ஆன்மாவற்ற கூடு – (லியோனிட் ஆன்றேயெவ்வின் ‘நிசப்தம்’ சிறுகதை வாசிப்பனுபவம்) – அமில்
கட்டுரை | வாசகசாலை
லியோனிட் ஆன்றேயெவ் அவர்களின் ஒரு சிறுகதையை இணையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்து, அக்கதையின் ஆழமான பாதிப்பில் இருந்தேன். சில பக்கங்களில் எப்படி இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது என்று ஆச்சரியப்பட்டேன். அதற்கு முன் மாப்பசானின் ‘MAD WOMAN’ என்ற மிகச் சிறிய கதையை வாசித்து அதே போன்ற உணர்வையடைந்து பிரம்மித்துப் போயிருந்தேன். சில பக்கங்களில் கற்பனை மற்றும் எழுத்து திறமையை காட்டுவது மிக சவாலானது. ஒரு இலக்கியப் பிரதி என்பது வாசித்து கடந்துபோவதல்ல; அது நம் வாழ்வோடு கலந்துபோவது. மீண்டும் வாசிக்க வாசிக்க அள்ளிக் கொடுப்பது என்பதை சிறந்த கதைகளை வாசிக்கும்போதெல்லாம் உணரமுடிகிறது. அப்படியான ஒரு கதை தான் லியோனிட் எழுதியது. அக்கதையின் தலைப்பை மறந்தே போய்விட்டேன். எவ்வளவு தேடினாலும் கிடைக்கவில்லை. ஒரு நாள் நூலகத்தில் ‘THE GREATEST RUSSIAN CLASSICS’ என்ற சிறுகதைத் தொகுப்பை எடுத்தபோது, அதில் லியோனிட் அவர்களின் சிறுகதைகள் இருந்தது. அதில் அவருடைய ‘SILENCE’ என்ற கதையை வாசிக்கும்போதே அதன் பரிச்சியத்தை சட்டென்று உணர்ந்துகொண்டேன். நான் தேடியது இந்தக் கதையைத்தான்.
ஒரு சிறுகதை எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி நிறைய வரையறைகளை படித்திருக்கிறேன். எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் ஒரு நூலில், “பலமுறை கேட்டுப் பழகியிருந்தாலும், இசை எப்படி நம்மை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறதோ, அதுபோல ஒரு சிறுகதை இருக்கவேண்டும்” என்று கூறியது எப்போதும் நினைவில் வந்துகொண்டே இருக்கிறது. வாசித்த பிரதி என்றாலும், மீண்டும் மீண்டும் அதை வாசிக்க ஈர்க்கிறது என்றால் அது எழுத்தின் பெரும் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். அதைத்தான் ஒவ்வொரு எழுத்தாளனும் விரும்புகிறான்.
லியோனிட்டின் ‘SILENCE’ என்ற சிறுகதை இன்று வாசித்தாலும் உயிர்ப்போடு இருக்கிறது. ஒரு பாதிரியார் தன் வணக்க வழிபாட்டில் இருக்கும் பொழுது அவருடைய மனைவி பரபரப்பாக வந்து பின்புறமிருந்து அவரை அழைத்து, அவர்களுடைய மகளின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் கூறி அழுகிறாள். அவர் நிதானமாகத் தன் வழிபாட்டை முடித்து விட்டு, அவளோடு கீழே இறங்கி வந்து மகளின் அறைக்குச் செல்கிறார். அங்கு உடல்நிலை சரியில்லாமல் கட்டிலிலேயே இருக்கும் தன் மகளிடம் பிரச்சனை என்ன என்று கேட்கிறார். உடல் சார்ந்த பிரச்சினை எதுவும் அந்தப் பெண்ணிற்கு இல்லை. சுய உணர்வோடு தான் இருக்கிறாள். ஆனால், மனம் சார்ந்த பிரச்சனைதான் அவளை வாட்டுகிறது. பிரச்சனை என்ன என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். ஆனால், அப்பெண் தான் நன்றாக இருப்பதாகவும் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதாகவும் கூறுகிறாள். தன் தந்தையையும் தாயையும் சென்று தூங்கி ஓய்வெடுக்குமாறு கூறுகிறாள். இதைக் கேட்டு கோபமடைந்த பாதிரியார், ‘‘அவள் இறைவனை மறந்து விட்டாள், பிறகு நாமும் அவளை பொருட்படுத்த வேண்டாம்’’ என்பதுபோல கூறிவிட்டு வெளியே வந்துவிடுவார். அதற்கு அவருடைய மனைவி, எப்போதும் அவர் இதுபோன்றுதான் கடினமாக இருப்பதாகவும், அவரைப் பார்த்து அவருடைய மகளும் அதே போன்று நடந்து கொள்வதாகவும் கடிந்து கொள்வார். இதன்பிறகு அவளுடைய தந்தை அவளிடம் பேசவே இல்லை.
