“அம்மா! நாங்கள் பிறந்து ஒரு மாசம் ஆகப் போகிறதெனச் சொல்றீங்க. ஆனால் இதுவரைக்கும் எங்களை வெளியே எங்கேயும் கூட்டிக்கிட்டே போகவில்லை” என வருந்தியது சின்னஞ்சிறிய சிட்டுக்குருவிக் குஞ்சு.
“ஆமாம்! இவ்வளவு பெரிய காட்டிலே இந்த ஒரு மரத்தைத் தவிர வேறெதுவும் எங்களுக்குத் தெரியாது” எனத் தன் பங்கிற்கு குரல் கொடுத்தது தம்பிக் குருவி.
“சரி. சரி. எங்கேயாவது அழைத்துக்கிட்டுப் போகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை?” என்று சொல்லி அமைதியானது அம்மா குருவி.
“என்னம்மா நிபந்தனை?” என்று அம்மாவையும் தம்பிக் குருவியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே கேட்டது அக்கா குருவி.
“நாம் இருக்கிறது பெரிய பூமிதான். நமக்குத் தேவையானதை நாம் தேடினால் கட்டாயமாக கிடைக்கும். ஆனால், எல்லா செயல்களிலும் ஆபத்தும் இருக்கும். அதனால நீங்கள் எச்சரிக்கையா இருக்கணும். இருப்பீர்களா?” என்று கேட்டது அம்மா குருவி.
“சரிம்மா! நீங்க சொல்கிறபடியே நாங்கள் இருப்போம்” என உறுதி அளித்தன குருவிக் குஞ்சுகள்.
“சரி. வாங்க. முதல்ல இந்தக் காட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம். அப்புறம் அருகே இருக்கிற நகரத்துக்குப் போகலாம்” என்றது அம்மா குருவி.
“ஐயா! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!” என்று சத்தம் போட்டுக் கொண்டே அம்மாவுடன் காட்டைச் சுற்றிப் பார்க்கப் பறந்தன குருவிக் குஞ்சுகள்.
அரச மரத்திலிருந்து கிளம்பி எல்லா மரங்களையும் ஒரு பார்வை பார்த்தபடியே பறந்தன. காட்டிற்கு ஒரு பச்சைப் போர்வையைப் போர்த்தியது போல இருந்த பசுமையை ரசித்தன. கொஞ்ச தூரம் பறந்ததுமே ஒரே இரைச்சலான சத்தம் கேட்டது.
“அம்மா! அங்கே என்னம்மா சத்தம்? இப்பொழுதே குளிர்கிறதே” எனப் பதற்றமாயின குஞ்சுகள்.
“பயப்படாதீங்க. அந்தச் சத்தம் வருகிற இடத்துக்கு அருவி எனப் பெயர். அது மலையில் உற்பத்தியாகிற தண்ணீர் தரையை நோக்கிக் வீழ்ந்து கொண்டே இருப்பதால் அந்தச் சத்தம் உண்டாகிறது. அந்தக் குளுமையாலதான் நமக்குக் குளிர் எடுக்குது” என்று விளக்கம் சொல்லிக் கொண்டே அருவியின் அருகில் வந்தது அம்மா குருவி.
“அட! இதுதான் அருவியா? பார்ப்பதற்கு மிகப் பெரியதாக இருக்கிறதே. இதனுடைய அழகு எனக்குப் பிடித்திருக்கு” என்று சொல்லியபடி அருவியின் அருகில் சென்று சாரலில் நனைந்தது தம்பிக் குருவி.
“அக்கா! அக்கா! நீயும் வாயேன். இந்தச் சாரல் ரொம்ப நல்லாயிருக்கு” என்று அக்கா குருவியை அழைத்தது தம்பிக் குருவி.
“அப்படியா? இதோ நானும் வரேன்” என்று மிகுந்த ஆர்வத்தோடு அருவியை நோக்கிப் பறந்தது அக்கா குருவி.
“குழந்தைகளா! அருவியிலே ரொம்ப உள்ளே போகாதீங்க. மூச்சு முட்டும். எச்சரிக்கையாகப் போய்விட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த அத்தி மரக்கிளையில் அமர்ந்தது.
அக்காவும், தம்பியும் மாறி மாறி அருவிக்குச் சென்று உடலை நனைத்து நனைத்து விளையாடின. அப்போது மேலேயிருந்து ‘தொபீர்’ என அருவியில் குதித்தது ஒரு குரங்கு.
