இணைய இதழ்தொடர்கள்

அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 7

தொடர் | வாசகசாலை

கரவாஜியோ

த்தாலியில் லம்பார்டி பகுதியில் இருக்கும் ஒரு நகரம் கரவாஜியோ. மிலான் நகரில்1576 ல் பரவியக் கொள்ளை நோயிலிருந்து தப்பிக்க வந்த பல குடும்பங்களில் ஒன்றுதான் மிக்கேலாஞ்சலோ மேரிஸி த கரவாஜியோவினுடையது. கரவாஜியோவின் ஓவியங்கள் பரோக் (Baroque) பாணியிலானவை என்று வகைப்படுத்துகிறார்கள். பரோக் வகைமை ஒரு கதையம்சத்தை சார்ந்தவையாக இருக்கும். கரவாஜியோவின் பெரும்பாலான ஓவியங்கள் விவிலியக் கதைகளை மையப்படுத்தியதாக இருக்கின்றன.

சென்னை மைலாப்பூர் சாந்தோம் தேவாலயத்துக்குச் சென்றிப்பவர்களுக்குத் தெரியும். அவ்வாலயம் உலகப் புகழ் பெற்றது. இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமா பரங்கி மலையில் மறைப்போதகம் செய்தமைக்காகக் கொலையுண்டு அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் சாந்தோம். இலத்தீன் மொழியில் ‘சாந்தா’ என்றால் ‘புனித’ என்றர்த்தமாகும். சாந்தா தோமா – செயின்ட் தாமஸ் – புனித தாமஸ் என்பதுதான் இப்போது மருவி சாந்தோம் என்றானது. தேவாலயத்தின் பின்புறம் புனித தோமாவின் கல்லறைக்குச் செல்லும் வழியிருக்கிறது. நான் சிறுவனாக இருந்த போது ஆலயத்தின் பீடத்துக்குப் பக்கவாட்டில் மிகச் சிறியப் படிகட்டுகள் வழியாக கீழ்தளத்துக்கு இறங்கிச் சென்றால் அங்கு தோமாவின் கல்லறையை தரிசிக்கலாம். இப்போது ஆலயத்துக்குப் பின்புறம் கல்லறைக்கென்று சிற்றாலயம் அமைக்கப் பெற்று வசதியாக உள்ளே சென்று வரலாம். தோமாவின் உடலடங்கிய அந்தச் சிற்றாலயத்தின் முகப்பில் மிகப் பெரிய அளவில் தோமா இயேசுவின் காயங்களைத் தொட்டுப் பார்க்கும் ஓவியம் இருக்கும். மிகச் சுருக்கமாக அந்தக் கதையைச் சொல்லிவிடுகிறேன். இயேசுவின் சிலுவை மரணத்துக்குப் பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை தோமா நம்பவில்லை. “அவர் காயங்களில் என் விரலை வைத்தாலன்றி நான் நம்பப் போவதில்லை” என்று வெளிப்படையாக அறிவித்தார். பிறகொரு நாள் இயேசு அவருக்கு முன் வந்த போது தோமா அவர் காயங்களை தொட்டுப் பார்த்து நம்பினார் என்று விவிலியம் சொல்கிறது. அவ்வோவியமே தோமாவின் கல்லறையின் முன்புறம் மாட்டப்பட்டிருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட ஓவியத்தை வரைந்தது கரவாஜியோ. சாந்தோமிலிருப்பது கரவாஜியோ ஓவியத்தின் நகல். மிக நுணுக்கமாக வரையப்பட்ட ஓவியம் அது. ஓவியத்தில் இயேசு தன் காயங்களை தோமாவுக்குக் காட்டுகிறார். இயேசுவுக்கும் தோமாவுக்கும் பக்கவாட்டில் இரண்டு சீடர்கள் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். தோமா கவனமாக இயேசுவின் விலாவில் இருக்கும் காயத்தினுள் விரலை நுழைக்கிறார்.