ஒரு வாரம் கழித்து ஒரு நாள் வெளியே சென்ற அப்பெண் மீண்டும் வீடு திரும்பமாட்டாள். அவள் ரயிலில் விழுந்து இறந்து போனதாக செய்தி வரும். பின்னர், அவளுடைய உடல் வீட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. மகளின் இறப்புச் செய்தியினைக் கேட்டு பித்துப் பிடித்து போய் மீளாத படுக்கையில் அவள் தாய் விழுந்து விடுவாள். மரணச் சடங்கிற்காக உறவினர்கள் தெரிந்தவர்கள் எல்லோரும் வருகிறார்கள். அதில் பலர் அவளின் இறப்பிற்கு காரணம் அவருடைய தந்தையின் இரக்கமற்ற சுபாவம்தான் என்பதாகத் திட்டுகிறார்கள். அவர் ஒரு இறுக்கமான அன்பற்ற, பாவம் செய்பவர்களை மன்னிக்காத கல் நெஞ்சம் கொண்டவர் , ஈரமற்ற ஒரு சுயநலவாதி என்பதாகத் தூற்றுகிறார்கள். பாதிரியார் எவ்வகையிலும் தன் கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அதன் பிறகு அவளை அடக்கம் செய்து விட்டு வீடு திரும்புகிறார்கள்.
இப்போது வீட்டில் இருவர் மட்டுமே இருந்தாலும், அவரின் மனைவி ஆழமான துக்கத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையிலே கிடக்கிறார். பேச்சுக் கூட இல்லை. ஆனால், பாதிரியார் வழக்கம்போல தன்னுடைய ஜபத்தில் ஈடுபட முயல்கிறார். இப்பொழுது வீட்டின் நிசப்தம் ஒரு பறவையின் குரலற்ற, சிறகடிப்பற்ற, கொடூரமான நிசப்தமாக அவரது மனதை நிம்மதியற்று அழுத்துகிறது. அதன் பாரத்தை அவரால் தாங்க முடியவில்லை. எப்போதும் தன் வழிபாட்டில் ஈடுபாடு காட்டும் அவர், இப்பொழுது எதுவும் செய்யமுடியாமல் தவிக்கிறார். பிஞ்சு குழந்தையாக பார்த்த தன் மகளின் நினைவு, அவளுடைய குரல் அசைவு, வாசனை எல்லாம் அவர் மனதை நெருக்குகிறது. திக்பிரம்மை பிடித்திவர் போல ஆகிவிடும் பாதிரியார், அதே மன வலியோடு மகளின் அறைக்குச் செல்கிறார். அவளுடைய வெண்ணிற கட்டில் மெத்தையும், தலையணையும் காலியாக இருக்கிறது. தன் முகத்தை மகளின் தலையணையில் வைத்து பிதற்றுகிறார். கல்லறைக்குச் சென்று அங்கு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ‘‘வேரா’’ என்று கூறி பெருங்குரலெடுத்து கத்துகிறார். அது அவளுடைய பெயர். பிறகு வீட்டிற்கு வந்து அசைவற்றுக் கிடக்கும் தன் மனைவியிடம் தன் மேல் கருணை காட்டுமாறும் தன்னை மன்னிக்குமாறும் கதறுகிறார். ஆனால், அவளது பார்வையில் கோபமோ அல்லது இரக்கமோ எதுவும் தெரியவில்லை. இருள் நிறைந்த காலி வீடு நிசப்தமாக இருந்தது என்று கதை முடிகிறது. வாசித்த பின்பும் பெரும் கணத்தை நம் மனதில் ஆழ்த்தக் கூடிய ஒரு சிறுகதை இது.
லியோனிட்டை, ‘ரஷ்யாவின் எட்கர் ஆலன் போ’ என்பதாக புகழ்ந்து கூறுவார்கள். ஆலன் போவைப் போலவே மனதின் இருண்ட பகுதிகளை, உளவியலின் ஆழத்தை தன் எழுத்தில் இவர் வெளிப்படுத்தியுள்ளார். எட்கர் ஆலன் போவின் தாக்கத்தை லியோனிட்டின் கதைகளில் நன்கு உணரமுடிகிறது. குறிப்பாக ‘TELL TALE HEART’ என்ற போவின் புகழ்பெற்ற சிறுகதையின் தாக்கம் இக்கதையில் உள்ளது. இவருடைய ‘LAZARUS’ என்ற சிறு கதையும் மனதின் இருண்மைகளை ஆழமாகத் தொட்டுச் செல்லக்கூடியது. வாசித்தபின்பும் எழுத்துக்களின் உஷ்ணத்தை உணரவைக்கின்ற கதைகள் இவை. ஒப்பிட்டு பார்த்தால், ‘LAZARUS’, ‘SILENCE’ ஆகிய கதைகளை விஞ்சக்கூடிய, இதைவிட பல மடங்கு உஷ்ணத்தையும் பித்தையும், இருண்மையையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறுகதை இருக்கிறதென்றால், அது நவீனத்துவ ஜப்பானிய எழுத்தாளரான அகுதகவா எழுதிய ‘HELL SCREEN’ என்ற சிறுகதைதான். நரகத்தை ஓவியத்தில் சித்தரிக்க முயலும் ஒரு ஓவியனின் கதை. இக்கதையை வாசித்து பிறகு அகுதகவாவை தொடர தைரியமின்றி விட்டுவிட்டேன்.
