணிக்கு இலங்கை வானொலி ஒலிபரப்பும் நாட்டியப் பாடல்களைக் கேட்டு ஆடிவிட்டு ஒன்றும் அறியாத பிள்ளை போல் கடைசி வகுப்புக்கு வந்த வழி பள்ளி திரும்புவது வாடிக்கை.

நாட்டியம் ஆடுவது, பெண்கள் உரையாடலில் சேர்ந்து கொள்வது  என்று இருந்த வழக்கம் மூத்த சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு விருப்பமில்லை. அவ்வப்போது கண்டிக்கத் தொடங்கினர்.

தங்கள் உடல்பிறழ்வின்  சிக்கல்கள் துரத்திக் கொண்டிருந்தபோது அதையும் தாண்டி கலைக் கனவில் பூக்கத் தொடங்கின அந்த காட்டுச் செடிகள். உள்ளூர் டூரிங் திரையரங்கின் வெள்ளித்திரை மட்டும்தான் வேருக்கு நீர் வார்த்தது. அன்றைய படங்களில் தவறாது இடம்பெற்ற நாட்டிய விருந்துக்காக ஏங்கியது மனம்.

   ஊர் உறங்கிடும் நேரத்தில் திண்ணையிலிருந்து திருட்டுத்தனமாக வெளியேறி திரையரங்கின் இரவுக் காட்சிகளில் நுழைந்து விடுவதும் அந்தப் படங்களில் வரும் நடனங்களைக் கண்கொட்டாமல் ரசித்து மனதில் உருவேற்றிக் கொள்வதும்தான் ஒரே விருப்பம்.

   நடனம் என்ற தெய்வீகக் கலை தன்னை ஆட்கொண்ட நாட்களை நர்த்தகி கவிச்சுவை ததும்பச் சொல்கிறார் தன் ஒவ்வொரு நேர்முகத்திலும்.

  குமாரி கமலாவோ,வைஜயந்திமாலாவோ, பத்மினியோ  திரையில் ஆடிய நடனத்தை வழியெங்கும் ஆடியபடி ரயில் பாதையோடு வீடு திரும்பும் இருவருக்கும் நட்சத்திரங்களே துணை!

          ஊரில் நிலவிய பிசாசுக் கதைகளோ, ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கிடக்கும் பிணமோ, அடர் இருட்டோ இவர்களைப் பயமுறுத்தவில்லை.

வைஜயந்திமாலாவின் படு தீவிரமான ரசிகையாகவும், அவர் நடன அசைவுகளைப் பித்தாகப் பிரதி செய்யவும் விரும்பிய இவர் நடனம் என்ன விழாவானாலும் பள்ளியில் இடம்பெறுவது வழக்கமானது. கொஞ்சம் கொஞ்சமாக சுற்று வட்டாரக் கோயில்கள், திருவிழாக்கள் தோறும் மக்கள் இவர்கள் நடனத்தை விரும்பி இடம்பெறச் செய்தனர்.

      அங்கு கிடைக்கும் சொற்ப சன்மானத்தில் பக்க வாத்தியம், உடை வாடகை போன்ற செலவுகள் போக, விரும்பிய பாடலின் இசைத்தட்டு வாங்கவோ, ஒப்பனைக்காக உதட்டுச் சாயம் போன்றவை வாங்கிக்கொள்ளவோ முடியும். அவ்வளவுதான் கிடைக்கும். ஆனாலும், அந்த ’ஆடும் பொழுது’தான் ’வாழும் பொழுது’ !  வாங்கி வைத்திருக்கும் இசைத்தட்டை ஓடவிட கிராமபோன் கருவி வீட்டிலும் இருக்காது. திருமணமோ,திருவிழாவோ ஊரில் மைக் செட் கட்டுவார்கள் இல்லையா…அவரிடம் ஒரு இடைவெளியில் தன் சொந்த இசைத்தட்டை ஓடவிடச் சொல்லி ரசித்துக் கொள்வதோ ஆடிக் கொள்வதோதான் நடக்கும். அதையும் மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொள்ளும் மனம் இருந்தது.

      குடும்பச் சூழ்நிலைக்கு இது எதுவும் உவப்பாக இருக்கவில்லை.

நெருக்கடிகள் முற்றின. ஒரு மஞ்சள் பையில் இரண்டு உடைகளோடு நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய நடராஜுக்கு பாஸ்கரிடம் சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் எனத் தோன்றியது. திண்ணையில் உறங்கிக் கிடந்த தோழமையை எழுப்பி, தான் வீட்டை விட்டுப் போகப்போவதாக யாரும் கேட்காதவாறு அபிநயத்தில் சொன்னதும் சிறு அமைதி. பின் ”சற்று இரு” என அபிநயித்துவிட்டு உள்ளே சென்று அதேபோல் மஞ்சள் பையும் ஓரிரு உடைகளுமாகக்  கிளம்பி வந்த கணம் இருவருக்குமான வாழ்க்கைப் பயணம் தொடங்கியது.

    கட்டாயத்தின் அடிப்படையில் கிளம்பிவிட்டபோதும் எங்கே செல்வதெனத் தெரியவில்லை. எப்போதோ ஒருமுறை கலை நிகழ்ச்சியின்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஓர் இசை ஆசிரியை நினைவு வந்தது. நள்ளிரவில் வந்து கதவைத் தட்டும் இவர்களைப் பார்த்து அவர் திடுக்கிட்டுப் போனார். நிலையை விளக்கியதும் மொட்டை மாடியில் தங்கிக்கொள்ள அனுப்பினார். 

