சிறுகதைகள்

அலங்காரக் குளத்தில் இருபத்தி மூன்று அல்லிகள் – கரன் கார்க்கி

சிறுகதை | வாசகசாலை

 

“காணமல் போகிறார்கள்,
மனம் பிழறுகிறார்கள்,
தற்கொலை செய்து கொள்கிறார்கள்.”

“பாவத்தைத் தின்று தீர்க்க எந்த வெட்டுக்கிளிகளும்
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வரப் போவதில்லை.”

                                 

                           1

 

மீண்டும் ஒரு பலத்த அடி. அய்யாவால் இப்போது தாங்க முடியாதபடி கையை முறுக்கி இழுத்துப் பிடித்து நடு முதுகில் வைத்து முதுகெலும்பு முறியும்படி ஓங்கி விழுந்த அடி…“விதி என்னை பிடிச்சி ஆட்டுது” வழக்கம் போல முணுமுணுத்தார். கண் இருளும் வரை ஓங்கி ஓங்கி நெஞ்சில் அறைந்துக்கொண்டார்.

“விதியை மீறி மனுசனால நடக்க முடியுமா என்ன?”

சாவு வீட்டுக்கு வந்திருந்த ஒரு இளைஞனைப் பார்த்து துயரம் தாளாமல் கேட்கிறார். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. யாரோ முதியவர் அய்யாவின் தோள்களில் ஆதரவாகக் கைவைத்து நாற்காலியை நோக்கி நகர்த்திப்போனார். அந்த நேரம் மேல் மாடியிலிருந்து அப்பெண்ணின் அலறல் குரல் மூன்றாவது முறையாகக் கேட்கிறது. சாவுக்கு வந்தவர்கள் எல்லோர் காதுகளிலும் அந்தக் குரல் தேங்கி முணுமுணுக்கிறது. “எதுக்கு அதை மேலயே கட்டிப்போட்டு வச்சிருக்காங்க…ச்”என்று ஒரு முணு முணுப்பு கேட்கிறது.

வீட்டின் முன்புறத்தில் பக்க அடைப்பற்ற வாகனம் நிறுத்துமிடத்துக்கு மேல் மாடியின் முன் பக்கத்திலிருந்து  உடல் விழுந்திருக்கிறது. உடல் தரையில் விழுந்த உடன் மூர்ச்சையாகியிருக்க வேண்டும், உயிர்ப் போராட்டம் நடந்ததற்கான குறிகள் இல்லை, கைகால்கள் பரப்பிக்கொண்டிருக்கும் வடிவில் தரையில் புல் தீய்ந்து போயிருக்கிறது. சாக்குக் கட்டியால் வரைந்தது போல வடிவாக தீ புல்லைப் பொசுக்கிருந்தது. உடல் விழுந்தபோது உடலிலிருந்து தெறித்த தீ துணுக்குகள் புல் தரையில் பட்ட இடங்களும் தீய்ந்த அடையாளங்களும் புள்ளி புள்ளியாகத் தெரிகிறது.

தற்கொலை செய்து கொண்டவருக்கு உயிர் பிழைக்கவே கூடாது என்கிற தீர்மானம் இருந்திருக்கிறது. உடலை எரிபொருளால் தொப்பலாக நனைத்துக்கொண்டு தீ வைத்துக்கொண்டு தீ நன்கு பரவிய பிறகு மாடியிலிருந்து குதித்திருக்கிறார். முதலில் தலை மோதியிருக்க வேண்டும். மண்டையோடு விரிசலிட்டிருக்கிறது. 80% தீக்காயங்களுடன் ஒரு நாள் முழுக்க நினைவற்ற நிலையிலும் துடித்துக்கொண்டிருந்த இதயம் நின்றுவிட்டது.

“விதி பிடிச்சி ஆட்டுது யார் என்ன பண்ண முடியும்?”

அய்யா மகளின் உடலை எடுக்கும் வரை திரும்பத் திரும்ப இப்படியேதான் முணுமுணுத்துக்கொண்டிருந்தார். எரிந்த உடலைப் புதைத்துவிட்டு வரும்போது வீட்டுக்கு முன்பிருந்த அலங்காரக் குளத்தை நோக்கி ஓடியவர் துக்கமற்ற அல்லிப்பூக்களைப் பிடுங்கி குளத்துக்கு வெளியே வீசினார். நடுவில் நின்ற நீரூற்று அமைப்பில் தலையை ஆபத்தான முறையில் இடித்துக்கொண்டு கதறுகிறார். மண்டையிலிருந்து பெருகிய ரத்த்தத் துளிகள் அலங்காரக் குளத்தில் சொட்ட மீன்கள் சுவைத்துத் துள்ளுகின்றன. சாவுக்கு வந்தவர்கள் அவரை வலுவாகப் பிடித்து இழுத்துப் போனார்கள். துயரத்தை அடக்க முடியாமல் அவர் தொண்டை நரம்புகள் புடைக்க உடலதிர கத்தினார். ”ஆமாம், மகள் இல்லை. அவள் பதறப் பதற துடித்து செத்துப் போனாள். எவ்வளவு பெரிய முட்டாள்த்தனத்தை செய்துவிட்டோம்” என்று இப்போதும் அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

 

                                 2    

வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில் காமக் களியாட்ட சரடுகளை எழுதிக்கொண்டிருந்த லஷ்மிகாந்தன் கொலை செய்யப்பட்டதை அந்த வீடு பார்த்திருக்கிறது. கொலைக்கு காரணமானவர்களென கருதப்பட்ட என்.எஸ் கிருஷ்ணனும், தியாகராய பாகவதரும் கைதாகி, பின் சிறையில் இருந்து விடுதலையாகி மண்ணிலிருந்தும் விடை பெற்றுவிட்டார்கள். ஆனால் அந்த வீடு இன்னும் மாற்றமற்று அப்படியே இருக்கிறது. அதன் சன சந்தடியற்ற வீதியில் காலையும், மாலையும் அரை மணி நேரம் மட்டுமே பள்ளி மாணவிகளின் நடமாட்டத்தைப் பார்க்க முடியும். 108 சென்ட் நிலம். சுற்றிலும் ஐந்தடி உயர ஒன்றரையடி கணத்த மதிலை வேலியாகக் கொண்ட நீள் செவ்வக நிலத்தின் மத்தியில் இரட்டை மாடி வீடு. வேலிக் கதவுக்கும் வீட்டுக்கும் இடையில் பத்துக்கு பத்து அடி வட்ட அலங்கார செயற்கைக் குளம். நடுவில் அழகிய நீரூற்று நான்கு அடுக்கு கொண்டது. முதலடுக்கில் நீர் பொங்கி இரண்டாவதுக்கு, இப்படியே நான்காவதுக்கு கீழே அல்லியால் நிரம்பிய குளம் நீர் பெறவும் வெளியேற்றவுமான பொறியமைவு கொண்டது. வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்கு அந்த நீர் போக நிலத்தடியில் வழியிருந்தது. குளத்தில் அல்லி பூத்திருக்கிறது. அலங்காரக் குளத்தில் மீன்கள், கவுச்சி பிரியர்களின் நாக்கில் எச்சில் ஊற வைக்குமளவு கொழுத்து துள்ளிக்கொண்டிருந்தன. சில வேளைகளில் குளத்து வாழ்க்கை சலித்து கொழுத்த பெரிய மீன்கள் துள்ளி தரையில் விழுந்து அந்த வீட்டு வேலைக்காரிகளின் வீட்டுக் குழம்புச்சட்டிக்குப் போவதுண்டு. வீட்டுக்கு வெகு காலத்துக்கு முன் கோபி அடித்திருந்தார்கள். அந்த வீட்டுக்கு கிழக்கில் சென்ட்ரல் ரயில் நிலையம், தெற்கே எழும்பூர் ரயில் நிலையம். அந்தத் தெருவிலிருந்து கிளம்பி கிழக்காகப் போகும் பாதையில் வலதும் இடதுமாக நூறடிக்கு அதிகமாக திரும்பாமல் நடந்தால் பத்து நிமிடத்தில் மூர் மார்கெட்டுக்குப் போய்விடலாம். இந்தக் குறிப்புகளை வைத்து அந்த வீட்டைக் கண்டுபிடிக்க முடியலையா? ஒன்றும் சிக்கலில்லை. விடயத்தை கவனிப்போம்.

