
கரைதலறியாது கூவிய கணத்தில்
கூடிழந்த குயிலொன்றின்
கதையினைப் போலவே
பேசாப் பெருங்கதைகள்
என்னிடத்திலுமுண்டு
கனவுகளின் வாசம் தொலைத்து
கண்ணீரின் வாசம் சுமந்து
உயிரொன்று தொலைந்த
அவ்வீட்டு மலர்களின்
மௌனக் கதைகள் போலவே
பேசாப் பெருங்கதைகள்
என்னிடத்திலுமுண்டு
வற்றிப் போய்விட்ட
தன் மார்பைப் பற்றும்
பிஞ்சு விரல்களின்
நம்பிக்கை வெல்லுமென்று
ஏங்கி ஏங்கி
மரத்துப் போன
மனதின் கதைகள் போலவே
பேசாப் பெருங்கதைகள்
என்னிடத்திலுமுண்டு
எனைக் குறித்ததான
உங்கள் புனைவுகள்
போலல்லாது
மொழி தொலைந்த
பெருமூச்சின் ஆழத்தில்
புதைந்திருக்கும்
அவை போன்ற கதைகள்
உங்கள் மௌனத்தின்
கதவுகள் திறக்கையில்
உள்ளிருந்தபடி ஒலிக்கும்.
***
எனை நோக்கித் தன் கைகளை
நீட்டுவதற்கு வாகாய்
அடுத்த கைகளுக்கு
அவள் மாற்றிக்கொண்ட
சில்லறைகளில் மினுங்கியது
யார் யாரிடமிருந்தோ
அவள் பெற்ற ஈரம்
இப்போது என் முறை
இதோ நீட்டிய கை நீட்டியபடி
என் முகம் பார்க்குமவளிடம்
யார் யாரோ எனக்குக் கொடுத்த
ஈரங்களிலிருந்து கொஞ்சத்தைக்
கொடுத்தபடி பார்க்கிறேன்
அருகில் நிற்குமொருவர்
அதற்குப் பத்து ரூபாய்
என்று பெயரிட்டிருக்கக்கூடும்
அந்த ஈரத்தைப்
பெற்றுக் கொண்ட பின்
அவள் முகத்தில் பரவியது
அடர்ந்த இருள் படிந்த
ஓர் இரவு அறைக்குள்
கதவிடுக்கின் வழியே கசியும்
பட்டாளையின் பச்சை வெளிச்சம் போலவே
ஒரு கீற்று
நான் இன்னும்
நிறைய ஈரங்களைச்
சேமித்துக் கொள்ள வேண்டும்
நாளையும் ஒருவர்
அதற்குப் பத்து ரூபாய்
என்று பெயரிடக்கூடும்
போகட்டும்
பச்சையோ நீலமோ
சிவப்போ மஞ்சளோ
இரவின் அழகிய கீற்றுகளைப்
பகலிலும் பார்க்க
கொஞ்சம் ஈரங்களைச்
சேகரித்துக் கொள்வதே
விருப்பமாயிருக்கிறதெனக்கு.
***
பகலின் வெளிச்சத்தில்
இருளைக் கொட்டியபடி
பொழிந்து கொண்டிருக்கும்
மழையின் இசையைக் கேட்கிறேன்
ஏன் எனக்குச் சிறகுகள் இல்லை?
நடுநிசியின்
வெற்று வீதிகளில்
பதுங்கியிருந்தபடி
சிறகுகளற்ற தேவதைகளின்
பாடலைப் பாடுகிறேன்
அவர்கள் என்னை ஆசீர்வதிக்கிறார்கள்
ஆம்…எனக்குச் சிறகுகள் இல்லை
நான் தேவதையாகிறேன்.
*********