      ஒரே இரவில் வாழ்க்கை மாறிவிட்டது. 

கலைநிகழ்ச்சிகளையே வாழ்க்கைப்பாட்டுக்கு நம்புவது என முடிவெடுத்தனர். அதிலிருந்து குறிப்பிட்ட பங்கு இடம் கொடுத்த இசை ஆசிரியைக்கு எனப் பேசிக் கொண்டாயிற்று. எந்த நிலையிலும் தவறான வழிகளைப் பின்பற்றக்கூடாது என்ற வைராக்கியம். சக்தியே உறுதிப்பாடுகளின் காவல் தெய்வம் என்பது நடராஜ் மொழி. நேரந்தவறாமை, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வது என்ற நெறிமுறைகளை எல்லாம் அவளே கொண்டு வந்தாள் என்று இரண்டு தொடருக்கு நடுவில் சக்தியைக் குறிப்பிட்டு விடுகிறார். அவர்கள் வீட்டிலிருந்து வந்து அழைத்தபோதும் சக்தி பிரிந்து செல்ல விரும்பவில்லை.

           தன்னை மறந்து ஆடும் நடனத்தின் பொழுதுகள் வலிகளைக் கரைத்துவிடும்.இதற்கிடையில் வைஜயந்திமாலா பித்துக்கும் குறைவில்லை. முறையான பயிற்சியின்றி  உற்று நோக்கிக் கற்றுக்கொண்ட அசைவுகளால் ஊரையே கலக்கிக் கொண்டிருந்த நாட்களில் “யார் உன் குரு “எனக் கேட்கத் தொடங்கினர். தயங்காது உடனே பதில் வரும்..”வைஜயந்தி மாலாவுக்கு யார் குருவோ அவரே என் குருவும் “

      இதைச் சொல்லும்போது தன் அறியாமையையும் விதியையும் ஒப்பிட்டுச் சிரிக்கிறார் நர்த்தகி. ஆம், இந்தப் பதிலைச் சொல்லும்போது வைஜயந்தி மாலாவுக்கு யார் குரு, எங்கிருக்கிறார், உயிரோடு இருக்கிறாரா, அவரைப் பார்க்க முடியுமா, ஏன்- அவர் பெயர் என்ன என்று கூடத் தெரியாது! ஏதோ தோன்றி சொல்ல ஆரம்பித்து பின் அதைச் சொல்லுவதையே வழக்கமாக்கி விட்டாயிற்று. கேட்டவர்களும் அதற்கான வழி சொல்லவுமில்லை.

        ஒருமுறை ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்திருந்த கட்டுரையைப் படித்தபிறகுதான் வைஜயந்தி மாலாவின் குரு கிட்டப்பா பிள்ளை என்பதையும் அவர் தஞ்சாவூரில் இருப்பதையும் அறிந்து கொண்டார். அவ்வளவுதான் புறப்பட்டாயிற்று… 

     அந்தப் பயணத்தைதான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல் சொல்கிறார். 

   தஞ்சை நால்வர் எனச் சொல்லப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு என்ற சகோதரர்கள் கர்னாடக இசை மட்டுமன்றி நாட்டியத்திலும்  முக்கியப் பங்களிப்பு தந்தவர்கள். அவர்களில் சிவானந்தம் என்பவரின் வழித்தோன்றல் கிட்டப்பா. பாடகராகவும்,மிருதங்கம் கற்றவராகவும் இசைப் பயணம் தொடங்கிய கிட்டப்பா பிள்ளை பின்னாளில் புகழ்பெற்ற நடன ஆசிரியராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

        அவருடைய மாணவிகள் உலகெங்கும் குருவின் பெயர் சொல்லிக் கொண்டிருந்தனர். 

          தமக்குத் தெரிந்த வரையில் அழுத்தமான ஒப்பனைகளோடு பொன்னையா விலாசத்தின் திண்ணையில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம் கிட்டப்பா பிள்ளையைச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டனர். அவர்தான் என்று கூடத் தெரியவில்லை. “என்ன விஷயம்?” என்றார்…இன்னின்னது மாதிரி..”நாங்க மதுரையில் நாட்டியத்துல ரொம்ப பேமஸ் உங்களையே குருவா நெனச்சிருக்கேன் ..கற்றுக்கொடுங்க” என்று வேண்டியவர்களுக்கு, ”பிறகு பார்க்கலாம்” என்ற பதில்தான் கிடைத்தது.

       ஒருநாள் இரு நாளல்ல, ஒரு வருடம் இந்த வேண்டுகோள் தொடர்ந்துகொண்டே இருந்தது. பின் ஒருநாள் வேண்டுதலுக்குப் பதில் கிடைத்தது. நாளை முதல் சொல்லித் தருகிறேன் என்று குரு அழைத்தார் .

நர்த்தகி என்று பெயர் சூட்டினார். பதினைந்து வருட குருகுல வாசம்.

அசுர சாதகம். நான்கு ஆண்டுகளில் கற்கக் கூடியதை ஒரே ஆண்டில் கற்ற உழைப்பு… அர்ப்பணிப்பு… 

மத்திய அரசின் உபகாரச் சம்பளம் கிடைத்தது. ஒரு முறை முடிந்தவுடன் வேண்டுகோள் கடிதம் எழுதினர். சிறப்பு நேர்வாக இரண்டாவது முறையும் கிடைத்தது.