வீட்டின் அடுத்த வேலியில் நூறாண்டு கடந்த ஆங்கிலோ இந்தியப்பள்ளி வளாகம். அங்கிருந்து எப்போதேனும் மாணவிகளின் குரல்கள் கேட்கிறது. அந்தப் பள்ளியில்தான் அய்யாவின் மகள் மரகதம் பள்ளிப் படிப்பை முடித்திருந்தாள். குட்டைப் பாவாடையில் அவளைப் பார்க்க அப்பாவுக்கு பிடிப்பதில்லை. முழுப் பாவாடைக்கு அந்தப் பள்ளியில் இடமில்லை. அய்யா எப்போதும் வெள்ளை வெளேர் கதராடைதான், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அந்தப் பள்ளியில் படிக்க எளிதில் இடம் கிடைக்காது. இப்போது மாநிலக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு பயில்கிறாள். அவள் செமஸ்டர் எழுதிக்கொண்டிருந்த நாளில் அண்ணன் காணாமல் போய்விட்டான். வீட்டுப் பணப் பெட்டியிலிருந்து மூவாயிரத்து சொச்சம் காணாமல் போயிருந்தது.

“விதி பிடிச்சாட்டுது…. அவன் என்ன பண்ணுவான்” என்று அப்பா முணுமுணுத்தார்.

 

                             3

இந்த வீட்டின் கடந்த கால வரலாற்று முணுமுணுப்புகளுடன் அவனால் அனுசரித்துப்போக முடியவில்லை. இந்த மூச்சுத் திணறலான வாழ்விலிருந்து வெளியேறி எல்லாவற்றையும் துறந்து போவது அவனுக்கு சுலபமாகத்தான் இருந்தது.. எப்போதையும் விட நிம்மதியாக உணர்ந்தான். என்றாலும் அவனால் வீட்டின் பின்புறத் தோட்டத்தில் வரிசையாக நின்ற ஆறு கொன்றை மரங்களை பிரிந்ததுதான் சகிக்க முடியாத துயரமாக இருந்தது. அவன் போன நாளில் கொன்றை அதிகமாகப் பூத்திருந்தது. மரங்களுக்கடியில் இரும்பு வார்ப்பு சட்டத்தினாலான கலைநயமான சாய்வு பெஞ்சு இருந்தது. மலர்கள் தங்க சீவல்கள் போல தொங்கி அழகு காட்டிக்கொண்டிருந்தன. அதன் ரசிகன், தீவிர காதலன் சொந்த வீட்டிலே திருடிக்கொண்டு எங்கேயோ ஓடிவிட்டான். இப்போது அவன் மனதில் தங்கியிருந்த கொன்றையின் நினைவுகளை 1000 கிலோ மீட்டர்கள் தூரம் நிலத்தை நடந்து கடந்த வேளையில் மறந்திருந்தான்… விடுதலை பெற்ற உணர்வுடன் கைவிடப்பட்ட நூற்றாண்டு கால சத்திரமொன்றில் கல் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். சமீப நாட்களாக துறவிகள் தந்த இலைப் புகையில் மயக்கம் கொள்வதில் மெய் மறக்க கிடந்தான்.

 

                                 4

இவ்வளவு சொத்துக்களை வைத்துக்கொண்டு எதற்காக இப்படி சொந்தப் புள்ளைங்களுக்கு கூட செய்யாமல் கஞ்ச வேசம் போடுறார் என்று பத்து உதடுகளாவது ஒரு மணி நேரத்துக்கு ஒன்றென அவர் மீது குற்றச்சாட்டாய் புலம்பித் தீர்க்கிறது. நகரம் முழுக்க இருக்கும் அவரது குடும்பச் சொத்தான கட்டிடங்களில் வாடகையிலிருப்பவர்களுக்கு அவரும் அவர் பாட்டன்களும்  தெய்வம். 415 நபர்களிடமிருந்து வாடகை வருகிறது. காந்தி தண்டி யாத்திரை போன காலத்தில் கொடுத்த அதே வாடகையே இன்றும்… வெள்ளையர்கள் போய்விட்டார்கள், நடிகர், நடிகை ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், இதோ எம்ஜியார் மறைந்து 6 ஆண்டுகள் ஆகிறது. இப்போது முன்னாள் நடிகை ஜெயலலிதா ஆட்சியிலிருக்கிறார். வாடகையை இப்போதைய சூழலுக்கு முறைப்படுத்தினால் இன்றைய` நியாய அளவாக 8,30,000 ரூபாயும், மிகக் குறைந்தளவாக 4,15,000 ரூபாயாவது வர வேண்டும். வருவதோ 41,500 மட்டுமே. வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளில் சில மாதம் முப்பதாயிரம் சம்பாதிப்பவை. ஆனால் இன்னமும் மாதம் 7 ரூபாய் தருவதற்கு காரணம் அன்று எழுதப்பட்ட பத்திர சட்ட விதி. ஆனால் வாடகைதாரரை முன் அவகாசம் தந்து மாற்றி புதியவருக்கு கூடுதல் வாடகைக்கு விடமுடியும். அதை அய்யா விரும்பவில்லை. நகரம் முழுக்க வடக்கும் தெற்குமாக மருத்துவமனை, தபால்நிலையம், பள்ளி என தானமாகத் தந்தது போக சொத்துகளில் மிஞ்சியிருப்பது 67 சொத்துகள். ஓடிப்போன அய்யாவின் மூத்த மகன் சத்தியமூர்த்தி சில சொத்துக்களை கண்ணால் கூட பார்த்ததில்லை. அப்படியான சில பாழடைந்து அரச மரம் முளைத்து அச்சுறுத்தும் கட்டிடங்களாக சிதைந்துக்கிடக்கின்றன. நாய்களும் ,பூனைகளும் எதற்கும் துணிந்து உடல் சுகத்தை பறிமாறிக்கொள்பவர்களும், அந்த கட்டிடங்களுக்குள் அடைகலமாவதுண்டு. உங்களுக்கு மட்டும் சொல்ல ஒரு சங்கதி உண்டு. தேடப்படும் குற்றவாளிகள் அங்கு வாரக் கணக்கில் பதுங்கியிருப்பதுண்டு. இப்போது போனாலும் அந்த இடுக்குகளில் உங்களுக்கு திடுக்கிட வைக்கும் ஒரு காட்சி கிடைக்கலாம்.