விவிலியம் நூறு சொற்களுக்குள்ளாக இந்தப் பகுதியை எழுதிக் கடந்துவிட்டது. ஆனால் கலைஞனான கரவாஜியோ வேறொரு கோணத்தில் இந்நிகழ்வை அணுகுகிறார். குறிப்பிட்ட இவ்வோவியத்தில் இயேசுவின் நெற்றியில் சுருக்கங்கள் இல்லாமல் இருப்பதையும் மற்ற மூவரின் நெற்றியில் சுருக்கங்கள் இருப்பதையும் கவனிக்கலாம். இறந்த ஒரு மனிதர், இறப்பதற்கு முன்னால் தங்களுக்குப் பரிச்சயமானவர் இப்போது உயிருடன் நிற்கிறார் என்பதை அவர்கள் ஒருவித இறுக்கத்துடன் எதிர்க்கொண்டிருக்க வேண்டும். காயத்துக்குள் கை வைக்க வேண்டும் என்றவுடன் அவரும் காயத்தைக் காட்டுகிறார் ஆக அந்தத் தொடுகையும் மிகுந்த இறுக்கத்துடன் நிகழ்ந்திருக்க வேண்டும். அதுதான் மூவரின் நெற்றியிலும் சுருக்கங்கள். எனக்கு இந்த ஓவியத்தைக் காணும் போதெல்லாம் சீடர்களிடம் இருக்கும் பரபரப்பும் இறுக்கமும் தொற்றிக்கொள்ளும். அவர்கள் நெற்றியில் இருக்கும் சுருக்கங்களால் எனக்குத் தலைவலி ஏற்படும். இன்னொரு நுணுக்கமும் இதில் இருக்கிறது. இயேசுவைத் தோமா தொட்டுப் பார்த்தார் என்பதற்கு என்ன சான்றிருக்கிறது? யூதக் கலாசாரத்தில் ஒரே ஒருவரின் எந்த சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படாது. இப்படியான முக்கியமான நிகழ்வுகளுக்கு வேறு இருவரின் சான்றுகள் தேவை அதனால் தான் தோமா தொட்டுப் பார்ப்பதை அதே கவனுத்துடன் வேறு இருவர் உற்று நோக்குவதாக கரவாஜியோ வரைந்திருக்கிறார்.

அவர் வாழ்ந்த நாள்களில் மற்ற கலைஞர்களைப் போலவே புரிந்துக் கொள்ளப்படாமல் முரடனாகவும் குடிகாரனாகவும் வாழ்ந்திருக்கிறார். ஒருமுறை ரோம் நகரில் ஏற்பட்ட மோதலில் கரவாஜியோ ரனுன்ச்சியோ தாமஸோனி (Ranuccio Tomassoni) என்ற இளைஞரைத் தாக்க அவர் இறந்து போகிறார். திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலையல்ல. குடி போதையில் தவறுதலாக நிகழ்ந்த விபத்து. பின் நேப்பள்ஸ் நகரத்துக்குத் தப்பிச் சென்று அங்கே பெரும் புகழடைகிறார். புகழடைதல் என்பது தானாகத் தேடிக்கொள்வதல்ல. தன் ஓவியங்கள் மூலம் கரவாஜியோ புகழடைகிறார். ஆனால் உள்ளுக்குள் கொலைச் செய்தக் குற்றவுணர்வு அவரை வறுத்திக்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் அவர் தாவீது கோலியாத்தை வென்ற நிகழ்வை வரைகிறார். தாவீது எனும் இளைஞன் கோலியாத் என்ற பெரும் அரக்கனை கவனில் கூழாங்கற்கள் கொண்டுத் தாக்கிக் கொன்று அவன் தலையை கொய்தக் கதை விவிலியத்தில் இருக்கிறது. இந்நிகழ்வை கரவாஜியோ வரையும் போது தாவீதின் இளம் முகத்துக்கு தன்னுடைய இளமைக் கால முகத்தையும், கோலியாத்தின் அரக்க முகத்துக்கு ஓவியம் வரைந்த சமயத்தில் இருந்த குற்றவுணர்வுள்ள முகத்தையும் மாதிரியாகக் கொண்டு வரைகிறார். இதன் மூலம் தன் குற்றத்திலிருந்து விடுபட்டு புதுவாழ்வு தொடங்கவிருப்பதை வெளிப்படுத்தினார். கொலையுண்ட கோலியாத்தின் முகத்தில் ஒருவிதாமான மிரட்சியை கவனிக்கும் அதே நேரத்தில் தாவீதின் முகத்தில் வெற்றிக் களிப்பைக் காண முடியாது என்பதையும் கவனிக்க வேண்டும். மாறாக தாவீதின் முகத்தில் நீதிக்கான ஏக்கமும் குழப்பமும் நிறைந்திருக்கும். அதை அவர் முகத்தில் தெரியும் பாதி வெளிச்சம் கொண்டு அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்.

கரவாஜியோவின் ஓவியங்கள் குறித்து மட்டும் ஒரு புத்தகமே எழுதலாம். இந்தக் கட்டுரை ஒரு அறிமுகம் மட்டுமே. கரவாஜியோவின் அத்தனை ஓவியங்களும் இணையத்தில் கிடைக்கின்றன. தன் ஓவியங்களில் ஒளியையும் நிழலையும் தேர்ந்த ரசவாதியைப் போல பயன்படுத்தியிருக்கிறார். மேற்கத்திய திரைப்படங்களின் ஒளிப்பதிவுகளில் கரவாஜியோவின் ஓவியங்கள் பெருமளவில் பங்களிப்புச் செய்திருக்கிறது. இப்போதைக்கு நினைவில் வருவது ‘காட்ஃபாதர்’ திரைப்படம் மட்டும் தான். கரவாஜியோ ஒளியும் நிழலும் கொண்டு மனித உணர்வுகளுடன் பெரும் உரையாடலை காலங்கள் கடந்து நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார்.

(தொடரும்…)

முந்தையது | அடுத்தது

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button