பட்டும் பொன்னும் வைரமுமாகக் குருதட்சிணை தந்து கிட்டப்பா பிள்ளையை வணங்கும் உலகை நான் அறிவேன். நானே பலமுறை அவற்றை உள்ளே கொண்டுபோய் வைப்பேன். எதுவும் தர இயலாத எங்களிடம் அவர் காட்டிய அன்பு எங்கள் கலைப்பித்தை மதித்த அன்பு என நெகிழ்கிறார்.

கிட்டப்பா பிள்ளையின் நிழலாகப் பலரும் எண்ணுமளவு இயங்குவது வழக்கம். அவர் சங்கீத நாடக அகாதமிக்காக  உருவாக்கிய ஆவணப்படத்தில் விளக்கங்களைச் செய்து காண்பிக்கும் பிரதான கலைஞராக ஆடிய பெருமை உண்டு.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்   கிட்டப்பா பிள்ளை பேராசிரியராக நியமிக்கப்பட்ட காலகட்டத்தில் அவரது உதவியாளராக இயங்கும் வாய்ப்பும் கிட்டியது.

கிட்டப்பா பிள்ளை தம் பெருமைக்குரிய முன்னோரான தஞ்சை நால்வரின் கீர்த்தனைகளுக்கு நாட்டிய வடிவம் தந்தது, பொன்னையா மணிமாலை,தஞ்சை நாட்டிய இசைக்கருவூலம், ஆதி பரதகலா மஞ்சரி போன்றவற்றைத் தொகுத்துப் பதிப்பித்தது என இறுதிவரை இயங்கிக் கொண்டிருந்தவர்.

அரசு வானொலி, தொலைக்காட்சியில் இசை நடனக் கலைஞர்களுக்கு தகுதி அடிப்படையில்  கிரேட் வழங்கப்பட்டு வாய்ப்புகள் தரப்படும். இதற்கான தகுதித் தேர்வில் முதல் முறை கலந்து கொண்டபோது கிட்டப்பா பிள்ளையே நட்டுவாங்கம் செய்ய சென்னைக்கு வந்தார்.

மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறாய் …குறை சொல்லவே ஒன்றுமில்லை…ஆனால் என்ன பிரிவில் உன்னைச் சேர்ப்பது என்ற கேலிச் சிரிப்போடு நடுவர்கள் நிராகரித்த கொடுமை நடந்தது. 

இதை ஒரு பிரச்சினையாக்கி, இழிநிலைத் தகுதி என்று முன்வைத்து கெஞ்சவோ போராடவோ மனமின்றி ஊர் திரும்பினார்.

பின்னாளில் இவருடைய நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த தொலைக்காட்சி நிலைய அதிகாரி ஒருவர் நீ ஏன் தொலைக்காட்சியில் தரவரிசை பெறக் கூடாது என்று மீண்டும் தூண்டி வற்புறுத்தினார்.

இதற்குள் நிறைய மாற்றங்கள் நடந்திருந்தன. இவர் வாழ்விலும் ,சமூகத்தின் பார்வையிலும். B ,B -HIGH, A, A-TOP  என்று பிரசார்பாரதி தேர்வில் பல படிநிலைகள் உண்டு. A-TOP கிரேடை நேரடியாக இவருக்கு அளித்தனர் நடுவர்கள். 2007 ஆம் ஆண்டு இது நடந்தது. 

 *******************************************

குரு 1999ல் ல் காலமானார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் என்ன செய்வதென்று புரியாத நிலை. அவர் இருக்கும் வரை வாய்ப்பு,மேடை,நிகழ்ச்சி என்றெல்லாம் நினைத்ததில்லை. கற்றுக்கொள்வதே வாழ்வாக இருந்தது. இப்போது….

சென்னையில் இருந்தால்தான் வளரும் வாய்ப்பு கிடைக்கும் என்று நண்பர்கள் வலியுறுத்த அரை மனதோடு சென்னை வந்து வாய்ப்புகளை நாட ஆரம்பித்தனர். தஞ்சாவூர் பாணியை குரு சொல்லித் தந்த அதே பழமையை இன்றும் நர்த்தகி மாறாது கடைப்பிடிக்கிறார்.

கிட்டத்தட்ட இருபதாண்டு காலப் பயணம் இது. 

இலக்கியத்தில் நர்த்தகி கொண்ட தீவிர ஆர்வம் அவரது நாட்டியத்துக்கு புதிய பரிமாணமானது. பழந்தமிழ்க் காப்பியங்களை ஊன்றிக் கற்று மாதவி ஆடிய ஆட்ட வகைகளில் ஒன்றாக பேடி ஆட்டம் எனக் குறிப்பிடப்படுவதையும், மாணிக்கவாசகர் பக்தி பாவத்தில் நாச்சியார் எனச் சுட்டப்படுவதையும் எடுத்துரைத்தார். தமிழிசைப் பாடல்களுக்கு நடனம் அமைத்து அரங்கேற்றுவது வாடிக்கையானது. கம்பன் விழா மேடைகளில் இவரது நடனத்துக்கென்றே சிறப்பிடம் தரப்பட்டது. கம்பராமாயணம் முழுமையையும் தாமே விளக்கி நாட்டியம் அமைத்தளிப்பார். ஆனால் இவரது பாணியில் நாட்டிய நாடகம் இடம் பெறுவதில்லை.