 

                              5

 

ஓடிப்போன சத்தியமூர்த்தி பச்சைப்பன் கல்லூரி படிக்கட்டுகளும் கவி பாடும் என்கிற பாடல் பெற்ற கல்விக் கூடத்தில் தமிழ் முதுகலை முடித்தவன். அவன் முனைவர் பட்டம் வாங்க வேண்டுமென்பது அப்பாவின் உத்தரவு. சத்தியமூர்த்திக்கு அது ஒன்றும் பெரிய காரியமில்லை. ஆனால் அந்த வீட்டின் ஒவ்வொன்றும் மூச்சைத் திணற வைக்கிறது. பச்சையப்பனில் இளங்கலை முடிக்கும் வரை சூளை போஸ்டாபீசிலிருந்து பச்சையப்பனுக்கு பஸ்தான். முதுகலைக்கு மிதிவண்டி கிடைத்தது.

“அவன் வசதிக்கு காரில் போகலாம். குறைந்தது பைக்கிலாவது… “பணம் காசுக்கு கொறைச்சலா? இன்னா இருந்தும் இப்படி” என்கிற குரல்கள் அவனுடலில் ஒரு கம்பி போல் நுழைந்து வெளியேறி அவனை துன்பப்படுத்தியது. மாடியிலேயே அடைந்து கிடக்கிற அம்மாவென்று ஒருத்தியிருக்கிறாள் என்பதையே அவன் மறந்துவிட்டிருந்தான். அவளது காரணமற்ற அலறல்கள் நடு இரவில் திடுக்கிட வைக்கிறது. நகரத்தில் அவ்வளவு பெரிய வீடும் அதற்கு அவ்வளவு சொத்துக்களும்…மகிழ்ச்சியைத் தரவில்லை. சிரிப்பற்ற வீட்டில் அழுகையும் தீராத அலறலும் ஓயாமல் கேட்கிறது.

மருத்துவர்கள் வாராவாரம் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். அதற்கு முடிவே கிடையாது போல தொடர்ந்து நடக்கிறது. வீட்டின் தேவைக்காவது ஒரு கார் வாங்க வேண்டும் என்ற மகள் மரகதத்தின் கோரிக்கையையும் அப்பா நிராகரித்துவிட்டார். இரண்டு ரிக்சாகாரர்கள் எப்போதும் வேலிக்கதவுக்கருகில் சாலையில் சவாரிக்காக தயாராக நிற்கிறார்கள்.

 

                                   6

வகுப்பு முடிந்து சத்திய மூர்த்தி கிளம்பியபோது அவனோடு எப்போதும் நட்பு பாராட்டும் தத்துவப் பேராசிரியர் அவனை வழிமறித்து,

“வா உன்னுடன் பேச வேண்டும்” என்றார்.

’ஆளைப் பார்த்து சோசியம் சொல்கிறவர்’ என்று பேரெடுத்தவர். அவராகவே ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்து அவனிடம் பேசுவார். அந்த வாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்களும் உண்டு.

தன் முகம் எதையாவது காட்டிக்கொடுத்திருக்கும் என்று அவன் நம்பினான்.  உண்மையில் அவனுள்ளத்தில் புயல் வீசிக்கொண்டிருந்தது.

“நீங்க முகத்தைப் படிப்பது கை ரேகையைப் படிப்பது போலவா?”

“உள்ளங்கைக் கோடுகள் அவ்வளவு சரியான சாட்சிகளல்ல…முக்கியமாக மகிழ்ச்சியில் இருப்பவன் எவனும் ஜோசியனிடம் போவதில்லை. அது ஜோசியனுக்குத் தெரியும்.”

“நான் ஒரு கதையில் படித்தேன், நோய்ப் படுக்கையில் சூடு தகிக்கும் ஒருவனின் கையைப் பற்றி சோசியம் சொன்னவன், அடுத்த மூனு நாள்ல இவரைப் பிடித்த நோய், தரித்திரம் எல்லாமே இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்  என்கிறான். ஆனால் அவன் சொல்வதற்கு 366 நொடிகளுக்கு முன்னால் அந்த ஆள் செத்திருந்தான்.”

பேராசிரியர் அவனை உற்றுப் பார்த்தார்.

“எல்லாமே ஒரு மீடியம். அவ்ளோதான். அங்க பார்…”

200 அடி தூரத்திலிருக்கும் அத்திமரத்தைக் காட்டி, “அதில் கனியிருக்குமா இருக்காதா?”  என்றார். அவன் சட்டென ஏதோ சொல்ல வந்தான்.

”உனக்கு முன்பே தெரியும். அதனால சொல்லுவ. முதன்முறையா இந்த இடத்துலருந்து பார்த்தா அது என்ன மரம்ன்னு சொல்றதுலயே உனக்கு குழப்பமாயிருக்கலாம். அதுல பயிற்சி இருக்கிறவங்க ஒரு சின்ன கவனிப்பில் ஏறக்குறைய சொல்லிவிடுவார்கள். ஆனால் இன்னும் மூன்று ஆண்டுகளில் ஒரு டன் கனிகளை காய்க்கும் அதை கப்பலில் ஏற்றி பணக்காரனாயிடுவனு சொல்றதுதான் பித்தலாட்டம். அந்தச் சின்ன ஆசையூட்டுற கற்பனைக்கு மயங்காதவங்க உலகத்திலே கம்மிதானே? அந்த மகிழ்ச்சிக்காகதான் சனங்க பணம் செலவழிக்கறாங்க.”

“ என் முகத்துல எதையோ படிச்சிருக்கீங்க.”

“ஆமா. அதை சொல்றதால உனக்கு மகிழ்ச்சியும் இல்ல. துயரமும் இல்ல. உன் முகத்துல தனிமை தெரியுது. இந்த வயசுல இவ்ளோ தனிமை ஆபத்து”

அவன் தலையைக் குனிந்துகொண்டு அங்கிருந்து கிளம்ப முயல்வது போலிருக்க அவரும் தொடர்ந்து அவனுடன் பேச விரும்பியவராய் தொண்டையைச் செருமிக்கொண்டு,

“நீ கவிதை எழுதுற. நான் கூட உன்னுடைய கவிதைகளை வார இதழ் ஒன்னுல படிச்சேன். ’175 பானைகளை உடைத்த விகடகவி’ என்கிற அந்தக் கவிதை ரொம்ப அருமை. தண்ணீர் பஞ்சம் நிறைந்த நாளில் அந்தக் கவிதை ரொம்ப நல்லா இருந்தது. வாழ்க்கையிலிருந்து தப்பியோடுற துறவியின் கவிதைகள், ஆனா பகடியும் விமர்சனமும் மொழியும் இருக்கு. நீ உன்னுடைய கவிதைகளை புத்தகமாகக் கொண்டு வரலாமே… மிக அருமையான கவிதைகள்…”

அவன் அங்கிருந்து நழுவத் துடிக்கிற கால்களுடன் இருக்கிறான் என்பது அவருக்கு புரிந்தது.