‘SILENCE’ என்ற இக்கதையின் வெற்றியாகவும், வாசகனை ஆழ்ந்ததொரு சிந்தனையில் ஆழ்த்தக் கூடிய விஷயமுமாகவும் இருப்பது என்னவென்றால், வேரா என்ற அப்பெண்ணின் மனக்கவலைக்கான காரணத்தை வெளிப்படையாக ஆசிரியர் கூறாததுதான். அப்பெண்ணின் மரணத்தை பல்வேறு அனுமானங்களின் மூலம் நாம் புரிந்து கொள்ள ஆசிரியர் விட்டுவிடுகிறார். அடிப்படையில் அப்பெண்ணின் மரணத்திற்கான காரணம் அன்பு காட்டப்படாமை தான். அன்பற்ற நிலை என்பது மிகவும் கொடுமையானது. ஒரு சிறு துளி அன்பு மனித வாழ்வை பெரிய அளவில் மாற்றி அமைக்கும் சக்தி உள்ளது. ஆனால், அந்த சிறு துளி அன்பு கூட கிடைக்காததனால் விரக்தியில் அழிந்தவர்கள் ஏராளம்.
இக்கதையில் வரும் பாதிரியார் மிகுந்த மத உணர்வும், பக்தியும் உள்ளவராக இருக்கிறார். ஆனால், பிற மனிதர்களால் அன்பாக அணுகப்படும் நபராக இல்லை. எல்லோரும் வெறுப்போடு அவரைத் தூற்றுகிறார்கள். தன் மகள் அவளது பிரச்சினைக்கான காரணத்தை தன்னிடம் கூற மறுப்பதால் கோபமடைந்து அங்கிருந்து வெளியேறும் அவர், அதன்பின் அவளோடு பேசாமல் இருக்கிறார். எப்போதும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷத்தை விரும்பவும் கூடிய பாதிரியாரின் மனைவிகூட தன் மகளின் இந்நிலைக்கு தன் கணவர் தான் காரணம் என்று ஓரிடத்தில் குற்றம்சாட்டுகிறார். அவர் எப்படி இறுக்கமாக இருந்தாரோ அதைப்போலவே அவர் மகளும் அவரிடத்தில் நடந்து கொள்கிறாள். அவளுக்கு காதல் சார்ந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்பதையும் யூகிக்க முடிகிறது. ஓரிடத்தில் பாதிரியார், ‘‘அவள் என் பேச்சை மீறி அங்கு சென்றபோது கூட நான் அவளை எதுவும் கூறவில்லை’’ என்பதாகச் சொல்வார். அவள் எந்த இடத்திற்குச் சென்றாள் என்பது பற்றிய வெளிப்படையான குறிப்புகள் கதையில் இல்லை. அதை நம் அனுமானத்திற்கு எழுத்தாளர் விட்டுவிடுகிறார். அவள், தந்தையின் பேச்சை மீறி ஒரு வேளை தன்னுடைய காதலனிடம் சென்றிருக்கலாம். அன்பிற்கான ஏக்கம் தான் அவளை அங்கு செல்ல வைத்திருக்கிறது. ஆனால், அதில் வெற்றி கொள்ள முடியாமல் அவள் மனப் போராட்டத்திலும், அலைக்கழிப்பிலும் விரக்தி அடைந்து கடைசியில் தற்கொலை செய்திருக்கிறாள் என்று யூகிக்கமுடிகிறது.
மத உணர்விலும், கடவுள் பக்தியிலும் மட்டுமே திளைத்த பாதிரியார் சக மனிதர்களின் மீது அன்பும், இரக்கமும் கொள்ளத் தவறி விடுகிறார். குறிப்பாக, பாவம் செய்தவர்கள் என்று தான் கருதுபவர்கள் மீது அவர் கடுமையாக இருந்திருக்கிறார். இந்த கடுமைதான் பிறரை அவரிடம் நெருங்கவிடாமல் செய்திருக்கிறது. மனிதர்கள் அற்று தனித்து வாழ்வது சித்திரவதைக்குரியது என்பதை மகள் வேராவின் இறப்பிற்குப்பின் மிக ஆழமாக உணர்கிறார். அளவற்ற அன்பையும், மன்னிப்பையும், கருணையையும் மதங்கள் அடிப்படையாக போதித்து இருக்க, அதைத் மறந்துவிட்டு இறுக்கத்தையும், கடினத்தன்மையையும், சகிப்புத்தன்மையற்ற நிலையிலும் சிலர் இருப்பது ஒரு பெரும் முரண்நகை. தனிமையும், மனிதர்களற்ற நிசப்தமும் எவ்வளவு கொடூரமானது என்பதை இக்கதை ஆழமாக நமக்கு உணர்த்தும். இக்கதையின் கடைசி வரியில் காட்டப்படும் நிசப்தமும் இருளும் நிறைந்த காலி வீடு என்ற படிமம், ஆன்மாவற்று வெறும் கூட்டைத் தாங்கியுள்ள எத்தனையோ உடல்களுக்கான குறியீடு.
********