  குருவின் வழி என்கிறார். கிட்டப்பா பிள்ளை தந்தது ’சரபேந்திர பூபாலக் குறவஞ்சி’ என்ற ஒரே நாட்டிய நாடகம்தான்.கண்ணன் பிறந்தான்-தொகுப்பு நாட்டியமாக அமையும். குழுவாக இல்லாது தனிக் கலைஞராக வழங்குவதுதான் இவர் பாணி. தேவாரம்,திருவாசகம்,பிரபந்தம்,திருக்குறள் என்று  பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்ல நவீன கவிதைகளுக்கும் இடம் கொடுக்கும் மேடையாக அமைப்பார். எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரை அல்லது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் கற்பனைக்கு அபிநயங்களைச் சேர்த்துக்கொண்டு இவர் சலங்கை ஒலிக்கும். மக்களை இன்னும் ஈடுபாடு கொண்டு ரசிக்க வைக்கலாம் என இதன் காரணம் சொல்கிறார்.

கண்ணனையும் கந்தனையும் பாடி உருகும் நாயகி “வெறுங்கை என்பது மூடத்தனம் -உன் விரல்கள் பத்தும் மூலதனம்’’ என்று தாராபாரதியின் நவகவிதையையும் எடுத்து வந்தால் ரசிக ஆரவாரம் விண்ணைப் பிளக்காதா !

ஆனால்,இதன் பின்னணியில் அசாத்திய உழைப்பு தேவை. அதுதான் மதுரையிலிருந்து செலுத்திக்கொண்டு வந்தது. மத்திய அரசின் கலாச்சாரத்துறை வழங்கும் இளம் கலைஞருக்கான  உதவித்தொகை பெற சென்னைக்கு வந்து ஆடிய நாளை மீண்டும் நினைவு கூர்கிறார்….

முதன்முறையாக கலாக்ஷேத்ராவில் தேர்வு நடைபெறுகிறது. சாந்தா தனஞ்சயன், பக்கிரிசாமிப் பிள்ளை, வழுவூர் சாம்ராஜ், கலாக்ஷேத்ரா ஜெயலக்ஷ்மி  எனப் புகழ்பெற்ற நடன மேதைகள் தேர்வு நடத்தினர். எந்த அச்சமும் இன்றி ஆடிக்காட்டி, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி திறமையால் தேர்வான நாள் அது.

உதவித்தொகையோடு குருவின் பயிற்சி தொடர்ந்தது.

நல்ல நட்சத்திர மதிப்பெண்களோடு முதன்முறை தேர்ச்சியும் பெற்றாயிற்று. இனி உதவித் தொகைக்கு என்ன செய்யலாம் எனத் தெரியவில்லை. 

மீண்டும் விண்ணப்பித்துப்பாரேன் என்று யோசனை சொன்னார் கிட்டப்பா பிள்ளை. தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் முதன்முறை உபகாரச் சம்பளத்தில் தான் சிறப்பாகப் பயில முடிந்ததையும் மீண்டும் உதவித் தொகை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் அரசுக்கு எழுதினார். இவர் வேண்டுகோள் ஏற்கப்பட்டது. சிறப்பு நேர்வாக இவருக்கு தனி நடுவர் ஒருவரை நியமித்து தேர்வு நடத்தினர்.

சித்ரா விஸ்வேஸ்வரன் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று மீண்டும் அரசின் உதவித் தொகை பெற்றார்.. 

ICCR -INDIAN COUNCIL FOR CULTURAL RELATIONS  OUTSTANDING ARTISTE ஆகத் தேர்வு செய்யப்பட்டார். 1950 ல் உருவான இந்த அமைப்பில் இந்த அந்தஸ்து பெற்றவர்கள் இருபத்தியிரண்டு பேர் மட்டுமே. அதிலும் கிட்டத்தட்ட பதினைந்து பேர் இப்போது களத்தில் இல்லை. இவருக்குப் பிறகு இன்னும் யாரும் இந்த ஐந்து வருடங்களில் அந்த நிலையில் தேர்வாகவில்லை என்பதே கூட எத்துணை கடுமையான உழைப்பும் முயற்சியும் தேவைப்படும் என்பதை விளக்கும்.

உழைப்பு என்பதற்கு இவர் சொல்லும் விளக்கம் வித்தியாசமானது. தன்னை மட்டும் மையப்படுத்தியதல்ல அது. எத்தனை கற்கிறோம், எத்தனை பயிற்சி செய்கிறோம், நடனத்துக்கு ஏற்றவாறு உடல் மனம் இரண்டையும் எப்படி வனப்பாக வைத்துக்கொள்வது எனத் தன்னளவிலான உழைப்பு மட்டுமல்லாது ஆடும் சபையின் ரசனை போற்றவும் உழைக்க வேண்டும்.

திபெத்,நேபாளம்,பங்களாதேஷ் எனக் கீழைத்தேயமானாலும், பிரான்ஸ்,கனடா,அமெரிக்கா என மேலை நாடானாலும், உள்நாட்டுக்குள், பிற மாநிலங்களானாலும் அந்தந்த மொழி வல்லுநர் துணை கொண்டு தாம் ஆடும் நடனம் குறித்து ரசிகர்களுக்கு எடுத்துச் சொல்ல கட்டாயம் ஏற்பாடு செய்துவிடுவேன் என்கிறார்.

அவரவர் மொழியின் பிரதேசத்தின் சிறப்பு வடிவங்களும் நிச்சயம் இருக்கும் என்பதால்தான் நர்த்தகியின் நிகழ்ச்சிகள் அதே இடத்தில் தொடர்ந்து ஆண்டுதோறும் நடப்பது வாடிக்கை.

பதினாறாவது ஆண்டாக லண்டன்,கனடா என்று செல்ல வேண்டிய நான்கு மாதக்  கலைப் பயணம் இப்போது கொரோனாவால் தடைப்பட்டது.