“ ஓராண்டுகளாக நான் எழுதுவதில்லை “

“ பழைய கவிதைகளையும் புத்தகம் போடலாமே”

“ புத்தகம் போட பணம் வேணுமே”

“நகரத்திலயே பெரிய பணக்காரர் மகனுக்கு பணம் ஒரு சிக்கலா?”

“அப்பா இதெல்லாம் வீண் வேலையென நினைக்கிறார்.”

“ சரி, உன் கவிதைகளைப் புத்தகமாக்க நான் பணம் தருகிறேன். ஆனால் தமிழிலே போடுவது வீண். ஆங்கிலத்திலே மொழிபெயர்த்து போட வேண்டும்…உன்னுடைய கறை படிந்த காற்று, கொலை செய்யப்பட்ட அல்லிக் குளம்…சிறப்பான கவிதைகள். தமிழில் மட்டும் போடாதே.”

“ஏன்?”

“தமிழில் பதிப்பித்தால் உன் கவிதைகளே உன்னைப் பிச்சையெடுக்க நிர்பந்திக்கும் ”

“ நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.”

“ஆரம்பிக்கும்போதே நிறுத்துவதும் தப்பில்லை.” அவர் கேலியாக சிரித்தார்.

“நீ நிறைய வாசிக்கிற. நல்லது. இப்ப என்ன வாசிக்கிற?”

“கரப்பான் பூச்சியாக மாறும் ஒரு மனிதனைப் பற்றிய கதையைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்..என் தங்கை வீட்டில் கொஞ்சம் புத்தகங்கள் வைத்திருக்கிறாள்.”

அவனை உற்றுப் பார்த்தவர்,

“உன்னுடைய கவிதைகளை எனக்கு அனுப்பு” அவர் தனது முகவரி எழுதிய துண்டுச் சீட்டை அவனிடம் நீட்டினார். இருவரும் அவரவர் வழியில் நடந்தார்கள்.

கே.எம்.சி எதிர்ப்புறமாக அவன் வண்டியைத் திருப்பும்போது சில காலங்களுக்கு முன் ஐரோப்பிய புதினத்தில் அவன் படித்த காட்சியொன்று நினைவடுக்கில் புரண்டது. பாடம் செய்யப்பட்ட மனிதத் தலைகளை விற்கும் காட்சிகள் அவனுக்குத் தெரிந்தது. என் தலையை யாராவது வெட்டி பாடம் செய்து என் அப்பாவுக்கு விற்றால் அதை அப்பா விலை கொடுத்து வாங்கி மேசை மீது வைத்து அழகு பார்ப்பாரா? ஒரு வேளை அலங்கார நீரூற்று அமைப்பில் அலங்காரத்துக்காக வைப்பாரா? ஒருவேளை இதை பணம் கொடுத்து வாங்குவது பாவத்தைக் கூடுதலாக்குற வேலையென பயப்படுவாரா? என்று யோசித்தான். பிறகு தனக்குத்தானே சிரித்துக்கொண்டு வண்டியை மிதித்துக்கொண்டு போனான். தத்துவ ஆசிரியருக்கு தபாலில் அவனது கவிதைகள் போய்ச் சேர்ந்த மறுநாள் அவன் காணாமல் போயிருந்தான். அந்த வீட்டில் துன்பத்தின் ஒளி கூடியிருந்தது.

 

                                7

சத்தியமூர்த்தி காணாமல் போன அன்று அம்மா மட்டும் தன் இருட்டறையிலிருந்து ஓயாமல் அலறிக்கொண்டிருந்தாள். வீட்டில் மிஞ்சியிருப்போருக்கு அந்தக் குரலே பெருந்துயரம். காவல் நிலையத்தில் ஒரு புகாரும், பத்திரிக்கையில் ஒரு விளம்பரமும் கொடுக்கப்பட்டிருந்தது.

“ஊர் சாபம்தான் வேறென்ன? இம்மா சொத்த அனுபவிக்க குடுத்து வைக்கலன்னா…” என்ற விதவிதமான  உதடுகளின் முணுமுணுப்புகள்…

அவரு வீட்ல பானைலதாம்பா இன்னமும் சோறாக்குறாங்க. அதுவும் இன்னமும் கட்டைதான். கேஸ் கீஸ்ன்னு ஒன்னு உள்ள வரக்கூடாதுன்னு கட்டுமானமா இருக்கிறாரு.. அவ்ளோ பெரிய வீட்டுல ஏசி கூட கெடையாது. எதுக்கு இப்பிடில்லா…”

“அட, நீ வேற… இப்பதான் ரெண்டு மூனு ரூமுக்கு பேனே போட்டிருக்காரு.”

“அவரு பாட்டன் எடத்துல எவனெவனோ சம்பாதிச்சி பொழைக்குறான். சொந்தப்புள்ள புரோக்கர் வேலை பாத்துக்குனு அம்பதுக்கும் நூறுக்கும் ரோடு ரோடா திரியிறான்…”  இப்படி பல விதமான முணுமுணுப்புகள்.

அண்ணனுக்கு தப்பிப் போக முடிச்சது என்று மரகதம் முணுமுணுத்துக்கொண்டாள். தப்பிப் போகும் மனமற்ற தம்பியொருவனும் அவளுக்குண்டு. அவன் அந்த வீட்டின் மனநிலையிலிருந்து தப்பிப் பிழைத்தவன்.  அதைவிட குடும்பத்தின் மீது ஒரு பிரமிப்பு உண்டு. அந்த வீட்டின் துயர முனங்கல் அவனுக்கு கேட்பதில்லை. இந்த நகரத்திலேலேயே அப்பா பெரிய பணக்காரர்.  அவன் பன்னிரண்டாம் வகுப்பில் தேற முடியாமல் அப்பாவுக்கு வாடகை வசூல் பண்ணுகிற வேலையாக சுற்றிக்கொண்டிருந்தான். வசூல் பணத்தை கணக்கோடு ஒப்படைப்பதைத் தவிர அவனுக்கு வேறு உரிமைகள் இல்லை என்றாலும் ஓசையெழுப்பியோடும் புல்லட் மீது அவனுக்கு ஏக்கம் மிகுந்த பெருங்கனவு இருந்தது. அப்பாவிடம் கேட்டபோது அவர் போலிசால் கண்டுபிடித்துத் தரப்பட்டு பராமரிப்பின்றி வேலிச்சுவரோரம் கிடந்த காணாமல் போன அண்ணனின் மிதி வண்டியைக் காட்டினார்.

“ரகு, இப்போதைக்கு அதையெடுத்து ஓட்டு. பிறகு பார்க்கலாம்.”

அது கூட நியாயமான குரலாக அவனுக்குக் கேட்டது. அவ்வளவு கறாராக இல்லாத அப்பாவின் வார்த்தைகள் ரகுவுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனாலும் புல்லட்டின் மீதான கனவு அவனைத் துரத்த அதிலிருந்து தப்ப, காசு சம்பாதிக்க இரண்டு கட்டிட தரகர்களுடன் சேர்ந்து நகரத்தின் வீதிகளில் அண்ணனின் சைக்கிளெடுத்து சுற்றிக்கொண்டிருந்தான். விற்பனைக்கான வீடுகள், வாடகைக்கு வீடு தேடுபவர்களுக்காக காத்திருக்கும் வீடுகளின் படிகளில் ஏறியிறங்கிக்கொண்டிருந்தான். கவுரவமான பணக்காரக் குடும்பத்து பையன் என்கிற பதக்கம் தரகுத் தொழிலுக்கு எரிபொருளாகி அவனது பையில் பணம் சேர்ந்து கொண்டிருந்தது. தன் குடும்பத்தைப் பற்றி பல பத்து உதடுகள் புலம்புவதை அவன் கேட்டபடிதான் இருக்கிறான்.