அவ்வளவு பெரிய உருவத்தைப் பார்த்ததும் பயந்த குருவிக் குஞ்சுகள் “அம்மா! அம்மா! என்று பதறியபடி அத்தி மரத்திற்குப் பறந்தன.
“பயப்படாதீங்க. அது குரங்கு. நம்மை ஒன்றும் செய்யாது. உங்களைப் போலவே அதுவும் அருவியில் குளிக்க வந்திருக்கு” என்றது அம்மா குருவி.
“குரங்கா! அதன் உருவத்தைப் பார்த்துப் பயந்துவிட்டோம்” என்று சொல்லும்போதே பயம் தெளிந்தது. மீண்டும் அருவியில் குளிக்கச் சென்றன.
குளித்துவிட்டு வரும் குஞ்சுகளுக்குப் பசிக்குமே என்பதை உணர்ந்த அம்மா குருவி, அருகில் இருந்த முந்திரி மரத்திற்குச் சென்று முந்திரிப் பழங்களைப் பறித்தது.
“அம்மா! அம்மா! பசிக்கிறது” என்று சத்தமிட்டபடி வந்த குஞ்சுகளை முந்திரி மரத்திற்கு வரும்படி அழைத்தது அம்மா குருவி.
முந்திரிப் பழங்களின் வாசனை குருவிக் குஞ்சுகளை ஈர்த்தது. அந்தப் பழத்தின் ருசியை விரும்பிச் சாப்பிட்டன.
“குழந்தைகளே! காடு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”
“ஆமாம்மா! எனக்கு இந்தக் காட்டில் மரங்களும், இந்த அருவியும் ரொம்பப் பிடித்திருக்கு. அருவியில எங்கிருந்து தண்ணீர் வருதுன்னு கண்டு பிடிக்க முடியலே” என்றது அக்கா குருவி.
“ஆமா! ஆமா! எனக்கும் அது எப்படி ஒரே மாதிரி தண்ணீர் கொட்டுதுன்னு ஆச்சரியமாக இருந்தது” என மாறி மாறித் தாங்கள் கண்ட காட்சிகளை விவரித்துக் கொண்டிருந்தன குஞ்சுகள்.
“சரி! நாம் நம் காட்டுக்கு உள்ளேயே இருப்போமா.. இல்ல நகரத்துக்குப் போகலாமா?” என்று கேட்டது அம்மா குருவி.
“அம்மா! இயற்கையாக உருவான காடே இவ்வளவு சிறப்பாக இருக்கிறதென்றால் நீ சொன்ன மாதிரி மனிதர்களால் உருவான நாடு இதைவிட இன்னும் நல்லாதானே இருக்கும்? அதனால நகரத்துக்கும் போகலாமே” என்றது அக்கா குருவி.
“ஆமாம்மா! நகரத்துக்குப் போகலாம்மா” என்று சொன்னது தம்பிக் குருவி.
“ம்.. சரி! எது ரொம்ப நல்லதுன்னு தெரியணும்னா நாம நகரத்துக்கும் போய்விட்டு வந்திடலாம். வாங்க” என்று அழைத்துச் சென்றது அம்மா குருவி. காட்டிலிருந்து நகரம் நோக்கி உற்சாகமாகப் பறந்தன குருவிகள். காட்டின் எல்லைவரை குளுகுளுவென இருந்த குருவிகளுக்கு நகரத்தின் நுழைவாயிலை நெருங்க நெருங்க வெப்பத்தை உணர்த்தியது.
“என்னம்மா இது! இவ்வளவு வெப்பமா இருக்கு?” என்றது அக்கா குருவி.
“நாம் நகரத்துக்கு வந்துட்டோம். இங்கே மரங்கள் குறைவு, கட்டடங்கள் அதிகம். அதனால வெப்பமும் அதிகமாகத்தான் இருக்கும். சரி. அதோ ஒரு மரம் தெரிகிறது. அதிலே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துப் போகலாம்” என்றது அம்மா குருவி.
“சரிம்மா” என்றன குஞ்சுகள்.
“சரி. சரி. பார்த்து இந்தக் கிளையிலேயே உட்காருங்க. அங்கே வேண்டாம்.”