உடை அணிமணிகள் ஒப்பனை ஒவ்வொன்றிலும் தீவிர கவனம் செலுத்துவது வழக்கம். பாரம்பரிய நிறங்களையே பயன்படுத்துவார். முப்பாகம் போன்ற சிறப்பு நெசவுக்காக குடியரசுத் தலைவர் விருது பெற்ற பரம்பரைக் கலைஞரிடமே சுத்த காஞ்சிபுரம் பட்டு வாங்கிப் பயன்படுத்துவதே வழக்கம்.

அவர்களிடமே இல்லாத பழைய டிசைன்களையும் இன்னும் பத்திரமாக வைத்திருந்து ஆச்சர்யப்படுத்துவார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காய்கறிச் சாயம் பயன்படுத்தும் கைத்தறிச் சேலைகள் விரும்பி உடுத்துவார். துணிகளின் தரம் கண்டுபிடிப்பதும் முடிவு செய்வதும் ஜவுளிக்காரர் வகையில் வந்த சக்தியின் பொறுப்பு. எதிலும்,எப்போதும் ஒற்றுமை பேணும் இவர்களுக்குள் ஒரு வினோத வழக்கம்- இருவரும் ஒரே மாதிரி உடுத்துவதில்லை. அன்பளிப்பாக வந்தால் கூட அப்படி ஏற்க மாட்டோம்-மறுத்துவிடுவேன் என்கிறார்.

”தனித்துவம் பேணும் வகையிலான அலங்காரம் முக்கியம். நாட்டியத்துக்கு டெம்பிள் ஜூவல்லரி, ஆண்டிக் வகைதான் பயன்படுத்துவேன். எதிலும் முதல் தரம் முக்கியம்.வேறு பிடிக்காது.

ஒப்பனையைப் பொறுத்தவரை இதுவரை இன்னொருவர் என் முகம் தொட்டதில்லை.சொந்த மேக் அப்தான். அதிலும் சொந்த நறுமணத் தயாரிப்புகள்தான் குளியல்பொடி,சீயக்காய்ப் பொடி போன்றவையெல்லாம்…”

சுஷ்மிதா ,கரீனா கபூர் போன்ற நட்சத்திரங்களோடு மும்பையில் கலந்துகொண்ட FASHION MEET  உட்பட இதே ஒப்பனைதான். RMKV நிறுவனத் தயாரிப்பான ஆயிரத்தெட்டு கரணங்கள் நெய்த எழுபத்தையாயிரம் மதிப்பிலான பட்டுச் சேலையுடன் கலந்துகொண்டு மாடலிங் செய்த முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றார் நர்த்தகி.

’முதன்முதல்’ என்ற வரிசையில் நிறைய இருக்கிறது நர்த்தகியின் சாதனை.

’திருநங்கை’ என்ற சொல்லை முதன்முதலில் ஆய்ந்தறிந்து பயன்படுத்தியவர் நர்த்தகிதான். இதன் பின்னால் எத்தனை வருத்தமும் வலியும் வைராக்கியமும் இருந்தது என்பதை இன்று இயல்பாகப் பகிரும் பக்குவம் பிரமிக்க வைக்கிறது.

   ’நர்த்தகி நடராஜின் நடனம்’ என்று பிரம்மாண்டமாக விளம்பரத்தோடு ஏற்பாடு செய்யப்பட்ட  கோவை நிகழ்ச்சி ஒன்றில் தலைமை தாங்க வந்தார் ஊர்ப் பிரமுகர். நிகழ்ச்சி இடைவேளையில் பாராட்டிப் பேச வேண்டியவர் மேடையில் தன்னருகே அமர்ந்திருந்த நர்த்தகியிடம் “நீ பெண் என்றல்லவா நினைத்தேன்.உனக்கு ஏன் இந்த வீண் வேலை? என்னை ஏமாற்றிவிட்டாயே“ என்று சொல்லும்போது சபை நாகரிகம் கருதிப் புன்னகையோடு அமர்ந்திருக்கும் சூழல். அவர் சபையில் பாராட்டிவிட்டுப் போனார் என்பது வேறு விஷயம்.

மாற்றுப் பாலினத்தவரைக் குறிக்க ஏற்ற சொல்லை இலக்கியங்களில் தேடினார். மணிமேகலையில் படித்தது, மாதவி ஆடியது என்று தொடர்ந்த தேடலில் மடலூரும் நாயக நாயகி பாவம் சொல்லும் திருமங்கை ஆழ்வார் வரை தொடர்ந்துகொண்டே போனது. தொல்காப்பியம் முதலே குறிப்புகள் உள்ளதை உணர்ந்து இவர் தேர்ந்த சொல்லே திருநங்கை என்பதாகும். முதலில் தனக்காக சூட்டிக் கொண்ட பெயராகத்தான் இது இருந்தது. 

”நிகழ்ச்சிகளில் ’திருநங்கை நர்த்தகி நடராஜ்’ என்று குறிப்பிட வைக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்தப் பெயர்தான் தன் அடையாளம் என்று சொன்னால், ’அது என்ன பி ஏ., எம் ஏ பட்டமா? விடாமல் போடச் செய்கிறாயே’ என்று கேலி பேசியவர்களும் தங்கள் விருப்பம் போல் மாற்றிப் போட்டவர்களும் தாண்டிதான் நான் உருவானேன்.

மாற்றுப் பாலினத்தவர் என்பதை அறிந்து நிம்மதியாய்ப் பேசிப் பழகி இருந்தால் அதுவே என் ஆன்மாவுக்கான அடையாளத்தை அங்கீகரிப்பது.

கவிஞரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என் தோழி. அவர் தலைவர் கலைஞரிடம் நான் பயன்படுத்தும் திருநங்கை என்ற பதம் பற்றி எடுத்துரைக்க அவர் அதையே அரசாணையாக்கி சிறப்பித்தார். தமிழக அரசு சார்பில் பிரதிநிதியாகக் கலை விருந்தளிக்கும் வாய்ப்பையும் கலைஞர் அளித்தார்.

ஆக, இனத்துக்கே அடையாளம் சூட்டிய பெருமையும் கிடைத்தது. வேறெந்த பகுதியிலும் மாற்றுப் பாலினத்தவர்க்கு இத்தகைய அழகிய பெயர் இருப்பதாகத் தெரியவில்லை” என்கிறார்.

 இத்தருணத்தில் பெண்மையை உணர்ந்த வயது குறித்தும், உடல் மாற்றங்களின் பிரச்சனை குறித்தும் கேட்டால், ”அது பிரச்சனை இல்லை. எல்லாமே பெண்குழந்தை உணர்வு, பெண்களோடு உறவாடுதலே பாதுகாப்பு, சௌகர்யம் என்ற எண்ணம் இருந்தது. மற்றவர் பார்வையும், சீண்டலும்தான் திருநங்கையரை நேர்மையான வழியில் வாழ விடாமல் தொல்லை செய்வது, உடல் மாற்றங்களால் உணர்வுவயப்பட்டுப் பயணிக்கும்போது புற உலகக் கட்டமைப்புகளை வலியத் திணிக்க முற்படுவது என்று எதிர்வினைகளைக் கொண்டு வருகிறது” என்கிறார்.

 

   ”நாங்கள்-நீங்கள் இல்லை (ஆணோ,பெண்ணோ) அதைப் புரிந்து கொள்ளுங்கள். திருநங்கைகள் பெண்ணைவிட ஒரு படி மேல் கூட. பெண்ணாக ஏன் பிறந்தோம் என நினைப்பவர்களிடையே, ஆணாகப் பிறந்து பெண்ணாக வாழ்வதென்ற முடிவை எடுப்பார்களே, அதனால்தான்! பெண்ணாக மாறும் அந்தக் கடுமையான நாளில் மறுநாள் உயிர் வாழ்வோமா என்ற நிச்சயம் கூட இருக்காது. அத்தனை வலி தாண்டிய வாழ்வு இது.

எங்கள் உலகத்தில் ஆண் உறவுகளே இல்லை. அக்கா, அண்ணி, அத்தை என்று பெண் உறவுகள்தான். பெண்மைக்கான அந்த சாம்ராஜ்யத்தில் ஒவ்வொருவருக்கும் அம்மா உண்டு. பெற்ற அம்மாவைப் பிரிந்து வாழ்க்கையைத் தேடும் தருணம் எங்களை ஏற்றுக்கொள்ளும் திருநங்கைதான் ’அம்மா’. எங்களுக்கு மீராம்மா என்ற முஸ்லிம் திருநங்கை அம்மா மதுரையில் வாய்த்தார். துடித்த துயரப்பொழுதுகளில் அணைத்து ஆறுதல் தந்த, நல்வழி நடத்திய அன்னை.

  ஒவ்வொரு திருநங்கைக்கும் அவர் அம்மா தரும் சீதனம் ஒரு அம்மன் படம். வடநாட்டில் சக்தியே திருநங்கையாக அவதரித்து தியாகம் செய்ததாக ஒரு தலம் உண்டு. அந்த அம்மன் படத்துக்கு எல்லா திருநங்கையரும் செவ்வாய்க்கிழமை மாலை மாதா பூஜை வழிபாடு செய்வதுண்டு. நாங்களும் அம்மை வழிபாடு எனக் குறிப்பிட்டு தவறாது செய்வோம்.” என்கிறார் நர்த்தகி.

”மற்ற திருநங்கையரோடு இப்போதும் நட்பும் உறவும் உண்டு. அந்தத் தோழிகளை என் விழாக்களுக்கு அழைப்பேன். அவர்கள் அழைத்தால் செல்வேன். அங்கு இருக்கும்போது நான் பிரபலம் கிடையாது. அவர்கள் பத்து பேரில் ஒருத்தியாக இருந்துவிட்டு வருவேன். வடநாட்டில் திருநங்கையரின் ஆசி முக்கியமாகக் கருதப்படுகிறது. எவ்வித சொந்தமும் இவ்வுலகுக்கு விட்டுச் செல்லாததால் எல்லோரையும் ஆசீர்வதிக்கும் தகுதி எங்களுக்கு உண்டு.” என்கிறார்.

 ”ஆயினும் இதை ஒரு சலுகையாக உணர மாட்டேன்” என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் . நாட்டியம் கற்றுக் கொடுத்து வரும் ஆசிரியர் மட்டுமல்ல, சங்கீத நாடக அகாடெமி , ரவீந்திர பாரதி உள்ளிட்ட கலை ஆய்வு மையங்களில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்குவது, உலகின் பல பல்கலைக் கழகங்களில் வருகைதரு பேராசிரியராக இருப்பது என நர்த்தகியின் பன்முகம் தொடர்கிறது. 

இசை, நடனம் தொடர்பான அரிய நூல்கள் உள்ளிட்ட பெரிய நூலகம் உண்டு இவரிடம். ”கதை, கவிதை என்றில்லை, ஒரு டெண்டர் அறிவிப்பு என் பார்வையில் பட்டாலும் விட மாட்டேன்” எனச் சிரிக்கிறார்.