“செங்கலினால் கட்டிய வீடில்லை இது… பாட்டன்களின் பாவத்தின் மேல் கட்டப்பட்ட வீடிது” காணாமல் போன அண்ணன் சில நாட்களுக்கு முன் சொன்னது ரகுவின் காதுகளில் இப்போது கேட்டது. பாட்டன்கள் கல்லிலிருந்தும், கள்ளிலிருந்தும் நசுங்கிய மனிதர்களிலிருந்தும் பணத்தை வடித்தார்கள். சகிக்க முடியாத சாபத்தின் குரல் ஒரு சங்கிலி போல இந்த வீட்டை கட்டிப் பிணைத்திருக்கிறது. சிரிப்பு சத்தம் அந்த வீட்டில் கேட்டதேயில்லை. அழுகையில் மூழ்கிய பாட்டன்கள் தலைமுறை சொத்தும் தப்பிப் பிழைக்க விற்க முடியா சொத்தாக ஆக்கிவைத்தார்கள். ஆனாலும் என்ன? அந்த சொத்தில் கள் போல வடிந்துகொண்டே இருக்கிறது. மூன்று பிள்ளையைப் பெற்றவள் இருட்டு அறையிலேயே அடைபட்டுக் கிடக்கிறாள். ரகுவின் நான்காவது பிறந்த நாளின்போது யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அவளது அறையிலிருந்து வெளிச்சம் வெளியேறிவிட்டது.

மரகதம் அம்மாவின் முகத்தைப் பார்த்து வெகு காலமாகிவிட்டது. அழகிய முகம். அத்தனை உயரம். கொஞ்சம் வெளிச்சத்திலும் அம்மா தங்கம் போல மின்னுகிறாள். அவளது இருட்டறைக்குள் பொன்னம்மா மட்டும் போய் வர பழகிவிட்டாள். குளிப்பாட்டி மெழுகை ஏற்றி தூரத்தில் வைத்துவிட்டு வருவாள். அந்த ஒளிகூட அம்மாவுக்கு அச்சமூட்டுகிறது.

அன்று அம்மாவைக் கழுவி உணவு தந்துவிட்டு வந்த பொன்னம்மாளிடம் மரகதம் விசாரித்தாள்.

“அம்மாவுக்கு உங்களவுக்கு புள்ளைங்க இருக்கிறாங்கன்னு யாரும் நம்ப மாட்டாங்க. அவ்ளோ வளப்பமா இருக்குது அந்த உடம்பு. பாவம் அய்யாவுக்கு அனுபவிக்க குடுத்து வைக்கல.”

இப்போது மிக சமீப நாட்களாக மரகதம் வாரத்தில் இரண்டு நாளாவது அம்மாவைப் போய் பார்த்துவிட்டு வருகிறாள்.  சன்னலின் அலங்காரக் கண்ணாடி வழியே வருகிற வெளிச்சத்தில் அம்மா உக்காந்திருப்பாள்.  “நீ போ…நீ போ…” இந்தக் குரலைத் தவிர வேறு குரலை அவள் கேட்டதேயில்லை. அவளுக்கு நினைவு தெரிந்து அம்மாவை அந்தக் கோலத்தில்தான் பார்க்கிறாள். அம்மாவை ஆசையாக அணைத்து முத்தமிடுவாள். அந்த அணைப்பில் பொன்னம்மாள் சொன்னதை உணர்வாள். அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து இருட்டை அனுபவிக்க ஆசை வரும். அம்மா அவளைத் தன் பக்கத்திலிருந்து பிடித்துத் தள்ளியபடியே இருப்பாள். எப்போதாவது இரவில் மிக மோசமான அலறல் குரல் கேட்கும். அப்போது அப்பா அந்த அறையிலிருந்து வெளியே வருவதை மரகதம் பல முறை பார்த்திருக்கிறாள். அது மாதிரியான ஒருநாள் காலையில் பொன்னம்மா அம்மா அறைக்குப் போய் வந்தபோது கேட்டாள்,

“அம்மா எப்டியிருக்காங்க?”

பொன்னம்மாவின் கண்கள் கலங்கியிருந்தன.

“அம்மா ஒடம்புல பொட்டுத் துணியில்லாம தரையில கெடக்குறாங்க. பயந்துட்ட நான் உள்ள நுழைஞ்சதும் எழுந்து என்ன ஆவேசமா புட்சியிழுத்து ஒக்கார வச்சி எம்மடியில படுத்துக்குனு குலுங்கி குலுங்கி அழுவுது… நான் உன்ன கூப்புடறன்னு சொன்னம் பாரு ..அவ்ளோதான் எழுந்து ஒக்காந்துக்குனு எம் மாருலயே மடார்..மடார்ன்னு அடிக்குது..எம்மா இந்த வாட்டி டாக்ட்ருகிட்ட இதெல்லாம் சொல்லணும்மா”

வியர்வை பூத்த பொன்னம்மாளின் முகத்தில் மட்டுமல்ல, அவளது பேத்தி முகத்திலும் ஒரு சிரிப்பு பூத்துக்கிடப்பதை மரகதத்தால் பொறாமையாகப் பார்க்க முடிகிறது. பொன்னம்மாளும் அவளது பேத்தியும் பின் பக்கத் தோட்டத்தில் பேசிச் சிரித்துக்கொண்டிருக்கும்போது அவர்களது சிரிப்பு அந்த வீடு முழுக்க ஒரு இசை போலப் பரவும். அந்த சிரிப்பொலியை மரகதம் ரசிப்பாள். கல்லூரிக்குப் போய் அந்த வீட்டுக்குள் நுழையும்போது அண்ணன்தான் ஒரே ஆறுதல். அவன் ஓரிரு வார்த்தைகள் பேசுவான். அழகாகப் புன்னகைப்பான். சில்லறைகள் சேர்த்து மிட்டாய் டப்பா வாங்கித் தருவான், அன்பாக சிரிப்பான், மாலை நேரங்களில் இருவரும் தோட்டத்தில் உலாவுவார்கள்… அந்தச் சின்ன நிம்மதியும் எங்கோ போய்விட்டது.  ரகு எப்போது வருகிறான், போகிறான் என்றே தெரிவதில்லை. அவளது மனதுக்கு ஆறுதலாக புத்தகங்கள் இருக்கிறது. இப்போது கூட அவள் கையில் ரவீந்திரநாத் தாகூரின் ’கோரா’ நாவல் இருக்கிறது. புஷ்கினின் இரண்டு நாவல்கள் அவளிடம் புதிதாக வந்திருக்கிறது. துப்ரோஸ்கி, காப்டன் மகள் ஆகிய புத்தகங்கள் அவளது திணறலைக் குறைக்கின்றன. என்றாலும் அம்மா இத்தனை காலமும் அந்த அறைக்குள் அடங்கிக் கிடப்பது எப்படி? புத்தக வாசிப்பின் பொழுது பலமுறை அவள் உதடு இப்படி முணுமுணுக்கும்,      “எங்கள் பாட்டன்களின் சொத்துகள் மட்டுமல்ல. அவர்கள் பாவங்களும் எங்களை நசுக்குகிறது, என்று ஊரார் உதடு போல அவளது உதடுகளும் முணுமுணுக்கத் தொடங்கியிருந்தன. அவளை லேசாக அசைத்துப் பார்க்கச் செய்த இரண்டு காதல் கடிதங்களை அவள் நிராகரித்திருந்தாள். அதில் ஒன்றில் அவளுக்கு சின்ன மயக்கம் இருந்தது. முணுமுணுப்புகளிலிருந்து தப்பியோட அவள் விரும்பவில்லை. இந்தக் கசப்பு அவளுக்குப் பிடித்திருந்தது. நானும் இருட்டை விரும்புகிற காலம் வந்து விடுமோவென்ற அச்சமற்ற எண்ணம் அவளுக்கிருந்தது. நூற்றாண்டு கால வீட்டிற்க்கு அப்பா சமீபத்தில்தான்  வெள்ளையர்கால மின் விசிறிகளை மாற்றியிருந்தார். கட்டைகளை எரித்து பானை சட்டிகளில்தான் இன்னமும் சமையல் நடக்கிறது.