“ஏம்மா இவ்வளவு பயந்துகிட்டே சொல்றே. அந்தக் கிளையிலே உட்கார்ந்தால் என்னாகும்?” என்று கேட்டது தம்பிக் குருவி.
“அதோ ஒரு கயிறு போலக் கருப்பாத் தெரியுதே அதிலேதான் மின்சாரம் பாயும். நாம் தெரியாமல் அதை மிதித்து விட்டால் நமக்கு பெரிய ஆபத்தாகிடும்” என்றது அம்மா குருவி. அம்மாவின் முதல் எச்சரிக்கையிலேயே பயந்து போயின குஞ்சுகள்.
“இதென்னம்மா! இந்த மரத்துலே இப்படி கொத்துக் கொத்தாய் மொட்டு மலர்ந்திருக்கு? அவ்வளவு பழம் வருமா?” என்றது அக்கா குருவி.
“இது மயில்கொன்றை மரம். ஒரு சில பேர் குல்மனார் என்றும் சொல்வாங்க. இதனோட மொட்டுக்கள் பச்சை வண்ணத்துலே இருந்தாலும், பூக்கள் பூத்தவுடன் அடர்ந்த சிவப்பு நிறத்துலே இருக்கும். இதிலே பழம் வராது. இதை அழகுக்காகவும், நிழலுக்காகவும் மனிதர்கள் நட்டு வளர்க்கிறார்கள்” என்றது அம்மா குருவி.
“என்னது மரத்தை நட்டு வளர்ப்பார்களா? நம் காட்டுலே அதுவாகத்தானே வளரும்” என்று ஆச்சரியப் பட்டது தம்பிக் குருவி.
“சரி. சரி. வாங்க நகரத்தைச் சுத்திப் பார்க்கலாம்” என்றபடி ஒரு மொட்டை மாடிக்கு அருகில் பறந்தது.
“அம்மா! அம்மா! அங்கே பாருங்கள் தானியங்கள். வா… அதனைச் சாப்பிடலாம்” என்றது அக்கா குருவி.
“பொறுங்கள். அங்கே ஒரு கூண்டு தெரிகிறதே. அதில் புறாக்களை அடைத்து வளர்க்கிறார்கள். அவைகளுக்காகப் போடப்பட்ட தானியங்கள்தான் அவை. அது நமக்கு வேண்டாம். நாமே நம் உணவைத் தேடிக் கொள்ளலாம்” என்றது அம்மா குருவி.
“என்னது! நம் பறவை இனங்களில் ஒன்றான புறாவை அடைத்து வைத்து வளர்க்கிறார்களா? அது சமாதானப் பறவை என்று சொன்னீர்களே.. அதையா அடைத்து வைத்திருக்கிறார்கள்?” என்று புரியாமல் கேட்டது தம்பிக் குருவி.
இப்படி நகரம் முழுவதும் சுற்றிச் சுற்றிப் பல விசயங்களைத் தெரிந்து கொண்டன குருவிக் குஞ்சுகள்.
நகரத்தில் எதுவுமே அவற்றுக்குப் பிடிக்கவில்லை. அதிலும் எல்லா இடங்களிலும் எச்சரிக்கை உணர்வுடன் பயணிப்பது சுத்தமாகவே பிடிக்கவில்லை. பெரிய பாறாங்கல்லைத் தங்களின் தோள்மீது சுமப்பதுபோல உணர்ந்தன.
“அம்மா! அம்மா! நாம் உடனே நம் காட்டுக்கே போகலாம்மா. இந்தப் பரபரப்பான நகரம் நமக்கு வேண்டாம். இது வேற உலகம். இந்த உலகம் எனக்குப் பிடிக்கலை” என்றது அக்கா குருவி.
“ஆமாம்! அக்கா சொல்றதுதான் எனக்கும் தோணுது. நம்ம காடு போல வரவே வராது. நாம் அங்கதான் சுதந்திரமா, நிம்மதியா, பய உணர்வு இல்லாமல் இருக்கலாம் என்றது” தம்பிக் குருவி.
“ஓ! அப்படியா?! சரி வாங்க அப்ப நம் காட்டுக்கே போகலாம்” என காட்டை நோக்கி முன்னே பறந்தது அம்மா குருவி.
மிகுந்த உற்சாகத்தோடு, அக்கா குருவியும், தம்பிக் குருவியும் அம்மாவை முந்தியபடி காட்டை நோக்கிப் பறந்தன