”தொடர் வாசிப்புதான் என் படைப்புகளை மேம்படுத்திக் கொள்ள, நவீன உலகத்தின் முன் நம் மரபின் வேரைப் புரிய வைக்க உதவுகிறது.”

புதுமைகளைப் புகுத்துவது என்றால் மரபை அவர்கள் புரிந்து கொள்ளுமாறு முன்னிறுத்துவதே என்பதில் தெளிவாக இருக்கிறார்.

ஒரு திருப்புகழ் பாடலுக்கு ஆடினாலும் அவர்கள் வாழ்வையும் உலக மரபையும் பாடல் சொல்லும் தெய்வீகத்தையும் இணைத்துப் புரிய வைக்கும்போது நம் கலையின் அற்புதம் அவர்களைச் சரியாகச் சென்றடைகிறது.

பிரான்சிலோ,நோர்வேயிலோ நம் கலைகளை,சிற்பங்களை நுணுக்கமாக ரசிப்பார்கள். ஜப்பானில் ஒசாகா இனவரைவியல் அருங்காட்சியகத்தில் உலக நாட்டிய தினத்தில் தன நிகழ்ச்சியை நர்த்தகி வழங்கியபோது, தேவாரமும்,திருத்தாண்டகமும் மொழிபெயர்ப்போடு வழங்கிய போது கண்ணீர் மல்க அவர்கள் ரசித்ததைப் பகிர்கிறார்.

ரசிகர்களின் ஈடுபாட்டை முழுமையாகத் தம் பால் திருப்பும்படி ஒவ்வொரு நிகழ்ச்சியும் வேறுபட்டதாக அமைக்க உழைக்க வேண்டும் என்பது குறிக்கோள்.அவரவரும் தம் நேரத்தையும்,பொருளையும் நமக்காகச் செலவழிக்கும்போது அதை வீணாக்கும் உரிமை நமக்கில்லை என்ற “சக்தி”மொழியைப் பொருத்தமாக நினைவு கூர்கிறார் நர்த்தகி.

வெளிநாட்டு நிகழ்ச்சிகள் இன்று நர்த்தகியின் காலண்டரில் நான்கைந்து மாதங்களை எடுத்துக் கொள்பவையாக இருக்கலாம். ஆனால், முதன்முதலில், கடவுச் சீட்டு பெற்றதே பெரும் போராட்டம் !

விண்ணப்பத்தைப் பரிசீலித்த அதிகாரி பால் அடையாளம் குறித்து சரியான சொல்லைப் பயன்படுத்தாமையால் கிடைக்காமல் போகும் நிலை. நர்த்தகி மீண்டும் விளக்கிப் போராடி, ’முதன்முதலில் கடவுச் சீட்டு பெற்ற இந்தியத் திருநங்கை’ ஆனார்.

’நாயகி பாவ ரத்னம்’ என்று மதுரை நடன கோபால நாயகி நாட்டிய மந்திர் 1984 ல் தந்த பட்டம் தொடங்கி பற்பல அமைப்புகளின் பாராட்டுகள்,பட்டங்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. கிருஷ்ண கான சபா நிருத்திய சூடாமணி பட்டம் அளித்தது.

தமிழக அரசின் கலை தொடர்பான சிறந்த நூல்களைத் தேர்வு செய்யும் குழு உறுப்பினர்

சென்னை,தென்னகப் பண்பாட்டு மைய ஆலோசனைக்குழு உறுப்பினர் 

2003- 2005 junior fellowship சங்கீத நாடக அகாடமியில் பெற்றார்.

2007 ல் தமிழக அரசின் கலைமாமணி பட்டம்.

2011ல் சங்கீத நாடக அகாடமியின் குடியரசுத் தலைவர் விருது அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜியால் வழங்கப்பட்டது.

2014-2017 senior fellowship  மத்திய கலாச்சார அமைச்சகத்திடமிருந்து பெற்றார்.

சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை ஆய்வு செய்து தன் நாட்டியத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்காகவும்,பால்திரிபுநிலைச் சவால்களை வெற்றிகரமாகத் தாண்டி முன்மாதிரியாகத் திகழ்வதற்காகவும் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை 2016 ஆம் ஆண்டு வழங்கியது.

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு இவர் வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும்போது சக மாணவர்களுக்கு தனது பால்திரிபு குறித்த புரிதல் இல்லாமையும், தான் விரும்பியபடி சட்டம் பயில முடியாமல் போனதற்கு ஒரு காரணம் என்று நினைவு கூர்கிறார் நர்த்தகி. தன் வாழ்க்கையைப் படிக்கும்போது நிச்சயம் புரிதல் ஏற்படும் என்று நம்புகிறார்.

மேலே நாம் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு நிகழ்வுக்கும்,பட்டத்துக்கும் சாதனைக்கும் முன்னால் முதன்முதலில் இவற்றைப் பெற்ற திருநங்கை என்பதை சேர்த்து வாசிக்க வேண்டும்.

அப்படி ’முதன்முதலில்’ என்று சேர்த்துப் பாராட்ட வேண்டிய இன்னொரு பெருமையும் இவ்வாண்டில் நடைபெற்றிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் ’பத்ம விருது’ பெற்றவர் பட்டியலில் நர்த்தகி நடராஜ்!

ஆம், அவர் இப்போது ’பத்மஸ்ரீ’ நர்த்தகி நடராஜ் !