 

                               8

சத்தியமூர்த்தி போன பிறகு கொன்றை அநியாத்துக்கு  பொற்சரங்களைத் தொங்க விடுகிறது. காக்கைகளை விடவும் அதிகமாக  புறாக்கள் நீரூற்றைச் சுற்றி கூட்டமாக மேய்கின்றன. பொன்னம்மாள் சமையலறையிலிருந்து அள்ளி வந்து கோதுமைகளை இறைக்கிறாள். அந்த வீட்டின் மகிழ்ச்சி தோட்டத்திலும், அந்த நீரூற்றிலுமே இருக்கிறது. வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் தோட்டத்துக்கு போய் வரும்போது அப்பா மாடியில் நின்று வேலி சுவரோரமாக இருக்கும் சைக்கிளைப் பார்த்தபடி நின்றிருந்தார். அப்போதுதான் தம்பி சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கோ வெளியே போகிறான். பொன்னம்மாள்  திடலை பெருக்கிக்கொண்டிருக்கிறாள்.

அப்பாவின் அப்பாவும், தாத்தாவும் பனைமர கள்ளிலும், செங்கள் சூளையில் சுட்ட செங்கலிலும் பணத்தைச் சேர்த்தார்கள். மதராசப் பட்டணமே அவர்களது சூளையில் விளைந்த கல்லில்தான் உயிர்பெற்று எழுந்ததாம்…அன்றைய நாளில் பதினான்கு குடும்பங்கள் அவர்களிடம் அடிமையாக இருந்திருக்கின்றன. அங்கிருந்து தப்பிப் போனவர்களை விட அங்கேயே மண்டையைப் போட்டவர்கள் அதிகம். அவர்கள் உழைப்பில் விளைந்த பணத்தில் வாங்கிப்போட்ட நிலங்கள் நகரமாக மாற மாற அவற்றை கட்டிடங்களாகக் கட்டுகிற தீராத வெறி மரகத்ததின் தாத்தனின் அப்பனுக்கு இருந்ததாம். இருபத்தி நாளாவது கட்டிடம் கட்டியெழுப்பப்பட்ட தினத்தில் ஒரு நாள் அவருக்கு கண்கள் சட்டென மங்கலாகி இரண்டடி தூரத்துக்கு அப்பால் அவருக்கு எதுவுமே தெரியாமல் போனதாம். வெள்ளைக்கார மருத்துவர்கள் எதுவுமே செய்ய முடியாதென கை விரித்துவிட நம்பூதிரி ஒருவனின்  ஆலோசனைப்படி ஒருநாள் சூளையாட்களின் நான்கு பச்சிளம் குழந்தைகளின் கழுத்தறுத்து பரிகாரம் செய்த கொடூரமான இரவில் பூசாரி அவரது நெற்றியில் நான்கு ரத்தத் திலகமிட்ட நொடியில் வழிந்த ரத்தத்தைக் கையால் துடைத்துப் பார்த்ததுதான் அவர் இந்த உலகில் கடைசியாகப் பார்த்தது. பத்திரமாகாத சொத்தை அடையாளம் காட்டவும் வக்கற்றுப் போன பாழ் கண்களை வைத்து அந்த மனிதன் மனம் பிழறித் திரிந்து நான்காண்டுகளுக்குப் பிறகு பச்சிளம் குழந்தைகளை பலியிட்ட அதே சூளைக் குழியிலே விழுந்து செத்துப் போனாராம். தனக்கும் கண் அவிந்துவிடும் என்று அவரது மகனும் நம்பிக்கொண்டிருந்திருக்கிறார். அதாவது மரகதம் அப்பாவின் தாத்தா. ஆனால் கட்டிய கட்டிடங்களில் வருமானம் வந்து அந்த நாளின் பெரிய கணக்குப் புத்தகம் பாதி தீரும் முன்பே அவருக்கு வயிற்று வலி தொடங்கிய மூன்றாம் மாதம் அவர் உயிரைப் பறிக்கும் வரை அந்த வலி அவரைப் படாத பாடுபடுத்தியிருக்கிறது. அப்போதும் பத்திரங்கள் எழுதுவதும், சொத்துக்கள் மீது வில்லங்கம் எதுவுமில்லாமல் ஆக்குவதும் என இயங்க, புற்று அவரை விழுங்கியிருக்கிறது. அப்போது துவங்கிய அச்சம் அதிலிருந்து தப்ப அய்யாவின் அப்பா செய்த ஏற்பாடு, சொத்தை யாருக்காவது தானமாக  கொடுக்கலாம், ஆனால் ஒன்றையும் விற்க  முடியாது என்பதுதான். இதுதான் அவர் எழுதி வைத்த உயில். எழுதிய கையோடு 16 க்கும் அதிகமான சொத்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாகத் தந்த கையோடு பாட்டன் காலத்தில் நரபலி ரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட  சிலையை ஓரிரவு அவரே தூக்கிப்போய் கடலில் வீசிவிட்டு வந்திருக்கிறார்.

