பதங்கமாகும் பதர்வாழ்வு
காற்றுக் குமிழ்கள் கோலிக்குண்டுக்குள்
அடைபட்டுக்கொண்டது போல்
சிக்கிக் கிடக்கிறான்
வெளியற்ற உள்வெளியின்
துகள்களின் மீது
ஒரு நவீன யுவன்
பாசிட்ரான்களின் பள்ளத்தில்
உயிர் வெப்பத்தைச் சிதை மூட்ட
அண்டவெளியில்
ஆயுதங்களைக் கூர்தீட்டுகிறான்
அதற்குக் கறைகொண்ட
செவ்வகவொளியே போதுமென்கிறான்
மென்று தின்ற மூலக்கூறுகள்
அசைவின்றி அண்டார்டிகாவின்
பனிக்கூழில் பதியனிடுகின்றன
ஒரு வெப்பக் கதிர்வீச்சை
அழகிய காலக் குடுவையில்
நிறங்காட்டிகளைச் சேர்த்த பின்
வண்ணத்தை இழந்துகொண்டிருக்கையில்
பதங்கமாகியிருந்தது பதர்வாழ்வு.
***
திரும்புதலின் மீது அமரும் பறவை
வண்ணமேற்றிகளுக்குப் பெரும்பாலும்
திரும்புதல் என்பது வாய்ப்பதில்லை
வெள்ளை நிறத்தின் மீது படிந்ததும்
ரசவாதப் பயணங்களில்
மழலைமொழியின் அசைவுகளில்
வெளியேறுகிறது ஒரு பெரும் பழுது
யாருக்கெனவும் தன்னை
நிரூபிக்க வேண்டிய கட்டாயமின்றி
அசைந்து அசைந்து
பூவின்மீது அமர்ந்தபடியிருக்கிறது
பட்டாம்பூச்சி
பஞ்சுமிட்டாய் விற்பவனின் பயணம்
ஒரு குழந்தையைக்
குதூகலமாக்குதல் நோக்கியே
அமைகிறது
ருசிக்குத் திரும்பாத வாழ்வென்னும்
மாயை கடந்து
அவ்வப்போது வாய்த்துவிடுகின்றன
வாழ்தலின் பக்கம்
திரும்பிவிடும் தருணங்கள்
***
தளும்பும் ஞாபகக் கடல்
முதன் முதலாய்
கடல் பார்த்த சிறுமிக்கு
மகிழ்ச்சியில்
கடலுக்கு என்ன தருவதென
யோசித்தவள்
ஆசையாய் மணலை அள்ளித் தருகிறாள்
கடல் அதை மீண்டும்
அவளுக்கே தர
அவளருகே வந்து வந்து போகிறது
அதனோரம் மணல்வீடு
கட்டிக்கொள்ள நினைத்தவள் தோற்றதும்
கடலை தனது சட்டைப் பையில்
அள்ளி வர எண்ணுகிறாள்
முடியாமல் ஏக்கத்தோடு
வீடு திரும்புகையில்
கடல் ஞாபகத்தில்
வீட்டிலிருக்கும் பண்டங்களின்
சுவையாவும் குறைந்திருக்க
உப்பு ஜாடிக்குள் தேடுகிறாள்
அந்த ஜாடி முழுவதும் உப்பு
தொட்ட அவள் கை முழுவதும்
கடல்.
******