’வெள்ளியம்பலம் நடனக் கலைக்கூடம்’ என்ற தனது நாட்டியப்பள்ளியை அறக்கட்டளையாக்கி மாணவிகள், அவர்கள் மாணவிகள் என்று உலகெங்கும் நாட்டியக்  கலையை வளர்த்து வருகிறார். நாட்டியம் என்பது உடல் அசைவுகள்,அடவுகள் மட்டுமல்ல. முதலில் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகு இலக்கியச் சுவை அறிய வேண்டும். அதற்கு மொழி அறிய வேண்டும். எனவே அயல்நாட்டில் வசிக்கும் பிறமொழி மாணவிகள் கூடத் தமிழ் பயில்கிறார்கள் என்கிறார்.

சக்தியின் வகுப்புகள் ஆரம்பநிலை பயிற்சி. ”உட்காருவது, வணக்கம் சொல்வது தொடங்கி இன்று பரவலாக விவரிக்கப்படும் ’GOOD TOUCH’ ’BAD TOUCH’ வரை கதை சொல்வதுபோல சொல்லித் தருவாள்” என்கிறார். உள்ளத்தால் உணர முயற்சி செய்வதே முதல் பயிற்சி .

நான்கு மாத காலம் மேல்நாடுகளில் பயணம் இருக்கிறதென்றால் சனி ஞாயிறுகளில் மேடை நிகழ்ச்சிகள் இருக்கும். வார நாட்களில் அந்த மாணவிகளுக்கான பயிற்சித் திட்டங்கள் தயாரிப்பு, ஒரு வருடத்துக்கான பயிற்சி வேலைகள் அளித்து அவர்கள் அதன்படி ஒத்திகை வீடியோக்கள் அனுப்புவது, இவர்கள் அவற்றைப் பார்த்து திருத்துவது என்று கூர்மையான திட்டமிடல்படியே வகுப்புகள் உலகெங்கும் உள்ள மாணவிகளுக்கு நடத்துகிறார்.

அன்றாடம் என்பதும் திட்டமிட்ட ஒழுங்குப்படிதான். அதிகாலை நான்குமணி விழிப்பு,சக்தியின் காபி, பாடாந்தரங்களைக் கேட்டபடியே நடைப்பயிற்சி, ஏழு மணியளவில் யோகா, உடற்பயிற்சி ஒன்பது மணிவரை இது தொடரும்.காலை உணவு வித விதமான கூழ் வகைதான். பத்து மணிக்கு மேல் சந்திப்புகள். மதிய உணவுக்குப் பிறகு இரண்டு முதல் ஐந்து மணி வரை பயிற்சி. ஏழு மணிக்குள் இரவு உணவு. ஒன்பதுக்குள் உறக்கம். நிகழ்ச்சி இருந்தால் சிற்சில மாற்றம் இருக்குமே தவிர இதுதான் நியதி. ஐந்து நட்சத்திர உணவு விடுதி சென்றாலும் ஒரு வாய் தயிர் சோறு கிடைத்தால் நிம்மதி எனச் சிரிக்கிறார் நர்த்தகி . சமையல் பிடிக்கும். பயணங்கள் மிகப் பிடிக்கும். ஆளரவமற்ற கோயில்களைச் சுற்றி வருவது எனக்கான நேரம். நிகழ்ச்சி இல்லையென்றால் மதுரை சென்றுவிடுவதும் மீனாட்சியோடு உறவாடி வருவதுமே ஆசை. 

மதுரையை மறக்க முடியாதிருக்கும்  நர்த்தகியின் குடும்பம் இப்போது இவரை ஏற்றுக் கொண்டதா…?

இளமையில் மிகு வெறுப்பு கொண்டிருந்த அண்ணன் நர்த்தகிக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் இறுதிப் படுக்கையில் இருந்தார். இந்த செய்தியோடு அவரைச் சந்தித்தார் நர்த்தகி. அவரால் ஏதும் சொல்ல இயலவில்லை. பட்டமளிப்புக்கு முன்பே அவர் காலமானார். ”சகோதரிகளும் அவர்களது குழந்தைகளும் இப்போது அன்போடு இருக்கிறார்கள்” என மகிழ்கிறார்.

இளம் வயதின் துயரங்களைக்கூடப் பெரிதும் சொல்ல அவர் விரும்புவதில்லை.நான் அவற்றைத் தாண்டிவிட்டேன்.தொடர்புடையவர்களைக் காயப்படுத்துவதில் இப்போது என்ன பயன்? அன்றைய காலகட்டம்… அப்போதைய புரிதல் அவ்வளவுதான்…”என்கிறார் இந்த தேவதை.

”என் நடனத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்…

அடைந்தவற்றில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்”

இதுதான் பூரித்த முகத்துடன் எந்த மேடையிலும் நர்த்தகி சொல்வது!

எவ்வளவு பெரிய சொல்!

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. அடையாளம் தொடர் மூலம் நர்த்தகி பற்றி முழுமையாய் அறிந்துகொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி உமா. இன்று நாம் வியந்துபார்க்கும் பன்முக ஆளுமையான அவர், இந்த இடத்தை அடைவதற்கு எவ்வளவு அவமானங்களைக் கடந்து வந்திருக்கிறார், எவ்வளவு சவால்களை சந்தித்திருக்கிறார், எவ்வளவு இடர்களை எதிர்கொண்டிருக்கிறார் என்று அறியும்போது இன்னும் வியப்பாக உள்ளது. எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் உறுதியான மனத்திடம்தான் அவருக்கான அங்கீகாரத்தைப் போராடிப் பெற வைத்திருக்கிறது. நர்த்தகிக்கும் சக்திக்குமான நட்பு நெகிழவைக்கிறது. இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button