அய்யா மாடியிலிருத்து வாயில் கதவு பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். சில நாட்களுக்கு முன் வாங்கிய மாருதி கருநீல நிறத்தில் நின்றுக்கொண்டிருந்தது. ”இவ்ளோ காலம் கழிச்சி இப்பவாவது அந்தாளுக்கு வாங்கணும்ன்னு தோனுச்சே” என்று சில உதடுகள் முணுமுணுத்தன. ”அந்த வீட்ட இடிச்சிட்டு கட்டனும்.”இப்படி சில முணுமுணுப்புகள்…

 

                               9

பொன்னம்மாள் நீரூற்றுக்கு முன்பாக பெருக்கிக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தார். எங்கிருந்தோ பறந்து வந்த காகம் அவர் தலையில் கொத்திவிட்டுப் போக தலையை தேய்த்துக்கொண்டார். அவருக்கு வலி தெரியவில்லை. பொன்னம்மாள் பெருக்கப் பெருக்க பழுத்த இலைகள் கழன்று தரையில் விழுந்துக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவருக்குத் தோன்றியது. வழக்கமாக அவளுடன் வரும் பேத்தி இப்போது கொஞ்ச காலமாக வருவதில்லை. அவரது மனம் தன் காணாமல் போன மகன் குறித்து ஓயாமல் கணக்குப் போட்டது. அதிலொன்றாக பொன்னம்மா பேத்தியும், மகனும் வெறும் உடலுடன் புரள்வது போன்ற காட்சி அவருக்கு முன் சட்டென தோன்றி மறைந்தது. சகிக்க முடியாமல் கண்களை மூடித் திறந்தார். மீண்டும் அந்த காகம் அவர் தலையில் பட்டென தட்டிவிட்டுப் போய் வேலியோர தென்னை மரத்தில் உட்கார்ந்து அவரைப் பார்த்தது. அவருக்கு நெஞ்சு கொதித்தது. கூட்டிக்கொண்டிருக்கும் பொன்னம்மாளையே அவர் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அலங்கார நீரூற்றில் தண்ணீர் ததும்பிக்கொண்டிருந்தது. அப்பா அதை ஆசையாகக் கட்டியிருந்தார். நீரூற்று அலங்காரக் குளத்தில் ஏராளமான அல்லிகள் பூத்திருந்தன. நெஞ்சுக் கொதிப்பை அடக்க அல்லிகளை எண்ணினார். ஒன்று ..இரண்டு..மூன்று… 23 எண்ணும்போது கணக்கு தப்பிவிட்டது. பின்னே பொன்னம்மாள் வாரிக் கூட்டிக்கொண்டிருக்கும்போது எழும் தூசுப்படலத்தனூடே மன ஓட்டங்களுடன் அவளைப் பார்க்கிறார். கோபம் குமுற எச்சிலை மாடியிலிருந்தே தூவென துப்புகிறார். பொறுமையற்று அவளை நோக்கிய நடையில் வேகம் கூடுகிறது.

மரகதம் பிறப்பதற்கு ஆறேழு மாதங்களுக்கு முன்பாக அவள் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அந்த வீட்டின் இருட்டுக்குள் கலந்துவிட்டவளை உற்றுப்பார்த்துக்கொண்டே நடந்தவருக்கு நெஞ்சுக் கொதிப்பு அதிகமாக,

“அவ்வளவு அழகான பெண் ஆபத்தானவள் என்று நான் யோசித்தது சரியாப் போச்சி. கிழவி பார்… ஒன்றும் தெரியாதவள் போல கூட்டிப்பெருக்கிட்டிருக்கா…நாசக்காரி.” அவரது உள்ளம் பொறிகிறது.

அவரை மீறி அவரது நெஞ்சு துடித்தது.

அந்த நாள் பார்த்து மலிவானதென்றாலும் புதிய புடவை கட்டியிருந்தாள். அவர் வேகமெடுத்து அவளை நோக்கிப் போகிற போது அவரை நோக்கி பொன்னமாளிடமிருந்து சந்தன வாடை எதிர் கொள்கிறது. சிரிப்பொலியும், முனங்கல்களும்  இயங்கும் உடலின் தேய்ந்த பழைய காட்சிகளும் அவர் உள்ளத்தில் சீட்டுக் கட்டிலிருக்கும் சீட்டுகள் போல ஒவ்வொரு காட்சியாக விழுந்துக்கொண்டிருக்கின்றன. அவரையும் மீறி அந்தக் காட்சிகளில் ஆடையற்ற உடல்கள் புரள்கின்றன. நெஞ்சு கொதிக்க அவளை நோக்கி வந்துக்கொண்டிருந்தார்.

பொன்னம்மா அய்யா வருவதைப் பார்த்துவிட்டு பெருக்குவதை நிறுத்திவிட்டு துடைப்பத்தின் அடிப் பக்கத்தை உள்ளங்கையில் தட்டிக்கொண்டு அமைதியாக நின்றாள். அவர் முகத்தில் பீறிட்ட வெம்மையை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் பெருக்க குனிந்தாள்.

“தே…” என்ற குரல் கேட்டு அதிர்ந்து நிமிர்ந்தவள் கண்களில் தெரிந்த அச்சம் அவரை ஊக்கப்படுத்தியது.

“உம் பேத்தி எங்க கொஞ்ச நாளா காணோம்?”

“அய்யா …அது”

அவளது தயக்கம் அவரை மேலும் ஊக்கப்படுத்த,

“என்னடி..அது இதுன்னு”

பொன்னம்மாள் அதிர்ந்து அவரைப் பார்த்து ஓரடி பின் நகர்ந்தாள். அவளது கையிலிருந்து துடைப்பம் நழுவியது. அவர் இவ்வளவு காலத்தில் அப்படி ஒரு போதும் அவமரியாதையாகப் பேசியவரில்லை. இப்போது அவர் கண்கள் ரத்தமாக மின்னித் தெறிக்க, அவளுக்குப் பதறுகிறது.

“அய்யா…”

“இந்த மயிருக்கெல்லாம் குறைச்சல் இல்ல. எங்கடி உம் பேத்தி?”

அவளுக்கு சட்டென புரிந்துவிட்டது.

“அய்யா, புள்ள புஷ்பவதியாயிடுச்சியா. நீங்களே பெத்தப்புள்ள காணோம்ன்னு மெரண்டு கெடக்கறீங்க. அதான் சொல்ல வாணான்னு உட்டுட்டேன். ஒரு பத்து நா போவட்டு கூட்டியாந்துற்றய்யா.”

காக்கா கொத்திய இடத்தில் இப்போது வலிக்கிறது. மண்டையை தேய்த்துவிட்டுக்கொண்டார். அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கொதிப்படங்கி சுருங்கியவர்,

”அய்யோ…”  எனத் தனக்குள் முனங்கிக்கொண்டார். சட்டென கக்கத்தில் இடுக்கி வைத்திருத்த கறுப்புப் பையைத் திறந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை அவளிடத்தில் நீட்டினார். அவள் வாங்க மறுத்து கைகளைத் தொங்க விட்டபடி அவமானத்தில் கலங்கிய கண்ணையும் துடைக்காமல் அவரைப் பார்த்தாள்.

“விதி..விடுமா என்ன? …..ம், சரி ஒன்னும் தப்பா எடுத்துக்காத..ம்… விதி வேறென்ன? இந்தா பேத்திக்கு எதனா வாங்கி குடு. அவளுக்கு நல்லது எதனா நடக்கும் போது நான் செலவு பண்றன்.”

பணத்தை வாங்க அவள் கை எழவேயில்லை. தலை குனிந்திருந்தாள். எங்கிருந்தோ வந்த காகம் அவர் தலையில் தட்டிவிட்டுப் போகாமலே அவருக்கு வலித்தது. அவர் தலையைக் குனிந்துகொண்டு தலையைத் தேய்க்க, பொன்னம்மாள் தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள். அவர் கையிலும் இல்லாமல், அவள் கையிலும் இல்லாமல் பணம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அவளிடம் தோற்றுப்போக விரும்பாதவராய் அவள் கையில் பணத்தைத் திணித்தார்.

“விதியாட்டுது வேறென்ன?” புலம்பிக்கொண்டே காரில் போய் ஏற, கார் பெருக்கிய தரையில் தன் தடங்களைப் பதித்துக்கொண்டு போனது.

வேலிக்கதவை மூடப்போனவள் கார் போன திசையில் எட்டிப் பார்த்தாள். வாசலில் இரண்டு ரிக்சாக்கள் நின்றிருந்தன. இரண்டு ரிக்சா ஓட்டிகளில் ஒருவன் நடை பாதை ஓரத்திலும், ஒருவன் வண்டியிலும் உட்கார்ந்திருந்தான். நடை பாதையில் உட்கார்ந்திருந்தவன். கார் போகும் பாதையைப் பார்த்து சிரித்துக்கொண்டே பீடியைப் பற்ற வைத்தான். மற்றவன் பொன்னம்மாவைப் பார்த்து,

“இனி பீடியக் கொளுத்த நேரங்காலம் பாக்க வேணாம்” என்றபடி பீடியை அழுத்திப் பார்த்துக்கொண்டே பற்ற வைத்தான்.

பொன்னம்மா படலையை சாத்தி விட்டுத் திரும்பினாள்.

பீடிப் புகை வாசனை அய்யாவுக்குப் பிடிக்காது. அவர் வீட்டில் இருந்து கிளம்பும் வரை ரிக்சாகாரர்கள் புகைக்க மாட்டார்கள்.

அவமதிக்கப்பட்ட பொன்னமாவின் மனம் கலங்கியிருப்தை அலங்காரக் குளத்திலிருந்த மீன்கள் அறிந்தனவோ என்னவோ, நீருக்கடியில் அமைதியாக கிடந்தன.

அன்று மாலையே வீட்டுக்கு ஐந்து கார்கள் நுழைந்தன.

 

                              10

நிறைய வரன்கள் மகளுக்காக பேசி வைத்திருந்தார். அவருக்கு சம்மந்தியாக நீ, நான் என போட்டி என்றாலும் முதலில்  வந்தவர்களே மரகதத்துக்குப் பிடித்திருந்தது. அவளையறியாமலே அந்த அதிசயம் நடந்திருந்தது. இரு வீட்டாருக்கும் சம்மதம். அவளுக்கு முன்பு வந்த இரண்டு கடிதங்களில் ஒன்றின் சொந்தக்காரன் அவளது மனதில் சின்ன சலசலப்பை உண்டாக்கியிருந்தவன். ”எப்படியிது…!” அவளே மலைத்துவிட்டாள். இப்போது குடும்ப சம்மதத்துடன்… அந்த மகிழ்ச்சியை அவளால் செரிக்க முடியவில்லை.

மரகதம் அண்ணன் இல்லையேவென மிகவும் ஏங்கிப்போனாள். ஏற்கனவே அறிமுகமானவனை மரகதம் நெஞ்சில் ஏந்திக்கொண்டாள். அவர்கள் இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்ட நொடியில் அவளது குழப்பமுற்ற கடந்த காலத் துயரம் அத்தனையும் தகர்ந்து கொட்டிவிட்டது. மகிழ்ச்சியில் நிரம்பியிருந்தாள். மணநாள் இன்னும் முடிவாகவில்லை. இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த 16வது நாள் இருவரும் பாதாள பொன்னியம்மன் கோவிலில் எதேச்சையாக சந்தித்துக்கொண்டதாக அவள் நினைத்தாள். ஆனால் அவன் அந்த சந்திப்பை அவளைப் பின் தொடர்ந்து திட்டமிட்டுதான் நிகழ்த்தியிருந்தான் என்பது அவளுக்குத் தெரியாது. திகட்டத் திகட்ட பேசி காதலில் கசிந்து பிரிய மனமற்று பிரியும் முன் அவளுக்குக் கண்ணாடியிலான அழகிய சிறகு விரித்த தேவதையின் பொம்மையொன்றை அவன் தந்தபோதுதான் தன் மீதான அவனது தீவிரம் அவளுக்குப் புரிந்தது. ஓரடி உயரக் கண்ணாடி சிற்பத்தின் அழகு அவளை மயக்கியது. பிரான்சிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் தன் அக்காள் வாங்கி வந்தது என்று சொன்னான். அவளுக்கும் சிறகு முளைத்திருந்தது.

 

                              11

மாலை மயங்கிக் கொண்டிருந்த நேரம் டவுட்டன் கபே வாசலில் மணமகன் நண்பர்களுடன் நின்று புகைத்துக்கொண்டு  அரட்டையடித்துக்கொண்டிருக்கிறார்கள். கருநீல கார் டவுட்டன் கபேவுக்குள் நுழைகிறது. வருங்கால மாமனார் நண்பர்களுடன் காபியருந்த காபேவுக்கு வருவார் என்று அவனுக்கு எப்படி தெரியும்? அவன் ஆழ்ந்து புகையிழுத்து வானத்தை நோக்கி ஊதுகிறான். விரல் சுடுகிறளவு சிகரெட்டை வீசிவிட்டு இன்னொன்றைப் பற்ற வைக்கிறான்.  காரிலிருந்தபடியே அவர் உற்றுப் பார்த்து முகம் சுளிக்கிறார்.

 

                                  12

கண்ணாடி பொம்மைக்கு முத்தமிட்டு காதலின் மகிழ்ச்சியான கனவுகளுடன் கூடத்தில் உட்கார்ந்து ரவீந்திரநாத் தாகூரின் கோராவை வாசித்துக்கொண்டிருந்தவள், புல்லட்டின் ஓசை மிக அருகில் கேட்க, ஆவலாய் போய் எட்டிப்பார்த்தாள். தம்பியின் கனவு கறுப்பு நிறத்தில் மின்னுகிறது. பதிவு எண் எழுதாத புத்தம் புதியது, அந்த வீட்டின் கொள்ளளவு மீறி மகிழ்ச்சி ததும்புகிறது. அந்த நேரம் வீட்டினுள் நுழைந்த அப்பாவின் முகத்தில் இதற்கு முன் அவ்வளவு வெறுப்பை அவள் பார்த்ததில்லை. கெடுதியின் அறிகுறி அப்பட்டமாக தெரிகிறது. வாசலில் அவரும் வண்டியைப் பார்த்திருந்தார்.

“அந்த வரன் நமக்கு ஒத்துவராது. அது கெடக்குது, வேற வரன் நாளைக்கு வர்றாங்க. நல்ல குடும்பம். பையன் டாக்டர்….நல்லா விசாரிச்சுட்டேன். கெட்டப்பழக்கம் ஒன்னுமில்ல……”

முதல்  வார்த்தையிலேயே அவள் இடிந்துவிட்டாள். மற்ற வார்த்தைகள் அவளுக்குக் கேட்கவேயில்லை.

நள்ளிரவு நேரம்…

சிறகு முளைத்த கண்ணாடி சிற்பம் நொறுங்கித் தெறிக்கிறது. அவளுக்காக டின் நிறைய ததும்பிக் காத்திருந்த கிரோசினில் ஆசை தீரக் குளித்து தீக்குச்சியை உரசினாள். புல்லட் இருளில் நின்றிருக்கிறது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button